SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடதா, வலதா, மனைவிக்கு எந்த இடம்?

2018-07-26@ 15:41:58

ஆலயத்தில் அர்ச்சனைக்காக தேங்காய் உடைக்கும் போது அது கெட்டுப் போயிருந்தால் மனம் வேதனைப்படுகிறது. அதனால் ஏதாவது குறை  உண்டாகுமா?  - வைரமுத்து பார்வதி, இராயபுரம்.

எந்தக் குறையும் உண்டாகாது. தேங்காய் உடைபடுவதை வைத்து சகுனம் பார்ப்பது தவறு. தேங்காய் அழுகிப்போய் இருந்தாலும், சரியாக உடைபடாமல்  கன்னாபின்னாவென்று உடைந்தாலும் அதைக்கொண்டு இது கெட்ட சகுனம் என்று முடிவு செய்வது தவறு. கோடைகாலத்தில் தேங்காய் அழுகுவது  சகஜமே. இறைவனின் சாந்நித்தியம் நிறைந்த ஆலயத்திற்குள் தீயசக்திகள் உள்நுழைய இயலாது.

வீட்டுப் பூஜையறையிலும் உடைக்கும் தேங்காய் கெட்டுப் போயிருந்தால் வேறு தேங்காய் வாங்கி உடைத்து பூஜையை முழுமையாகச் செய்து  முடியுங்கள். அரைகுறை மனதுடன் செய்யும் பூஜையினால் பலன் கிடைக்காது. எல்லாம் இறைவன் செயலே என்றெண்ணி ‘எனக்குத் துணையாக நீ  இருக்கிறாய்’ என்ற முழுமையான பக்தியோடு பூஜை செய்தாலே போதும், எந்தக் குறையும் உண்டாகாது.

இளம் வயதினர் ருத்ராட்சம் அணியலாமா? அணிந்த பின்னர் என்னென்ன கட்டுப்பாடுகளோடு இருக்க வேண்டும்? - கா.பொன்மாயாண்டி, சென்னை-13.

பஞ்சமுக ருத்ராட்சத்தை வயது வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரும் அணியலாம். ருத்ராட்சம் அணிபவர்கள் மது, மாது, சூது ஆகிய மூன்றோடு புலால்  உண்பதையும் தவிர்க்க வேண்டும். புகையிலை உட்பட லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி வேறெந்த கடுமையான கட்டுப்பாடுகள்  ஏதும் தேவையில்லை. சம்சார பந்தத்தில் உள்ளவர்கள் கூட பஞ்சமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

இரவில் படுக்கைக்குச் செல்லும் போது அவிழ்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. தனது மனைவியைத் தவிர மற்ற பெண்களை தாயாகவும்,  சகோதரியாகவும் எண்ண வேண்டும். ருத்ராட்சம் அணிந்தாலே தீய குணங்கள் விலகி சத்குணங்கள் கூடும். கோபம் குறையும். கோபம் குறைந்தால்  ஆணவமும், அதிகாரமும் அழியும். காம, க்ரோத, லோப, மோக, மத மாத்சர்யங்கள் காணாமல் போகும். இளம் வயதினர் பஞ்சமுக ருத்ராட்சத்தை  அணிவது நல்லதே.

மாசாணியம்மன் கோயில், கொளஞ்சியப்பர் ஆலயம், வெட்டுடையார் கோயில் போன்ற ஆலயங்களுக்குச் செல்ல விரும்புகிறேன். இதுபோன்ற  ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் செயல்பாடுகள் பல வருடங்களுக்கு முன்பு அரசர்கள் காலத்தில் நடந்தேறியவை ஆகும். அந்த ஆலயங்களின்  சாந்நித்தியம் தற்காலத்திலும் நிலைத்திருக்குமா? இந்த கோயில்களில் நாம் பரிகாரம் செய்வதால் பலன் உண்டா? - ஜி.ராமதாஸ்,  தானே, மஹாராஷ்ட்ரா.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆலயங்கள் உள்பட புகழ்பெற்ற அனைத்து ஆலயங்களும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசர்கள் காலத்தில்  கட்டப்பட்டவையே. அந்தந்த ஆலயங்களின் தல வரலாறு, ஆலயத்தின் மகிமையைக் குறிக்கிறது. சிதம்பரம் திருத்தலத்தின் மகிமை வியாக்ரபாத  மகரிஷியாலும், பதஞ்சலி முனிவராலும் கண்டறியப்பட்டது என்பதற்காக அவர்களது காலத்தோடு அந்த திருத்தலத்தின் சாந்நித்யம் நின்றுவிடுமா? ஓர்  ஆலயம் அமைய வேண்டும் என்றால் அந்த இடம் புண்ணிய பூமியாக இருக்க வேண்டும். அந்த இடத்திற்கென்று தனியாக ஸ்தான பலம் இருக்கும்.

