SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காணக்கிடைக்காத வேரின்றி மரமே இல்லை!

2018-07-30@ 16:32:45

மகாபாரதம் - 89

விதுரர், திருதராஷ்டிரனுக்கு மேலும் அறிவுரை பகன்றார்: ‘‘நண்பன் என்பவன் நன்றியுள்ளவனாக, தர்மம் உடையவனாக, சத்தியவானாக, உதார குணம்  (இரக்கம்) உள்ளவனாக, உறுதியான அன்புடையவனாக, புலன்களை வென்றவனாக,மரியாதைக்குட்பட்டவனாக, நட்பை துறக்காதவனாக இருக்க  வேண்டும். ‘‘புலன்களை எப்போதும் அடக்கி வைத்திருப்பது மரணத்தைவிட கடுமையானது. புலன்களை கட்டவிழ்த்து விடுவது, அந்த தேவர்களையும்  அழிக்கக்கூடியது. மங்களப் பொருட்களில் ஸ்பரிசம் (உதாரணம் கையில் எலுமிச்சை பழம் வைத்திருத்தல்) உள்ளத்தை அடக்குதல்,

சாஸ்திர பயிற்சி, உழைப்பு, எளிமை, நல்லவர்களின் தரிசனம், எப்போதும் நன்மை தரும். ஒரு முயற்சியில் ஈடுபடுதல், அங்கே சலிப்பு  கொள்ளாதிருந்தல், உயர்வு. முயற்சியை விடாத மனிதன் மகானாகிறான். முயற்சியோடு கூடிய பொறுமை மிகுந்த நன்மையை அளிக்கக் கூடியது.  முயற்சிக்கும் பொறுமைக்கும் என்ன சம்பந்தம்? சிறிது யோசித்தாலும் தெரிந்து விடும்.‘‘துக்கத்தால் பீடிக்கப்பட்டவன், நாஸ்திகன், குற்றம் செய்தவன்,  சோம்பல் உள்ளவன், புலனடக்கம் அற்றவன் மற்றும் உற்சாகம் இல்லாதவனிடம் லக்ஷ்மி வாசம் செய்வதில்லை.

அவனை சக்தியற்ற மனிதனாகக் கருதி அவனிடமிருந்து விலகுகிறது. வேதங்களின் பலன் அக்னி ஹோத்ரம் செய்வது. சாஸ்திரங்களின் பலன்  நன்னடத்தை, பெண்ணின் பலன் ரதிசுகமும், புதல்வனை பெறுதலும், செல்வத்தின் பலன் உபயோகமும், தானமும்.‘‘தீயவழியில் சம்பாதித்த பணம்,  என்னவிதமான தானத்தில் ஈடுபட்டாலும், அப்படி செய்தவனுக்கு தர்ம பலனைத் தருவதில்லை. ஏனெனில் அது தீயவழியில் வந்தது.  கோபமின்மையால் கோபத்தை வெல்ல வேண்டும். சாதுவாக இல்லாதவனை நல்ல செயலால் வெல்ல வேண்டும். கருமியை தானத்தால் வெல்ல  வேண்டும்.

பொய்யை சத்தியத்தால் வெல்ல வேண்டும்.‘‘பெண்ணாசையுடையவன், சோம்பலானவன், கோழை, கோபமுடையவன், கர்வமுடையவன், திருடன்,  நன்றியில்லாதவன், நாஸ்திகனை நம்பக்கூடாது. ‘‘எவன் தினந்தோறும் பெரியவர்களை வணங்குகின்றானோ, முதியவர்களின் சேவையில்  ஈடுபடுகின்றானோ அவனுடைய கீர்த்தி, புகழ், பலம், செல்வம் நான்கும் வளர்கின்றன.‘‘தலைகுனிவு காரியத்தால் கிடைக்கும் செல்வத்தை  விரும்பக்கூடாது. வித்தை இல்லாத மனிதன், பிள்ளை பெறாத பெண், ஆகாரம் கிடைக்காத பிரஜை, மன்னன் இல்லாத ராஜ்ஜியம் இதற்காக துயரப்பட  வேண்டும்.

