SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்களின் யோக லட்சணம் என்ன தெரியுமா?

2018-07-17@ 10:30:11

‘நேரம் காலம் வரும்போது எல்லாம் நடக்கும்’, ‘அவன் நேரம் மண்ணைத் தொட்டாலும் பொன்னாக குவிகிறது’, ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’,  ‘மகராசி மகாலட்சுமி போல் வந்துள்ளாள்’  இதெல்லாம் ஒருவரின் உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி நாம் ஒருவருக்கொருவர் பேசும் வழக்கு மொழியாகும். இந்த  நேரம், காலம், யோகம், அதிர்ஷ்டம், பாக்கியம், கொடுப்பினை, அமைப்பு, அம்சம் என பல விஷயங்களைச் சொல்கிறார்களே அப்படி என்றால் அது என்ன? அது  ஏன் சிலருக்கு மட்டும் வருகிறது, கிடைக்கிறது. ஒரு சிலருக்கு அள்ள அள்ள குறைவில்லாமல் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு  கிடைக்கிறது. பலருக்கு பல காலம் நிலைத்து நின்று பயன்தருகிறது. சிலருக்கு சிலகாலம் நல்ல நேரம் வாய்க்கிறது. பலர் வரும், கிடைக்கும் என்று எதிர்பார்த்து,  ஏமாந்து எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்ட கதையாக போய்விடுகிறது. வசந்தகாலம் வரும், நிலை மாறும் என எண்ணிலடங்காதவர்கள் எதிர்பார்த்து காணல்  நீர்போல காணாமல் போனதுதான் மிச்சம்.

பிறப்பு முதல் இறப்பு வரை பல தலைமுறைகளாக வெந்ததை தின்று விதி வந்து இறந்தவர்கள், எந்த ஏற்றமும், மாற்றமும் காணாமல் வறுமையில் உழன்று  வாடி வாழ்ந்து முடிந்தவர்கள் எத்தனையோ லட்சோப லட்சம் பேர்கள். ஒரு சிலருக்கு வம்சா வழியாக பரம்பரை பரம்பரையாக மகா பாக்கிய யோகம் எனும்  அதிர்ஷ்டம் தொடர்ந்து வருகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையிலே தாத்தா, தகப்பன் படாதபாடுபட்டிருப்பார்கள். ஆனால் பிள்ளைகள் கல்வி மூலமோ தொழில்,  வியாபாரம் மூலமோ நல்ல நிலையை தொட்டு விடுகிறார்கள். தற்காலத்தில் கட்சியில் அரசியல் வாய்ப்புக்கள் மூலம் நல்ல நிலையைத் தொட்டு விடுகிறார்கள்.  தற்காலத்தில் கட்சியில் அரசியல் வாய்ப்புக்கள் மூலம் பதவி கட்சி பதவி, அரசு உயர் பதவி மந்திரி, எம்.பி என்று படிப்பறிவு இல்லாதவர்கள்கூட கிரக  அனுக்கிரகம், யோக அம்சம் காரணமாக செல்வத்திருமகள் லட்சுமி தேவியின் அருள்பார்வையால் கோடிகளிலும், தங்க வைர, நவரத்தினங்களிலும் புரளுகிறார்கள்.

ஒருசிலர் சாதாரணமான நிலையில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக உழைத்து, கை ஊன்றி கரணம் போட்டு எப்படி எப்படியோ உருட்டல், பிரட்டல் வேலைகளை  எல்லாம் செய்து அடித்து பிடித்து முன்னேறி விடுகிறார்கள். ‘‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததால் கொடி அசைந்ததா’’ என்பது  திரைப்படப்பாடலின் வரிகள். அதுபோல ஜோதிடக்கணக்கில் யோகம் வந்தபின் மனைவி அமைந்ததா, மனைவி அமைந்ததால் யோகம் வந்ததா என்று கேட்பார்கள்,  இதற்கு சாஸ்திரம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம் என்று சொல்கிறது. இது ஒரு சூட்சும கணக்கு. ஆகையால்தான் திருமணங்கள் ஏற்கனவே  நிச்சயிக்கப்பட்டவை இன்றும் ஒருபடி மேலே போய் சொன்னால் நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. ஒருவர் குறிப்பிட்ட வயது முதல் ராஜயோக பலன்களை  அனுபவிக்கப் போகிறார் என்றால் அதற்கு தகுந்தவாறுதான் எல்லாம் அமையும். கல்யாணம் வரைக்கும் சுமாரான வசதியாக இருந்தார்.