உலகெங்கிலும் எத்தனையோ மலைத்தொடர் இருக்க ஏழுமலைக்கு மட்டும் ஏன் இத்தனை மகிமை? மேற்குத் தொடர்ச்சி மலை நூற்றுக்கணக்கான  கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியிருந்தாலும் சபரிமலையை நாடி வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது ஏன்? சூரசம்ஹாரம் என்பது  நடந்து யுகமே மாறியிருந்தாலும் திருச்செந்தூர் திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது ஏன்? இதுபோன்ற திருத்தலங்களில் சாந்நித்யம்  இயற்கையாகவே கூடியிருக்கும். சாந்நித்யம் நிறைந்த இடத்தையே சந்நதி என்று அழைக்கிறோம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாசாணி அம்மன் ஆலயம் அமைந்திருக்கும் இடம் ஒருகாலத்தில் சுடுகாடாக இருந்தது. அநியாயமாக உயிர்நீத்த ஒரு  பெண்ணின் கதையை சித்தரித்து இருப்பார்கள். ஸ்ரீவித்யா உபாசனை பெற்ற அந்தணர் ஒருவர் அந்த இடத்தில் அமர்ந்து ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து,  தனது தவ வலிமை முழுவதையும் பிரயோகித்து பூஜை செய்து வந்ததால் அங்கே அம்பிகையின் சாந்தித்யம் கூடியிருக்கிறது. தவறாமல் நாள்தோறும்  நடந்து வரும் பூஜைகளும், பக்தர்களின் நம்பிக்கையும்தான் ஒரு ஆலயத்தின் சாந்நித்யத்தை தீர்மானிக்கும்.

எப்போதோ நடந்த சம்பவம் என்று எண்ணக்கூடாது. தற்காலத்திலும் மாசாணி அம்மன் கோயிலில் பரிகாரம் செய்து பலன் பெறுபவர்கள் ஏராளம் பேர்  இருக்கிறார்கள். அந்தந்த தலங்களுக்குச் சென்று நேரடியாக தரிசிக்கும்போது அந்த அற்புதமான இறையுணர்வை அனுபவித்துப் பார்த்தால்தான் அதன்  மகிமை புரியும். எந்தவிதமான சந்தேகமும் இன்றி நீங்கள் சொன்ன தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளுங்கள். எண்ணிய பரிகாரங்களை எந்தவித  குறையுமின்றி செய்து முடியுங்கள். உங்கள் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முடி காணிக்கை செலுத்தும்போது உறுப்பினர் எண்ணிக்கையில் மொட்டை போடுவது ஒற்றைப்படையில் இருக்க  வேண்டுமா அல்லது இரட்டைப்படையிலா?
- மு.கார்த்திகேயன், இ-மெயில்


இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்துவதில் எண்ணிக்கை எங்கிருந்து வந்தது? எத்தனை பேருக்கு பிரார்த்தனை இருக்கிறதோ அத்தனை பேரும்  காணிக்கை செலுத்த வேண்டியதுதானே சரி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நேர்த்திக்கடன் செலுத்துவதில் எண்ணிக்கை பார்க்க  வேண்டிய அவசியமில்லை. எந்த எண்ணிக்கையில் இருந்தாலும் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நல்லபடியாக நடந்தேறும். ஒற்றைப்படை என்றால்தான்  வளரும், இரட்டைப்படை வளராமல் நின்றுவிடும் என்று எண்ணுவது முற்றிலும் மூடநம்பிக்கையே.

