SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்கள் கவரிங் நகைகளை அணியலாமா?

2018-07-11@ 16:32:01

தர்ம வழியில் வாழ்வது கடினமா? சு. பாலசுப்ரமணியன், இராமேஸ்வரம்.

கடினம்தான். ஆனால் கஷ்டப்படாமல் கிடைப்பது எதுவும் நிலைப்பதில்லை. இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் நஷ்டமடையாமல் இருக்கலாம் என்பதே உண்மை. தர்ம வழியில் நடக்கும்போது பல தடைகளும் சங்கடங்களும் வரும் என்பது நிஜம்தான். அதனால்தான் தர்மசங்கடம் என்ற வார்த்தை வழக்கத்தில் இருக்கிறது. அதர்மசங்கடம் என்று சொல்வதில்லை. காரணம் அதர்மமான வழியில், அதாவது எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று வாழ்பவர்களுக்கு சங்கடமோ, தடையோ உண்டாவதில்லை. அதேநேரத்தில் தர்மசங்கடத்தை சமாளித்து மீண்டு வருபவருக்கு நிரந்தரமான வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். அதர்மமான வழியில் நடப்பவர்களுக்கு சங்கடங்கள் இல்லை என்ற போதிலும் நிரந்தரமான வெற்றி கிடைப்பதில்லை. இதையே இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு உணர்த்துகின்றன. இன்னொரு அனுபவ பூர்வமான உண்மை யாதெனில் எளிதாகக் கிடைக்கின்ற எதுவும் மனதிற்கு அத்தனை மகிழ்ச்சியைத் தருவதில்லை.

கஷ்டப்படாமல் பசியற்று உட்கார்ந்திருக்கும் பணக்காரனுக்கு பாசந்திகூட பாகற்காயாய் கசக்கிறது. கஷ்டப்பட்டு உழைக்கும் பசியுள்ள ஏழைக்கு பழைய கஞ்சியும் பாயாசமாய் இனிக்கிறது. புகழ்பெற்ற ஆலயங்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது அங்கே இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் என்ற பிரிவுகள் இருக்கும். பணம் கொடுத்து இறைவனை தரிசிப்பது சிறப்பு தரிசனம். கட்டணம் செலுத்தாமல் இலவசமாக தரிசிப்பது, தர்ம தரிசனம். பணம் செலுத்தாமல் இறைவனை தரிசிப்பதே தர்மநெறி என்பதால் இதற்கு தர்ம தரிசனம் என்று பெயர். இந்த தர்ம தரிசன வரிசையில் கூட்டம் அதிகமாகவும், நெரிசலாகவும் ஒருசில சங்கடங்களுடன் கூடியதாக இருக்கும். அதேநேரத்தில் சிறப்பு தரிசன வரிசையில் சிரமம் ஏதுமின்றி எளிதாகச் சென்று இறைவனை தரிசிக்கலாம். என்றாலும் பல சங்கடங்களைத் தாங்கிக்கொண்டு தர்மதரிசன வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கும்போது கிடைக்கும் உச்ச பட்ச ஆனந்தம், சிறப்பு தரிசன வரிசையில் எளிதாகச் சென்று தரிசிக்கும்போது கிடைப்பதில்லை. தர்மத்தின் பாதையில் நடப்பது கடினம்தான் என்றாலும், அந்தக் கடினத்தை சுமப்பவனை கடவுள் என்றுமே கைவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

திருமணத் தடையால் வயது ஏறிக்கொண்டே போய் அவதிப்படும் மகளிர் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

திருமணத்தடையால் அவதிப்படும் பெண்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சுமங்கலிபூஜை செய்து வழிபடுவதால் திருமணத் தடை விலகும். அந்த ஒவ்வொரு நாளும் மூன்று சுமங்கலிப் பெண்கள் வீதம் வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு நலங்கிட்டு தங்களால் இயன்ற அளவிற்கு வஸ்திரத்துடன் கூடிய தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க வேண்டும். அவர்களுக்கு போஜனம் அளிப்பது இன்னமும் நல்லது. இவ்வாறு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மொத்தம் 27 சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க எல்லாவிதமான தோஷங்களும் விலகிவிடும்.

நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வருகின்ற ஒன்பது நாட்கள்தான் நினைவிற்கு வரும். மொத்தம் நான்கு வகையான நவராத்திரிகள் உள்ளன: சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்தநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் வசந்த நவராத்திரி; ஆனி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் ஒன்பது நாட்களும் ஆஷாட நவராத்திரி; மாசி மாத அமாவாசைக்கு அடுத்த ஒன்பது நாட்களும் சியாமா நவராத்திரி; நாம் பொதுவாகக் கொண்டாடும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு அடுத்து வருவது சரத் நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி ஆகும். இவற்றில் எந்த நவராத்திரி காலத்திலும் மேற்சொன்ன பரிகாரத்தைச் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு உடனடியாக பலன் கிடைப்பதை கண்கூடாகக் காண இயலும்.

பெண்கள் கவரிங் நகைகளை அணிகிறார்களே, இது சரியா? கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி17.

சரியே. பாதுகாப்பிற்காக என்று மட்டுமல்லாமல் வசதியின்மை காரணமாகவும் பெரும்பாலான பெண்கள் கவரிங் நகைகளை அணிகிறார்கள். நகைகள் தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், திருமாங்கல்யம் கட்டாயம் தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். தங்கத்தால் ஆன ஆபரணத்தை ஒரு பெண்ணின் கழுத்தில் ஒரு ஆண் அணிவித்தால் அதுவே அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சி. மற்றபடி பெண்கள் அலங்காரத்திற்காக அணிந்துகொள்ளும் நகைகள் தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் உரிமை பெண்ணிற்கு உண்டு. அதற்காக தத்தமது வசதி வாய்ப்பிற்கு ஏற்ற வகையில் அவர்கள் நகைகளை அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்திற்குக் கூட கவரிங் நகைகளே பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள் கவரிங் நகைகளை அணிந்துகொள்வதில் தவறில்லை.

சந்திராஷ்டமம் பற்றி பலரும் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள். அது ஒரு ராசிக்கா அல்லது நட்சத்திரத்திற்கா என்பதையும், அந்நாட்களில் செய்யக் கூடாதவை பற்றியும் விரிவாகக் கூறவும். நா.ராமச்சந்திரன், ஆதம்பாக்கம்.

பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால்  நாட்கள் அதாவது தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில் ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டம காலம். எனவே பிறந்த ராசியின் அடிப்படையில் சந்திராஷ்டமம் நிர்ணயிக்கப்படுகிறது. சரி, சந்திராஷ்டமம் என்ன செய்யும்? சந்திரன், மனோகாரகன். நமது மன நிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி.  எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரண்டேகால்  நாட்களுக்கு மனம் டென்ஷனாக இருக்கும்.

சந்திராஷ்டம நேரத்தில் ஒருவித பதட்டத்தோடு செயல்படுவோம், அதனால் மேற்கொள்ளும் காரியங்களில் எளிதாக வெற்றி கிடைக்காது போகும், அற்ப காரணங்களினால் இழுபறி உண்டாகும், இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும், உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும், வசவுகளுக்கும் ஆளாவோம். இதெல்லாம் சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பொதுவான பலன்கள். மனித உடற்கூறு இயலைப் பொறுத்த வரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தைக் குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தால் ரத்தம் சூடேறும். அதனால் ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனால்தான் திருமணம், கிரஹபிரவேசம் போன்ற சுபவிசேஷங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிக்குள் அடியெடுத்து வைக்கும் மணமகனுக்கும், மணமகளுக்கும் ஏற்கெனவே ஆனந்த பூரிப்புடன் கூடிய டென்ஷன் இருக்கும்.

இதில் சந்திராஷ்டமத்தால் தோன்றும் பதற்றமும் இணைந்தால் என்னாவது? முதல் கோணல், முற்றிலும் கோணலாகி விடும். மணமக்களுக்கு மாத்திரமல்ல, மணமக்களின் தாய் தந்தையர்க்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பிள்ளைகளின் திருமண நாளைக் குறிக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். அதுபோன்றே அதிமுக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்யவிருக்கும் சில மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள். மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தால் ஏதேனும் தவறு செய்து விடலாம். நோயாளிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதால் அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம்.

சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கும், சிகிச்சை செய்ய உள்ள மருத்துவருக்கும் சந்திராஷ்டம நாளாயிற்றே என்று சிகிச்சை அளிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா?  ஆனால் இதற்குப் பரிகாரம்  உண்டு. சந்திரனுக்குரிய திரவமான பாலைக் குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதட்டத்தைக் குறைக்கும். (முதலிரவில் மணமக்கள் பால் அருந்த வேண்டும் என்ற பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருப்பதும் இதற்காகத்தான்).சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்னமேயே குறித்துக்கொடுப்பது, கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல.

கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்து, அர்ச்சகரின் ஆரத்தி தட்டில் காணிக்கை செலுத்துவது அல்லது கோயில் உண்டியலில் காசு போடுவது இதில் எதை கடைபிடிக்க வேண்டும்? சு.கௌரிபாய், பொன்னேரி.

இரண்டையுமே கடைபிடிக்கலாமே! இதில் ஏதாவது ஒன்றைத்தான் செய்ய வேண்டும் என்று விதி ஏதும் இருக்கிறதா என்ன? உண்டியலில் காசு போடுவது, ஆலயத் திருப்பணிக்கு உதவும். தட்டில் காசு போடுவது அர்ச்சகரின் பசியைப் போக்கும். தற்காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் அர்ச்சகரின் தட்டில் விழும் பணத்தில் பங்கு கேட்கும் ஆலய நிர்வாகங்களும் உண்டு. வருமானம் அதிகமாக வரும் மிகப் பெரிய திருத்தலங்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு சம்பளமும், இதர சௌகரியங்களும் நிறைவாகக் கிடைக்கும். சாதாரண நிலையில் உள்ள ஆலயங்களில் அர்ச்சகரின் வருமானம் குறைவாக இருக்கும்.

ஒருசில ஆலயங்களில் ஒருகால பூஜைக்குக்கூட வருமானம் இருக்காது. வறுமை நிலையிலும் ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதையே தங்கள் லட்சியமாகக் கொண்டு வாழும் அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதனைச் செய்யுங்கள். அடியவர்களுக்குச் செய்யும் தொண்டு, ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டிற்குச் சமமானது. அர்ச்சகரின் ஆரத்தித் தட்டில் காசு போட்டாலும், ஆலய உண்டியலில் காணிக்கை செலுத்தினாலும், அல்லது இரண்டையுமே செய்தாலும் புண்ணியம்தான். இதில் எது சரி என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவதன் ஐதீகம் என்ன? அயன்புரம் த.சத்தியநாராயணன்.

ஆண்டவனின் சொத்தை நமது சொத்தாக அங்கீகரித்துக் கொள்ளும் நிகழ்வு அது. ஒன்றாவது வயதுவரை அந்தக் குழந்தை இறைவனின் சொத்து. ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும்போது சிரிப்பதைக் காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயதுவரை அந்தக் குழந்தைக்கு இந்த உலக வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதைத் துவக்கும் குழந்தைக்கு மெள்ள, மெள்ள ஆசை தலை தூக்குகிறது. இது என் பொம்மை, இந்த பந்து எனக்கு வேண்டும் என்று கொஞ்சம், கொஞ்சமாக நான், எனது என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறது. பற்றற்ற நிலை காணாமல் போகிறது. தெய்வத்தன்மை குறையத் தொடங்கி மனிதனுக்கு உரிய குணங்கள் வளர ஆரம்பிக்கின்றன.

ஆசைகளை முற்றிலுமாகத் துறந்து ஒரு மனிதனால் வாழ இயலாது என்றாலும் அவனது ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், அழகு என்பது முக்கியமல்ல, ஆண்டவனின் அருள்தான் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் குலதெய்வ ஆலயத்திற்குச் சென்று அழகு தரக்கூடிய முடியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இறைவன் கொடுத்த மதிப்பிட முடியாத இந்தச் சொத்தினை மனிதர்களாகிய நாங்கள் அனுபவிக்க இருக்கிறோம் என்ற அடையாளத்திற்காகவும் அந்தக் குழந்தையின் உடம்பில் விபத்து, நோய் முதலான காரணங்களால் எந்தவித பின்னமும் உண்டாகக் கூடாது, அதற்காக நாங்களே ஒரு பின்னத்தை உண்டாக்கி நீ கொடுத்திருக்கும் சொத்தினைப் பெற்றுக் கொள்கிறோம் என்று ஆண்டவனிடம் விண்ணப்பிக்கும் விதமாக அந்தக் குழந்தைக்குக் காது குத்துகிறார்கள். ‘தான்’என்ற அகங்காரம் அந்தக் குழந்தைக்கு எந்த வயதிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவயது முடியும் தறுவாயில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