அதிகமாக நடப்பது, தேகம் உள்ளவர்களுக்கு துக்கம். தொடர்ந்து நீர் விழுவது மலைகளுக்கு துக்கம். புருஷன் இருந்தும் சேர முடியாத பெண் பெரும்  துக்கம். சொல்லால் ஏற்படும் காயம்தான் மிகப்பெரிய துக்கம். ஒரு பதிவிரதைப் பெண்ணுக்கு விளையாட்டும், பரிகாச பேச்சும் துயரம் தருபவை.  கணவன் வேறு தேசத்தில் இருப்பது பெண்களுக்கு துயரம் தருபவை.‘‘தங்கத்தின் மாசு வெள்ளி. வெள்ளியின் மாசு ஈயம். ஈயத்தின் மாசு கண்ணாடி.  கண்ணாடியின் மாசு தூசு. மாசற்று இருப்பது என்பது ஒவ்வொரு மனிதனும் கவனம் கொள்ள வேண்டியது. காமத்தை பயன்படுத்தி பெண்ணை வெல்ல  முடியாது.

விறகை போட்டு தீயை அணைக்க முடியாது. அதிகம் குடித்து விட்டு மது அருந்தும் பழக்கத்தை விடுவது பற்றி பேச முடியாது. மது அருந்தி நல்லது  பேசுவது எவ்வளவு அபத்தமோ அத்தனை அபத்தம் பெண்ணிடம் காமத்தை கிளறி வசப்படுத்தலும்.‘‘ஒரு லட்சம் ரூபாய் உடையவனும், ஒரு லட்சம்  பொன் உடையவனும் உயிரோடு இருக்கிறான். நூறு லட்சம் பொன் உடையவனும் உயிரோடு இருக்கிறான். பத்து பொன் இருப்பவனும் உயிரோடு  இருக்கிறான். பொன்னே இல்லாதவனும் உயிரோடு இருக்கிறான். எனவே வாழ்வதற்கும் செல்வத்திற்கும் சம்பந்தம் இல்லை.

இதை புரிந்து கொண்டால் பேராசை வராது. ‘‘எல்லோரிடமும் சமபாகமாகவே நீங்கள் நடப்பதற்காக இத்தகைய விஷயங்களை உங்களுக்கு கூறினேன்.  பொய் சொல்லி உன்னதம் அடைதல், அரசனிடம் கோள் சொல்லுதல், பெரியவர்களிடம் பொய்யான குற்றச்சாட்டு சொல்லுதல் போன்றவை  பிரம்மஹத்தி தோஷத்திற்கு சமானம். செல்வம் அந்த இடத்தில் நிலைப்பதில்லை. அவசரம், தற்புகழ்ச்சி, சேவை செய்யாதிருத்தல் இவை வித்தைக்கு  பகை. சோம்பல், தந்திரத்தன்மை, கோஷ்டியாக அலைதல், கர்வம், சுயநலம், அநாகரிகம், மத மோகம் ஏழும் மாணவர்களுக்கு குற்றமாகக்  கருதப்படுகின்றன.

‘‘வெள்ளாடுகள், வெள்ளி, தேன், வில், பறவை, வேதம் அறிந்த பிராமணனின் நட்பு, குடும்பத்து முதியவன், வெண்கல பாத்திரம் ஆகியவை  எப்பொழுதும் உன் வீட்டில் இருக்கட்டும். வீட்டிற்கு வந்த விருந்தினரை பூஜிப்பதற்காக ஆடு, மாடு, சந்தனம், வீணை, கண்ணாடி, தேன், நெய், நீர்,  தாமிரப் பாத்திரம், சங்கு, சாளக்கிராமம், கோரோஜனம் ஆகிய பொருள்கள் வீட்டில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம் கொண்டு  வீடும், நாடும், நகரமும் வைத்து ஆண்ட மன்னர்களெல்லாம் யமலோகத்திற்கு போய்விட்டார்கள்.

அந்த மன்னருக்கு முன்னால் அவன் புதல்வன் இறந்தால் உடனே வீட்டை விட்டு வெளியே எடுத்துப் போய்விடுகிறார்கள். ஊரின் கோடியில் தகனம்  செய்து விடுகிறார்கள். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாய் யோசிக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த லோகம் மட்டுமல்ல, பரலோகத்திலும்  அறியாமை என்னும் இருள் பரவியிருக்கிறது. எல்லா இடங்களிலும் அந்த இடத்திற்கேற்ப புலன்களும், மோகங்களும் உண்டாகின்றன.  அறிவுடையவன்தான் இதை ஆராய்ந்து
தப்பித்துக் கொள்கிறான்.

