SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிற தெய்வங்களை இகழாததே பெரும் பக்தி!

2018-08-03@ 17:07:38

திருமூலர் திருமந்திரம்

தெய்வ வழிபாடு - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்திடம் ஈடுபாடு இருக்கும். அப்படி ஈடுபாடு கொண்டவர்கள்கூட, அத்தெய்வம் எடுத்த பற்பல  அவதாரங்களில், வடிவங்களில், ஏதாவது ஒன்றில்தான் மிகவும் பற்றுதல் கொண்டிருப்பார்கள். அப்படிப் பற்றுதல் கொண்ட தெய்வத்தைப் பற்றி  சொல்லும்போதும், ‘‘இந்தப் பெயருடன், சாமி ஏழெட்டு ஊர்ல இருக்கார். ஆனா, எங்க ஊர்ல இருக்கிற சாமிதான் அழகோ அழகு!’’ என்பார்கள்.

இதுவரை தவறு இல்லை. இதற்கும் மேலாகப் போய், ‘‘அந்த ஊர்ல உள்ள சாமிதான் சூப்பர். மத்த ஊர்கள்லயும் இருக்குதே சகிக்கல!’’ என்று தெய்வ
நிந்தனையில் இறங்கி, மேலும் மேலும் நிந்தனை விரிவடையும்போதுதான், பிரச்னையே எழுகிறது. சரி, இதைப்பற்றித் திருமூலர் சொல்வதைப்  பார்க்கலாம்.

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே (திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்?அவர்களுக்கு  மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின்  கடமை. ஆன்மிகம் இன்று தழைத்தோங்கி, செழித்தோங்கி இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் வரும்  கோயில் தகவல்களும், கோயில்களில் நிறைந்திருக்கும் கூட்டமும் இதை நிரூபிக்கின்றன.

இதன்படி பார்த்தால், இன்று ஆன்ம இகம் படர்ந்து பரவி, மக்கள் அனைவரும் அப்படியே ஆனந்தக் கடலில் மிதக்க வேண்டும். ஆனால், நிலைமையைப்  பார்த்தால் அப்படி இல்லையே! எங்கு தோற்றுப் போனோம்? உண்மையான தெய்வ வழிபாடு என்பது, தான் வணங்கும் தெய்வத்திடம் பக்தியோடு  இருப்பது என்பது மட்டுமல்ல; மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை இகழ்வாக எண்ணாமல், பேசாமல் இருப்பதுமே ‘பக்தி.’‘தெய்வம் இகழேல்’ என்று  ஒளவையார் சொன்னது, நாத்திகர்களுக்கு அல்ல, ஆத்திகர்களுக்கே!

என் தெய்வம்தான் உயர்ந்தது; அதை வணங்கும் நான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் யாருக்குமே இருக்கக் கூடாது. இருந்தால்... கேரளம்வரை  போய்த் தரிசித்து விட்டு வரலாம் வாருங்கள்! கல்வி கேள்விகளில் தலை சிறந்தவர், பக்திமான் என்று ஊராரால் மதிக்கப்பட்டவர் ஒருவர் இருந்தார்,  குருவாயூரில். அதே குருவாயூரில், படிப்பறிவில்லாத ஏழை பக்திமான் ஒருவர் இருந்தார். அவருக்கு குருவாயூரப்பன் அருளைப் பெற வேண்டும்  என்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தியானம் செய்தால், அவர் எண்ணம் நிறைவேறும் என்றார்கள் சிலர்.

அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் ஏழை. கல்விமான்-பக்திமான் என்றெல்லாம் பார்த்தோம் அல்லவா? அந்தக் கல்விமானிடம் போய், ‘‘சுவாமி!  தியானம் செய்வதற்கான வழிமுறைகளை, அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும்’’ என வேண்டினார், ஏழை. கல்விமானுக்குக் கண்கள் சுருங்கின;  உள்ளமும்தான், ‘படிப்பறிவில்லாத ஏழை.  இவன் தியானம் செய்யப் போகிறானாம்; அதற்கு நான் வழி சொல்ல வேண்டுமாம்,’ என்று இகழ்ச்சியாக  நினைத்தார்; இருந்தாலும், ‘‘தியானம் செய்ய வேண்டுமா? எருமை வடிவில் பகவானைத் தியானம் செய்!’’ என்று இகழ்ச்சியாக அறிவுரை அளித்தார்.