எதற்கெடுத்தாலும் ஒற்றைப்படை, இரட்டைப்படை கணக்கு பார்ப்பது தவறு. சீர்வரிசை தட்டுகள், மொய்ப்பணம், பூஜையின் போது சுமங்கலிப்  பெண்களின் எண்ணிக்கை என்று எல்லாவற்றிலும் ஒற்றைப்படைதான் இருக்க வேண்டும் என்று தற்காலத்தில் புதிய சாஸ்திரத்தை உருவாக்கிக்  கொண்டு இருக்கிறார்கள். நம்வீட்டுப் பிள்ளை கணக்குப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைப்போமோ அல்லது நூறு  மதிப்பெண் வேண்டாம், அது இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ளது, எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால்தான் நல்லது,

அதனால் தொண்ணூற்றி ஒன்பது மதிப்பெண் எடுத்தால் போதும் என்று எண்ணுவோமா? ஒற்றைப்படை, இரட்டைப்படை கணக்கு என்பதெல்லாம்  நாமாக உருவாக்கிக் கொண்ட விஷயங்கள். ஒற்றைப்படை எண்ணிக்கைதான் வளர்ச்சியடையும், இரட்டைப்படை எண்ணிற்கு வளர்ச்சி குறைவு என்று  எண்ணுவது தவறு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இறைவனுக்கு முடிகாணிக்கை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்த பிறகு  இதில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்ணிக்கையைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

எங்கள் வீட்டுப் பூஜையறையில் பைரவர் படம் வைத்து வணங்குகிறோம். சிலர் பைரவர் படம் வீட்டில் வைக்கக் கூடாது என்கிறார்கள், இது சரியா?- சூரியபிரபா, பூதலூர்.


பைரவர் படத்தை தாராளமாக வீட்டுப் பூஜையறையில் வைத்து வணங்கலாம். பைரவர் மட்டுமல்ல, ஆஞ்சநேயர், ஐயப்பன், நரசிம்மர், காளிகாம்பாள்  உட்பட அனைத்து தெய்வங்களின் படங்களையும் வீட்டுப் பூஜையறையில் வைத்து வணங்கலாம். முடிந்தவரை ஆசார, அனுஷ்டானங்களைக்  கடைப்பிடித்தால் போதும். வீட்டுப் பூஜையறையில் பைரவர் படத்தை வைத்து வணங்கக் கூடாது என்று சொல்வது
முற்றிலும் தவறு.

எங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் உள்ள விநாயகர் சிலையில் லேசாக கீரல் வெடிப்பு உள்ளது. இந்த விநாயகரை வணங்கலாமா? இந்தச்சிலை  பூஜைக்கு உரியதுதானா? - சின்னக்குயில், குத்தாலம்.

பொதுவாக பின்னமான சிலைகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. இருப்பினும் அவற்றிற்கும் விதிவிலக்கு என்பது உண்டு. கீரல் அல்லது வெடிப்பு  சிலையின் எந்த பாகத்தில் உள்ளது என்பதை ஆராய வேண்டும். பீடத்தில் இருந்தால் பிரச்னை இல்லை. சிலையின் மத்தியிலோ, உடல்  அவயங்களிலோ பின்னம் ஏற்பட்டு இருந்தால் சிலையை மாற்றிவிடுவதே உசிதமானது.

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கும்பகோணம் பகுதியில் ஆகமவிதிகளைக் கற்றறிந்த சிவாச்சாரியார்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களில்  ஒருவரை அழைத்துவந்து சிலையைக் காண்பித்து அவரது அபிப்ராயத்தைத் தெரிந்துகொண்டு செயல்படுங்கள். சிலையின் சாந்நித்தியத்தை அவர்களால்  உணர்ந்து உண்மைநிலையைத் தெரிவிக்க இயலும்.

தம்பதியராக ஆன்மிக அல்லது வைதீகச் செயலை மேற்கொள்ளும்போது கணவனுக்கு வலதுபுறம் மனைவி இருக்க வேண்டும் என்று  சொல்கிறார்கள். ஆனால் சிவபெருமான் சந்நதிக்கு இடதுபுறம்தான் அம்பாள் சந்நதி அமைந்திருக்கிறது. கடவுளுக்கு இடப்பக்கம் மனைவி இருக்கலாம்,  மனிதனுக்கு இருக்கக் கூடாதா?  விளக்கம் தேவை. - இரா.ஆ.ஆ. பழனி, தூத்துக்குடி.

