SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா : அன்னை திருவுருவ பவனி கோலாகலம்

2018-08-06@ 16:51:47

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் அன்னையின் திருவுருவ பவனி கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலயம் சுமார் 460 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பஸிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி துவங்கி ஆக. 5 வரை தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதன்படி 436ம் ஆண்டு   திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும்  நடந்தன.

11ம் திருநாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. அதிகாலை 5.15 மணிக்கு 2ம் திருப்பலி மதுரை முன்னாள் பேராயர் பீட்டர் பர்னாண்டோ தலைமையில் நடந்தது. காலை  7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை  9 மணிக்கும், 10 மணிக்கும் சிறப்பு திருப்பலிகளை மறை மாவட்ட முதன்மை குரு ரோலிங்க்டன் தலைமை வகித்து நடத்தினார். நண்பகல் 12 மணிக்கு  திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது. இதில் சர்வமதத்தினரும், இறைமக்களும் திரளாகப் பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு ஜெபமாலையும், அருளிக்க ஆசீரும் நடந்தது.

மாலை 5 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் பனிமயமாதா பங்குத்தந்தைகள் லெரின் டி ரோஸ், அமலதாஸ், மகிழன் மற்றும்  பல்வேறு ஆலய பங்குத்தந்தைகள்  பங்கேற்றனர். அத்துடன் இறைமக்கள், குருக்கள், துறவியர் உள்ளிட்ட திரளானோர் மாதாவை வழிபட்டனர். பின்னர் விழாவின் சிகரமான திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமய அன்னையின் திருவுருவ பவனி இரவு 7 மணிக்குத் துவங்கியது. தொடர்ந்து  நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. ஆலயத்தில் துவங்கிய அன்னையின் சப்பர பவனி மணல் தெரு, சிலுவை கோவில் ரோடு, எம்பரர் தெரு, வி.இ.ரோடு, சின்னக்கோவில் வளாகம், ஜிசிரோடு, தெற்கு பீச் ரோடு வழியாக மீண்டும் இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பவனி செல்லும் இடங்கள் அனைத்திலும் இறைமக்கள்  மரியே வாழ்க, தாயே வாழ்க, மாதாவே சரணம் என கோஷங்கள்  முழங்கினர். பேரணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மறை மாவட்ட ஆயர்கள், பங்குத்தந்தைகள், உதவி பங்குத்தந்தைகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இலங்கை, ஸ்வீடன், இந்தோனேஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இரவு 10 மணிக்கு குடும்பங்களை ஒப்புகொடுத்தலும் அருளிக்க ஆசீர் மற்றும் நற்கருணை ஆசீரும்  நடந்தது. திருவிழாவை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள், பெரும்பாலான நாட்டு படகு மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்கள் படகுகளையும், பொதுமக்கள் வீடுகளையும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். இதனால் மாநகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அத்துடன் பனிமய மாதா பேராலயம் வண்ண மின் விளக்குகள், கண்கவர் அலங்காரத்தில் அழகுற காட்சியளித்தது.

இதனிடையே பவனியின் போது குற்றங்கள், அசம்பாவிதங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் முக்கிய 10 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். எஸ்பி முரளி ராம்பா உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி பொன்ராம், டிஎஸ்பிகள் பிரகாஷ், வீமராஜ், முத்தமிழ், லிங்கதிருமாறன்,   தலைமையில்  இன்ஸ்பெக்டர்கள் முத்து, ரேனியஸ் ஜேசுபாதம், பார்த்திபன், இசக்கிமுத்து, தங்க கிருஷ்ணன், கோமதி, சம்பத், சிவசெந்தில்குமார், சந்தானகுமார் (போக்குவரத்து) மற்றும்  40 எஸ்ஐகள், 1500 போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பவனியையொட்டி ரோச் பூங்கா வழியாக செல்லும் பஸ்கள், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

திருவிழாவை முன்னிட்டு துவங்கிய பொருட்காட்சி வரும் 10ம் தேதி வரை நடக்கும் எனவும், மேலும்  நள்ளிரவு வரையிலும் பொருட்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு கலந்து கொள்ளலாம் என்றும் காவல்துறை சார்பில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இன்று (6ம் தேதி) காலை நன்றியறிதல் நாளை முன்னிட்டு ஆலய உபகாரிகளுக்காகவும், திருவிழா நன்கொடையாளர்களுக்காகவும் நன்றியறிதல் திருப்பலி நடக்கிறது. பின்னர் கொடியிறக்கத்தை முன்னிட்டு 2ம் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு ஏற்றப்பட்டுள்ள திருவிழா கொடி இறக்கம் நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்