SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்வர்யம் அருளும் அக்னீஸ்வரங்கள்

2018-07-12@ 09:38:22

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர் என்று எளிதாக எல்லோராலும் கூறப்படும் வாக்கியம் உண்டு. ஆனால், அவர்கள் வழிபட்டது இயற்கையை மட்டுமல்ல! இயற்கைக்குள் பொதிந்திருக்கும் அதன் மூலத்தையும் சேர்த்து அறிந்து உணர்ந்து அதை வழிபட்டனர். அந்த இயற்கைக்குள் ஆளுமை செலுத்தும் விஷயங்களே தன்னையும் ஆளுகின்றன என்று உணர்ந்திருந்தனர். அதற்கான மாபெரும் தத்துவ தரிசனத்தை அவர்கள் வேதங்களிலிருந்து பெற்றனர். வேதங்கள் பிரபஞ்சம் படைப்பின் தோற்றுவாயை மிக அழகாக சுட்டிக் காட்டுகின்றன. ஆகாசாத் வாயுஹு வாயோர் அக்னிஹி அக்னேராபஹ அத்யஹ ப்ருத்விஹி ப்ருத்வியா ஓஷதயஹ ஓஷதீப்யோ அன்னம் அன்னாத் புருஷஹ ... ஐம்பூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் பற்றிச் சொல்லும் வேதபாடம் இது. ஆகாயத்திலிருந்து வாயு உண்டானது.

வாயுவினின்று அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும், நிலத்திலிருந்து தாவர ஜங்கமங்களும், உயிர்களும் உண்டாகின்றன. சரி, இந்த ஐம்பூதங்களும் எப்படி உருவாயின? ஐம்பூதங்களுக்கு முன்பு சிவசக்தி சொரூபத்தையே பிரம்மமாக சொல்கிறார்கள். இப்போது சிவசக்தி சொரூபமாக இருப்பதில் சலனம் உண்டாகிறது. இந்த சலனத்தையே சிவன் பார்வதியின் கண்ணை பொத்துவது, தாய விளையாட்டில் தோற்பது என்று இந்து மரபில் சிறு கதையாக சொல்லப்பட்டபடி வருகிறது. இந்தக் கண் மூடிய மற்றும் விளையாட்டில் தோற்ற கதையானது சலனத்தையே காட்டுவதாக உள்ளது. பிரம்மத்தில் ஏற்பட்ட சலனம் காரணமாக சக்தி பிரிந்தது. ஆனால், இவையாவுமே தோற்ற மாத்திரமே ஆகும். அந்தப் பரம்பொருளினின்றும் பிரிந்தாற்போல் தோன்றும்போதுதான் ஐந்து பூதங்களும் இருப்பதுபோன்று ஒரு பிரமை உண்டாகிறது. அதாவது அந்த இருப்பை சக்தியான நீ அறிகிறாய்.

இதன்படி பஞ்சபூதங்களும் சக்தியான படைப்பே ஆகும். இந்த ஐம்பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்றாக எப்படி வருகின்றது என்பதையே மேற்கண்ட வேதக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த ஐம்பூதங்களில் ஒன்றுதான் அக்னி என்பதாகும். இந்து ஞான மரபில் நிறைய வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இது மனித மனத்தின் குணம், உள்ளார்ந்த பழக்க வழக்கங்கள், பழங்குடிகளின் வாழ்க்கை அமைப்பு இதனோடு கலந்த வைதீகச் சடங்குகள் என்று நிறைய வழிபாடுகள் உள்ளன. ஆனால், எல்லா வழிபாட்டையும் தொகுத்து காண்போமாயின் ஐம்பூதங்களையும் ஏதாவதொரு ரீதியில் அவரவர்களுக்குத் தகுந்தவாறு வழிபட்டுக் கொண்டிருப்பதை
காணலாம். அதில் ஒன்றே அக்னி வழிபாடு. அக்னி என்கிற நெருப்பு என்பது நாம் நேரடியாக நம்மால் கண்களால், தொட்டுணர்வதால் காணும் அளவு மட்டுமல்ல! அது அதனுடைய உருவம் என்று கொள்ளலாம். வேதங்களில் அக்னி குறித்து நிறைய இடங்களில் வருகிறது.