கணவனுக்கு வலதுபுறம் மனைவி இருக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள சம்பிரதாய முறை. தமிழகம் தாண்டி வடக்கில் சென்றால் இந்த  சம்பிரதாயம் மாறிவிடும். தமிழகத்தில்கூட புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் சிவபெருமானை முன்  உதாரணமாகக் கொண்டு கணவனுக்கு இடதுபுறத்தில்தான் மனைவி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோரும் உண்டு. ஒருசில தமிழ்த்  திரைப்படங்களில் ஆணுக்கு இடதுபுறம் பெண்ணை அமர வைத்து தாலி கட்டும் காட்சிகளை வைத்திருப்பார்கள்.

இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது. மனிதர்களில் ஆணுக்கு வலது பாகத்தில்தான் சக்தி அதிகம், பெண்ணுக்கு இடது பாகத்தில்தான் சக்தி  அதிகம் என்றும், ஆணின் நாடி வலதுபுறமாக சுழலும், பெண்ணின் நாடி இடதுபுறமாக சுழலும் என்றும் சொல்வார்கள். அதனால்தான் ஆணுக்கு வலது  கரத்தையும், பெண்ணிற்கு இடது கரத்தையும் கொண்டு கைரேகை ஜோதிடம் பார்த்து பலன் சொல்வார்கள்.

ஆணின் சக்தி வலதுபுறத்தில்தான் இருக்கும் என்பதால் நம் ஊர் பெரியவர்கள் ஆணுக்கு வலதுபுறத்தில் பெண் இருக்க வேண்டும் என்று சொல்லி  வைத்தார்கள்.
பரமேஸ்வரனைப் பொறுத்தவரை வலதுபுறத்தில் ஏற்கெனவே சக்தி நிறைந்திருப்பதால் வலுக்குறைந்த இடதுபாகத்தினை சக்திதேவிக்கு அளித்தால்  அந்தபாகமும் சக்தி நிறைந்த பாகமாய் உருவாகி ஆணும், பெண்ணும் சரிசமம் என்ற நிலை உருவாகி விடும் என்பதால் அவர் தனது உடலின்  இடது பாகத்தினை உமையம்மைக்குத் தந்ததாகச் சொல்வார்கள்.

இந்த கருத்துகள் அனைத்தும் அவரவர்களின் சொந்தக் கற்பனையே அன்றி இவற்றிற்கு எந்தவிதமான பிரமாணமும் கிடையாது. கணவனுக்கு  எந்தபுறத்தில் மனைவி இருக்க வேண்டும் என்பது அவரவர் சம்பிரதாயத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த சம்பிரதாயத்தை தவறு என்று சொல்ல முடியாது.  எப்புறத்தில் இருந்தாலும் மனைவிக்கு உரிய மரியாதை என்பது எள்ளளவும் குறையக் கூடாது என்பதே இதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமம்.  என்பதைப் புரிந்துகொண்டால் போதும். வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

என் மனைவி இறந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை சரிவர செய்து வருகிறேன். எனக்கு ஆண் வாரிசு  இல்லை. இரு மகள்களும் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். நிராதரவான நிலையில் நான் முதியோர் இல்லத்தில் வசிக்கிறேன்.  எனக்குரிய கர்மாக்களை யார் செய்வார்கள் என்பது கேள்விக்குறி. கயா சென்று எனக்குரிய ஈமச்சடங்குகளை நான் உயிருடன் இருக்கும்போதே எனக்கு  நானே செய்து கொள்ளலாமா, அதில் பலன் உண்டா? - இராமச்சந்திரன், கோவை.

ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் ஈமச்சடங்குகளைச் செய்ய வேண்டிய அதிகாரம் பெண் பிள்ளைகளுக்கு வந்து சேரும். மகளின் கையால்  தர்ப்பைப்புல் வாங்கி அவரது கணவர் அல்லது அவரது வாரிசுகள் அவசியம் செய்தாக வேண்டும். உங்களைப் பொறுத்தவரை உங்கள் மகள்கள்  இருவருக்கும் அந்தக் கடன் சென்று சேரும். அவர்கள் நிச்சயமாகச் செய்யமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் கயைக்குச் சென்று உங்களுக்கான  சடங்குகளை நீங்கள் உயிருடன் இருக்கும்போதே செய்து கொள்ளலாம்.