கல்விமானின் அறிவுரையில் அழுத்தமாகப் பிடிப்பு கொண்ட ஏழை, அவர் சொன்னபடியே தியானம் செய்தார். அதன்பலன், குருவாயூர்க் கோயிலில்  வெளிப்பட்டது. ஆலயத்தில் அன்று விசேஷம். பகவான் திருவீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. கல்விமானின் தலைமையில்  அடியார்கள், பகவானை வெளியே கொண்டுவர முயற்சி செய்தார்கள். என்ன முயன்றும், அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை. நடப்பதையெல்லாம்  வெளியே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஏழை பக்தர், குறிப்புகள் கொடுத்தார்; ‘‘இந்தப் ‘‘பக்கமா வாங்க, அதே பக்கமா வாங்க!

வலதுகை பக்கமா கொம்பு கொஞ்சம் மேல இடிக்குது. கையக் கீழாகத் தாழ்த்தி, அப்படியே வாங்க!’’ என, அவர் கொடுத்த குறிப்புகள்படிச் செயல்பட,  பகவான் வெளியே வந்தார். கல்விமானின் வாக்குப்படி பகவானை, எருமையாகத் தியானித்த ஏழைக்கு பகவான் அப்படியே காட்சி கொடுத்திருக்கிறார்!  அதனால்தான், தான் தரிசிக்கும் பகவானை அப்படியே சொல்ல முடிந்தது அவரால். உண்மையை உணர்ந்த கல்விமான், பகவான் கருணையை  நினைந்து, ஏழையிடம்
மன்னிப்பு வேண்டினார்.

நடந்த வராலாறு இது. ஆன்மிகம்; ஆன்ம - இகம் என்பது, இங்கு இருக்கும்போதே, நம்மில் நாமே ஆனந்தித்து அமைதியாக இருப்பதே. அதை விட்டு,  ‘‘இந்த ஆலயம்தான், இந்த சுவாமிதான், நான் கும்பிடும் தெய்வம்தான் உயர்ந்தது. மற்றதெல்லாம் மட்டமானவை’’ என்று பேசுபவர்களுக்கு, ஒருக்காலும்  நற்கதி கிடைக்காது. அதற்காக அரசன், ‘‘இப்படிப்பட்டவர்களுக்கு தெய்வமே, நரகத்தில் தள்ளி தண்டனை தரட்டும்’’ என்ற எண்ணத்தில், சும்மா இருக்கக்  கூடாது. நல்வழியில் நடவாமல், தெய்வத்தின் பெயரைச் சொல்லி, அடுத்தவர் உள்ளங்களில் கலக்கத்தை உண்டாக்குபவர்களை, அரசன் (ஆள்பவர்)
தண்டித்து நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

இல்லையேல், தெய்வம் சொன்னபடி நடக்காமல் தெய்வத்தின் பேரைச் சொல்லித் திரிபவர்களால், சமூகமும் கெடும்; நாடும் கெடும் என எச்சரிக்கிறார்  திருமூலர். இவ்வாறு சொன்ன திருமூலர், ‘‘படிக்காதவர்கள், மூடர்கள். அவர்களைப் பார்க்காதீர்கள், அவர்களுடன் பேசாதீர்கள்’’ என்கிறார் ஆ... அவர்  எப்படிச் சொல்லலாம்? படிக்காதவர்களை அவமானப்படுத்தி விட்டார் திருமூலர். இது சரியா? தவறா?’ எனக் கருத்தரங்கம் நடத்துவதில் சிந்தனை போக  வேண்டாம். அவர் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே!