இது நாம் வெளியே காணும் அக்னி மட்டுமல்ல. அது நம்மால் பார்க்க முடியாததுமான அருவ அக்னியாகும். அது நம் குடலில், அறிவில், கோபத்தில், சூரியனில், மின்னலில், எரியும் எண்ணத்தில் என்று சூட்சுமமான அக்னியே ஆகும். ஒன்றை எரித்து வேறொன்றாக மாற்றும் சக்தியையும் அக்னியாக்கினார்கள். இந்த அக்னி சிறு தீக்குச்சியின் நுனியிலிருந்து நமக்குத் தெரிந்து புறப்படுகின்றது. வைதீகச் சடங்குகளில் மந்திர ரூபத்தில் இடப்பட்ட உணவை அக்னியே தேவர்களுக்குண்டானதை அளிக்கிறது. அறிவின் ரூபமாக, அறிவின் இயக்கமாக எண்ணத்தில், புத்தியில் அக்னி மையங்கொண்டு இயங்கி அறிவையே தோற்றுவித்தும் அழித்தும் செய்கின்றது. சிருஷ்டிப்பதில் காமாக்னியாக சகல ஜீவர்களுக்குள்ளும் உறைந்து படைப்பை பெருக்குகிறது. இப்படி ஸ்தூலமான பருவுடல் கொண்ட சகல விஷயங்களை அழிப்பதிலிருந்து சூட்சுமமான விஷயங்கள் வரை அக்னி செயல்படுகிறது.

எனவேதான் அக்னியின் நீட்சியாக அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வைத்து அவனது மனைவியாக உருவகித்து அக்னியின் பத்தினியை ஸ்வாஹா என்று அழைத்தனர். யோகியினுள் மூலாக்னி எனப்படும் மூலாதாரத்திலுள்ள அக்னி யோகாக்னியாக செயல்பட்டு ஏழு சக்கரங்களுக்குள்ளும் சென்று ஸஹஸ்ராரத்தை அடைவிக்கிறது. அக்னி தவத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அலையும் எண்ணங்கள் ஒரு முகப்போடும் இருக்கும்போது முகமே சுடராக ஒளிர்கின்றது. அதனாலேயே தீந்தவம் என்றனர். நாம் பார்க்கும் அக்னி தொட்டுணரக்கூடிய நிலையில் இருப்பது. ஆனால், அக்னிக்கு சூட்சும விருத்தி உண்டு. அந்த அக்னியே நம்மை ஆளுவதும் ஆகும். சுடும் நெருப்பு மட்டுமல்லாது சுடாத அக்னியும் உண்டு. உண்மையில் அக்னிதான் எதனுடைய இருப்பையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. இருப்பிற்கான அத்தாட்சியே அக்னி ஆகும். ஜடப் பொருட்கள் தமக்குள் இருக்கும் ஒளிரும் தன்மையால் மட்டுமே தம்மை அடையாளப் படுத்திக் கொள்கின்றன.

