SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘மெய்’ என்பது மெய் அல்ல, பொய்தான்!

2018-08-01@ 15:13:15

குறளின் குரல் - 86

ஐம்புலன்களை உடையது நம் உடம்பு. 'மெய், வாய், கண், மூக்கு, செவி’ என அந்த ஐம்புலன்கள் வகைப்படுத்தப் படுகின்றன. மெய் என்னும் உடலால்  தொடு உணர்வை அறிகிறோம். வாயால் அறியப்படுவது சுவையுணர்வு. கண் ஒளியுணர்வை உடையது, கண், ஒளியாலேயே பார்வை பெறுகிறது,  ஒளியற்ற இடத்தில் கண் இயங்காது. மூக்கு வாசனையை முகர்கிறது. செவி ஒலியைக் கேட்கிறது. இந்த ஐம்புலன்களைப் பற்றியும் பேசுகிறது  திருக்குறள்.

'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.’ (குறள் எண் 6)
 
ஐம்பொறிகளால் ஏற்படும் ஆசைகளை விட்டுவிட்டு பொய்யில்லாத ஒழுக்க நெறியில் நிற்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வார்கள்.

'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து!’ (குறள் எண் 24)
 
ஐம்பொறிகளாகிய யானைகளை அறிவு என்னும் அங்குசத்தால் எவனொருவன் அடக்கி ஆள்கிறானோ அவன் விண்ணுலக நிலத்திற்கு விதை  போன்றவன் ஆகிறான்.

'சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
என்றிவ்வைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.’ (குறள் எண் 27)
 
சுவை, ஒளி, தொடு உணர்வு, ஓசை, வாசனை என்னும் ஐந்தின் வகைகளை ஆராய்ந்து அறிய வல்லவனின் வசப்பட்டது இவ்வுலகு. குழந்தைகளை  அள்ளி அணைப்பதிலும் அவர்களை முத்தமிட்டுக் கொஞ்சுவதிலும் உடலுக்குத் தனி இன்பம் கிட்டுகிறது என்கிறார் வள்ளுவர்:

'மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு!’ (குறள் எண் 65)

காமத்துப் பாலில், உடல் இன்பம் பற்றிய கற்பனையில், தாம் நீதிநூல் ஆசிரியர் மட்டுமல்ல, கவிஞரும் கூட என்பதைப் புலப்படுத்துகிறார்.  தலைவியின் தோள், அமிழ்தத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என எண்ணுகிறானாம் தலைவன். ஏனென்றால் அவள் தோளைத்  தழுவும்போதெல்லாம் அவன் உயிர் புதிதாய்த் தளிர்க்கிறதாம்.

'உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்!’

'கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.’ (குறள் எண் 1101)
 
ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் ஆற்றல் பெண்ணிடம் மட்டுமே உண்டு என்கிறது வள்ளுவம். உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள  தொடர்பானது முட்டை ஓட்டிற்கும் அதன் உள்ளே உள்ள பறவைக் குஞ்சிற்கும் இடையே உள்ள தொடர்பைப் போன்றது என்பதும் வள்ளுவம்  சொல்லும் கருத்து. முட்டை ஓட்டை உடைத்துக் கொண்டு பறவைக் குஞ்சு பறப்பதைப் போன்றுதான் உடலை விட்டு உயிர் பிரிகிறது என்கிறார்  வள்ளுவர். `உடல் அழியக் கூடியது, ஆனால் ஆன்மா அழிவில்லாதது’ என்ற நம் பாரம்பரிய ஆன்மிகக் கருத்து இந்தக் குறளால் உறுதிப்படுத்துவதைப்  பார்க்கிறோம்.

'குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.’ (குறள் எண் 338)
 
தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள தொடர்பைப் போன்றது என்கிறார். ஒன்றை  விட்டு ஒன்று வாழாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

'உடம்போடு உயிரிடை அன்ன மற்றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு.’ (குறள் எண் 1132)

ஆன்மிகத்தில், மனிதனை வெளிப்புறத்தில் அலைய விடாமல் உள்நோக்கி இழுப்பதற்காக ஐம்புலன்களையும் ஈர்க்கும் வகையில் பூஜை நெறிகள்  அமைந்துள்ளன. கண்ணால் தெய்வச் சிலையைக் 'காண்கிறோம்’. காதுகளால் அவன் நாமங்களைக் 'கேட்கிறோம்’. ஊதுவத்தி, சாம்பிராணி  போன்றவற்றைக் காட்டி அந்த இனிய நறுமணத்தை 'முகர்கிறோம்’. மலர்களால் இறைவனை வழிபடுவது, கண்ணாலும் நாசியாலும் ஏற்படும்  அனுபவத்திற்காகத்தான்.

திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றைத் தொட்டு இட்டுக் கொள்வதால் 'தொடு உணர்வாலும்’ஆன்மிகத்தில் தோய்கிறோம். மலர்களையும்  தொட்டுத் தானே அர்ச்சிக்கிறோம்! பிரசாதமாகத் தருவதை 'உண்டு’ நிறைவடைகிறோம். மனிதனின் ஐம்புலன்களையும் முழுமையாக ஆன்மிகத்தில்  பழக்கப்படுத்துவதற்காகவே இத்தகைய முறைகள் அனுசரிக்கப்படுகின்றன.
 
வாழ்வின் இறுதிநாள் வரை தேவைப்படும் இந்த உடம்பை எச்சரிக்கையாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் திருமூலர்.
 
'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே!’

ஆன்மிகத்தில் மேலோங்க விரும்புகிறவர்கள் உடம்பைக் கருத்தாய்ப் பேண வேண்டும் என வீரத் துறவி விவேகானந்தரும் அறிவுறுத்துகிறார்.  `கால்பந்து விளையாடி உடலை வலிமை செய்யுங்கள். கீதை உங்களுக்கு இன்னும் நன்றாய்ப் புரியும்’ என்பது அவர் பொன்மொழி. மோட்சத்தை  அடைய உதவும் சாதனமாக இந்த உடம்பே திகழ்கிறது என்ற உண்மையை உலகிற்கு அறைகூவியவர் அவர். சித்தர்கள் தங்கள் உடலைப்  புடம்போட்டுப் புடம்போட்டு நிரந்தரமாக வாழும் வல்லமை பெறுகிறார்கள்.

மனத்தில் பொங்கும் கருணை, தன் உடலை ஒரு பொருட்டாக நினைக்காத மனப்பான்மையைத் தோற்றுவிக்கின்றது. சிபிச் சக்கரவர்த்தி தன்னைச்  சரணடைந்த புறாவைக் காப்பாற்ற நினைத்தான். அதை உண்ண வந்த கழுகிற்கு புறாவின் எடைக்கு எடை தன் கால் சதையைக் கொடுத்தான்.  அப்படியும் எடை குறைவாகத் தென்படவே தன் உடல் முழுவதையுமே கழுகிற்குக் கொடுத்துப் புறாவைக் காப்பாற்ற எண்ணித் தானே தராசிலேறி  அமர்ந்தான். அக்னி தேவன் புறாவாகவும் தேவேந்திரன் கழுகாகவும் வந்து சிபிச் சக்கரவர்த்தியின் கருணை மனத்தைச் சோதித்ததாகக் கதை  வளர்கிறது.

ததீசி முனிவரின் உடல், தவ ஆற்றல் காரணமாகப் பெரும் வலிமை பெற்றிருந்தது. இந்திர லோகத்தைக் கைப்பற்ற வந்த விருத்தாசுரனைத் தன்  ஆயுதங்களால் கொல்ல இயலாமல் திகைத்தது தேவேந்திரன் மனம். உலோகத்தால் ஆன ஆயுதங்களால் தன்னைக் கொல்ல இயலாது என வரம்  பெற்றவன் அல்லவா, அந்த அரக்கன்! ததீசி முனிவரது முதுகெலும்பின் வலிமையறிந்த தேவேந்திரன் அவரிடம், தான் ஆயுதம் தயாரிப்பதற்காக  அவரது முதுகெலும்பைக் கேட்டான்.