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே. (திருமந்திரம் - 316)

கருத்து: கல்லாதவர்கள் மூடர்கள். அவர்களைப் பார்க்கக் கூடாது; அவர்கள் சொல்லைக் கேட்கக் கூடாது; கல்லாத மூடர்கள், கல்லாத  மூடர்களைத்தான் மதிப்பார்கள். அவர்களுக்கு உறுதியானவை தெரியாது. அபூர்வமான பாடல் இது, நுணுக்கமானது. இப்பாடலில் வரும் ‘கல்லாத  மூடர்கள்’ என்பது, படிப்பறிவு இல்லாதவர்களைக் குறிக்காது. படிப்பறிவு இல்லாதவர்கள் எவ்வளவோ பேர்கள், மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்களே!  இப்பாடலில் வரும் ‘கல்லாத மூடர்’ என்ற சொல், படித்திருந்தும் அதை அனுபவத்தில் கொண்டுவர விரும்பாதவர்களை மட்டுமே குறிக்கும்.

இப்படிப்பட்டவர்களைத்தான், ‘படிச்சிருந்தும் தந்தை தாயை   மதிக்க மறந்தான் ஒருவன், படுக்கையிலே முள்ளை வைத்து    பார்த்து மகிழ்ந்தான்’  எனப் பாடினார் கவிஞர் கண்ணதாசன். இப்படிப்பட்டவர்களைப் பார்த்தால், அவர்கள் குணம் நம்மையும் பற்றிக்கொள்ளும். ஆகையால்,  அப்படிப்பட்டவர்களைப் பார்க்கக் கூடாது. நல்லாரைக் காண்பதும் நன்றே. எனப்பாடிய ஒளவையார், ‘தீயாரைக் காண்பதும்’ தீதே’ என அடுத்துப் பாடியதும்  இதே தகவலைத்தான். அடுத்து, அப்படிப்பட்டவர்களின் பேச்சைக் கேட்கக் கூடாது. நாம் இவ்வாறு பொருள் கொண்டாலும்,

கல்லாத மூடர் ‘சொல்’ எனச் சொல்லியிருப்பது, மிகவும் பொருள் பொதிந்தது. படித்திருந்தும் அதன்படி நடக்க விரும்பாதவரின் ஒரு சொல்கூட நம்  காதில் விழக் கூடாதாம். மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமூலரின் இப்பாடலில் இரண்டாவது அடியில் சொல்லப்பட்ட இதே தகவலில்,  ஒளவையாரும் தன் பாடலில் இரண்டாவது அடியில், ‘திருவிலா தீயார் சொல் கேட்பதும் தீதே’ என்று பாடித் தெளிவுபடுத்துகிறார். கல்லாத மூடர்களின்  ஒரு சொல்கூட, நம் காதில் விழக் கூடாது என்ற திருமூலர், அடுத்து, ‘அந்த மூடர்கள் அவர்களைப் போன்ற மூடர்களுடன்தான், உடலாலும்  உள்ளத்தாலும் சேர்ந்திருப்பார்கள்’
என்கிறார்.

இவ்வாறு சொல்லி, ‘அந்தக் கூட்டத்தில் சேர்ந்து விடாதீர்கள்!’ என எச்சரிக்கை விடுத்த திருமூலர், ‘கல்லாத மூடர் கருத்து அறியாரே’ என்று பாடிப்  பாடலை நிறைவு செய்கிறார். படிப்பறிவின் பயன், படித்தபடி நடப்பதே! அதற்காகத்தானே, ஏராளமான நூல்கள் உள்ளன. நூல்கள் பலவாக இருந்தாலும்  அவை அனைத்தும், ‘நல்ல முறையில் நடக்கப்பழகு’ என்ற அடிப்படை கருத்திலே அமைந்தவை. கல்லாத மூடர்களோ, ‘இந்த அடிப்படை கருத்தைக்கூட  அறிய மாட்டார்கள்’ எனப் பாடலை முடிக்கிறார். அவர் சொல்லும் பட்டியலில் நம் பெயர் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்!

- பி.என்.பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்