SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்த்தசாரதி நின் பாதமே கதி.!

2018-07-11@ 09:37:48

திருவல்லிக்கேணி    

மிகப் பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாக முடித்த நிம்மதியில் சற்றே ஓய்வெடுக்க விரும்புவது மனித குணம் மட்டுமல்ல; மாதவனின் குணமாகவும் இருந்திருக்கிறது! அதுவும், குடும்பத்தாருடன் எங்காவது சுற்றுலா போய்வரும் ஏகாந்தமான ஓய்வு! மகாபாரத யுத்தம் முடிந்தது. துரியோதனாதியர்களை அழித்தாயிற்று. பஞ்சபாண்டவர்களுக்குப் புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்தாயிற்று. இனி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டு விச்ராந்தியாகக் காலத்தை ஓட்டலாம் என்று முடிவெடுத்தார், கிருஷ்ணன். உக்ரசேனனை மதுராவிற்கு அரசனாக்கிவிட்டு கிருஷ்ணனும், பலராமனும் அதே நாட்டில் தங்கினார்கள். ஆனால் ஜராசந்தனின் அடுத்தடுத்த படையெடுப்புகளால் தனக்கு உறுதுணையாக இருந்த யாதவர்களின் எண்ணிக்கை குறையவே, எஞ்சியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை கிருஷ்ணன் மேற்கொண்டார். உடனே அவர்களை அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரை பகுதிக்குச் சென்றார். அங்கே கடலரசனிடம் 12 யோஜனை நிலத்தைத் தரும்படி கோரினார். உடனே கடலும் உள்வாங்கி பெரும் நிலப்பரப்பை கிருஷ்ணனுக்காக விட்டுக் கொடுத்தது. தேவதச்சனை அழைத்த கிருஷ்ணன் அங்கே தங்களுக்கென ஒரு நகரை நிர்மாணிக்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி உருவானதுதான் துவாரகை.

அங்கே கிருஷ்ணனைப் பார்க்க பஞ்சபாண்டவர்கள் வருவது வழக்கம். இந்த துவாரகையில் அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன், மனைவியர் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருடன் கிருஷ்ணன் வாழ்ந்து வந்தார். குடும்பத்தோடு பல ஊர்களுக்கும் சென்றுவர விரும்பிய கிருஷ்ணர், மத்திய பிரதேசம், விதிஷா பகுதியில் பெட்ஸா என்ற பகுதிக்கு விஜயம் செய்திருக்கிறார். (அங்குள்ள கோயிலில் கிருஷ்ணன், பலராமன், ப்ரத்யும்னன், அநிருத்தன் மற்றும் சாத்யகி ஆகியோரின் விக்ரகங்களை தரிசிக்கலாம்) அடுத்து அவர் விரும்பித் தேர்ந்தெடுத்த தலம், சென்னை திருவல்லிக்கேணி. இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன், நற்புவி தனக்கு இறைவன் தன்துணை ஆயர் பாவை, நப்பின்னை தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம் வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே என்று தரிசனப் பரவசம் கொள்கிறார் திருமங்கை ஆழ்வார். இங்கு வந்து ஆதிமூலமான திருமாலை வேண்டி தொழுதால் விருப்பங்கள் எல்லாம் ஈடேறும் என்பது நடைமுறை உண்மை.

இந்தக் கோயிலில் இருக்கும் சந்நதிகள், அந்த விருப்பங்கள் ஈடேறியதன் விளைவுகள்தான். அத்திரி முனிவர் அல்லி மலர்கள் பூத்து நிறைந்த குளம் கொண்ட இந்தப் பகுதிக்கு வந்து, தன் நோய் நீங்க தவம் இயற்றினார். ஏற்கெனவே ஸ்ரீராமனைத் தன் குடிலில் விருந்துபசரித்து பெரும்பேறு பெற்றவர் அவர். திருமாலே ராமச்சந்திர மூர்த்தியாக வந்துதித்த உண்மையை உணர்ந்த அவருடைய மனசில் அப்போதே ஓர் ஏக்கம் துளிர்விட்டது. அது, ராமனின் முந்தைய ஓர் அவதாரமான நரசிம்மத்தை தரிசிக்க வேண்டும் என்பதுதான். அவருடைய விருப்பத்தை திருமால் நிறைவேற்றிக் கொடுத்தார். அத்திரி முனிவர் கண்ட திருக்கோலம்தான் இப்போது, இங்கே தனி சந்நதியில் கொலுவிருக்கும் யோக நரசிம்மர். மதுமான் மகரிஷிக்கு, திருமாலின் ராமச்சந்திர அவதாரத்தைக் காண விருப்பம். அதையும் நிறைவேற்றி வைத்தார் மஹாவிஷ்ணு. ஆனால் இங்கும் குடும்ப சமேதராகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.

