SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரிகாரம் ஏதும் அவசியமில்லை!

2018-07-19@ 16:04:30

எனக்கு வயது 39. பல இடங்களில் பெண் பார்த்தும் இன்னும் அமையவில்லை. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? சில  கோவில்களுக்குப் போய் பரிகாரம் செய்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆறுமுகம், கள்ளக்குறிச்சி.

ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேதுவும், காளசர்ப்ப தோஷமும், திருமணத் தடையை உண்டாக்கி வருகின்றன. ஆயில்யம் நட்சத்திரம்,  கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குருசந்திர யோகத்தினை நீங்கள்  கொண்டிருந்தாலும், ஜென்ம லக்னத்திலிருந்து 12ம் வீட்டில் இணைந்திருப்பதால் சிறப்பான பலனை எதிர்பார்க்க இயலாது. உங்கள் ஜாதக பலத்தின்படி  மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சனி, ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் நீங்கள் பிறந்த ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருந்தே  பெண் அமைவார். ஏழாம் வீட்டில் கேது இணைந்திருப்பதால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்ணாக அவர் இருப்பார். ஏற்கெனவே திருமணமாகி கணவனை  இழந்தவராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்தஸ்து, கௌரவம் பார்க்காமல் வசதி வாய்ப்பில் குறைந்த, ஆதரவற்ற, ஏழைப் பெண்ணாகப் பாருங்கள்.

அந்தப் பெண் ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவராகவே இருப்பார். நீங்கள் அலைந்து திரிந்து தேடவேண்டிய அவசியம் இருக்காது. உங்கள் ஜாதகத்தில்  ஜென்ம லக்னாதிபதியான சூரியன், தனலாபாதிபதியான புதனுடன் இணைந்து ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. பாக்ய  ஸ்தானத்தில் செவ்வாய்சுக்கிரன் இணைவும் உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். உழைப்பும், அதிர்ஷ்டமும் இணைந்திருப்பதால் நல்ல தனலாபத்தைப்  பெறுவீர்கள். சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு விரதம் மேற்கொள்ளுங்கள். அரியலூர் கலியுகவரதப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று தேங்காய்மூடியில் நெய்  விளக்கு ஏற்றி, வணங்கி, திருமணத்தை அதே ஆலயத்தில் வைத்து நடத்திக்கொள்வதாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். பெருமாளின் அனுக்ரஹத்தால்  02.02.2019ற்குப் பின் உங்கள் திருமணம் முடிவாகிவிடும்.

என் பேரனுக்கு வேலை எப்போது நிரந்தரமாகும்? திருமணம் எப்போது நடக்கும்? நல்ல குணமும், சிறந்த பணியும் உள்ள பெண் அமைவாளா? சிவகுருநாதன்,  புளியங்குடி.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி முடிவுறும் காலமாக  இருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகுவும், ஏழாம் வீட்டில் புதன்கேதுவின் இணைவும், எட்டில் சூரியன்சுக்கிரன் இணைவும்  உண்டாகியிருப்பது சுமாரான பலனையே தரும். எனினும் பாக்ய ஸ்தானத்தில் குருசந்திர யோகம் பெற்றிருப்பதால் மற்ற தோஷங்கள் நீங்கிவிடும். தன  ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனி அமர்ந்துள்ளதால் சீரான பணவரவு தொடரும். 28வது வயதில் கிடைக்கும் உத்யோகம் ஸ்திரத்தன்மையை அளிக்கும். களத்ர  ஸ்தானத்தில் புதன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருந்தாலும், உடனிருக்கும் கேது சற்று பலத்தைக் குறைப்பார். இவருக்கு வருகின்ற மனைவி நல்ல  குணவதியாகவும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உடையவராகவும் இருப்பார்.

அதேநேரத்தில் கேது ஞான காரகன் என்பதால் நல்ல ஞானம் உள்ள பெண்ணாக அவர் இருக்கலாமே தவிர, அவரால் தனலாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க  இயலாது. வருகின்ற மனைவியின் சம்பாத்யத்தை எதிர்பார்க்காமல், அவரால் குடும்பத்திற்கு கிடைக்கும் நற்பெயரை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். மனைவி  வருகின்ற நேரம் தொழில்முறையிலும் உங்கள் பேரன் வளர்ச்சி காண்பார். உங்கள் பேரனுக்கு அறிவுரை சொல்லும் நல்ல ஆலோசகராக அவருக்கு வரவுள்ள  மனைவி அமைவார். சீர்வரிசை, பெண்ணின் சம்பாத்யம் போன்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு பெண் தேடினால் மட்டுமே இவருடைய திருமண வாழ்வு  நல்லபடியாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணம் என்ற செல்வத்தைவிட நிம்மதி என்ற கிடைத்தற்கரிய செல்வம் மிகவும் முக்கியமானது.  2020ம் ஆண்டின் பிற்பாதியில் உங்கள் பேரனின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.

