SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குலம் தழைக்க வைக்கும் குமாரநல்லூர் பகவதி

2018-08-10@ 09:41:20

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் நகருக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் குமாரநல்லூர் என்ற அழகான தமிழ்ப் பெயருடன் ஒரு சிற்றூர் இருக்கிறது. கோட்டயத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்றால் ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை’ அடையலாம். மதுரை மீனாட்சியா? இங்கு வந்து ஏன் எவ்வாறு எழுந்தருளினாள்? மதுரையில் இருந்தவள் இங்கு வந்து குடியிருக்கக் காரணமென்ன? அது ஒரு சுவையான வரலாறு. இயற்கை எழிலும் மஞ்சுசூழ் மலை வளமும் கொண்ட சேர நாட்டில் நெடுஞ்சேரலாதன் என்னும் மன்னன் நல்லாட்சி புரிந்து வந்தான். அவன் தெய்வத் திருத்தொண்டிலும், சிற்பக் கலையிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான்.

அழகிய கிராமமான ‘குமாரநல்லூரி’ல் தமிழ்க் கடவுளான திருமுருகப்பெருமானுக்கு அழகியதோர் ஆலயமும், வைக்கத்திற்கு அருகில் உள்ள உதயநாயகிபுரத்தில் பகவதிக்கு ஓர் அற்புத ஆலயமும் எழுப்பத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தான். குமாரநல்லூரில் குமரக் கடவுளான ‘சுப்பிரமணியரை’ சிலா வடிவில் திவ்யமாக உருவாக்கி, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான நேரமும் வந்தது. குமாரநல்லூர் கிராமமே திருவிழாக்கோலம் கொண்டு உற்சாகத்தோடு இருந்தது. மேளதாளம் என பல இன்னிசைக் கருவிகள் முழங்கிய வண்ணமிருந்தன. அப்போது கருவறையில் சேவையாற்றிக் கொண்டிருந்த அர்ச்சகரின் செவியில் ‘கணீர்’ என்ற குரலில் ஓர் அசரீரி கேட்டது.

‘‘இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டியது சுப்பிரமணியர் அல்ல!’’என்றது. இதைக்கேட்டு திடுக்கிட்ட அர்ச்சகர் செய்வதறியாது வெலவெலத்துப் போய்விட்டார். இச்செய்தியை உடனே சேர மன்னனிடம் தெரிவித்தார். அதைக்கேட்டு திடுக்கிட்ட மன்னர் பெருங்குழப்பத்திற்குள்ளானார். திடீரென்று அப்படியோர் அசரீரி கேட்கக் காரணம் என்ன? கோயில் உருவாக்கப்பட்டதில் ஏதேனும் குறைபாடா? அல்லது ஆகம விதிகளை சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டார்களா? என்றெல்லாம்  எண்ணியெண்ணி மிகவும் கவலை கொண்டார். குமாரநல்லூரில் குமரக்கடவுளைப் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணியவருக்கு மிகுந்த ஏமாற்றமே
ஏற்பட்டது. ‘முருகா இது என்ன சோதனை’ என்று உள்ளம் குமுறினார்.

திருமுருகப்பெருமானை பிரதிஷ்டை செய்யப் போகும் நேரத்தில் திடீரென்று அப்படியோர் அசரீரி கேட்கக் காரணம் என்ன? அது அதிசயமும் சுவையும்மிக்க ஒரு கதை. தென் தமிழகத்தில் பாண்டிய மன்னர் ஒருவரின் பேராட்சி சிறப்புடன் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஒருநாள் மாலை நேரம், வழக்கப்படி குடும்ப சகிதமாய் மதுரை மீனாட்சியைத் தரிசிக்க ஆலயம் சென்ற மன்னர் அன்னையின் திருமுக மண்டலத்தைக் கண்டு தரிசிக்கும்போது, அங்கே அவள் அணிந்திருந்த விலை மதிப்புள்ள மாணிக்க மூக்குத்தியைக் காணாமல் திடுக்கிட்டார். விசாரித்தபோது ‘அது களவு போய்விட்டது’ என்றார் அர்ச்சகரும் பூசாரியுமான
சாந்திதுவிஜன்.மன்னர் உள்ளம் குமுறினார். அடுத்த கணமே பிறந்தது ஓர் அரச கட்டளை.