ஆமாம், வழக்கமான சீதை, லட்சுமணன், அனுமனுடன் பரத, சத்ருக்னனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் ராமன்! அவரைப் போலவே சப்தரோமர் என்னும் முனிவர், திருமாலை கஜேந்திர வரதராக தரிசிக்க விருப்பம் கொண்டார். அதையும் பூர்த்தி செய்தார் திருமால். சுமதி என்னும் மன்னன் திருப்பதிதிருமலையில் வேங்கடவனை நாள்தோறும் வழிபட்டு பேருவகை கொண்டவன். திருமால் அர்ஜுனனுக்கு சாரதியாகத் தேரோட்டியவர் என்று அறிந்திருந்த அவன், அதே கோலத்தில் அவர் தனக்குக் காட்சியளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டான். அவனுக்கு அவர் வழிகாட்டிய தலம்  திருவல்லிக்கேணி. அங்கே மூலவரே வேங்கட கிருஷ்ணராக கோலம் காட்டி, மன்னனை ஆட்கொண்டார். திருமாலுடன் ஊடல் கொண்டு வைகுண்டத்திலிருந்து அவரைப் பிரிந்து வந்த திருமகள் இந்தத் தலத்துக்கு வந்து, பிருகு மகரிஷியின் குடிலுக்கு அருகே ஒரு குழந்தையாகக் கிடந்தாள். பூரணச் சந்திரனாக பிரகாசமானாலும், தண்ணென்று குளிர்ந்த ஒளியுடன் திகழ்ந்த அந்தக் குழந்தையைக் கண்ட மகரிஷி அப்படியே அள்ளிக்கொண்டார்.

வேதம் முழக்கும் அவருக்கு, அந்தக் குழந்தை வேதங்களில் கூறப்பட்ட தேவமகளாகவே தெரிந்தாள். இறைவன் அளித்த அந்த வரத்தை, வேதவல்லி என்று பெயரிட்டு, பொன்போலப் போற்றிப் பாராட்டி, சீராட்டி வளர்த்து வந்தார். தக்கப் பருவம் வந்ததும் ஓர் இளவரசன் அவளை மணக்க முன்வந்தான். பிருகுமுனி தயங்கியபோது, அந்த இளவரசன் தன் நாயகனான ரங்கநாதன்தான் என்பதை அறிந்து தெளிந்தாள் வேதவல்லி. உடனே, ‘இவரே மந்நாதர்’ (என் கணவர்) என்று உளம் பொங்கிய மகிழ்ச்சியில் சொல்லி, அவருடைய கைத்தலம் பற்றினாள். இந்த வகையில் ரங்கநாதர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். இப்படி ஐந்து வெவ்வேறு திருக்கோலங்களை இந்த ஒரே தலத்தில் காட்டி, திருவல்லிக்கேணியின் பெருமையை வானோக்கி உயர்த்தினார் திருமால். கோயிலின் எதிரே கைரவிணி என்ற அழகிய புஷ்கரணி நீர் நிறைந்து மெல்லிய அலை எழுப்பி அந்தப் பகுதியையே குளிர்விக்கிறது.

நடுவே பதினாறுகால் மண்டபம் நிமிர்ந்து நிற்கிறது. இங்குதான் பார்த்தசாரதி சுவாமி தீர்த்தவாரி திருமஞ்சனமும், ஆண்டாள் நீராட்டோத்சவமும் நடைபெறுகின்றன. ஐந்து நிலை ராஜகோபுரம், ஏழு கலசங்களுடன் கம்பீரமாகத் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும், கல் தீப தூண், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் வேயப்பட்ட பலிபீடமும், துவஜஸ்தம்பமும் வரவேற்கின்றன. மூலவரை வணங்கி நிற்கிறார் பெரிய திருவடியான கருடாழ்வார். இவருக்கு வலப்புறம், பல்லாயிர உற்சவங்களைக் கண்ட, கண்டுகொண்டிருக்கும் பெரிய கல்யாண மண்டபம். இதற்கு இடப்பக்கம் யாகசாலை; வலப்புறம் கண்ணாடி மாளிகை. இதனருகே சொர்க்க வாசல். கருடன் சந்நதிக்கு எதிரே தொண்டரடிப்பொடி வாசல் வழியாக நேரே சென்றால் மூலவர் பார்த்தசாரதியை சேவிக்கலாம். இந்த வாசலின் முன் இடப்பக்கத்தில் நர்த்தன விநாயகரைக் (தும்பிக்கை ஆழ்வார்) காணலாம். உள்ளே நுழையாமல் வலம் வந்தால், கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் வேதவல்லித் தாயார் அருள் பார்வை வீசுகிறாள். உள்ளே மின்னொளி தகதகக்கிறது.

