SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இச்சா பத்தியம்!

2018-07-13@ 15:27:58

அர்த்தமுள்ள இந்து மதம் - 59

யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஒரு ஆடவன், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது. ‘இல்லறத்தில் பிரம்மச்சரியம்’ என்று இதனைக் காந்தியடிகள் விவரித்தார்கள். இப்போது அமெரிக்காவில், இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக ‘டைம்’ பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில் பார்த்தேன். ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டவடிவத்தில்  நின்று கொள்கிறார்கள். அதிலும் ஒரு ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறார்கள். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொள்கிறார்கள். எல்லோருடைய அங்கங்களும் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் மீது மற்றவருக்கு ஆசை ஏற்படாதவாறு பயிற்சி செய்கிறார்கள்.

நான் பல இடங்களில் குறிப்பிட்டதுபோல, ‘இயக்கத்தில் இயலாமை,’ ‘இருந்தும் இல்லாமை,’ ‘கிடைத்தும் ஏற்றுக்கொள்ளாமை,’ என்பது இதுவே. இதை யோகாசனம், என்பதைவிட ‘மோகாசனம்’ என்பது பொருந்தும். மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது ‘பாலுணர்வு’ ஒன்றே. பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லை. ஆனால், காமம் எந்த மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கும். கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்து விட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும். அதன் பெயரே, ‘இல்லறத்தில் பிரம்மச்சரியம்!’ சித்தர்கள் இதனை, ‘இச்சா பத்தியம்’ என்பார்கள். காந்தியடிகள் பிற்காலங்களில் அப்படி வாழ்ந்து காட்டினார். அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார். செயலற்ற நிலையில் பலவீனமான மனிதன். ‘நான் என் மனைவியைச் சகோதரியாகப் பாவிக்கிறேன்’ என்றால், அது ‘திராணி’ இல்லாததால் வந்த தத்துவம்.

உடல் கெடாமல் உள்ளத்தில் உணர்ச்சி மேலோங்கிய நிலையில், அந்த அடக்கம் தோன்றிவிடுமானால், அதுவே ஆன்மாவைப் புடம் போட்ட ஞானம். தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஓடும். ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம். விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தால் உடம்பை அடக்கியவர்கள். அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம், ‘உடம்பு என்னை ஆட்டிப் படைக்கிறதே’என்றுதான் எழுதியிருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மச்சாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர். உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அதுதான் என்று சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மச்சாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு அனுபவித்த மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே நான், ‘இச்சா பத்தியம்’ என்று குறிப்பிடுகிறேன். காம உணர்ச்சி ஒருவனுக்கு இல்லாவிட்டாலும்கூட, அவனுடைய உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத  நிலை ஒன்று ஏற்படும். விபரீத சிந்தனைகள் தோன்றும். அதனால் தான் இந்துக்கள், ‘தனியாக இருக்கும் ஆடவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது’ என்றும், ‘பெண்கள் மல்லாந்து படுக்கக்கூடாது’ என்றும் கூறுவார்கள். இதனை அறிந்துள்ள எந்த இந்துப் பெண்ணுமே மல்லாந்து படுப்பதில்லை. ஒருக்களித்துத்தான் படுப்பாள். இந்து மதத்தின் சாது சந்நியாசிகள் அந்நாளில் தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது என்ற விதி இருந்தது.

சாதாரணமாகச் செதுக்கப்பட்ட மரக்கட்டையைத்தான் தலைக்கு வைத்துக்கொண்டு படுப்பார்கள். ஒருவகை மரத்தில் செய்யப்பட்ட கட்டையைத்தான் செருப்பாகப் பயன்படுத்துவார்கள். மெத்தென்ற தோல் செருப்பு அணிய மாட்டார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரும், காந்தியடிகளும் உணவைக் குறைத்ததற்குக் காரணமே, ‘இல்லறத்தில் பிரமச்சரிய’த்தை அனுஷ்டிப்பதற்குத்தான். இதைக் காந்தியடிகளே ஒருமுறை கூறி இருக்கிறார். ஒருமுறை பரமஹம்சரின் சீடர்கள்  அவரைப் பார்ப்பதற்காக அவர் தங்கும் இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது நள்ளிரவு. பகவான் தேவியாரோடு உள்ளே இருந்தார். ‘ஐயோ! இந்த நேரத்தில் வந்து விட்டோமே, அவரது சந்தோஷத்தைக் கெடுத்து விட்டோமே என்று அந்த இளம் உள்ளங்கள் பயந்தன. அவர்களுடைய நினைப்பு, பகவான் தேவியாரோடு சல்லாபித்துக் கொண்டிருப்பதாக. திடீரென்று வெளியே வந்தார் பரமஹம்சர். அவர்கள் சொல்லாமலே அவர்களது பயத்தை உணர்ந்தார். மெல்லச் சிரித்துக்கொண்டே, ‘நான் தேவியின் அருகே இருந்தாலும் தெய்வத்தின் அருகில்தான் இருக்கிறேன்’ என்றார்.