கல்யாணத்திற்குப் பிறகு மனைவி வந்தவுடன் பட்டும், பகட்டுமான வாழ்க்கை வந்துவிட்டது என்று சொல்வார்கள். காரணம் இரண்டு பேருக்குமே அந்த  கொடுப்பினை, நாம் வாங்கி வந்த வரம். ஆகையால் இரண்டு ஜாதகங்களிலும் அதி உச்ச யோக அம்சங்கள் கூடிவரும்போது சஷ்புத்திர பாக்கியம் அமைந்து அந்தக்  குழந்தை வளர வளர இவர்களின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைகிறது. சில அதிர்ஷ்டசாலிக்கு வாழையடி வாழையாகவே பாட்டன், பூட்டன் காலத்தில்  இருந்து மண், மனை, வீடு, தோட்டம், தோப்பு, வண்டி வாகனம், விவசாயம், தொழில் வட்டி வரவு, செலவு என பல எல்லைகளைக் கடந்து ஆலமரம்போல பரந்து  விரிந்து தழைத்து நிற்கிறது. சிலருக்கு பூர்வீகச் சொத்து, சுய சம்பாத்திய சொத்து, மனைவி மூலம் சீதன சொத்து, தாய்வழி சொத்து, உயில் சொத்து, தத்து  எடுப்பது, கொடுப்பது மூலம் வரும் சொத்து என பல வகைகளில் குபேர சம்பத்துக்கள் அவரவர் வினைப்படி அமைகின்றது.

ஒரு சிலருக்கு பல பரம்பரைகளாக, தலைமுறை தலைமுறையாக தொழில், வியாபார யோகம் மூலம் எல்லா வளங்களும், நலங்களும் கிடைக்கும். மிகப்பெரிய  தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பத்திரிகைத்துறை, பதிப்பகத்துறை, தங்க, வைர, வெள்ளி நகை மொத்த வியாபார நிறுவனங்கள்  என நாட்டில் பல லட்சக்கணக்கானவர்கள் தொடர்ந்து ஏகபோகமாக எல்லா சுகங்களையும் அனுபவித்து வருகிறார்கள். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் என்று  சொல்வார்கள். அந்த கிரக அமைப்பின்படி ஒரு குறிப்பிட்ட சில வருடங்கள் சுமார் 10 அல்லது 15 வருடங்களுக்கு சுனாமிபோல, காட்டாற்று வெள்ளம்போல  எல்லா வகையான அசையும், அசையா சொத்துக்கள் குவியும். எப்படி சேர்ந்தது இவ்வளவு தனம் என்று அவரே மலைக்கும் அளவிற்கு, ஊரே வியக்கும் அளவிற்கு  அஷ்டலட்சுமிகளின் அருள் கொட்டும்.

