SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவ ராம நாமத்தில் ஒடுங்கிய உத்தமர்கள்

2018-08-01@ 15:06:32

ஞானியர் தரிசனம் - 21

சிவப்பும் வெள்ளையுமாக சுண்ணம் அடிக்கப்பட்ட திண்ணை அது. முன்னே சரிவாக கூரை வேயப்பட்டிருந்தது. கூரையின் வலது மூலையில் பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. காலை வெயில் கொடுத்த இதத்தில் பசுக்கள் தெருவோரங்களில் கண்மூடி அசைபோட்டபடி இருந்தன. திண்ணையின் மையத்தில் நெற்றியில் விபூதி தரித்தும், கழுத்தில் ருத்ராட்ச மாலைகளோடும் நிமிர்ந்தமர்ந்து பாகவத பாராயணம் செய்து கொண்டிருந்தார், ஸ்ரீதர ஐயாவாள். நெஞ்சு முழுவதும் நேற்று நடந்த நினைவுகள் ஒவ்வொன்றாக அவரை அலைகழித்துக்  கொண்டிருந்தன. ஏன், இரவு முழுவதுமே தூங்காமல் விழித்தபடி இருந்தார். போதேந்திர சுவாமிகள், ‘தானே ஜகத் குருவாகவே இருந்து கொண்டு என்னை துதிக்கிறார். சிவனோ விஷ்ணுவோ சரீர ரூபத்தில் போதேந்திரராகவே இங்கு சஞ்சரித்தபடி இருக்கிறார். அப்படியிருந்தும் ஏன் என்னிடம் விளையாட வேண்டும். ஏனெனில், என்னிடம் பணிவுத் தன்மை குறைவோ. எது எப்படியிருந்தாலும் அவரைச் சந்திக்கும்போது பகவானின் நாமத்தை எனக்கு உபதேசம் செய்யுங்களென்று கேட்கத்தான் போகிறேன் என்று மனதிற்குள் நினைத்தபடி பாகவதத்தை படித்துக் கொண்டிருந்தார்.
ஒரு பிராமணர் தலைதெறிக்க ஓடிவந்து ஐயாவாள் முன்பு மூச்சு வாங்க நின்றார்.

‘‘சுவாமி அங்கே சற்று தொலைவே போதேந்திர சுவாமிகள் உங்களை காண வேண்டுமென்று வந்து கொண்டிருக்கின்றார்’’
‘‘அப்படியா... அவர் தமது
பரிவாரங்களோடு வருகிறாரா...’’
‘‘இல்லை சுவாமி. தனித்து அவர் மட்டும்தான் வருகிறார்.’’
‘‘என்ன சொல்கிறீர்கள். அவர் அப்படி தனித்து வரமாட்டாரே’’

‘‘இல்லை. நான் என் இரு கண்களால் பார்த்தேன் சுவாமி. அவர் மட்டும்தான் வருகிறார்’’ என்று சொல்லி விட்டு அகன்றார். தன்னுடைய இல்லத்தின் படியை விட்டிறங்கும் கணத்தில் அங்கு செக்கச் சிவந்த தூய காவி ஆடையை உடுத்தியபடி பகவான் நாம போதேந்திராள் சுடர்போல நின்றிருந்தார். ஐயாவாள் மேனியெங்கும் சிலிர்த்துப் போட்டது. சூரியனே என் இல்லம் தேடி வந்தது போலிருக்கிறதே என்று கண்களில் நீர் கொப்பளிக்க நெடுமரம் சாய்வதுபோல் போதேந்திராளின் திருவடியில் வீழ்ந்தார். அப்போது போதேந்திராளின் ஹ்ருதயத்தினின்று வாக்கு வெளிப்பட்டது. அது ஸ்லோகமாக வந்தது. ‘‘இறைவனிடத்திலும் இறை நாமத்திலும் சந்தேகமற்ற ஞானமும், பகவானையும் பகவானின் நாமத்தையும் சரணடைந்த பாகவதர்களின் மீது பிரேமையும், பகவானைத் தவிர அது பிரம்ம பட்டமே ஆனாலும் அதை அநாயாசமாக புறந்தள்ளும் வைராக்கியமுடைய ஸ்ரீதர ஐயாவாளை நான் நமஸ்கரிக்கின்றேன்.

இப்படிப்பட்ட ஐயாவாளை ஆஸ்ரயித்தால் பரமேஸ்வரனின் ஈடிணையற்ற கருணை நிச்சயம் கிட்டுமென்று தெரியும். எனவே, அப்படிப்பட்ட ஐயாவாளை வணங்குகின்றேன்’’ என்றார். நெடுமரம் மீண்டும் நிமிர்வதுபோன்று மெல்ல மேனி சிலிர்க்க எழுந்தார். அப்படியே அணைத்துக் கொண்டார். அதேபோல ஐயாவாளும், ‘‘பகவான் நாமம் எனும் ஏக சக்ர ஐஸ்வர்யத்தை தன்னிடம் கொண்ட போதேந்திரர் எனும் தேசிகேந்திரரை வணங்குகின்றேன். நான் உபாசித்த குருவே இப்போது குருமூர்த்தியாக வந்திருக்கிறது. எனவே, இவரை வணங்குகிறேன்’’ என்று துதித்தார். இருவரும் வாயிலினின்று உள்ளே சென்றனர். ‘‘சுவாமிகள், தாங்களே எனக்கு பகவானின் நாமத்தை உபதேசிக்க வேண்டும்’’ என்று ஐயாவாள் மீண்டும் கேட்க, ‘‘எனக்கு அதற்கான அருகதை உண்டா’’ எனத் தெரியவில்லை என்று மறுக்க, ‘‘இல்லை... இல்லை... தாங்கள் தவிர வேறெவரும் எனக்கு உபதேசம் செய்ய முடியாது’’ என்று மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