இதற்குக் காரணம், தங்க முலாம்பூசிய மஞ்சத்தில் வேதவல்லித் தாயார் உற்சவர் கொலுவிருப்பதுதான். பின்னால் மூலவராக கருமையிலும் பெருமை பூரிக்க விளங்குகிறாள் தாயார். அன்னையின் அருள்பெற்று வலப்புறம் திரும்பி நடந்தால், ‘ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்று நின்றாழி தொட்ட’ கஜேந்திர வரதன், கருடன்மேல் ஆரோகணித்திருப்பதைக் காணலாம். முதலைப் பிடி போன்ற எந்தக் கொடுமையான தளையிலிருந்தும் தன் பக்தனை விடுவிக்கும் ஆதரவும், கருணையும் அவர் கண்களில் பிரகாசமாகப் பொங்குகின்றன. இவரை வலம் சுற்றி தொடர்ந்து சென்றால், ‘வா’ என்றழைக்கிறார் அழகிய சிங்கர். யோக நரசிம்மரின் கருவறையில், அவருக்கு முன்னால் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உற்சவராக ஜொலிக்கிறார் சிங்கர். தன் இடது கை ஆள்காட்டி விரலை மடக்கி, அழைக்கும் இந்த கர தோரணையை ஆஹ்வான ஹஸ்தம் என வர்ணிக்கிறார்கள். வலது கரம் அபயமளிக்கிறது.

ஹிரண்ய வதத்திற்குப் பிறகு உக்கிரம் தணிந்த நிலையில்  அத்திரி முனிவருக்கு இவ்வாறு காட்சி கொடுத்தார் திருமால். ஆனாலும் சிம்ம ரூபம் அச்சத்தைத் தரவல்லது என்பதாலோ என்னவோ இவருடைய உற்சவ மூர்த்தி அழகிய சிங்கர் எனப்படுகிறார். பொதுவாகவே மேற்கு நோக்கிய எந்தக் கடவுளும் நோய் தீர்க்கும் அருள் வழங்குபவர்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த யோக நரசிம்மர் அத்திரி முனிவருக்கு மட்டுமல்லாமல், தன்னை வந்து சேவிக்கும் எல்லா பக்தர்களுக்கும் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கிறார். இந்தக் கோயிலில், தன் தோற்றத்தில் சற்றே மாற்றம் கொண்டார் கிருஷ்ணன். அது, தான் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக விளங்கிய தோற்றம். எதிரிகளின் போக்கையும், நடவடிக்கைகளையும், அவர்கள் மேற்கொள்ளக் கூடிய போர்த் தந்திரங்களையும் உன்னிப்பாக கவனிக்கும் அகன்ற பெரு விழிகளுடன், தேரோட்டி பொறுப்பை நினைவுறுத்தும் மீசையுடன் காட்சியளிக்கிறார் அவர். விழிகளை மட்டும் உற்றுப் பார்த்தால் நரசிம்ம பார்வை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