இதற்குக் காரணம் அந்தப் பொருட்களுக்குள் தாது ரூபமாக இருக்கும் அக்னியின் வெளிப்பாடே ஆகும். உபநிஷதங்களில் அக்னியை இவ்வாறாகவும் கூறியிருக்கிறது. ஈசனின் திருக்கண்ணே சூரியன் எனும் அக்னியே ஆகும். சூரியன் எனும் அக்னி இருப்பதால்தான் உலகம் என்கிற பிரபஞ்சம் தெரிகிறது. அதுபோல நம்மால் பார்த்தல் எனும் விஷயம் நடைபெறுவதற்குக் நமக்குள் இருக்கும் சூரியனே காரணமாகவும் இருக்கிறார். அதாவது சூரியனை ஒளிர வைக்கும் அதே அக்னியே நம்மையும் வெளியுலகை காணச் செய்கிறார். அதற்கு கண்கள் ஒரு கருவி மாத்திரமே ஆகும். கண்களால் ஏற்படும் பார்த்தல் எனும் செயலால் மனமே இயங்குகிறது. வெளியுலகில் பார்க்கப்படும் பொருட்கள் மனதில் பிம்பங்களாகவும், எண்ணங்களாகவும், இன்னும் பல்வேறு படிமங்களாகவும் தங்குகின்றன. எனவே, மனம் விஷயங்களை புஜிப்பதற்குண்டான அடிப்படையை பார்வை தீர்மானிக்கிறது.

எனவே, மனதை பாதிக்கும், வளர்க்கும், ஒடுக்கச் செய்யும் அவஸ்தைகளுக்கெல்லாம் முக்கிய பங்கை அக்னிதான் இங்கு ஆற்றுகிறது. அக்னியே வாக்கு ரூபமும் ஆகும். அதாவது வாக்கின் சத்திய ரூபமே அக்னியாகும். உபநிஷதத்தில் சத்தியகாம ஜாபாலன் ஒவ்வொரு வித்யையும் பயிலும்போது யாக குண்டத்திலிருந்த அக்னியும், அக்னிக்கு அருகேயிருந்து காளை, அன்னப் பறவை, நீர்ப்பறவை போன்றவையெல்லாம் உபதேசிக்கிறது. இவையெல்லாமுமே மிகவும் தத்துவ ரூபத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. அக்னியே பிரம்ம வித்தையை உபதேசிப்பதாக இருக்கும். அக்னியே வாக்கு. அக்னியே அனைத்தையும் அறியச் செய்வது. இந்த அக்னிக்கெல்லாம் மூலமே அருணாசல ஆத்ம மூலாக்னி. அதனாலேயே அக்னி இயங்குகிறது. இது சக்தியின் விளையாட்டாகும். அவள் ஐம்பூதங்களும் அதனின்று பிரிந்த பல்லாயிரம் ஸ்தூல, சூட்சும, காரண, காரிய வஸ்துக்களைக் கொண்டு விளையாடுகிறாள்.

அது பிரபஞ்சத்தின் பிரமாண்டமான லீலை. இந்த சக்தியே சிதம்பரத்தில் பிரபஞ்சத்தையே தனது நடனமாகக் காட்டி நிற்கும் நடராஜரைக் கண்டு பிரமிக்கிறாள். ஆனால், பஞ்ச பூதங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் சிவம் அசலமாக இருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. சக்தியின் வடிவங்களான அக்னியின் தலமுமாகவும், நினைத்தாலே முக்தியருளும் மோட்ச ஸ்தலமாகவும் விளங்குகின்றது. ஆனால், இங்கோ சக்தியே அசல உருவில் இருக்கும் ஈசனோடு கலந்து விடுகிறாள். எனவே, இது அக்னித் தலமாக இருந்தாலும் அக்னியானது இங்கு பஞ்ச பூதங்களின் ஒரு அம்சமாக தன்னை காட்டாது ஞானாக்னியாகவே அருணாசல மலையில் ஓளிர்கிறது. ஐம்பூதங்களில் மற்ற தலங்களை விடவும் சிறப்பாக கூறப்பட்டதற்குக் காரணமே இங்கு சக்தி என்கிற அருணா அசலமாகியிருக்கும் ஈசனோடு கலந்து விடுகிறாள்.