சீடர்களுக்குக் குளிர் விட்டதுபோல் இருந்தது. காம லயத்தை விட்டுவிட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான். ‘துறவு’ என்பதற்கே ‘நிர்வாணம்’ என்று பெயர். ஒரு பெண்ணின் நிர்வாணத்தில்கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான். கண்ணகி கற்புக்கரசி என்றார்கள்; அதில் அவளுக்கென்ன புதுப்பெருமை? அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள். மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், ‘மரக்கற்பு’ என்று கூறலாம். ஆனால், மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை. மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் பேசப் போவதில்லை. அவள் அதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டவள். வசதி இருந்தும், நியாயம் இருந்தும், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள். அதைப் போன்றதுதான் இல்லறத்தில் பிரம்மச்சரியம். கெட்டுப் போய் ஞானிகள் ஆனவர்கள், பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள்.

‘நாற்றச் சரீரம்’ என்றும், ‘ஊத்தைச் சரீரம்’ என்றும் ‘மலஜலம் நிறைந்த மண்பாண்டம்’ என்றும், ‘ஆறாத புண்’ என்றும், ‘வெட்டுண்ட காயம்’ என்றும் அவர்கள் பலவாறாகப் பெண்களை ஏசி இருக்கிறார்கள். இவையெல்லாம் செயலற்ற காலத்துத் தரிசனங்கள். அவர்கள் உடம்பு நன்றாக இருந்தபோது, ‘குவளை மலர்’ என்றும், ‘முல்லை மலர்’ என்றும், பெண்ணை, அவர்களே தான் வருணித்திருக்கிறார்கள். ஞானிகள் நிலை அதுவல்ல. உடம்பு நன்றாக இருக்கும்போதே உள்ளத்தில் தோன்றும் ஒளி, காம லயத்தில் இருந்து அவர்களைப் பிரித்து விடுகிறது. சுவேதகேதுவின் காலத்திலிருந்து பலவகையான ஞானிகள், இதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பிள்ளைப் பேறுக்காகவே மனைவியோடு உடலுறவு வைத்திருக்கிறார்கள்.
காம வயப்பட்ட மனிதர்கள் உடலுறவு கொள்ளும்போது சில விநாடிகளிலேயே உடல் தளர்ந்து விடும்.

ஆனால், மனதைப் புடம் போட்டவர்கள் உடலுறவு கொள்ளும்போது, மனைவி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறாளோ, அவ்வளவு நேரம் நீடிக்கும். காரணம் அவர்களிடம் வெறி உணர்வு இல்லை. பொற்கொல்லர்கள் சங்கிலி செய்வது போலவும், விவசாயிகள் ஏரோட்டுவது போலவும், கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கடமை புரிவதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை; தெய்வீகம் இருக்கிறது. காமம் இல்லை; யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை; ஒரு தவம் நடக்கிறது. பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது. சிட்டுக் குருவியைப் போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்து விடுகிறான். உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.

அதுவும் காமச் சிந்தனையாக இருந்தால், அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது. அதன்பிறகு அவன் செயலாற்றத் தொடங்கும்போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான். அதனால்தான் இந்துக்கள், தியான முறையைக் கையாண்டார்கள். ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது. மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில் ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்து
விடுகிறது. இல்லறத்தில் பிரம்மச்சரியம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள். இதுபற்றிக் காந்தியடிகள்கூட விரிவாகக் கூறியிருக்கிறார். பண்டைய குருகுல முறைகள் இப்போது மறைந்து விட்டன. குரு  சிஷ்ய பாவம் மறைந்து விட்டது. ஆங்கிலக் கல்வியின் பெயரால் கல்லூரிகள் வெறும் பட்டதாரிகளையே, காலிக் கும்பல்களையே உற்பத்தி செய்கின்றன.

வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை இன்றையக் கல்வி போதிக்கவில்லை. ஐந்து வருஷம் பட்டப் படிப்புப் படித்தாலும் பயனில்லாத ஒரு கல்வியையே நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோம். ஒழுங்கீனமே கல்லூரியின் பிரதான அம்சமாகக் காட்சியளிக்கிறது. சில கல்லூரிகளுக்குள் எல்.எஸ்.டி.மாத்திரைகளும், விஸ்கி பாட்டில்களும், கஞ்சாவும் தாராளமாக நடமாடுகின்றன. அண்மையில் சென்னையில் மிகப் பிரபலமான டாக்டர் ஒருவரிடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். தொடையில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமையில் அவர் இருந்தார். அந்த டாக்டர் மருத்துவக் கல்லூரியோடு தொடர்புள்ளவர். அவருக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியும். ‘‘என்னம்மா, ஆபரேஷன் செய்யலாமா? இல்லை, ஒரு பெதடின் போட்டுக் கொள்கிறாயா?’’ என்று கேட்டார். ‘‘பெதடினே போடுங்கள், போதும்!’’ என்று கெஞ்சினார் அந்த இள நங்கை. டாக்டர் ஆபரேஷனும் செய்யவில்லை; பெதடினும் போடவில்லை; அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

இன்று கல்வியின் தரமும் கெட்டு, மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டு விட்டது. ஆனால், அந்நாளில் இந்துக்கள் ஒரு வகையான குருகுலப் பயிற்சியை
வைத்திருந்தார்கள். ராம கதையில் வரும் ராமனும், இலக்குவனும் குரு குலத்தில் பயின்றவர்கள். மகாபாரதத்தில் வரும் வீமனும், அர்ஜுனனும் குருகுலவாசிகள். இந்துப் புராணப் பாத்திரங்கள் அனைத்துமே குருகுலப் பயிற்சியில் வளர்ந்தவையே. அதிர்ஷ்டவசமாக நானும் நான்கு ஆண்டுகள் குருகுல வாசம் செய்தவன். ‘குரு வாழ்க, குருவே துணை’ என்ற சுலோகத்தைச் சொன்னவன். நான் பயின்ற அமராவதி புதூர் குருகுலத்தில், அதிகாலை ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவார்கள். வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசையில் அணிவகுத்து, வகுப்பு மானிட்டரின் தலைமையில் பின்பக்கத்துக் காட்டுக்குச் செல்வோம். அங்கே கலைந்து சென்று காலைக் கடன்களை முடிப்போம். பிறகு மீண்டும் வரிசையாக நின்று தியான மண்டபத்துக்குத் திரும்புவோம். அங்கே நான்தான் ‘பிரேயர்’ பாட்டுப் பாடுவேன். மற்றும் சில மாணவர்கள் இரண்டொரு பாடல்கள் பாடுவார்கள்.

பிறகு கலைந்து சென்று எல்லோரும் கிணறுகளில் தண்ணீர் சேந்திக் குளிப்போம். சாப்பாட்டு விடுதியில் வரிசையாக அமர்ந்ததும், காலைப் பலகாரம் பரிமாறப்படும். அங்கேயும் சில கோஷங்கள் உண்டு. அவற்றிலே கடைசி இரண்டு கோஷம், ‘காந்தியடிகள் வாழ்க! குருகுலம் நீடூழி வாழ்க!’ என முடியும்.
அந்தக் கோஷம் முடிந்தபிறகுதான் எல்லோரும் சாப்பிடத் துவங்குவோம். சாப்பிட்டு முடிந்ததும் வகுப்புத்துவக்கத்துக்கான மணியோசை கேட்கும். வகுப்புகளுக்குள் நுழைவோம். பள்ளிப் பாடங்களுக்கிடையியே தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், புகட்டுவார்கள். அன்றாடச் செய்திகளையும் சொல்வார்கள். மாலையில் விளையாட்டு; இரவிலே மீண்டும் தியானம்; படுக்கை. காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி யாரும் வெளியே போக முடியாது. எல்லோருக்கும் வரிசை நம்பர் உண்டு. நம்பரைச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள். என்னுடைய நம்பர் 498. ‘முத்து’ என்பது என் பெயர். பாரதியின் கிளிப்பாட்டுகளை நான் அதிகம் பாடுவேன். அதனால் எனக்குக் ‘கிளிமுத்து’ என்று பட்டம்.

உடம்பு இளைத்திருந்தால், ‘மீன் எண்ணெய்’ கொடுப்பார்கள். ஓர் அழகான நூல் நிலையம் உண்டு. சிறிய ரசாயனக் கூடம் உண்டு. நான் பெரும்பாலும் நூல் நிலையத்தில்தான் காணப்படுவேன். இசை வகுப்புத் தொடங்கினார்கள்; அதில் நானும் சேர்ந்தேன். காலை நான்கு மணிக்கே எழுந்து பாடல் கற்றுக்கொள்ள வேண்டும். ‘சிதம்பர நாதா திருவருள் தாதா’ என்பதே நான் கற்றுக்கொண்ட முதற்பாட்டு. வித்வான் படிப்பு ஆரம்பித்தார்கள்; அதிலும் நான் ஒரு மாணவன்.
பத்துக்குப் பத்துச் சதுர அடியுள்ள நிலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுப்பார்கள். அதில் அவனுடைய விவசாயத் திறமையைப் பார்ப்பார்கள். ஆளுக்கு ஒரு கன்றுக்குட்டி கொடுப்பார்கள். அதில் மாணவனுடைய கால்நடைப் பராமரிப்புத் திறமையைப் பார்ப்பார்கள். உள்ளேயே ஏராளமான கைத்தறிகள் உண்டு. மாணவன் அங்கே போய்த் தறி நெய்யக் கற்றுக்கொள்ளலாம். நான் அடிக்கடி அதில்தான் கவனம் செலுத்துவேன். ஒருநாள் ஒரு முழு வேட்டியையே நெய்து விட்டேன். நாங்கள் நெசவு செய்த வேட்டியைத்தான் நாங்கள் கட்டிக் கொள்வோம்.