உற்சவர் பார்த்தசாரதியின் முகத்தில் காயங்கள். வெறும் சாரதியாகப் போரில் ஈடுபட்டாலும் அர்ஜுனனைக் காக்க, பீஷ்மர் ஏவிய கணைகளை தன் முகத்தில் தாங்கி, உதிர்த்ததால் ஏற்பட்ட வடுக்கள். அதைப் பார்க்கும்போதே மனசு விண்டுபோகிறது. தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை அழிக்க,  பகவான்தான் எத்தனை துன்பங்களை மேற்கொண்டிருக்கிறார்! முக்காலமும் உணர்ந்தவரானாலும் தற்காலத்திய தன்மைக்கேற்பத் தன்னைக் குறுக்கிக் கொண்டு, அதனால் தர்மம் விஸ்வரூபம் எடுக்க உதவியிருக்கிறார். சகாதேவனின் யோசனைப்படி களபலிக்கு துரியோதனன் நாள் குறித்தபோது, அதைத் தெரிந்து கொண்டு, நதிக்கரையோரம் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க, அது கண்டு திகைக்கும் சூரியனும், சந்திரனும் அங்கேவர, சகாதேவன் குறித்துக் கொடுத்த முகூர்த்த நாளையே மாற்றியது வெறும் தந்திரம் மட்டுமல்ல; தகாதவர்கள் வென்றிடக் கூடாது என்ற உலகளாவிய நோக்கும்தான். ராமதூதனான சிரஞ்சீவி அனுமனை அர்ஜுனனுடைய தேர்க் கொடியாகப் பறக்கச் செய்து அர்ஜுனனுக்குப் பராக்கிரம ஆசியை அருளுமாறு கேட்டுக் கொண்டதும் அதே நோக்கத்திற்காகத்தான்.

எந்த தர்மத்துக்காகப் பிரயத்தனப்படுகிறோமோ, அந்த தர்மத்தின் தேவதை கர்ணனைக் காத்து நிற்பது கண்டு மனங்கலங்கி, தன்னையே தாழ்த்திக் கொண்டு, கர்ணனிடம் அவன் தான, தரும புண்ணியங்களை யாசகமாகப் பெற்றதும் அந்த நோக்கம் நிறைவேறத்தான். அர்ஜுனனின் குழம்பிய மனதைப் பாறையாக இறுக வைத்து சொந்த, பந்தங்களுக்கெல்லாம் மீறிய தார்மீக நோக்கத்தை அவனுக்குப் புகட்டி, வெற்றி கொள்ள வைத்ததும் அதற்காகத்தான். போர் முடிந்தபின் ஒரு சாரதியின் கடமையையும் மீறி, அர்ஜுனனை தேரைவிட்டு முதலில் இறங்கச் சொல்லி, அதன் பிறகு தான் இறங்க, உடனே எதிரி பாணங்களால் துளைக்கப்பட்டிருந்த தேர் பளிச்சென்று எரிந்து சரிந்ததும் அதே நோக்கத்துக்காகத்தான். பஞ்சபாண்டவர்களுக்காக உதவிய விஷயங்கள்தான் இவை என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், அவை ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்காக பரந்தாமன் ஆற்றிய சேவைகள் என்பதுதான் உண்மை.

அது மட்டுமல்ல, அன்றைன்றைய போர் முடிந்ததும், மாலையில் தேர் இழுத்த குதிரைகளுக்கு உணவளிப்பதும், அவற்றுடன் அன்பாகப் பேசியபடியே அழுக்குப் போகக் குளிப்பாட்டுவது, அன்றன்றைக்கு தேருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பழுதுகளை சரிபார்த்து, அதனை அடுத்த நாள் போருக்குத் தயார் நிலையில் வைப்பது என்று ஒரு சராசரி சாரதியின் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பணியாற்றினாரே, அந்த எளிமை, சமுதாயத்தில் அனைவரும் பின்பற்றப்பட வேண்டிய ஓர் அருங்குணம் என்பதைச் சுட்டிக்காட்டினாரே, அந்தப் பெருந்தன்மைக்குதான் ஈடு ஏது! தான் பரந்தாமனாகவே இருந்தாலும், அப்போதைக்குத் தான் ஏற்றிருக்கும் பொறுப்பை எப்படி முழுமையாக, முறையாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஒழுங்குப் படிப்பினையை அனைவருக்கும் உணர்த்தினாரே, அந்தக் கடமை உணர்வுக்குதான் நிகர் ஏது!