‘‘மன்னா, இந்த ஜீவாத்மா, ஒரு நதி. இதில் புண்ணியம்தான் ஜலம். தைரியமே இதன் கரைகள். இரக்கம் இதன் அலைகள். புண்ணிய கர்மங்கள் செய்த  மனிதன் இதில் நீராடி புனிதம் அடைகிறான். பேராசையற்ற மனம், எப்பொழுதும் பவித்ரமாக இருக்கிறது. எவன் தன் பந்துகளை மரியாதையால்  மகிழ்விக்கிறானோ செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்று அவர்களுடன் விவாதிக்கிறானோ அவன் மோகத்தில் சிக்குவதில்லை.‘‘பசியை பொறுத்துக்  கொள்வதுபோல ஒரு மனிதன் காமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். காமம் பசியை காட்டிலும் உக்கரமானது. அறிவு அழிப்பது.

பசியில் கெஞ்சத் தோன்றும். காமத்தில் அதிகாரமும், அத்துமீறலும் இருக்கும். கை, கால்களை கண்களாலும், கண் காதுகளை மனதாலும், மனம்,  வாக்கை தர்ம பேச்சுகளாலும் சுத்தம் செய்து கொள். காமம் என்பது பெண்ணிடம் மட்டுமல்ல, எத்தனையோ விதமாக வெளிப்படும். காமம் என்பதற்கு  ஆசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.‘‘திருதராஷ்டிரா, இத்தனையும் நான் பேசியதற்குக் காரணம், பாண்டு நந்தனர் யுதிஷ்டிரர், க்ஷத்திரிய  தர்மத்தின்படி போருக்குத் தயாராகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது இருவருக்கும் நடுவே இருக்கின்ற நீங்கள் மட்டுமே.

உங்கள் உடம்பு இரண்டாக பிரிந்து ஒரு பக்கத்தை இன்னொரு பக்கம் எதிர்த்தால் உங்கள் நிலை என்ன ஆகும். எந்தப் பக்கம் ஜெயிக்க வேண்டும்  என்று நீங்கள் விரும்புவீர்கள்? இதை யோசிக்க யோசிக்க நான் அதிர்ந்து போகிறேன். உங்களுக்கு என்ன உசிதம் என்றுத் தோன்றுகிறதோ அதைச்  செய்யுங்கள்,’’ என்று முடித்தார் விதுரர்.‘‘விதுரா, மிகப் பொறுமையாக எனக்கு நல்ல விஷயங்களை கூறினாய். பாண்டவர்களிடம் நான் பிரேமை  வைத்திருக்கிறேன் என்றாலும் துரியோதனனை சந்தித்த பிறகு என் அறிவு மாறிவிடுகிறது.

இது என் விதி, விதுரா. விதியை மாற்றும் வலிவு எவருக்கும் இல்லை. இன்னும் ஏதேனும் எனக்கு சொல்ல வேண்டியிருப்பின் சொல்,’’ என்று  சொல்லிப் பெருமூச்சு விட்டான் திருதராஷ்டிரன்.‘‘மன்னா, குமார சனத் சுஜாத என்கிற பெயரில் பிரசித்த பெற்ற ரிஷி இருந்தார். அவர் பிரம்மாவின்  புதல்வர். அவருக்கு மரணமே இல்லை. அவர் அறிவுடையவர்களில் மிகச் சிறந்தவர். அவர் தங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில்  சொல்வார்.’’‘‘அந்த ரிஷி சொன்னதையே விதுரா, நீ எனக்கு சொல்லலாகாதா? உன் அறிவு ஒத்துழைக்குமானால் எனக்கு அதைச் சொல்.’’

திருதராஷ்டிரருக்காக விதுரர் மனம் குவித்து சனத் சுஜாத என்கிற ரிஷியை அழைத்து உபசாரங்கள் செய்து உட்கார வைத்தார். ‘‘எதைச் சொன்னால்  இந்த மன்னர் தன் துயரத்திலிருந்து கடப்பாரோ, தெளிவு அடைவாரோ, அமைதி அடைவாரோ அந்த விஷயத்தை தயவு செய்து இவருக்குச்  சொல்லுங்கள்’’ என்று விதுரர் பணிவாக சனத் சுஜாதரிடம் வேண்டினார் விதுரர் திருதராஷ்டிர மன்னனின் கேள்விக்கு தானே நேரிடையாக பதில்  சொல்லாது, தன்னைக் காட்டிலும் சனத் சுஜாத முனிவரிடம் கேள்வி கேட்கச் சொன்னார். திருதராஷ்டிரன் சனத் சுஜாவை அறிந்திருந்தார்.