ஆனால் அவ்வாறு செய்துகொண்ட பிறகு நீங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்ல இயலாது. எந்த உறவினர்கள் இல்லத்தில் நடக்கும் விசேஷங்களிலும்  கலந்துகொள்ளக் கூடாது. ஆசாபாசங்கள் உறவுகள் அனைத்தையும் துறந்து சந்யாச நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று நம்பினால் அதுபோன்ற  ஆத்மபிண்டத்தை வைத்துக் கொள்ள இயலும். இவ்வாறு வைத்துக்கொள்ளும் ஆத்மபிண்டமானது பேங்க்கில் பணம் டெபாசிட் செய்வதுபோல.

நமக்குத் தேவைப்படும்பொழுது டெபாசிட் தொகையை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது போல, நாம் இறந்த பிறகு நமக்குத் தேவையான ஆகாரம்,  நாம் ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் ஆத்ம பிண்டத்தின் மூலமாக வந்து சேரும். இதனால் உங்கள் ஜீவன் நல்லவிதமாகக் கரையேறும்.  இருந்தாலும் அந்தராத்மா தவித்துக் கொண்டுதான் இருக்கும். இரு மகள்கள் இருந்தும் தங்களுக்கு உரிய கடமைகளை அவர்கள் செய்யவில்லை  என்றால் அந்த பாவம் அவர்களை நிச்சயமாகச் சென்றடையும்.

உங்களைப் பொறுத்தவரை உங்கள் மகள்கள் இருவருக்கும் அந்தக் கடமை நிச்சயம் உண்டு. உங்கள் உயிர் பிரிந்த பிறகு உங்களுக்குரிய  ஈமச்சடங்குகளை உங்கள் மகள்கள்தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்தால்தான் அவர்களது பரம்பரைக்கு நல்லது என்பதை தெளிவுபடச்  சொல்லுங்கள். உங்களுக்கு நீங்களே ஆத்மபிண்டம் வைத்துக்கொள்வதால் உங்கள் ஜீவன் வேண்டுமானால் கரையேறுமே தவிர அவர்களுடைய கர்மா  தீராது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் ஒரு தனி மனிதன். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். என்னால் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விளக்கேற்றி பூஜை செய்ய  இயலவில்லை. நேரம் கிடைக்கும்போது பூஜை செய்கிறேன். இதில் ஏதும் தவறு இல்லையே?
- சேதுராமன், திருவூர்.


இறைவழிபாட்டிற்குக் கால நேரம் ஏது? வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் போன்றோர் இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என்ற  விதிமுறை ஏதும் கிடையாது. நேரம் கிடைக்கும்போது முறையாகப் பூஜை செய்யுங்கள். இயலாதபோது வெறுமனே இறைவனின் திருநாமத்தை  உச்சரித்துக் கொண்டிருங்கள். உடல்நலம் குன்றியவர்கள் படுத்த நிலையிலும் கூட இறைவனின் திருநாமத்தினைச் சொல்லிக் கொண்டு இருக்கலாம்.  தெரிந்த ஸ்லோகங்கள், மந்திரங்களை உச்சரித்து வருவதால் விரைவில் உடல்நலம் சீரடைந்து எழுந்து உட்கார இயலும்.

ஆண்டவனின் திருவுருவத்தை நெஞ்சில் நிறுத்தி மனதாறச் செய்யும் பூஜைக்கு சிறப்பு பலன் நிச்சயம் உண்டு. உங்களால் சரிவர பூஜை செய்ய  இயலாத பட்சத்தில் விக்கிரக வழிபாட்டை வைத்துக் கொள்ளாதீர்கள். வீட்டுப் பூஜையறையில் விக்கிரகம் ஏதேனும் இருந்தால் கட்டாயம் அவற்றிற்கு  அபிஷேக ஆராதனைகளை செய்துவர வேண்டும். உங்களுடைய உடல்நிலை ஒத்துவராத பட்சத்தில் அதுபோன்ற விக்கிரகங்களை முறையாகப் பூஜை  செய்து வரும் உங்கள் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கொடுத்துவிடலாம். அதில் தவறேதும் இல்லை.

- திருக்கோவிலூர் ஸ்ரீஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்