‘‘நாற்பத்தோரு நாட்களுக்குள் தொலைந்துபோன மதுரை மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தி வந்து சேர வேண்டும். அப்படி வராவிட்டால் அர்ச்சகரின் தலை துண்டிக்கப்படும்!’’ என்றார் மன்னர். அரசரின் ஆணையைக் கேட்டு நடுநடுங்கிப் போனார் அர்ச்சகர். அன்னையின் மூக்குத்தி எப்படியோ காணாமல் போய்விட்டது. பழியோரிடம் பாவம் ஓரிடமாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக மனம் வருந்தி அழுதார். தேவியின் திருப்பாதங்களே கதி என்று கிடந்தார். வெகு வேகமாக நாற்பது நாட்கள் கடந்து விட்டன. விடிந்தால் நாற்பத்தோறாவது நாள். மாணிக்க மூக்குத்தி கிடைக்காவிட்டால் அர்ச்சகர் சாந்திதுவிஜன் தலை தரையில் உருள வேண்டியிருக்கும். கடந்த நாற்பது நாட்களாக மதுரை மீனாட்சியே கதியென்று கிடந்த அர்ச்சகர் மிகவும் நொந்து போனார். ‘‘தாயே மீனாட்சி! நான் நிரபராதி. எந்தக் குற்றமும் செய்யவில்லை.
 
இத்தனை நாளும் நான் உள்ளத்தூய்மையுடன் பூஜை செய்து வந்தேன். அப்படி நான் பூஜை செய்து வந்தது உண்மையானால் இந்தப் பழியிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்!’’ என்று பிரார்த்தித்துக் கொண்டு படுக்கச் சென்றார். நடுநிசி இரவில் அவர் கண்ட கனவில் அன்னை மீனாட்சி தோன்றினாள்.
‘‘பக்தா, கவலைப்படாதே! உடனே எழுந்திரு! உன் கண்ணுக்கு எதிரே ஒரு தெய்வீக ஜோதி தென்படும். அது உன் முன்னால் செல்லும். அதைப் பின்தொடர்ந்து நீ நடந்து கொண்டேயிரு. உனக்கு விமோசனம் கிடைக்கும். நல்லதே நடக்கும்!’’ என்று திருவாய் மலர்ந்தருளினாள். அன்னையின் அசரீரி கேட்டு உற்சாகத்தோடு துள்ளியெழுந்தார் அர்ச்சகர். அப்போது அவர்முன் நட்சத்திரம்போல் திவ்ய ஜோதி பிரகாசத்துடன் தரிசனமாயிற்று. அது மெதுவாக நகரத் தொடங்கவே, அதைப் பின்பற்றி நடந்தார், நடந்தார், நடந்து கொண்டேயிருந்தார். அப்போது காரிருள் சூழ்ந்து ஊரே உறங்கிக் கொண்டிருந்த நேரம்.

அந்த ஜோதி வெகு தூரம் சென்றது. அதைப்பின்பற்றிய வண்ணம் அர்ச்சகரும் தன்நிலை மறந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பேரொளி எல்லை கடந்து கேரள நாட்டில் பிரவேசித்தது. அழகிய குமாரநல்லூரை அடைந்து, சேர மன்னன் குமரனுக்காக எழுப்பப்பட்டிருந்த புதிய ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்து மறைந்தது.
‘‘இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டியது  சுப்பிரமணியர் அல்ல!’’ என்ற அசரீரி வாக்கின் காரணம்  இப்போது புரிந்துவிட்டதல்லவா? சேர மன்னன் குமரனுக்காகக் கட்டிய திருக்கோயிலில் மதுரையை ஆளும் தெய்வத்திருநாயகியாம் மதுரை மீனாட்சி அங்கு வந்து குடிபுகுவது என்று திருவுள்ளம் கொண்ட பிறகு குமரனைப் பிரதிஷ்டை செய்ய முடியுமா? சேர மன்னர் திட்டமிட்டவாறு குமாரநல்லூரில் சுப்பிரமணிய சுவாமியைப் பிரதிஷ்டை செய்ய முடியவில்லையே, என்ன செய்வது? நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்து விடுகிறதே!