‘‘மரணம் என்று ஒன்று இல்லை என்று சொல்கிறீர்களாமே, கண்ணெதிரே நிகழ்கின்ற ஒரு சம்பவத்தை, உலகம் காலம் காலமாக அனுபவித்து வரும்  துக்கத்தை எப்படி இல்லையென்று சொல்கிறீர்கள்? தேவர்களும், அசுரர்களும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதின் மூலம் மரணத்தை வெல்கிறார்கள்  என்றும் கேள்விப்பட்டேன். முனிவரே, மரணம் உண்டா? உண்டெனில் அதை வெல்வது எளிதா? என் நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னிடம்  இருக்கும் கேள்வி என்னை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று கை கூப்பினார் திருதராஷ்டிரன்.

அறிஞர்கள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் அதை புரிந்து கொள்ள தனியான ஒரு அறிவும், தகுதியும் தேவைப்படுகின்றன. அதை  எவன் கேட்கிறானோ அவன்தான் அந்தத் தகுதியை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் பதில் விளக்கி விடாது.‘‘மன்னா, இந்த  விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம். மரணம் உண்டு. அது கர்மத்தால் விலகுகிறது என்பது ஒரு கொள்கை. மரணம் என்பதே இல்லை என்பது  இரண்டாவது கொள்கை. இவை இரண்டுமே சத்தியங்கள். இன்னும் சூட்சமமாக சொல்கிறேன்.

‘‘தவறே மரணம். தவறின்மையே அமிர்தம். மரணம் என்பதை ஒரு புலியைப் போல வர்ணித்து அது பசுவை அடித்து சாப்பிடுவதைப் போல நிகழ்கிறது  என்று வித்வான்கள் சொல்கிறார்கள். மரணம் அப்படி நிகழவில்லை. இதற்கு அதிகாரியாக தென்திசை காவலன் எமனை வித்வான்கள் சொல்கிறார்கள்.  எமன் பித்ரு லோகத்திற்கு அதிகாரி. தன்னை அறிந்து கொள்ளாததின் விளைவால் ஒரு மனிதன் மரணத்தை கற்பிதம் செய்து கொள்கிறான். தான் யார்  என்ற கேள்விக்கு பெயரும், ஊரும், மதமும், ஜாதியும் சொல்கிறான். மனம் என்பது இலையும், பூவும், கனியும், காயுமா? அதுதான் காணக்  கிடைக்கிறது.

ஆனால் அதனாலா வாழ்கிறது? வேர் காணக் கிடைப்பதில்லை. ஆனால், வேரின்றி மரம் இல்லவே இல்லை. கனியும் காயும் இலையும் பாழே.  மனிதனுடைய ஆத்மாவை தரிசனம் செய்யாது தனக்குத்தானே அடையாளங்கள் ஏற்படுத்திக் கொண்டு நான் இன்ன வம்சம் இன்னாருடைய பிள்ளை  என்கிறபோது மிகப்பெரிய தவறு நேருகிறது. தவறே மரணம். தவறின்மை அமிர்தம்.‘‘மனிதன் ஆசைவாய்ப்பட்டு மோகாவேசம் கொண்டு தனக்கு  எதிர்படுகின்ற விஷயங்களோடு ஐக்கியமாகி தான் அதற்கு நட்போ, எதிரியோ, பிரிந்துபடுகிறான்.

உண்மையில் எவனும் எதற்கும் நட்புமில்லை எதிரியுமில்லை. அந்தராத்மாவில் லயிக்க தெரிந்து விட்டால் மனம் காணாமல் போகிறது. மனமற்ற  இடத்தில் ஆசை வருவதில்லை. ஆசை இல்லாததால் மோகாவேசம் கொள்வதில்லை. மோகாவேசம் இல்லாததால் ஆத்திரம், ஆசூயை, கோபதாபம்,  வஞ்சனை, தற்புகழ்ச்சி,  கள்ளம், கபடம், கெடுமனம், மித்ர துரோகம் போன்ற கேவலமான எண்ணங்கள் உண்டாவதில்லை. இந்த விஷயங்களில்  சிக்கிக் கொண்டவன் புயற் கடலில் துரும்பென அலைகழிக்கப்படுகிறான். தன்னை சரீர சம்பந்தம் உள்ளவனாகவும் நினைத்துக் கொள்கிறான். இது  தவறு.

