SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தன்னம்பிக்கையே வெற்றிக்கான ஆயுதம்!

2018-07-11@ 16:37:30

நாற்பது வயதாகியும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்கள் வீட்டில் நிம்மதி, சந்தோஷம் இல்லாமல் இருக்கிறேன். என் வாழ்க்கை வளம் பெற ஜாதகத்தில் வழி உண்டா? தகுந்த பரிகாரம் கூறி நல்ல வழி காட்டுங்கள். இந்துமதி, லால்குடி.

கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. நிம்மதியும், சந்தோஷமும் நம் கையில்தான் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரஹங்கள் இணைந்திருப்பது பலமான அம்சமே. நான்கில் உச்சம் பெற்ற சந்திரன், ஐந்தில் செவ்வாய் மற்றும் குருவின் இணைவு என்று உங்கள் ஜாதகம் பலமாகவே உள்ளது. கடந்த 18 வருடங்களாக எட்டாம் இடத்தில் அமர்ந்திருக்கும் ராகுவின் தசை நடந்ததன் காரணமாக முழுமையான நற்பலனை அடைய இயலாமல் சிரமப்பட்டிருக்கிறீர்கள்.

தற்போது நடைபெறும் தசாபுக்தி காலம் என்பது மிகவும் சிறப்பாகவே உள்ளது. அஷ்டமத்துச் சனியைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தவர்களை நம்பி இருக்காமல் உங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சியுங்கள். பெண்ணாகப் பிறந்திருந்தாலும் ஒரு ஆண்மகனுக்கு உரிய பலம் உங்கள் ஜாதகத்தில் உண்டு. குடும்பத்தினரை நம்பி இருக்காமல் தனித்து நின்றே உங்களால் சாதிக்க இயலும். 22.08.2018ற்கு மேல் உங்களுக்கான வாழ்க்கைத்துணை வரைக் காண்பீர்கள். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து அன்றாடப் பணியைத் துவக்குங்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

எனது குடும்பத்தில் வயதான தாத்தா, பாட்டி, அம்மா, நான், தம்பி என ஐந்து பேர் இருக்கிறோம். என் அப்பா வெளிநாடு சென்றுவிட்டார். அவர் நினைக்கும்போது மட்டும் பணம் அனுப்புவார். என் தம்பி பிறந்து எட்டு வருடம் ஆகிறது. அவன் அப்பாவை பார்த்ததே இல்லை. தம்பியின் ஜாதகத்தை நினைத்து அம்மா
பயப்படுகிறார். என் அப்பா எப்போது வருவார்? செல்வி, மன்னார்குடி.


விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தம்பியின் ஜாதகத்தில் சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானத்தில் சூரியனின் அமர்வு நிலை என்பது பலம் பொருந்திய அம்சம் ஆகும். குடும்பத்தின் நிலையை எண்ணி 13வயது சிறுமியாகிய நீங்கள் கடிதம் எழுதியிருப்பது உங்கள் பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது. இதே பொறுப்புணர்வுடன் நன்றாகப் படித்து உயர்ந்த உத்யோகம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் தம்பியின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற செவ்வாயுடன் கேது இணைந்திருப்பது சற்று பலவீனமான அம்சம் என்றாலும் உங்களால் அவரை நல்வழிப்படுத்த இயலும்.

அவர் வளர, வளர அவரது நட்பு வட்டத்தின் மீது அதிக கவனம் கொள்ளுங்கள். தகாத நண்பர்களின் சேர்க்கை அவரை மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடும். என்றாலும் தற்போது சிறுபிள்ளைதான் என்பதால் உங்களால் அவரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். 16வது வயது முதல் அவரும் பொறுப்புடன் நடந்து கொள்வார். 27.12.2018ற்கு மேல் அதாவது வருகின்ற 2019ம் வருடத்தின் துவக்கத்தில் உங்கள் தந்தை உங்களை நாடி வரும் வாய்ப்பு உண்டு. அம்மாவிடம்  சனிக்கிழமை நாளில் அருகில் உள்ள சிவாலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்கி வரச் சொல்லுங்கள்.குடும்பக் கஷ்டங்கள் குறையத் துவங்கும்.

திருமணமான நாள் முதல் இன்று வரை பிரச்னைதான். என் கணவர் என்னை சந்தேகப்படுகிறார். நான் அவருக்கு உணவில் விஷம் வைத்து விடுவதாகவும், மருந்து மந்திரம் செய்வதாகவும், அவர் தலைமீது கல்லைப் போட்டுக் கொன்று விடுவேன் என்றும் பழி சுமத்துகிறார். என்னை எந்த விஷயத்திலும் நம்புவதில்லை. சித்ரவதை செய்கிறார். என் நிம்மதிக்கு வழி சொல்லுங்கள். ஈரோடு மாவட்ட வாசகி.