எனவே, சேர மன்னர் தன் திட்டத்தை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. வைக்கத்திற்கு அருகில் உள்ள உதயநாயகிபுரத்தில் பகவதிக்கு ஓர் அற்புத ஆலயம் எழுப்பி அம்பிகையை அதில் பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தார் அல்லவா? அங்கே சுப்பிரமணியரைப் பிரதிஷ்டை செய்யும்படி பணித்தார். மன்னரின் உத்தரவுப்படி அங்கே சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அது தற்போது உதயனாபுரம் என வழங்கப்படுகிறது. பிறகு, மன்னர் குமாரநல்லூர் வந்தார். அங்கே அவருக்கு ஆச்சரியகரமான செய்தி ஒன்று காத்திருந்தது. மதுரையிலிருந்து வந்த ஜோதியைத் தொடர்ந்து வந்த அர்ச்சகர் சாந்திதுவிஜன் கூறிய செய்தியைக் கேட்டு மெய்சிலிர்த்தார். மதுரை மீனாட்சி எனும் ஜோதியாக வந்து, குமரனுக்காக கட்டப்பட்ட கருவறையில் புகுந்து ஐக்கியமான அந்த சைதன்யத்தை அங்கே பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார்.

அத்திருப்பணிக்கு துணை நிற்குமாறு மீனாட்சி அன்னையிடமும் பிரார்த்தித்துக் கொண்டார். பரவச நிலையில் மெய் மறந்திருந்த மன்னரின் செவியில் அன்னையின் அருள் மொழி அசரீரியாக ஒலித்தது.‘‘மன்னா! இக்குமாரநல்லூருக்கு அருகில் உள்ள வேதகிரி குன்றின் மீது, அதிக ஆழமற்ற பொய்கை ஒன்றுள்ளது. அதனுள் எனது அஞ்சன சிலையொன்று இருக்கிறது. சங்கு, சக்கர, அபய, வரத கரச்சின்னங்களுடன் கூடிய அத்திருவுருவம் அவதார புருஷரான பரசுராமரால் வடிக்கப்பட்டதாகும். மகிஷாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த பராசக்தியாக அந்த வடிவத்தில் நான் எழுந்தருளியிருக்கிறேன். என்னை நாடி வந்து, இடர் துடைக்கும்படி பிரார்த்திக்கும் மெய்யடியார்களுக்கு எல்லா நலன்களையும் வாரி வாரி வழங்கக் காத்திருக்கும் நான், என் மகன் குமரனுக்காகக் கட்டப்பட்ட இத்திருக்கோயிலில் நிரந்தரமாகக் குடியிருக்கப் போகிறேன்! எனவே, அந்தச் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்!’’ என்றாள் அன்னை.

உடனே, சேர மன்னன் மகிழ்ச்சிப் பெருக்கோடு தம்முன் நின்ற வேத வித்தகரான ஒரு பக்தனிடம் அச்சிலையைக் கொண்டுவரும் பொறுப்பை ஒப்படைத்தார். கருவறையில் ஜோதி நுழைந்த ஏழாவது நாள், பரசுராமரால் வேதகிரி மலையில் ஜலவாசம் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சிலையை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யும் நேரத்தில், ஒரு வயோதிக சன்னியாசி கருவறைக்குள் நுழைந்தார். பகவதி சிலையை அவர் பிரதிஷ்டை செய்து விட்டு மாயமானார். அவர்தான் பரசுராமர் என்றும், அவர்தான் பராசக்தியான பகவதியை அங்கு தோத்திரப் பூர்வமாக பிரதிஷ்டை செய்தாரென்றும் தலபுராணம் கூறுகிறது. இத்திருக்கோயில் 200 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையானதென்றும், 108 துர்க்கை தலங்களில் இதுவும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகள் கடந்தும் அந்த பகவதியின் சிலை இதுவரை மாற்றப்படவில்லை.