சில தொழில் நெசவாளர்களும் அமர்த்தப் பட்டிருந்தார்கள். அதனால் வெளியில் துணி வாங்குவதே இல்லை. வெளியில் சுதந்திரப் போராட்டம் நடந்தது. உள்ளுக்குள்ளே அந்தக் கனலைக் குருகுலம் மூட்டிற்று. 1939ல் இந்தி படிக்கும் பிரச்னை எழுந்தது. குருகுலத்தில் இந்தி வகுப்பு ஆரம்பமாயிற்று. அன்றைக்கு நிர்வாகியாக இருந்தவர் சுப்பிரமணிய நைனார். இந்தக் குருகுலம் போட்ட அடிப்படையில்தான் இன்றும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன். அந்தக் குருசிஷ்ய பாவம், நாட்பட மறைந்துகொண்டே வருகிறது. வாலாஜாபாத் இந்துமதப் பாடசாலை, அமராவதி புதூர் சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் போன்ற சில மட்டுமே இன்னும் அதைக் கட்டிக் காத்துக்கொண்டு வருகின்றன. வியாசர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், துரோணர் போன்ற மகாத்மாக்கள் உற்பத்தி செய்த சீடர்களால் தான் இந்துமதம் செழித்துத் தழைத்தோங்கியது. அந்தத் தத்துவ ஞான பீடத்தை கான்வென்ட் படிப்பு நிறுவ முடியாது.

பி.ஏ.படிப்பும், பி.எஸ்.சி., படிப்பும் மனிதனுடைய தார்மிக ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாதவை. குருசிஷ்ய பாவத்துக்குத் திரும்பினாலொழிய சராசரி வாழ்க்கையில் இனி நிம்மதி இருக்காது. ஆசிரியரைக் கல்லால் அடிப்பது, அவதூறு பொழிந்து நோட்டீஸ் போடுவது, கல்லூரி மாணவியைக் கடற்கரையில் சந்திப்பது  இவையெல்லாம் நாகரிகம் விளைவித்த கேடுகள். குருசிஷ்ய பாவத்தில் உடம்பும் உள்ளமும் பேணிக்காக்கப்பட்டன. தேச பக்தியும், தெய்வ பக்தியும் சேர்ந்து ஊட்டப்பட்டன. ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது. அதனால்தான் மனிதனின் இல்லறம்கூட நல்லறமாக அமைந்தது. வள்ளுவனுக்கு வாசுகியும், ராமனுக்குச் சீதையும், கோவலனுக்குக் கண்ணகியும் கிடைத்தார்கள். இன்றையப் போலி நாகரிகம் கணவன்  மனைவியைக் கோர்ட்டிலே கொண்டுவந்து நிறுத்துகிறது. சினிமா நடிகை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும், முதற்கணவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததும், குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுத்ததும் செய்திகளாகின்றன.

சந்திர மண்டலமல்ல; சூரிய மண்டலத்திற்கே மனிதன் போகட்டும். பழங்காலங்களில் இந்துக்கள் வகுத்த அடிப்படைத் தர்மங்களைக் கடைபிடித்தால்தான், அவன் நிம்மதியாக வாழ முடியும். அவற்றில் ஒன்றுதான் குருசிஷ்ய பாவம். இன்று எந்த மாணவன் ஆசிரியரின் காலைத் ெதாட்டு வணங்குகிறான்? தன் கால் செருப்பையல்லவா அவர் மீது வீசுகிறான்! இவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? நவாபுகள் படையெடுப்பினாலும், ஆங்கிலப் படிப்பினாலும் நமது பாரம்பரிய தர்மம் நசிந்து விட்டது. அதைக் காப்பாற்றுவதற்குப் பணம் படைத்தோர் செய்ய வேண்டிய முதற்காரியம், பழைய பாணியில் குரு குலங்களை ஆரம்பிப்பதே.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை 600 017.

கவிஞர் கண்ணதாசன்

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்