கடந்த 12 வருட காலமாக சித்ரவதையான வாழ்க்கையை அனுபவித்து வருவதாக எழுதியுள்ளீர்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தையும், விசாகம் நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் உங்கள் ஜாதகமே பலம் பொருந்தியதாக உள்ளது. அமாவாசை நாளில் பிறந்திருக்கும் உங்கள் கணவர் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவ்வாறு நடந்து கொள்கிறார். அவரது குணத்தினை தற்போது மாற்ற இயலாது. வயது முதிர்வும், வாழ்க்கையில் காணும் அனுபவமும்தான் அவரை மாற்ற வேண்டும். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க இயலாது. குட்ட குட்ட குனிந்து கொண்டிருந்தால் எப்படி வாழ்வினில் முன்னேற முடியும்? பயமின்றி நிமிர்ந்து நில்லுங்கள்.

எத்தனை நாட்களுக்குத்தான் பெற்றோரின் துணையை எதிர்பார்க்க இயலும். உங்கள் மகனின் நல்வாழ்விற்காகவாவது நீங்கள் உயிர் வாழ வேண்டாமா? சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகன் வளர்ந்து தன் தந்தையைக் கண்டிக்கட்டும். உங்கள் இருவரின் ஜாதகப் பலத்தின்படி உங்கள் கணவருக்குத்தான் உங்கள் தயவு தேவையே தவிர, உங்களுக்கு அவருடைய தயவு தேவையில்லை. ஜீவன ஸ்தானத்தில் இணைந்திருக்கும் குருவும், சுக்கிரனும் உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியும் நீங்கள் வேலை செய்து சம்பாதிக்க துணைபுரிகிறது. பிரதி சனிக்கிழமை தோறும் வீட்டிலேயே ஆஞ்சநேயர் படத்தை வைத்து பூஜை செய்து வாருங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். வாழ்வு உங்கள் வசப்படும்.

என் மகள் கடந்த ஆறு மாதமாக காதல் வயப்பட்டிருக்கிறாள். அவன் நல்லவன் இல்லை. என் மகளிடம் கூறினால் ஏற்றுக் கொள்ளமாட்டாள். இதிலிருந்து அவளைக் காப்பாற்றுவதற்கும், இனிமேல் இந்த தப்பை செய்யாமல் இருப்பதற்கும் ஒரு பரிகாரம் சொல்லவும். திருமதி சிங்கபாண்டியன், திருநெல்வேலி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி ஒன்பதில் நீசம் பெற்றிருப்பதால் காதல் திருமணம் என்பது நல்வாழ்வினைத் தராது. தற்போதைய சூழலில் அவர் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை ஏமாற்றத்தில் முடிந்துவிடும். என்றாலும் உங்கள் மகளைக் காப்பாற்ற உங்களால் முடியும். அவருடைய எண்ணத்திற்கு எதிராகப் பேசாமல் “முதலில் நீ ஒரு வேலையைத் தேடிக் கொள், அதன்பின்பு நீ விரும்பும் பையனுக்கு உன்னைத் திருமணம் செய்து கொடுக்கிறோம்” என்று சொல்லுங்கள்.

13.12.2019 வரை அதாவது இன்னமும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உங்கள் மகளை நீங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதன் பின்னர் உங்கள் மகளைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பையனின் உண்மையான குணத்தினைத் தெரிந்துகொண்டு விலகிவிடுவார். உங்கள் மகளை யாராலும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொள்ள இயலாது. இருபத்தேழாவது வயதில் அவரது திருமண வாழ்வு நல்லபடியாக அமையும். அதுவரை அவசரப்படாமல் பொறுத்திருக்க வேண்டியது அவசியம். பாபநாசம் திருத்தலத்திற்கு உங்கள் மகளை அழைத்துச் சென்று நதியில் ஸ்நானம் செய்வித்து, சிவபெருமானை தரிசிக்க வைத்து உங்கள் மகளின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மகளை வேலைக்குச் செல்ல அறிவுறுத்துங்கள். அவரது பெயருக்கு ஏற்றார்போல் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுவார்.

பிறவியிலேயே 75 சதவீதம் பார்வைக் குறைபாடு உள்ள நான் சிறந்த கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் கணினி பொறியியல் படித்தேன். இருப்பினும் அரியர்ஸ் நிறைய உள்ளது. படித்த கல்லூரியிலேயே சம்பளமின்றி மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். பணி நிரந்தரமாக வேண்டுமெனில் அரியர்ஸ் பேப்பர்களில் பாஸ் செய்தாக வேண்டும். என் நல்வாழ்விற்கு நல்லதொரு பரிகாரம் சொல்லி வழிகாட்டுங்கள். தினகரன் வாசகி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் பிரச்னையே இன்னமும் நீங்கள் உங்களுக்கான பாதையை எது என்பதை சரிவர தேர்ந்தெடுக்காததுதான். படித்த கல்லூரியிலேயே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அரியர்ஸ் எழுதி தேர்வு ஆவதற்கு இன்னமும் ஒரு வாய்ப்புதான் உள்ளது. அதற்குள் ஒரு பேராசிரியையாக, இயற்கை விவசாயியாக, பத்திரிகையாளராக உயர வேண்டும் என்ற லட்சியம் உள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் லட்சியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு துறையைச் சார்ந்தவை. முதலில் நாம் எந்த வண்டியில் பயணிக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பேருந்து, ரயில், விமானம் மூன்றிலும் பயணிக்க இயலாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உங்கள் துடிப்பு புரிகிறது.