அந்தச் சிலையை பொய்கையிலிருந்து எடுத்து வந்த பக்தனின் இல்லம் ‘பரியத்தில்லம்’ என்ற பெயரில் இன்றும் அங்கு இருந்து வருகிறது. அப்பரம்பரையில் வந்தவர்கள் தொடுத்து அளிக்கும் மலர் மாலையை அணிந்து கொள்வதில் பகவதியான பராசக்தி பெரும் ஆனந்தம் கொள்கிறாள். மதுரையிலிருந்து ஜோதியைப் பின்தொடர்ந்து வந்த சாந்திதுவிஜன் பகவதி கோயில் பூசாரியானார். இவரது வாரிசுகளே தற்போது பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள வீடு ‘மதுரை மனா’ எனப்படுகிறது.‘குமரன் இல்லாத ஊர்’ என்ற பெயரே குமாரநல்லூர் என மருவியது. இந்தத் திருக்கோயில் அருகில் அற்புத நாராயணன் கோயில், மகாதேவர் கோயில், மள்ளியூர் மகாகணபதி கோயில், கடுத்துருத்தி சிவன்கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியவை அழகுற அமைந்துள்ளன.
ஆதிசங்கரர் இங்கு எழுந்தருளி தேவியை வழிபட்டு, தோத்திரங்களால் அர்ச்சித்திருக்கிறாராம்.

புகழ் பெற்ற வில்வ மங்கள ஸ்வாமியும் இங்கு வந்து தரிசனம் செய்திருக்கிறாராம். குரூர் அம்மா என்ற கிருஷ்ண பக்தை தேவியின் கருணையையும் திருவருளையும் பெற்று உயர்வடைந்திருக்கிறார். அன்னை இங்கு மகா வரப்பிரசாதியாக விளங்குகிறாள். செம்பகச்சேரி அரச சபையை அலங்கரித்த ‘கலக்கத்து குஞ்சன் நம்பியார்’ குமாரநல்லூர் தேவியின் பரம பக்தர்களில் ஒருவர். அவர் இந்த தேவியைக் குறித்துப் பாடியுள்ள ‘பஞ்சமகா தோத்திரங்கள்’ புகழ் பெற்றவையாகும். இந்தத் தோத்திரங்களை இயற்றிய பின்னர்தான் நம்பியார் ‘துள்ளல் கலை’யில் மிக வல்லவராக விளங்கினாராம். காஞ்சி காமாட்சி, கொல்லூர் மூகாம்பிகை சோற்றாணிக்கரை பகவதி, கன்னியாகுமரி அம்மன் இவர்களுக்கு ஈடாக குமாரநல்லூர் தேவியின் சக்தியும் மகிமையும் சுடர்விட்டுப் பிரகாசிப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இத்திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் விழா நடக்கிறது. ஒன்பதாம் நாளன்று ஆறாட்டுப் பூஜை நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இன்புறுகிறார்கள்.

விழா நாட்களில் சுமார் 36 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தேவி பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சிகளில் பெண் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு. திருமணத்தடை உள்ளவர்கள் ‘சுயம்பர புஷ்பாஞ்சலி’ பூஜை நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும். அம்மன் இங்கு நித்ய கன்னியாக அருட்பாலிப்பதால் ‘மஞ்சள் நீராட்டு’ முக்கிய வழிபாடாகும். குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்யம் வேண்டியும், கலை, கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. குடும்ப ஒற்றுமைக்காக பக்தர்கள் கோயில் நடையில் விளக்கேற்றுகின்றனர். இத்திருக்கோயில் கோட்டயத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நிறைய பேருந்து வசதியும் உள்ளது. அதிகாலை 4 மணி முதல் பதினொன்றரை மணி வரையிலும் மாலை 5 மணி முதல்  ஏழே முக்கால் மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும்.

டி.எம்.இரத்தினவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்