இது தவறான கற்பிதம். இதுவே மரணம்.‘‘நீ சரீரமற்றவன் என்பதை உணர்ந்து விட்டால் இந்த உலக விஷயங்களில் எதிலும் எந்த நாட்டமும் இராது.  இவற்றில் நீ செய்ததாகவோ செய்யாததாகவோ கருதமாட்டாய். இந்த நடுநிலையில் நல்லதும், கெட்டதும் வெளிவராது. வயலை விட்டு வீட்டிற்கு  போவது போலவும், வீட்டை விட்டு வயலுக்கு போவது போலவும், அரண்மனைக்கு போவது போலவும் ஒருவன் செய்தால், அது மரணமா அல்லது  மாற்றமா? மாற்றத்தை மரணம் என்று கொண்டிருக்கிறோமா. வயலை விட்டு வீட்டிற்கு வந்தவன் துக்கப்படுவதில்லையே. அரண்மனைக்கு வந்தவன்  அழுவதில்லையே.

ஆன்மாவின் இடம் மாற்றத்தை அறிந்து கொண்டால் மரணம் உண்டோ. ‘‘எனவே, மரணம் என்பது கற்பிதம். மனிதன் உருவாக்கிய விஷயம். அதற்குக்  காரணம் தன்னை சரீரம் என கொள்ளுதல். சரீரத்தால் கிளர்ந்த ஆசை. அந்த ஆசை கொடுத்த மோகாவேசம். மோகாவேசத்தால் தோன்றிய அற்ப  குணங்கள். இவை அனைத்தும் தவறு. இந்த தவறே மரணம். ஆத்மாவில் லயித்திருப்போருக்கு தவறின்மை என்ற அமிர்தம்  கிடைக்கிறது.‘‘கோமணத்தோடு வயலிலும், வேட்டியோடு வீட்டிலும், அலங்காரத்தோடு அரண்மனையிலும் இருப்பதுபோல ஒவ்வொரு லோகத்திலும்  ஒரு நியதி உண்டு.

எமனுடைய லோகம் பித்ரு லோகம். அங்கே ஆன்மாவிற்கு வேறுவிதமான இருப்பு. மன்னா, இன்னும் இந்த விஷயத்தை சூட்சுமமாக சொல்கிறேன்,  கேள். இறந்த பிறகு மனிதனுடைய மனமும் புலன்களும் உயிரோடு உடன் செல்கின்றன. கனவில் நீ உண்ணுவதில்லையா, சுவையான பானம்  குடிப்பதில்லையா, ஆனால் அவை அங்கு இல்லை. மனம் அந்த நினைவை சுமந்து செல்கிறது. இந்த நிலைமையே ஒரு லோகத்தில் வாழ்க்கை  ஆகிவிடுகிறது. சரீரமாய் இருக்கும்போது உணவிலும், மதுவிலும், பெண் போகத்திலும், செல்வத்திலும், ராஜ்ஜியம் ஆளுவதிலும் ஆவல் கொண்ட  மனிதனின் நினைவு, அவன் இறந்த பின்னும் அவனை ஆட்டிப் படைக்கிறது.

‘‘சரீரத்தோடு இருக்கும்போது ஆன்ம தரிசனம் பெற்று விட்டால், சரீரம் தாண்டி உள்ளே இருப்பது யார் என்று புரிந்து விட்டால், மரணத்திற்குப் பிறகு  மனம் ஆன்மாவை சுற்றி இருக்கிறது. புலன்கள் உதிர்ந்து விடுகின்றன. புலன்களை வெல்லாத மனம் இறந்த பிறகும் சுக போகத்திற்கு அலைகிறது.  புலன்களில் வசப்படுகிறபோது ஆன்மாவை அறிகின்ற ஞான சக்தி அழிந்து விடுகிறது. மரணத்தை வெல்ல விரும்புபவன் தன் ஆன்மாவை அறிய  வேண்டும். ஆன்மாவை அறிவதற்குண்டான எளிய வழி சரீரம் உள்ளபோதே பரமாத்மாவை சரணடைதல். பரமாத்மா தரிசனம் ஆன்மாவை இனம்  காட்டுகிறது.