என் அக்காவின் மகன் கடந்த ஐந்து மாதங்களாக பள்ளிக்கு சரிவர போக மறுக்கிறான். சில நேரங்களில் படிக்கவே பிடிக்கவில்லை என்கிறான். பெரிய  மனிதனைப் போல் பேசுகிறான். அவனுக்கு ஏதேனும் தோஷம் உள்ளதா? அவன் எதிர்காலம் எப்படி இருக்கும்? பாலாஜி, ஆதம்பாக்கம்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் (துலா லக்னம் என்று நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) பிறந்திருக்கும்  உங்கள் அக்காள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. புதன், குரு ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து இரண்டாம் வீட்டில்  அமர்ந்திருப்பதால் இயற்கையிலேயே நல்ல ஞானத்தினைக் கொண்டவராக இருப்பார். தற்போது நடந்து வரும் நேரமும் நன்றாக உள்ளதால் அவருடைய கல்வி  குறித்த கவலை வேண்டாம். ஜோதிட ரீதியாக பல்வேறு விதமான கலைகளையும், வித்தைகளையும் கற்றுத் தருபவர் புதன். நல்ல அறிவினைத் தருபவர் குரு.  இவர்கள் இருவரும் இணைந்து புத்தி சாதுர்யத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது இந்த ஜாதகருக்கு கூடுதல் வலுவினைத் தரும். நீங்கள்  குறிப்பிட்டிருப்பது தற்காலிகமான பிரச்னைதான், நிரந்தரமானது அல்ல.

தற்போது கோடைவிடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளி திறந்திருப்பதால் பழைய நிகழ்வுகளை மறந்து புத்துணர்ச்சியுடன் பள்ளி செல்லத் துவங்கியிருப்பார்.
இந்த வருடத்திலும் அதே பிரச்னை தொடர்ந்தால் வேறு வகுப்பிற்கோ அல்லது பள்ளியையோ மாற்றிப் பாருங்கள். கிரஹ நிலை ரீதியாக எந்தப் பிரச்னையும்  இல்லை. ஜென்ம லக்னத்திலேயே இணைந்திருக்கும் சூரியனும், செவ்வாயும் எதிர்காலத்தில் இவரை, அரசுத்துறையில் மிகப்பெரிய அதிகாரியாக பணியில்  அமர்த்துவார்கள். ஜீவன ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுவார். உங்கள் அக்காள்  மகனின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

என் மகன் 12ம் வகுப்பு பாஸ் செய்துவிட்டான். தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை என்றும் வேலைக்குப் போகிறேன் என்றும் சொன்னான். ஆனால் இப்போது  வேலைக்கும் போகவில்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறான். அவனுக்கு வேலை கிடைக்குமா? தாய்தந்தையருக்கு இவனால் பலன் கிடைக்குமா? இவன்  ஜாதகம் எப்படி உள்ளது? ஆர்.செல்வம், சித்தாம்பூர்.

தன் இருபதாவது வயதில் கல்லூரிக்கும் போகாமல், வேலைக்கும் போகாமல் அமர்ந்திருக்கும் பிள்ளையைப் பற்றி கவலையோடு கடிதம் எழுதியுள்ளீர்கள்.  பெற்றோருக்கு பலன் உண்டா என்றும் கேட்டுள்ளீர்கள். முதலில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளட்டும். பிறகு மற்றவர்களைப் பார்க்கலாம். சதயம்  நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் (கும்ப லக்னம் என்று நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) பிறந்துள்ள உங்கள் மகனின்  ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி துவங்கியுள்ளது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் வக்கிரம் பெற்ற சனி அமர்ந்திருப்பது  சோம்பல்தன்மையைத் தரும். கல்வி ஸ்தானத்திற்கு அதிபதியும், வித்யாகாரகனுமாகிய புதனும் வக்கிரம் பெற்று எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது கல்வியைத்  தடை செய்கிறது. குருசந்திரயோகம் இருப்பதாக உங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளீர்கள்.

குருவும், சந்திரனும் கேதுவுடன் இணைந்து 12ம் வீட்டில் அமர்ந்திருப்பது நற்பலனைத் தராது. உங்கள் மகனை உள்ளூரில் வைத்திருந்தால் அவரது எதிர்காலம்  பாழாகிவிடும். வெளியூரில் வேலை தேடச் சொல்லி அனுப்புங்கள். உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும் என்பதை சொல்லிப் புரிய வையுங்கள். ஜீவன  ஸ்தான அதிபதி குரு 12ல் இருப்பதால் தொலைதூரத்தில்தான் இவருக்கு உத்யோகம் அமையும். வேலை செய்து கடுமையாக உழைக்க வேண்டிய நேரமே  தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கடுமையாக உழைப்பவர்களுக்கு சனி பகவான் மேன்மேலும் உழைப்பதற்கான வாய்ப்புகள் தந்து முன்னேற்றுவார்.
வெறுமனே சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மேன்மேலும் சோம்பல்தன்மையைத் தந்து கீழ்நிலைக்குத் தள்ளிவிடுவார். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு  உழைப்பதற்கு உங்கள் மகனை பழக்குங்கள். பிள்ளையின் நல்வாழ்வு கருதி மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவரை வெளியூருக்கு அனுப்பி வேலை தேடச்  சொல்லுங்கள். உழைத்தால் உயர்வு நிச்சயம். இதுவே உங்கள் மகனின் ஜாதகம் உணர்த்துகின்ற நிதர்சனமான உண்மை.