போதேந்திர சுவாமிகள் அவரை அருகே அழைத்து நாமத்தை உபதேசமாக அருளினார். குருவின் வாக்கு என்பது அவரது மனதிலிருந்து வராமல் அவரது ஆத்மாவிலிருந்து வருவதால் அந்த வாக்கு அவரது சுய அனுபூதியில் தோய்ந்து வருவதால் நாமத்தை உபதேசமாகப் பெறும்போதே ஐயாவாள் பேருணர்வும் பேரனுபவமும் எய்தினார். பிறகு, வெகுநேரம் அவர்கள் சம்பாஷணை செய்துவிட்டு  போதேந்திர சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு திருவிடைமருதூரிலுள்ள தமது முகாமிற்குச் சென்றார். பிறகு, சிறிது காலம் தட்சிண பாரதம் முழுவதும் பிரயாணம் செய்து ராமநாம பிரசாரத்தை மேற்கொண்டார். ஆனாலும், ஸ்ரீதர ஐயாவாளை விட்டுவிட்டு வந்து விட்டோமே, நல்ல சத்சங்கம் போயிற்றே என்று வருத்தமுற்றார். தான் மடத்தோடு கட்டுப்பட்டிருக்கிறோமே என்று நினைத்து அதையும் விடத் தீர்மானித்தார்.

அவ்வாறே குறிப்பிட்ட திதியில் அத்வைதாத்பிரகாசர் என்ற தன்னுடைய சிஷ்ய சுவாமிகளை காமகோடி பீடத்தின் அறுபதாவது பீடாதிபதியாக அபிஷேகம் செய்வித்து ஸ்ரீமடத்தின் நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு தண்ட கமண்டலுவை மட்டும் ஏந்தியபடி திருவிடைமருதூருக்கு வந்து சேர்ந்தார். போதேந்திர சுவாமிகளின் வரவைக்கேட்ட ஸ்ரீதர ஐயாவாளுக்கு பேரானந்தம் ஏற்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக இருவரும் எப்போதும் நாம பிரசாரம் செய்தபடியும் இருந்தார். ஏராளமான நூல்கள் குறித்து எழுதியும் பேசியும் இருந்து வந்தனர். அவ்விருவருக்கும் தாங்கள் வந்த காரணம் முடிந்ததை அறிந்தனர். ஒருநாள் மாலை ஸ்ரீதர ஐயாவாள் திருவிடைமருதூர் கோயிலுக்குள் சென்று பரமேஸ்வரனை வழிபட்டார். வெகுநேரம் சிவநாம கீர்த்தனம் செய்தார். மகாலிங்கசுவாமி உருகினார். பெரும் ஜோதி ரூபமாக எழுந்தார். ஐயாவாள் அந்தக் காட்சியை கண்டதும் மெல்ல நடந்து கருவறையில் ஜோதி ரூபமாக எழுந்த ஈசனுக்குள் சென்று மறைந்தார். சுற்றிநின்றோர் அனைவரும் ஹரஹர மகாதேவ என்று பிளிறினர்.

போதேந்திர சுவாமிகள் அப்போது திருவிடைமருதூருக்கு அருகேயுள்ள கோவிந்தபுரம் எனும் ஊரில் வசித்து வந்தார். இத்தலம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது. ஐயாவாள் மகாலிங்க சுவாமியிடம் ஐக்கியமானதை போதேந்திராளும் அறிந்தார். வெகுநேரம் அப்படியே சமாதி அனுபவத்தில் தோய்ந்திருந்தார். யாருடனும் வெகுகாலம் பேசாமல் ராமநாமத்தையே தன்னுள் உருட்டியபடி அமர்ந்திருந்தார். சட்டென்று குழந்தைகளை அழைத்து தன்னை மூடச் சொன்னார். மறுநாள் வந்து பார்க்கச் சொன்னார். எல்லோரும் வந்து ஆராய்ந்தபோது அசரீரியாக சுவாமிகள் பேசினார்.

‘‘யாம் இவ்விடத்திலேயே ஞான மயமான சரீரத்தில் இருந்து கொண்டு யோக சக்தியால் பகவான் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்குமேல் பிருந்தாவனம் எனும் துளசிச் செடி அமைத்து ஆராதித்து வாருங்கள்’’ என்று பணித்தார். இந்தச் சம்பவம் கி.பி. 1692ம் ஆண்டு நிகழ்ந்தது. ஆனால், காலம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. எங்கேயோ காவிரி மணலுக்குள் இவரின் அதிஷ்டானம் மறைந்தது. இப்படி மறைந்ததை கண்டுபிடிக்கவும் இவ்விருவரின் மகிமையை உலகிற்கு உணர்த்தவும் வேறொரு மகான் வந்தார். அவரை மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்று அழைத்தனர். சங்கீத மும்மூர்த்திகள் என்பதுபோல நாம சித்தாந்தத்தை உலகிற்கு அருளிய மூவர்களில் ஒருவராக மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் விளங்கினார்.

கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்