‘‘பரமாத்மா தரிசனம் என்றால் என்ன? சிந்தனைகளை விஷயங்களில் சிதற விடாது தன்னையே அவதானிக்கும் பயிற்சி. ஆன்மாவை அறிந்தவன்  மரணத்திற்கு பயப்படுவதில்லை. மரணம் என்று ஒன்று அங்கு நிகழ்வதும் இல்லை. இரு பிறப்பாளர்களுக்கு அதாவது அந்தணர்களுக்கு யக்ஞத்தின்  மூலம் விடிமோட்சம் ஏற்படும் என்றும், வேதமே ஒருவனுக்கு ஞானம் என்ற பௌருஷத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.’’‘‘இதைப் பற்றி  சொல்லுங்கள்.’’ ‘‘வேதங்களில் பற்பல காரியங்களை செய்து ஏணிப்படிகளில் ஏறுவதுபோல வாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஞானமார்க்கம் வெகுவிரைவில் ஆன்ம தரிசனத்தை தரவல்லது. ஞானமார்க்கம் என்பது இடையறாது தன்னை எல்லாவிதமாகவும் கவனித்துக்  கொள்வதாகும். வேதம் இதற்கு உதவி செய்யும். செய்யாமலும் போகலாம்.’’திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘முனிவரே மாயையை உண்டாக்கியது யார்?’’  ‘‘மனிதர்களை வசப்படுத்த இவ்விதம் ஆசையை உண்டாக்கியதால் அல்லவா ஆசையிலிருந்து அகன்றிருப்பது என்பது புரிபடும்? உச்சி வெயிலில்  தண்ணீர், தாகம் பற்றிய சிந்தனை அதிகம் எழுவது இல்லையா?

அதுபோல சரீரம் எடுத்த பிறவிகளை ஆத்ம தரிசனம் அறியச் சொல்லி மாயையான உலகத்தில் ஆசைகளால் சூழப்பட்டு சரீரம், தான் என்ற  அகங்காரத்தோடு அலைவதை அந்த பரமாத்மா என்ற அறிவு சொரூபம் காட்டுகிறது. பேத விஷயங்கள் ஒரு நெறிப்பட்ட வாழ்க்கையை காட்டுகின்றன.  அந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டே அதனிலும் மேலான விஷயத்தை மனிதப்பிறவி எடுத்தவன் முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் வேதமும்  கூறுகிறது. வேதத்தை மட்டுமே கைக்கொள்வதில் மாயை அகலாது. வேதம் ஒரு வாழ்வு நெறி. அந்த வாழ்வில் மாயை பற்றிய விசாரணை நடத்தப்பட  வேண்டும்.’’

‘‘எனக்குப் புரிகிறது. ஆனால் இது பற்றிய அக்கறையெல்லாம் இல்லாது வேத தர்மம் என்னவென்று புரியாது பலர் வாழ்கிறார்கள். இதில் நஷ்டம்  மனிதருக்கா? வேதத்திற்கா?’’‘‘மன்னா, மேலேறச் சொல்லி ஏணி சாத்தப்பட்டிருக்கிறது. முயன்று படிகளில் ஏறவேண்டும். பூமியின் சம்பந்தம்  அறும்வரை மேலே போகவேண்டும். நான் சொல்வது ஒரு உபமானம். அப்பொழுது பிறந்த இடமும், வளர்ந்த இடமும் இதனால் இதனிலிருந்து  விடுபட்ட சரீர தன்மையும் அகங்காரம் கொண்ட மனிதனுக்குத் (மனதுக்கு) தெரியும். அந்த மனது அகங்காரத்தையும் விடுகிறது.

முட்டையிலிருந்து குஞ்சு வந்தபிறகு சிறகு மீதுதான் பறவைக்கு எண்ணமே தவிர, அதுவரை காத்து வந்த முட்டையை கொண்டாடாது.’’‘‘இதுவும்  புரிகிறது. ஆனாலும் சிக்கலின் அடி ஆழம் புரியவில்லையே,’’ மன்னன் கவலையோடு கேட்டான். சனத் சுஜாத முனிவர் ஸ்லோகங்கள் போல,  கவிதைகள் போல பேசத் துவங்கினார். ‘‘இந்த பூமி ஐம்பெரும் பூதங்களால் ஆனது. இங்கு சரீரம் எடுத்த ஆன்மாவை ஐந்து புலன்களால் சூழ்ந்து  கொள்கிறது. ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களாகின்றன. இந்தப் புலன்களின் கூட்டால் மனம் என்கிற விஷயம் தோன்றுகிறது.