இவையெல்லாம் சிலகாலம் அதிவேகமாக பயன் தந்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து திடீரென பின்தங்கிய நிலை ஏற்பட்டு வாழ்க்கையின் பாதையே  சூன்ய மயமாகி விடுகிறது. எந்த விபரீத ராஜயோக தசை ஆரம்பத்தில் அடித்தளம் அமைத்து ராஜயோக வாழ்க்கையை கொடுத்ததோ, அதே தசை முடியும்  தருவாயில் சிலருக்கு இப்படி சில சறுக்கல்களை ஏற்படுத்தி விடும். இதனால்தான் ஜாதகத்தில் கிரக பலமும், யோக தசையும் சேர்ந்து வரவேண்டும்.  சாதாரணமாக ஒரு சில்லரை வியாபாரம், சில ஆயிரங்கள் முதல் போட்டு ஆரம்பித்து இருப்பார். அது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து லட்சம், கோடிகளை  தொட்டு பல ஊர்களில் பல கிளைகள் ஆரம்பிக்கின்றன. ஓங்கி செழித்து வளர்கிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவில பல கோடிகள் போட்டு ஆடம்பரமாக  ஆரம்பிக்கின்ற தொழில் குறுகிய காலக்கட்டத்திலேயே நடத்த முடியாமல் நசிந்துபோய் நஷ்டம் ஏற்பட்டு மூடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதற்கு காரணம் ஜாதகத்தில் அக்காலக்கட்டத்தில் நடைபெறும் தசா புக்திதான். சிலர் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் இருக்கும் கிரக அமைப்பை வைத்து யோகம்  உள்ளது. நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவார்கள். அதன் சூட்சும காரணம் நவாம்சம் என்ற கட்டத்தில் கிரக அமைப்பு சரியில்லாதபோது எதிர்பார்க்கும்  அளவு யோகம் வேலை செய்யாது. இதை நம் அனுபவத்தில்தான் உணர முடியும். எப்பொழுது நமக்கு பிரச்னைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், தோல்விகள்  தொடரும்போது, நாம் போட்ட கணக்குகள் பலிக்காதபோது நமக்கு கிரக பலம், நேரம் காலம், தசா புக்தி சரியில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள  வேண்டும்.வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அமைப்புகள்: ஜாதகம் என்று எடுத்துக்கொண்டால் அதில் யோக, அவயோகம் இரண்டும் கலந்தே இருக்கும்.  எல்லாமே நிறைவாக உள்ள ஜாதகம் எதுவும் கிடையாது. நிறை, குறைகள் இணைந்து இருப்பதுதான் ஜாதக அமைப்பு.

நிறை அதிகமாக உள்ள ஜாதகம் வெற்றி அடைகிறது. ஒருவர் எந்த வகையிலாவது முன்னேற்றத்திற்கு வருகிறார் என்றால் அவருக்கு பல கிரக அமைப்புகள்  சாதகமாக இருக்கும். குறிப்பாக ராசிக்கட்டம், நவாம்ச கட்டம் இந்த இரண்டிலும் கிரகம் பலமாக இருப்பது அவசியம். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்  என்றால் ராசிக்கட்டத்தில் பலம் குறைவாக இருந்தாலும் நவாம்ச கட்டத்தில் பலம் மிகுந்து இருக்க வேண்டும். உதாரணமாக ராசிக்கட்டத்தில் ஒரு கிரகம் நீச்சமாக  இருந்தால் அதே கிரகம் நவாம்ச கட்டத்தில் உச்ச வீட்டிலோ, சொந்த வீட்டிலோ இருந்தால் அம்ச பலம் காரணமாக அக்கிரகம் யோகத்தை செய்யும். இதை  கருத்தில் கொண்டுதான் அவன் நல்ல அம்சம் உள்ள ஆள் என்று குறிப்பிடுவார்கள். ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது லக்னம், இந்த இடத்தில் இருந்துதான்  ஒரு ஜாதகம் இயக்கப்படுகிறது. இதை இயக்குபவர்தான் லக்னாதிபதி.