எனது மகள் தற்காலிகமாக வெளிநாட்டில் வேலை செய்கிறாள். பிஸ்னஸ் விசா கிடைத்து தொடர்ந்து பணியாற்ற முடியுமா? எத்தனை ஆண்டு பணியாற்ற  முடியும்? இரண்டாவது திருமணம் சிறப்பாக நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? நல்ல கணவர் அமைவாரா? பாலாஜி, வேளச்சேரி.

உங்கள் மகளின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இணைந்துள்ள சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அவரைத் தலைநிமிர்ந்து வாழ வைப்பார்கள். மகம் நட்சத்திரம்,  சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோக  ஸ்தானம் வலிமையாக உள்ளதால் வேலைபார்த்து சம்பாதிக்கும் அம்சம் நன்றாக உள்ளது. இந்த வருட இறுதிக்குள் அவர் எதிர்பார்க்கின்ற விசா முதலான  விஷயங்கள் கிடைத்துவிடும். மறுமணத்தைப் பொறுத்தவரையில் அவசரப்படாதீர்கள். ஏழாம் வீட்டில் வக்கிரம் பெற்ற குருவுடன் கேது இணைந்திருப்பதும், ஏழாம்  வீட்டிற்கு அதிபதி சந்திரன் எட்டில் அமர்ந்திருப்பதும் அத்தனை சிறப்பான பலனைத் தராது.

32 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு முயற்சிக்கலாம். வரவிருக்கும் கணவர் தரப்பிலிருந்து பெருத்த உதவி எதையும் எதிர்பார்க்க இயலாது. சொந்தக்காலில்  நிற்பதுதான் இவருக்கு என்றுமே நல்லது. 42வது வயதுவரை வெளிநாட்டில் பணியாற்றும் யோகம் நன்றாக உள்ளது. அதன்பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிவந்து  அமைதியாக வாழ இயலும். அவருடைய ஜாதகம் பலம் பொருந்தியது என்பதால் அவருடைய விருப்பப்படியே செயல்பட அனுமதியுங்கள். பாரதி கண்ட  புதுமைப்பெண்ணாக வளர்ந்து பெருமை சேர்ப்பார்.

சொந்தத் தொழில் செய்து கடன் பிரச்னையில் தவிக்கிறேன். தொழிலும் நடத்த முடியவில்லை. வீடும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என் கடன்  பிரச்னை எப்போது தீரும்? குமார், போரூர்.


அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் குரு, சனி இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ஜாதப்படி  தற்போது சனி தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. தசாநாதன், புக்திநாதன் இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் எப்போதும்போல் இல்லாமல் நீங்கள் சற்று  மாற்றி யோசிக்க வேண்டிய தருணத்தில் உள்ளீர்கள். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் உங்கள் ஆயுட்காலம்வரை  உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். தற்போதுள்ள சொத்தினை கடன் பிரச்னையால் விற்க நேர்ந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் புதிதாக வேறொரு சொத்தினை  வாங்க இயலும். 54வது வயதில் இருக்கும்  நீங்கள் 71 வயது வரை உழைக்கக் கூடிய வலிமையைப் பெற்றுள்ளீர்கள். 08.07.2019 முதல் துவங்க உள்ள புதன்  தசை உங்களுக்கு திருப்புமுனையை உண்டாக்கும். புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ராகுவின் சாரம் பெற்றிருக்கிறார்.

ராகு தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், தசாநாதன் புதனே இரண்டாம் வீட்டிற்கு அதிபதி என்பதாலும் சிறப்பான தனலாபத்தினைக் காண  உள்ளீர்கள். உங்கள் தொழில்முறையில் எல்லோரையும் போல் இல்லாமல் வேறுவிதமாக சிந்தித்து புதுமையைப் புகுத்துங்கள், செயல்படுத்துங்கள். உங்கள்  முயற்சி வெற்றி பெறும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சந்திரன்சுக்கிரனின் இணைவு சிறப்பான அம்சம் ஆகும். ஜன  ஆகர்ஷணத்தையும், அதன்மூலமாக தன வரவினையும் பெற்றுத் தரும் திறன் கொண்டது உங்கள் மனைவியின் ஜாதகம். உங்கள் மனைவியையும் தொழிலில்  பங்குதாரராக சேர்த்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் இருவரின் இணைவு வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள  சிவாலய வாசலில் அமர்ந்திருக்கும் அடியார்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்து வாருங்கள். வறியவர்களின் பசி தீர உங்கள் கடன் பிரச்னையும் பறந்து போகும்.

சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும்  முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். என்ன சொல்கிறது,  என் ஜாதகம்? ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை  600 004.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்