இந்த மனம் தன் இருப்பை பலப்படுத்திக் கொள்ள புலன்களை தூண்டுகிறது. புலன்களின் ஆவேசத்தால் அல்லது ஆற்றலால் மனதின் இருப்பு  பெரிதாகிறது. சரீரம் மனதை தான் என்று கொள்கிறது. மனம் சரீரத்திற்குள் அடக்கமாகிறது. ஒன்றை ஒன்று தோள் பற்றிக் கொண்டு  பிரமாண்டமாகின்றன. ஆன்மா முற்றிலும் மறைக்கப்படுகிறது. ஆன்மா சரீரம் விட்டு நகரும்வரை இந்தக் கூத்து நடைபெறுகிறது. சரீரத்திலிருந்து இந்த  மாயா விஷயங்கள் நகராது இருக்க, ஆன்மாவின் நகர்தலுக்கு எதிராக அதாவது மரணத்திற்கு எதிராக பெரும் வலியை கலவரத்தை இவை  ஏற்படுத்துகின்றன.

வலிக்கும் தனிமைக்கும் பயந்து சரீரம் மன போஷாக்கு நடைபெறுகிறது. ஆனால் ஆன்மாவின் நகர்வை அதாவது மரணத்தை நிறுத்த முயலாது.  ‘‘ஆன்மா ஏன் நகர்கிறது, ஏன் பிறக்கிறது என்று சொல்ல, மனிதனுக்கு பக்குவம் இல்லை. அதற்கான வார்த்தை இல்லை. அந்த வித்தை மொழி  வசப்படவில்லை. சொல்லித் தரப்படவில்லை. உலக மொழி அறியாதவன் வாழ்வு பற்றி எப்படி விவரிக்க முடியாதோ பிரம்ம ரகசியத்தை அறியாதவன்  பிறப்பு-இறப்பு பற்றி, ஏன் நடக்கிறது என்பது பற்றி அறிய இயலாதவனாகிறான்.

‘‘இந்தப் புவியில் ஆன்மாவின் இருப்பை உணர்வதே அதாவது மாயையிலிருந்து விடுபடுவதே அதாவது புலன்களும் புலன்களிலிருந்து  உருவகிக்கப்படும் சரீரமும் என்ற உணர்வை தவிர்த்தலே, முக்கியம். வெளிப் பார்வைக்கு சிக்கலெனத் தோன்றும். ஆராயப் புகுந்தால் எளிதாகப் பிரித்து  விடலாம். ‘‘ஆனால் மாயை தன் வலிமையை காட்டும். உணவாலும், மதுவாலும், பெண் போகத்தாலும், மற்றைய கர்வங்களாலும் ஆன்மாவை  மறக்கும். மறைக்கப்பட்டாலும் வெளிச்சம் உள்ளே இருக்கிறது. அது மறையாத அகலாத வெளிச்சம். குறைபாடு வெளிச்சத்தில் இல்லை.  மறைக்கப்பட்டது மறைக்கப்பட்ட வஸ்துக்களில் உள்ளது.

‘‘இன்னொரு சூட்சுமம் சொல்கிறேன் கேள். இந்த பூமியில் பிறந்து சொர்க்கம், நரகம் என்பதை உணர்ந்து, அதாவது சுகம், துக்கம் என்ற உணர்வுகளை  அறிந்து அதற்கேற்ற செயல்களில் மனிதன் ஈடுபடுகிறான். சுகத்தின்போது சந்தோஷமும், இது நீண்டு தங்க வேண்டுமே என்கிற பயமும், துக்கம்  வரவே கூடாது என்கிற பதட்டமும் அவனை அலைக்கழிக்கின்றன. பற்றற்ற மனமே இதை ஆராய்ந்து பார்க்கத் துவங்குகிறது. மனம் பற்றற்று  இருப்பதற்கு ஒரு தர்மம், நியதி இருக்கிறது. இந்த நியதி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனாலேயே வேதம் உயர்வென்று கருதப்படுகிறது.

- பாலகுமாரன்

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்