(1) லக்னம், லக்னாதிபதி இரண்டும் பலமாக இருக்க வேண்டும். லக்னத்தை யோக கிரகங்கள் பார்ப்பது மிகவும் அவசியம். லக்னாதிபதி நீசம் அடையாமல் 6, 8,  12ல் மறையாமல் இருப்பது மிக மிக முக்கியம். லக்னாதிபதி 5ஆம் வீட்டிலோ, 9ஆம் வீட்டிலோ 10ஆம் வீட்டிலோ இருப்பது மிகச் சிறப்பாகும்.
(2) லக்னாதிபதியுடன், 2, 4, 5, 9, 10 ஆகிய ஸ்தானங்களுக்கு உரிய கிரகங்கள் சேர்ந்தோ, பார்வை பெற்றோ, சாரம் பெற்றோ, பரிவர்த்தனை அடைந்தோ ஏதோ  ஒரு வகையில் சம்பந்தம் பெறுவது புகழ் கீர்த்தி யோகமாகும். (3) லக்னம், லக்னாதிபதி வர்க்கோத்தமம் அடைவது மிகவும் சிறப்பு, அஷ்டவர்க்கப் பரல் என்ற  முக்கியமான ஜோதிட கணக்கு ஒன்று உள்ளது. இந்த பரல் கணக்கின்படி லக்னம் 30 பரல்களுக்கு குறையாமல் இருப்பது மிகவும் அவசியம்.
(4) லக்னாதிபதி என்ற கிரகத்துடன் தனம், வாக்கு, குடும்பம் போன்றவற்றிற்கு காரணமான இரண்டாம் அதிபதி, பூர்வ புண்ணிய யோகத்தை ஏற்படுத்தும் ஐந்தாம்  அதிபதி அனுபவிக்கின்ற பாக்கியத்தை அருளும் பாக்கியஸ்தானாதிபதி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றைத் தரும் பத்தாம் அதிபதி ஆகிய கிரகங்கள்  ஏதாவது ஒரு வழியில் லக்னாதிபதியுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.
(5) 2, 5, 9, 10க்குடையவர்கள் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தில் பலமாக இருப்பது
மிக மிக அவசியம்.
(6) நவகிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் பலவகையான அம்சங்கள், ஆதிக்கங்கள் இருந்தாலும் குறிப்பாக சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் இந்த நான்கு  கிரகங்களும் ஒருவர் ஜாதகத்தில் நல்ல யோக பலத்துடன் இருப்பது அவசியம்.
(7) லக்னாதிபதி, நான்காம் அதிபதி,
ஐந்தாம் அதிபதி, தர்ம கர்மாதிபதிகளின் யோக தசைகள் நமக்கு உரிய காலத்தில் அனுபவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைய வேண்டும்.
(8) யோக அமைப்புகள், கிரக சேர்க்கை பலம் கொண்ட ஜாதகம் நமக்கு பல வகை
களில் சாதகமாக இருக்கும். எந்த நிலையிலும் மிகப்பெரிய சரிவு, நஷ்டங்கள், கஷ்டங்கள் வராது. அதே நேரத்தில் பிரபல யோக தசைகள் வரும்போதுதான் கிரக  பலமும் நடைபெறுகின்ற ராஜயோக தசையும் நமக்கு பல மடங்கு வளமான, அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்துத் தரும்.
(9) சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களின் தசைகளில் வரும் வளர்ச்சி, புகழ், செல்வம் போன்றவை நிலைத்து, நீடித்து அடுத்த தலைமுறைக்கான அடித்தளத்தை  அமைத்துக் கொடுக்கும்.
(10) விபரீத ராஜயோகம், நீச்ச பங்க ராஜ யோகம், 3, 6, 8, 12ஆம் அதிபதிகளின் சேர்க்கை தொடர்பு மூலம் உண்டாகும் பண பரஸ்தான யோகம் போன்றவை  அந்தந்த தசா காலங்களில் நல்ல வளமான வாழ்க்கையைத் தந்து, அதன்பின்பு பல வகைகளில் ஜாதகரின் தசா மாற்றத்தின்படியும், ஜாதகரின் குடும்பத்தில்  உள்ளவர்களின் தசா
மாற்றங்களின்படியும் சில, பல பிரச்னைகளால் வாழ்க்கை திசை மாறிச் செல்லும். மாறாக ஒரு சிலருக்கு தொடர்ந்து யோக தசைகள் வரும்போது சிறு  சறுக்கல்கள், பிரச்னைகள் என்று சந்தித்தாலும் அடித்தள யோகம், வாழ்க்கைத்தரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
(11) சிறப்பான அமைப்பாக சாஸ்திரத்தில் கேந்திரம் கட்டிய ஜாதகம் என்று சொல்வார்கள். அதாவது லக்னம் முதல் கேந்திரம், அதற்கடுத்து 4, 7, 10. இந்த நான்கு  கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் மிகச்சிறப்பான அம்சமாகும். இந்த இடங்கள் சமசப்தம பார்வை உள்ள இடங்கள். ஆகையால் கிரக பார்வை தொடர்பு  உண்டாவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதை அள்ளித் தருகிறாள். அதேபோல் லக்னம், ஐந்து, ஒன்பது என்ற ஸ்தானங்களில் யோக கிரகங்கள் இருக்கும்போது  பிறந்தவர்கள் சுபமங்கள யோகத்தை அனுபவிப்பார்கள்.
(12) வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் சிறப்பான கிரக சேர்க்கைகள் தர்ம கர்மாதிபதி யோகம் எனும் லக்னத்திற்கு 9+10க்குடையவர்கள்  சேர்க்கை.

