SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைபேறு அருளும் அந்தியூர் பிரம்மபுரீஸ்வரர்

2018-07-10@ 09:51:14

ஈரோட்டுக்கருகே அந்தியூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பிரம்மதேசம். சில நூற்றாண்டுகளுக்கு முன் கொங்குச் சோழர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இங்குள்ளது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் 1857ல் நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. மைசூர் மகாராஜா, தனது பட்டத்து அரசி சுந்தரவல்லியோடு இங்கு வந்து சுவாமியைத் தரிசித்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார் என்கிறது தல வரலாறு. இவ்வாலயத்தின் அருகே ஓடிய சரஸ்வதி என்ற கங்கைக்கு ஒப்பான புனித நதியில் நீராடி, இங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனையும், இறைவி பிரம்ம நாயகியையும் தரிசிப்பது பக்தர்களின் வழக்கம். அந்த சரஸ்வதி நதி, தற்போது விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு உருத்தெரியாமல் அழிந்து போனது.

இந்த ஆலயத்தில் பாம்பு, தேள், பூரான், நட்டுவாக்களி போன்ற விஷ ஜந்துகளின் கடிகளுக்கு பாடம் போடப்படுகிறது. சுற்றியுள்ள கிராமங்களில் இருப்போர்கள் விஷக்கடிகளுக்கு இறைவனின் பிரசாதமாக வழங்கப்படும் மூலிகைச் சாற்றை அருந்தி குணம் பெற்றுச் செல்கிறார்கள். சந்திரனுக்கு இந்த ஆலயத்தில் தனிச் சந்நதி அமைந்திருக்கிறது. பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமிர்தம் பெறும் முயற்சியாக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடையத் தொடங்கினர். கயிறாக மாறிய பாம்பு, துன்பம் தாளாமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. தேவர்கள் அஞ்சினர். சிவபெருமானிடம் முறையிட்டனர். தஞ்சம் அடைந்தவர்களை காப்பவரான சிவபெருமான், அந்த நஞ்சினைத் தான் பருகினார். ஆனால், தேவர்கள் அனைவரும் நஞ்சின் வெப்பத் தாக்குதலால் மயக்கமடைந்தனர்.

பாற்கடலைக் கடையும் போது வெள்ளை நிற ஐராவதம் என்ற யானை, வெண் குதிரையான உச்சைச்சிரவஸ் உள்ளிட்டவை தோன்றின. அவற்றோடு குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனும் தோன்றினான். அவன் தனது அமிர்தக் கலைகளால் தேவர்களின் மயக்கத்தை நீக்கி மெய் குளிர வைத்தான். அந்தச் சந்திரன் இங்கே தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார். கி.பி. 8ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில் இது. மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அன்னை பிரம்ம நாயகி தெற்கு நோக்கியும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பரிவார தெய்வங்களாக கல்யாண சுப்ரமணியர், சூரியன், சந்திரன், நவகிரகங்கள், கால பைரவர், விநாயகர், பிரம்மா, துர்க்கை, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர்.

வன்னி மரம், வில்வ மரம் இரண்டும் தலவிருட்சங்கள். தல தீர்த்தமாக பிரம்ம புஷ்கரணி விளங்குகிறது. மேற்கு நோக்கிய நிலையில், இரு கைகளிலும் வெண்தாமரைகளை ஏந்தி தனிச் சந்நதியில் நின்ற கோலத்தில் சந்திரன் காணப்படுகிறார். உடன் இவருடைய வாகனமாக அன்னப்பறவை. பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு சிவலிங்கத்தின் மேல் சூரியஒளி படுவதால் சூரிய பூஜையும், மறுதினம் மாலையில் 6.30 மணிக்கு சந்திரனின் ஒளி படுவதால் சந்திர பூஜையும் நடைபெறுகின்றன. சந்திர தோஷம் உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் விரதம் இருந்து, சந்திரனுக்குரிய வெள்ளை அரளிப்பூவுடன், பச்சரிசி பொங்கல் அல்லது காப்பரிசி (பச்சரிசியும், வெல்லமும் கலந்தது) படைத்து சந்திரனுக்கும், மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கும் வெள்ளாடை சாத்தி வழிபடுகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு பிள்ளைப்பேறு கட்டாயம் கிடைக்கும் என்கிறார்கள். பிரம்ம நாயகியின் சந்நதியில் ஒன்பது நெய் தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கி சகல செல்வங்களுடன் நிறைவான வாழ்வைப் பெறலாம். ஆதியில் ஐந்து சிரங்களுடன் விளங்கிய பிரம்மா, தாமே பெரியவர் என அகந்தையுடன் திகழ்ந்தாராம். அவரது அகந்தையை அடக்க சிவபெருமான் அவரது ஒரு தலையைக் கொய்துவிட, பிரம்மனின் ஐந்தாம் சிரசு இருந்த இடத்தில் தாங்கொணாத அக்னிக் குழம்பு ஏற்பட்டது! பின்னர் இந்த பிரம்மதேசத்தில் அக்னி ஹோமங்கள் நிகழ்த்தி, தன்னுடைய சிரசின் அக்னிச்சூட்டைத் தணித்துக் கொண்டாராம் பிரம்மா.

பிரம்மாவுக்கு இவ்வாறு அருளியதால் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். பிரம்மா இத்தலம் வந்து வேள்விகள் செய்ததால் இவ்வூருக்கும் பிரம்மதேசம் என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். ஒரு காலத்தில் முனிவர்களும், ரிஷிகளும் வசித்து வந்த பிரம்மதேசத்தில் ஹோமப்புகை எப்போதும் கமழ்ந்து கொண்டே இருக்குமாம். ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் பேருந்து பாதையில் ஆப்பகூடல் என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது பிரம்மதேசம்.

- மேவானி கோபாலன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்