நான் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்திருப்பேன். வெளியே வந்தவுடன் ஒரு காகம் கரைகிறது. நான் செல்லும் இடம் மற்றும் தங்கும் இடத்தில் தலைக்கு மேலே உட்கார்ந்து கரைகிறது. தினமும் இது நடைபெறுகிறது. இது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை. தயவுசெய்து விளக்குங்கள். வேம்புநாதன், பட்டாபிராம்.

நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் முன்னோர்களுக்கான கடன்களில் ஏதோ ஒன்று பாக்கி இருக்கிறது, அந்தக் கடனை உங்களால்தான் தீர்க்க இயலும் என்ற எண்ணத்தில் அந்தக் காகம் உங்களேயே சுற்றிச் சுற்றி வருகிறது. உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டோ அல்லது நீங்கள்தான் பெரியவர் எனும் பட்சத்தில் குடும்பத்தில் ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பார்த்து யாருக்கு என்ன கடன் பாக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொண்டு அதனை நிறைவேற்றிவைக்க முயற்சியுங்கள். இது ஒரு நினைவூட்டல் நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முன்னோருக்கான
கடனைச் சரிவர செய்து முடித்தபின் இந்த நிகழ்வும் தொடராது. காகம் கரைவதைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சபரிமலைக்கு மாலை அணியாமல் சந்நதிக்கு வடக்கு பக்க வழியில் ஐயப்பனை தரிசிக்கலாம். இப்படி வரும் பக்தர்களில் சிலர் ஒரு வாரம், 10 நாட்கள் விரதம் கடைபிடித்து வருவார்கள். இப்படி வரும் ஐயப்ப பக்தர்கள் இந்த நாட்களில் துக்க நிகழ்வு, மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றில் கலந்துகொள்ளலாமா? மோகன்ராம், கோவிலம்பாக்கம்.

கலந்துகொள்ளலாம். மாலை அணிந்து இருமுடிகட்டி சபரிமலைக்குச் செல்வது என்பது 18ம்படி வழியாகச் சென்று ஐயனை தரிசிப்பதற்காக. 18 படிகளை ஏறிச்செல்பவர்கள் புனிதத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக மாலை அணிந்து விரதம் இருப்பதோடு காலை, மாலை இருவேளையும் நீராடுவதை வழக்கத்தில் கொண்டிருப்பர். அந்தப் புனிதத்தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் துக்கநிகழ்வுகள் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றில் மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் கலந்து கொள்வதில்லை. 18 படிகள் வழியாகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இந்த விதி பொருந்தாது. ஐயப்பனை தரிசிப்பதற்காக மட்டும் அத்தனை கடுமையான விரதத்தினை பக்தர்கள் மேற்கொள்வதில்லை.

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் 18 படிகளை கடந்துச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு கடுமையான விரதத்தினை மேற்கொள்கிறார்கள். வெறுமனே ஐயப்பனை மட்டும் தரிசிக்க வேண்டுமென்றால் உள்ளூரில் இருக்கும் ஆலயத்திலேயே தரிசித்து விடலாமே! விரதமும், புனிதத்தன்மையின் அவசியமும் 18 படிகளுக்கே. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வழியில் ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் தங்கள் மன திருப்திக்காக ஒருவாரம் அல்லது 10 நாட்கள் விரதம் இருக்கிறார்கள். மாலை அணியாமல் வெறுமனே மன திருப்திக்காக மட்டும் விரதம் இருக்கும் காலங்களில் அவர்கள் துக்கநிகழ்வுகள், மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றில் கலந்துகொள்ளலாம். அதில் தவறில்லை.

திருக்கோவிலூர் கே.பி.ஹரிப்ரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்