ஒன்பதாம் இடத்திற்கு 9+10க்குடையவர்கள் சேர்க்கை.
பத்தாம் இடத்திற்கு 9+10க்குடையவர்கள் சேர்க்கை.
லக்னத்திற்கு 9+10+5க்குடையவர்கள் சேர்க்கை.
லக்னத்திற்கு 9+10+2க்குடையவர்கள் சேர்க்கை.
லக்னாதிபதியுடன் 2, 5, 9, 10க்குடையவர்கள் சேர்க்கை.
லக்னத்திற்கு 10+2க்குடையவர்கள் சேர்க்கை தசம தனலட்சுமி யோகம்.
லக்னத்திற்கு 10+4க்குடையவர்கள் சேர்க்கை விசேஷ பூமி புதையல் யோகம்.

லக்னத்திற்கு கேந்திராதிபதி, கோணத்திலும், கோணாதிபதி, கேந்திரத்திலும் இருப்பது அதாவது நான்காம் இடம் என்ற கேந்திரத்திற்கு உரிய கிரகம் ஒன்பதாம்  இடம் என்ற கோணத்தில் இருப்பது. ஒன்பதாம் இடம் என்ற கோணத்திற்குரிய கிரகம் நான்காம் இடம் என்ற கேந்திரத்தில் இருப்பது. இன்னும் இதைப்போன்ற சில  அபூர்வ கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, சார பரிவர்த்தனை போன்றவைகள் நம் ஜாதகத்தில் இருந்து, அந்த பலன்களை அனுபவிக்கக்கூடிய நேரம் காலம்  எனும் தசா புக்திகள் நமக்கு அமையும்போது எல்லாம் கூடிவரும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். முயற்சி இல்லாமலே காரியங்கள் நடக்கும். பட்டம்,  பதவி, விருதுகள் தேடி வரும். அதிக உழைப்பு இல்லாமலே அளப்பரிய செல்வம் சேரும். தர்ம காரியங்கள், அறக்கட்டளை தொடங்குதல், ஆன்மிக  அறப்பணிகளில் ஈடுபடுதல். சமூகத்தில் மதிப்பு, சமூகத்தொண்டு, உயர்ந்த பதவிகள், உச்ச பதவிகளில் இருப்பவர்களின் நட்பு, தொடர்பு என எல்லாவற்றையும்  அந்த இறையருள் கூட்டுவிக்கும். இந்த சாஸ்திர சாராம்சங்கள் எல்லாம் சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழங்கிய மிகப்பழம்பெறும் சுவடியான தெய்வ  கியாதி காமதேனு என்ற நூலில் உள்ள வாக்கியத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்