அதே பார்த்தசாரதியை உற்சவராக இங்கே தரிசிக்கும்போது, மகாபாரதப் போர்க் காட்சிகள் நினைவலைகளாய் பொங்கி வருவதைத் தவிர்க்க முடியாதுதான். அதற்கு முக்கிய காரணம், சூரியோதயத்தில் போர் துவங்கும் அறிகுறியாகவும், அஸ்தமனத்தில் அன்றைய போர் முடிந்ததைத் தெரிவிப்பதாகவும், வெற்றியை அறிவிக்கவும் ஒலிக்க, தான் பயன்படுத்திய பாஞ்சஜன்ய சங்கை மட்டுமே இந்த பார்த்தசாரதி தன் வலது கையில் வைத்திருப்பதுதான். அன்றும் சரி, இன்றும் சரி, தன் பக்தர்களுடைய மனக் குழப்பங்களை, வேதனைகளை, எதிரிகளை, அந்த சங்கொலியால் அவர் விரட்டியடிக்கிறார். மூலவர் வேங்கடகிருஷ்ணனை குடும்ப சமேதராக தரிசிக்கும்போது மனசுக்குள் தோன்றும் பெருமை, உற்சவர் விக்ரகத்தைப் பார்க்கும்போது வேதனையாக மாறுவதைத் தவிர்க்க முடியவில்லைதான். கம்பீரத் தோற்றமும், ஆனால் காயம் பட்ட முகமும் நமக்குள் தோற்றுவிக்கும் உணர்வுகள்தான் அவை.

இதே திருவல்லிக்கேணியில் வாழ்ந்த மகாகவி பாரதியும், கண்ணன் பாடல்களை உளம் நெகிழ இயற்றியுள்ளார். கண்ணனை தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய் போற்றி நெஞ்சம் தழுதழுக்க கண்ணன் பாடல்களை இயற்றியுள்ளார் அவர். அதுமட்டுமா, பாஞ்சாலி சபதம் என்ற தன் கோணத்து மகாபாரதக் கவிதைத் தொகுப்பையும் படிப்போரை நேரில் காணும் உணர்வு கொள்ளச் செய்யும் வண்ணம் உருவாக்கியிருக்கிறார் என்றால், அது,  தினம் தினம் இந்த வேங்கட கிருஷ்ணனை, பார்த்தசாரதியை அவர் சேவித்திருப்பாரே, அதன் அற்புத பலன்தான்; நாராயணீயம் இயற்றிய பட்டத்திரி போல தன் சந்தேகங்களை, விளக்கங்களை இந்த கிருஷ்ணனிடமே கேட்டுத் தெளிவு பெற்றிருப்பார், மகாகவி.

பார்த்தசாரதி சுவாமி சந்நதிக்கு வலப்புறம் புஜங்க சயனத்தில், ஆதிசேஷ மஞ்சத்தில் சயனத் திருக்கோலத்தில் மந்நாதன் சேவை சாதிக்கிறார்.  இவருக்கு அருகிலேயே சக்கரவர்த்தித் திருமகனான ராமபிரான். ஆண்டாள் தன் சந்நதியில் அழகுற நின்றிருக்கிறாள். அவள் சந்நதிக்கு நேர் எதிரே மண்டப சுவரில் திருப்பாவை 30 பாடல்கள் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டு, கூடவே ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஓர் ஓவியம் காட்சியாய் உயிர் கொடுக்கிறது.
தல விருட்சம் மகிழ மரம். பக்தர்கள் மனம் மகிழ மணம் பரப்பும் மரம். ராமானுஜர் இங்கே தனிப் பெருமையுடன் கொண்டாடப்படுகிறார். பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் எல்லா விழாக்களிலும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் உண்டு.

உற்சவர் அருகிலேயே அவருக்கும் இடம் கொடுத்து, முதல் மாலை உற்சவருக்கென்றால், அடுத்த மாலை இந்த ஆழ்வாருக்கு என்ற அளவில் சிறப்பு செய்யப்படுகிறார் ராமானுஜர். பேயாழ்வார் இந்த திருவல்லிக்கேணியில் அவதரித்தவர். பார்த்தசாரதி கோயிலுக்கு இடப்புறம் அவருடைய மண்டபம் அமைந்துள்ளது. இந்த இடத்தை முற்றிலுமாகப் பழுது பார்க்க முயன்றபோது சாதாரணமாகத் தெரிந்த மண்டபத்தைச் சுற்றி சுமார் நாலடி ஆழத்துக்கு புராதன கட்டமைப்புடன் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. கடலருகே எளிமையே உருவாக கோவில் கொண்டிருக்கிறார் வேங்கட கிருஷ்ணன். அலைகள் அடுத்தடுத்துப் பாய்ந்துவர, உடனே அவை இவர் திருவுரு கண்டு பணிந்து பின்வாங்குவதுபோல, தன் பக்தர்களின் துன்பங்களையெல்லாம் விரட்டியடித்து, அவர்தம் மனதில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கக் காத்திருக்கிறார், இந்த திவ்ய தேசத் தலைவன்.

பிரபு சங்கர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்