தன் உடலை ஒருசிறிதும் பொருட்படுத்தாத அந்த மாமுனிவர், இந்திரனுக்கு உதவுவதற்காகவும் விருத்தாசுரனின் கொடுமைகளிலிருந்து உலகம்  விடுபடுவதற்காகவும் தன் உயிரை உடலிலிருந்து பிரித்துவிட்டார். அவரது முதுகெலும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் இந்திரனின் வஜ்ராயுதம்  என்கிறது புராணம். உண்மையில் முனிவர்களிலேயே அளவற்ற சுயமரியாதை உடையவர் ததீசி முனிவராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால்  அவருக்கு முதுகெலும்பு இருந்தது என்பது மட்டுமல்ல, அது மற்றவர்களை விட மிகுந்த வலிமையோடு இருந்தது என்றும் வரலாறு சொல்கிறதே!

ராமாயணத்தில் எச்சில் கனிகளை நிவேதனப் பொருளாக வைத்துக்கொண்டு ராம தரிசனத்திற்காகப் பல்லாண்டுகள் காத்திருந்த சபரியும் தன் உடலை  ஒரு பொருட்டாக எண்ணாதவள்தான். ராமனை தரிசித்து, தான் கொடுத்த கனிகளை அவன் உண்பதைப் பார்த்து மகிழும் அவள், தன் வாழ்நாள் நோக்கம்  நிறைவேறிவிட்டதால், தொடர்ந்து வாழ விரும்பவில்லை. உலகிற்கெல்லாம் வழிகாட்டியான ராமனுக்கு சுக்கிரீவனைச் சென்றடையும்  கிஷ்கிந்தைக்கான வழியைச் சொல்லி ராமனுக்கே வழிகாட்டி ஆன அன்னை சபரி, பின் தன் உடலை வேண்டாம் என வெறுத்துத் தீயில் புகுந்து  சொர்க்கம் சேர்ந்ததாகச் சொல்கிறது வால்மீகி ராமாயணம். யோக சக்தியால் தன் உடலைத் துறந்தாள் என்கிறது கம்ப ராமாயணம்.

பரம்பொருளான ராமனையே தரிசித்தபின் உடல் பற்று அவளிடமிருந்து அறவே ஒழிந்ததில் வியப்பில்லை. உடல் பற்றை முற்றிலும் ஒழித்த அந்த  ஏழை மூதாட்டியை 'அருந்தவத்து அரசி’ எனப் போற்றுகிறது கம்பனின் கவிமனம். புனிதவதியான காரைக்கால் அம்மையாரின் சரிதத்திலும் அம்மை  உடல் பற்று அறவே அற்றிருந்த அற்புதத்தைக் காண்கிறோம். அம்மை மூலம் தெய்வ மாங்கனி பெற்ற கணவன் பரமதத்தன்,  தன் மனைவியின்  தெய்வத் தன்மை உணர்ந்து விலகி, இன்னொரு பெண்ணை மணந்து வாழ்கிறான். அந்த இரண்டாம் மனைவி மூலம் பெற்ற பெண்ணுக்குப் புனிதவதி  எனத் தன் முதல் மனைவி பெயரையே சூட்டி மகிழ்கிறான்.

முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் தன்னைத் தேடிவந்தபோது அவர் பாதங்களில் வீழ்ந்து பணிகிறான். கணவனால் தொழப்பட்ட  காரைக்கால் அம்மையார் உடலழகை வெறுத்து அதை உகுக்க எண்ணுகிறார். தோலும் சதையும் உதிர்த்து எலும்பு மட்டுமே தாங்கிய பேயுருவை அவர்  சிவனாரிடம் வேண்டிப் பெற்றார் என்பதையும் அந்த உருவுடனேயே கயிலையங்கிரியை அடைந்தார் என்பதையும் அவரது திருச்சரிதம் சொல்கிறது.  சிவன் வாழும் கயிலை மலையைக் காலால் மிதிக்கலாகாது என அவர் தலையால் நடந்து சென்றார்.

அதுகண்டு வியந்த பார்வதியிடம் இவள் நம் அன்னை எனச் சொன்ன சிவபெருமான், தாயில்லாத தன் குறை நீங்க என்புருக்கொண்ட காரைக்கால்  அம்மையாரை 'அம்மையே!’ என அழைத்து நெகிழ்ந்ததாகச் சொல்கிறது சேக்கிழாரின் பெரிய புராணம். பேரழகு படைத்த பெண்ணொருத்தி, உடலையே  வெறுத்து எலும்புருப் பெற்ற கதை உலக வரலாற்றில் வேறெங்கும் காணாத புதுமை! உடல் இருந்தும் அந்த உடல் மற்றவர் கண்ணுக்குப் புலனாகாத  நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்? இத்தகைய நிலையை ஒருமுறை அடைகிறான் நளன்.

தமயந்தியிடம் இந்திரனால் தூதனுப்பப் பட்ட நளன், இந்திரன் கொடுத்த தற்காலிக வரத்தால் இந்நிலையை அடைந்தான் என்று சொல்லி, அந்த  நிலையால் நேர்ந்த விளைவுகளை சுவாரஸ்யமாக விவரிக்கிறது மன்னன் அதிவீரராம பாண்டியன் எழுதிய நைடதம் என்னும் தமிழ்க் காப்பியம்.  மற்றவர் கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்த நளன், தமயந்தியைச் சந்திக்க அவள் வாழும் விதர்ப்ப நாடு செல்கிறான். அவன் வழியில்  சந்தித்த ஒரு பெண்ணின் விளையாட்டை அவன் வாய்விட்டுப் பாராட்ட, அவள் காற்றிலிருந்து குரல் வருவதுகண்டு திகைக்கிறாள். நளன், தான்  தோற்றமில்லாமல் இருப்பதை
அப்போதுதான் உணர்கிறான்.

ஒருத்தி அணிந்த ஆபரணத்தில் அவன் பிரதிபிம்பம் தெரிகிறது. ஆனால் நேரில் அவன் தெரியவில்லை. அவள் திகைக்கிறாள். பெண்கள் பூப்பந்தெறிந்து  விளையாடுகின்றனர். அது நளன்மேல் படுகிறது. நளன் அதைப் பிடித்து மறுபடி அந்தப் பெண்களிடமே வீசுகிறான். பூப்பந்து அந்தரத்தில் அடிபட்டு  மீள்வது கண்டு அந்தப் பெண்கள் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர். இரு பெண்கள் எதிரெதிரே அமர்ந்து பேசியபடி மலர் தொடுக்கிறார்கள். நடுவே நளன்  புகுந்து செல்ல திடீரென உன் உருவம் மறைந்தது ஆச்சரியம்!’ என்கிறாள் ஒருத்தி.

நளன் தெரியவில்லை. ஆனால் அவன் நடந்து செல்லும்போது சுவரில் நளனின் நிழல் தெரிகிறது. வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்கிறாள் இன்னொருத்தி.   இப்படித் தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பல நிகழ்ச்சிகளைத் தொடுத்து நம்மை ரசிக்கச் செய்கிறார் நைடத ஆசிரியரான மன்னர்  அதிவீரராம பாண்டியன். மன்னர் என்றால் கட்டாயம் குதிரையைச் செலுத்தத் தெரியும். புலவரான இந்த மன்னருக்கோ கற்பனைக் குதிரையைத்  தட்டிவிடவும்
தெரிந்திருக்கிறது!

'வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்’ என்று சரஸ்வதியைச் சொல்கிறார்களே, செந்தாமரையில் வீற்றிருப்பவள் என்று லட்சுமியைப் போற்றுகிறார்களே,  ஒரு வெள்ளைத் தாமரைப் பூ எவ்வாறு கலைமகளின் முழு உடல் பாரத்தைச் சுமக்க முடியும், செந்தாமரை எப்படி லட்சுமி தேவியின் உடல்  எடையைத் தாங்கும், மூஞ்சூறு வாகனத்தில் மாபெரும் பிள்ளையார் எப்படி அமரமுடியும், ஒரு சிறிய எலி, அந்தத் தொப்பைக் கணபதியின் உடல்  பாரத்தை எப்படிச் சுமக்கும், இப்படியெல்லாம் கிருபானந்த வாரியாரிடம் சில அன்பர்கள் கேள்விகளைக் கேட்டார்கள். வாரியார் சுவாமிகள் சிரித்தவாறே  பதில் சொன்னார்:

'தேவர்களும் தெய்வங்களும் மனித உடலைப் போல எலும்பும் சதையும் கொண்ட உடலை உடையவர்கள் அல்ல. அவர்கள் ஒளியுடல் பெற்றவர்கள்.  எனவே ஒளிவடிவிலான உடலை மலர் தாங்குவதும் எலி தாங்குவதும் இயலக் கூடியதுதான்!’தேவர்கள் ஒளியுடல் பெற்றவர்கள் என்பதற்குப்  புராணங்களில் பிரமாணம் இருக்கிறதா என்று தொடர்ந்து கேட்டார்கள் அன்பர்கள். அதற்கும் விளக்கம் சொன்னார் வாரியார் சுவாமிகள்: 'தேவர்களுக்கு  நிழல் கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது. நளன் போலவே உருக்கொண்டு வந்த தேவர்களிடமிருந்து மனித நளனை தமயந்தி இனங்காண  உதவியது,

மனித நளனுக்கு நிழல் இருந்ததால்தான். தேவர்கள் ஒளியுடல் கொண்டதால் ஒளி அவர்களை ஊடுருவுமே அன்றி நிழலை ஏற்படுத்தாது. தேவர்கள்  ஒளியுடல் பெற்றவர்கள் என்பதற்கு இதுவே பிரமாணம்!’ ராமாயணப் பாத்திரமான அனுமனுக்கு அவன் உடலின் நிழலாலேயே ஒரு சிக்கல் எழுந்தது.  கடலைக் கடக்கும்போது அனுமனது நிழல் சமுத்திரத் தண்ணீரின் மேல் விழுந்தது. நிழலைப் பிடித்திழுத்து அதன் மூலம் நிழலுக்கு உரியவரையும்  பிடித்திழுக்கும் ஆற்றல் பெற்றிருந்தாள் அங்காரதாரை என்ற அரக்கி.

அவள் அனுமனது உடலின் நிழலைப் பிடித்திழுத்து அதன் மூலம் அனுமனையே பிடித்திழுத்தாள். அனுமனின் பராக்கிரமம் அறியாது அவனைத் தன்  வாயில் போட்டுக் கொண்டாள். வயிற்றுக்குள் சென்ற அனுமன் பேருரு எடுத்து அவளது உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து தன் கடல்  பயணத்தைத் தொடர்ந்தான் என்கிறது சுந்தர காண்டம். என்றேனும் ஒருநாள் நிச்சயம் அழியப் போகிற இந்த உடம்பை மெய் எனச் சொன்னது மங்கல  வழக்கு. உண்மையில் அது பொய்தான். இந்த மெய் இறுதியில் பொய்யாகிறது. உடல் அழியும். ஆனால் வள்ளுவர் சொல்லும் நீதிக் கருத்துகள்  ஒருபோதும் அழிவதில்லை.

- திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்