அஷ்ட திக்பாலகர்களில் திருவண்ணாமலை மலைப் பாதையிலுள்ள அக்னி லிங்கம் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில், அக்னி க்ஷேத்ரத்தில் அக்னியே பூஜித்த லிங்கமாதலால் தனிச் சிறப்பு அதற்கு உண்டு. இந்த அக்னி லிங்கத்தை தரிசிக்கும்போது அக்னியால் மனதிற்கு என்னென்ன அவஸ்தைகள் இந்த மனதிற்கு உண்டோ அவை அனைத்தையும் இந்த அக்னி லிங்கம் சுட்டு எரிக்கும். பார்த்தல், பார்க்கப்படுதல் ஆகிய செயல்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து அவஸ்தைகளாலும் எழும்பும் மற்றும் அங்கேயே மண்டிக் கிடக்கும் கர்மங்கள் யாவும் அழியும். பஞ்ச பூதத்தின் ஆதிக்கத்திற்குள் தனியொரு ஜீவனை தள்ளாது. அக்னியின் சேஷ்டைகளை இந்த அக்னி லிங்கம் தடுத்து நிறுத்தும். பார்க்கப்படும் வஸ்துக்களோடு பார்ப்பவரை இணைக்காது. அதாவது, இனியொன்றை பார்க்கும்போதே இதைப் பார்ப்பவர் யார் என்கிற விசாரத்தை கொடுத்து உள்ளுக்குள் இந்த லிங்கம் தள்ளும்.

பார்த்தல் எனும் கிரியையே இதைப் பார்ப்பவர் யார் என்று அகமுகமாகும். அகமுகமான மனம் விசாரத்தில் இறங்கும். விசாரத்தில் ஈடுபட்ட மனம் தன்னுடைய பிறப்பிடம் நோக்கி நகரும். அப்போது, இதே அக்னி ஈசனின் மூன்றாவது கண்ணாகிய ஞானாக்னியாக மாறி எப்போதும் இருக்கும் ஞான சொரூபத்தை, நம் சொந்த சொரூபமான நம்மையே நாமாக இருக்கச் செய்யும். ஈசனுக்கு திரிபுராந்தகன் என்கிற திருப்பெயர் உண்டு. ஏனெனில், அப்போது தமது அக்னியாலேயே முப்புரத்தையும் எரித்தார். சூரியனின் முன்பு பஞ்சுபோல முப்புரமும் மிதந்து கொண்டிருந்தது. ஆனாலும் அசுரர்கள் தொடர்ந்து தாக்கினார்கள். கமலாட்சனும், தாருகாட்சனும் கண்சிவந்து நெற்றிக்கண்ணனான ஈசனருகே நெருங்கினார்கள். முப்புரத்தையும் கோபத்தோடு பார்த்தார். சட்டென்று தம் இதழ்களில் புன்னகை தோய சிரித்தார்.

பெருஞ்சீற்றத்தின் மத்தியில் பூத்த புன்னகை கருணையாக அசுரர்களை அணைக்க, சீற்றம் முப்புரத்தை சிவந்தெழுந்த தணலாக அடைந்து மூடிக்கொள்ள அந்தப் பறக்கும் கோட்டைகள் பற்றியெரிந்தது. ஈசன் திரிபுரசம்ஹாரமூர்த்தியானார். அசுரர்களின் கோட்டைகளும், கொத்தளங்களும் கருகிச் சாம்பலானது. அந்த அசுரர்கள் அந்த அதிர்ச்சி தாங்காது தூக்கியெறியப்பட்டனர். வானம் தவழ்ந்து மூர்ச்சையுற்று அடர்ந்து இருள்பரவியிருந்த புளியங்காட்டிற்குள் வீழ்ந்தனர். தாரகாட்சன் ஒருபுறமும், கமலாட்சன் வேறொரு பகுதியிலும் வீழ்ந்தான். அவர்களுக்குள் அரக்கத்தன்மை ஈசனின் ஞானக்கனலில் எரிந்து சிவாக்னி மட்டும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஈசன் எரி அகலை ஏந்தியதாக ஒரு புராணக் கதை கூறுகிறது. தாருகாவனத்து முனிவர்கள் ஈசனின் மீது கோபம் கொண்டு யாகத் தீயினின்று விஷயம் போன்றதும், அதிஉக்கிர பயங்கரமான நெருப்புக் கோளத்தை ஏந்தினார்.

