SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீமைக்கு தீமை செய்வேன் என்று சொல்லாதே

2018-07-27@ 10:18:08

‘‘வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகின்றது. குளங்கள் கோடையில் வற்றி மழைக் காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்டபின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவரும் இல்லை, நிரந்தரமாக துன்பத்தில் உழன்றவரும் இல்லை. முதல் கட்டம் இன்பம் என்றால் அடுத்த கட்டம் துன்பம். முதல் கட்டமே துன்பம் என்றால் அடுத்த கட்டம் இன்பம். முதல் கட்டம் வரவு என்றால் அடுத்த கட்டம் செலவு. முதல் கட்டம் வறுமை என்றால் அடுத்த கட்டம் செல்வம். இறைவனது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன. எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவருக்கும் இறைவன் வழங்கியதில்லை.’’‘‘சோம்பேறி, பருவத்தில் உழுது பயிர் செய்ய மாட்டார். அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார். மனிதர் மனதில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது.

மெய்யறிவு உள்ளவரே அதை வெளிவரச் செய்வார். பலர் தம்மை வாக்குப் பிறழாதவர் எனக் கூறிக் கொள்வார். ஆனால், நம்பிக்கைக்குரியவரை கண்டுபிடிக்க யாரால் இயலும்? எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகின்றாரோ அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள். மன்னன் நீதி வழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும் போது தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான். என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன். நான் பாவம் நீங்கப் பெற்ற தூய்மையாய் இருப்பவர் என்று யாரால் சொல்லக்கூடும்? சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம். அவர் உண்மையும் நேர்மையுமானவரா என்று சொல்லி விடலாம், கேட்கும் காது, காணும் கண், இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.

தூங்கிக்கொண்டே இருப்பதை நாடாதே! நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு! உனக்கு வயிறார உணவு கிடைக்கும். ஒரு பொருளை வாங்கும்போது தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார். வாங்கிச்சென்ற பின் தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார். பொன்னையும் முத்துக்களையும்விட அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன். அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக் கொள். அதை அந்த கடனுக்காக பிணையப் பொருளாக வைத்திரு. வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாய் இருக்கும்.

ஆனால், பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும். நல்ல அறிவுரை கேட்டு திட்டமிட்டால் வெற்றி பெறுவாய். சூழ்ச்சி முறையை வகுக்கும்முன் போரைத் தொடங்காதே. வம்பளபோன் மறை செய்திகளை வெளிப்படுத்தி விடுவான். வாயாடியோடு உறவாடாதே. தாயையும், தந்தையையும் சபிக்கிறவனுடைய விளக்கு காரிருள் வேளையில் அணைந்து போகும். தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியில் ஆசி பெற்றதாய் இராது. ‘‘தீமைக்குத் தீமை செய்வேன்’’ என்று சொல்லாதே. ‘‘ஆண்டவரையே நம்பி இரு. அவர் உன்னைக் காப்பார்.  பொய்யான எடைக்கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவெறுக்கிறார். போலித்துபாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது. மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கிறார்.  அப்படியிருக்க தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்.’’  (நீதிமொழிகள் 20:424)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்