ஆனால் உங்கள் முயற்சியை சரிவர நெறிப்படுத்திக் கொள்ளாமல் செயல்படுகிறீர்கள். கல்லூரி படிப்பு என்பது நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும்தான். அது மட்டுமே நம் வாழ்வினைத் தீர்மானித்துவிடாது. ஜென்ம லக்னத்திலேயே சூரியன், புதன், குரு ஆகியோரின் இணைவினைப் பெற்றிருக்கும் உங்கள் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. ஒரு பத்திரிகையாளராக உருவெடுப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. தனியார் செய்தி தொலைக்காட்சி நிலையங்களில் உங்களுக்கான வேலை வாய்ப்பினைத் தேடுங்கள். பார்வைக் குறைபாட்டினை ஒரு குறையாகக் கருதாமல் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். உங்கள் திறமைக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை ஒன்றே உங்கள் வெற்றிக்கான ஆயுதம்.17.07.2018 முதல் உங்கள் வாழ்வினில் திருப்புமுனையைக் காணும் நீங்கள் 11.03.2021 முதல் உயர்ந்த உத்யோகத்தில் கைநிறைய சம்பாதித்து உங்கள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள். வியாழன்தோறும் சாயிபாபா ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். உங்கள் வெற்றிக்கான பாதையில் விரைவில் அடியெடுத்து வைப்பீர்கள்.

2004ல் நடந்த தீ விபத்தில் என் மகளின் முகம் வெந்து கண்பார்வை போய்விட்டது. பார்வையற்றோர் பள்ளியில் படித்து எம்.ஏ.பி.எட் வரை முடித்திருக்கிறாள். அரசுப் பணிக்காக தேர்வு எழுதி வருகிறாள். ஒன்றும் பலன் இல்லை. என் மகளுக்கு அரசு வேலை கிடைப்பதற்கு வழி சொல்லுங்கள். பரமசிவம், மதுரை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவர் பிறந்த நாள் முதல் சரியில்லாத வியாபாரம், தாயாரின் உடல்நிலை பாதிப்பு என்று அவர் பிறந்த நேரத்தினை குறை சொல்வதை முதலில் நிறுத்துங்கள். தன் வாழ்வினில் நடந்த அத்தனை சிரமங்களையும் தாங்கிக் கொண்டு உங்கள் மகள் சாதித்து இருக்கிறார். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். ஆசிரியர் பணிதான் வேண்டும் என்று காத்திருக்காமல் அவருடைய தகுதிக்கு ஏற்ற அனைத்து அரசுத் தேர்வுகளையும் எழுதி வரச் சொல்லுங்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலத்திலேயே அவருக்கு நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். பிரதி ஞாயிறுதோறும் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அறுகம்புல் சாத்தி வழிபட்டு வரச் சொல்லுங்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் அபிஷேகத்திற்கு பால் வாங்கித் தாருங்கள். 23.02.2019ற்குள் உங்கள் மகள் நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்துவிடுவார். கவலை வேண்டாம்.

இருபத்தைந்து வயதாகும் எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என் மாமன் மகனை ஏழு வருடங்களாக காதலிக்கிறேன். அவர் படித்து முடித்து வேலையின்றி இருப்பதால் இரு குடும்பத்தாரும் ஒத்துக் கொள்ளவில்லை. அவரும் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி செயல்பட முடியாது என்று மறுக்கிறார். என் விருப்பப்படி எனது திருமணம் நடைபெற வழி சொல்லுங்கள். காயத்ரி, வேலூர்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நீங்கள் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் வீடு எந்தவித தடையுமின்றி நல்லபடியாக தயாராகிவிடும். உங்கள் மனதில் உள்ளதை எந்தவித ஒளிவு மறைவும் இன்றி தயங்காமல் குடும்பத்தினரிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் ஜாதக அமைப்பின்படி உங்கள் விருப்பத்தின் படியே திருமணம் என்பது நடைபெறும். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மாமன் மகனின் ஜாதகப்படி வருகின்ற 2019ம் ஆண்டின் இறுதியில் அவருக்கு உத்யோகம் கிடைத்துவிடும். அவரது குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து மனம் விட்டுப் பேசுங்கள். அவருக்கு உத்யோகம் கிடைக்கும் வரை திருமணத்தை தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை. ஞாயிற்றுக் கிழமை நாளில் வேலூரை அடுத்துள்ள ரத்தினகிரி மலைக்குச் சென்று சுப்ரமணிய ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவனது சந்நதியிலேயே உங்கள் திருமணத்தை நடத்திக் கொள்வதாக உங்கள் பிரார்த்தனை இருக்கட்டும். இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் மனம்போல் மாங்கல்யம் அமைய வாழ்த்துக்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்