அதை ஈசனின் மீது ஏவினார். அந்த நெருப்பையே பந்தாக்கி ஏந்திக் கொண்டார். இதையே அக்னி தாரண பராக்கிரமம் என்று போற்றப்படுகின்றது. இதேபோன்று அனலன் எனும் அசுரன் தேவர்கள் முதற்கொண்டு எல்லோரையும் துன்புறுத்தியபடி வந்தான். ஒருமுறை கயிலையை அடைந்தபோது ஈசன் தனது நெற்றிக் கண்ணாலேயே அவனை எரித்து சாம்பலாக்கினார். எனவே, ஈசனை அனாலாசுர தகனர் எனும் பெயர் வந்தது. காசி மாநகரில் அக்னி பூஐித்த லிங்கம் அக்னீஸ்வரர் என்றே அழைக்கப்படுகின்றது. முருகப் பெருமான் திருவண்ணாமலை, பர்வதமலைக்கு அருகேயே உள்ள கடலாடி எனும் தலத்திலுள்ள வன்னீஸ்வரரையும் தொழுதார். வன்னி என்பதே அக்னிதான். ஏழு அந்தணர்களை மோட்ச சம்ஹாரம் செய்த பாவம் தீர்வதற்காக பர்வத மலையைச் சுற்றி வந்தபோது அருகேயுள்ள இலுப்பைத் தோப்புகளை கண்டவுடனேயே கந்தன் குழைந்தான். அருகேயே தன்னால் பூஜிக்கப்பட வேண்டிய லிங்கம் இருப்பதை உள்ளுக்குள் உணர்ந்தான்.

தோப்புகளை ஊடறுத்து உள்ளுக்குள் சென்றான். செக்கச் சிவந்த செம்மேனியனான ஈசன் லிங்கத் திருமேனியில் ஏகாந்த முனிபோல திகழ்ந்தார். முருகனுக்கு கேவல் பொங்கியது. ஓடிச்சென்று ஈசனைத் தழுவிக் கொண்டார். கண்களில் நீர் பெருகிய வண்ணம் இருந்தது. மெல்ல நகர்ந்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள புஷ்பங்களை எடுத்து பூஜித்தார். இதுவும் அக்னிக்கான தலமாகும். ஈசன் அக்னி சொரூபமாக இருப்பதால் ஜீவன் மரித்தவுடன் உடல் சில்லிட்டு விடுகிறது. எனவே, உள்ளிருந்து இயக்கும் சக்தியாகவே வழிபடப்படுகின்றார். மேலும், அகத்தில் தீ வளர்க்கும் ஞான மார்க்கத்தினரை அகத்தியர் என்றும், புறத்திலே அதாவது வெளியிலே தீவளர்த்து வழிபடுவோரை புலத்தியர் என்றும் கூறுகின்றனர். சில அக்னீஸ்வர தலங்கள் தரிசிப்போமா! மதுரை மாவட்டம் தேவன்குறிச்சி, டி.கல்லுப்பட்டி எனும் தலத்தில் அக்னீஸ்வரர் திருப்பெயரில் ஈசன் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கஞ்சனூர் எனும் பிரசித்தி பெற்ற சுக்கிரனின் தலத்தில் அக்னீஸ்வரரே மூலவராக அருளாட்சி நடத்துகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள நல்லாடை எனும் தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அருள்கிறார். அம்பாள் சுந்தரநாயகி எனும் திருநாமத்தோடு அபயம் அளிக்கிறாள். இங்கு அக்னி சொரூபமாக இருப்பதால் அதை தணிக்கும் வகையில் அருகேயே தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது சிறப்பாகும். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மூலவராகவே அக்னீஸ்வரர் அருள்கிறார். கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம்தான். திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு அருகேயுள்ள எட்டரை கிராமத்தில் அக்னீஸ்வரர் அருள்கிறார். திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அக்னித்தலமாக கருதப்படுகிறது. அதேபோல ராஜவல்லிபுர ம் எனும் தலத்தில் அக்னீஸ்வரர் மூலவராக ஆருள்பாலிக்கிறார்.

இதேபோல அக்னி பகவான் சிவபெருமானை பூஐித்த திருத்தலங்கள் ஏழு ஆகும். அதில் திருப்புகலூர், கஞ்சனூர், அன்னியூர், திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு, கோட்டூர், திருக்காட்டுப்பள்ளி என்பதாகும். அதில் ஏழாவது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள முழையூரும் ஒன்றாகும். இத்தல ஈசனுக்கு வன்னீஸ்வரர் என்பது பெயராகும். வன்னிக்குடி முழையூர் என்றே இவ்வூர் அழைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கரூருக்கு அருகேயுள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயே அக்னீஸ்வரர் எனும் திருப்பெயரில் கோயில் அமைந்துள்ளது. ஈசனின் நெற்றிக் கண்ணை உலைக் கண் என்பார்கள். உலை என்பது கனன்று நெருப்புப் பொறியோடு காணப்படுவதாகும். மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கம் என்ற பெயரில் இருப்பது உலைக்கண்ணீஸ்வரருக்கு கட்டப்பட்ட கோயிலாகும். கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு பிரம்ம விஷ்ணுக்களுக்குள் ஏற்பட்ட போட்டியால் ஈசனே நெருப்பு ஸ்தம்பமாய் நின்ற நிகழ்வையே விளக்குகிறது.

அந்த பெருந்தீயையே நாம் புறத்திலே எரியவிட்டு அகத்திலும் எரிய வேண்டுமென பிரார்த்திக்கிறோம். இதுதவிர அக்னியை கரத்தில் ஏந்தி (அக்னி சட்டி) வருதல், நெருப்பு மிதித்தல், அக்னிக் காவடி என்று பல்வேறு சடங்குகளினூடாகவும் அக்னி வழிபாட்டை நாம் மேற்கொண்டு வருகிறோம். அக்னியை வழிபடுவோர் சகல ஐஸ்வர்யங்களை பெறுவோர் என்பது வேதத்தின் கூற்று. அந்தணர்கள் மூன்று சந்தகளிலும் செந்தீயை வேட்டல் எனப்படும் ஆஹிதாக்னியை வழிபட்டு அக்னி ஹோத்ரம் செய்வர். ஈசன் இவர்களின் வேள்விக் குண்டத்தில் முத்தீயின் வடிவமாக விளங்குகிறார். அக்னி காலையில் பாலகனாகவும், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் வேளையில் யௌவனாக்னியாகவும், இரவு தொடங்கும் அந்திப் பொழுதில் விருத்தாக்னியாகவும் வழிபடப்படுகிறார். வேதங்கள் அந்தணர்கள் வேட்பித்து வணங்கும் தீயை தட்சிணாக்னி, காருகபத்யம், ஆஹவனீயம் என்று வகைப்படுத்தி வேள்வி செய்து வணங்குகின்றார்கள். சிவாலயங்களில் மூர்த்தமாக அக்னி மற்றும் அக்னீஸ்வரராக இருந்தும் அருள்பாலிப்பதுபோல அக்னி தீர்த்தமாகவும் பல்வேறு தலங்களில் அமைந்திருக்கின்றன. திருவண்ணாமலையில் மலைக்கு தென்கிழக்கே அமைந்துள்ளது. திருவெண்காடு, ராமேஸ்வரம், கீழ்வேளூர், கூவம் ஆகிய தலங்களிலும் அருள்பாலிக்கின்றார்.

கிருஷ்ணா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

 • ChennaiMarinaMaasiMagam

  மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

 • AlbinoTurtleheart

  உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்