SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பித்தம் குறைந்தால் சித்தம் தெளிவாகும்!

2018-07-05@ 16:00:50

முப்பத்து நான்கு வயதாகும் என் மகனுக்கு எவ்வளவு முயற்சித்தும் திருமணம் கூடி வரவில்லை. மேலும் என்னுடையஇரண்டு தம்பிகளின் பிள்ளைகளுக்கும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. குடும்பத்திற்கு ஏதாவது சாபம் உள்ளதா? இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தாமோதரன், சூலூர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய கிரங்கங்கள் வக்ரம் பெற்றுள்ளன. திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குரு ஆட்சி பெற்றிருந்தாலும் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். செவ்வாயும், சனியும் இணைந்து ஐந்தாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் திருமணத் தடை உண்டாகிறது. ஒன்பதில் சந்திரன் இருப்பதால் முன்னோர் சாபம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் சூரியன், ராகுவுடன் இணைந்து சுக்கிரன் 12ல் இருப்பதால் பெண்ணின் சாபம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஏதோ ஒரு பெண்ணால் உண்டான சாபம் என்பது பரம்பரையில் திருமணத் தடையை உண்டாக்குவதாகத் தெரிகிறது. உங்கள் சகோதரர்களுடன் இணைந்து கலந்தாலோசிப்பதுடன் குடும்பத்தில் உங்களுக்குப் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் தகப்பனார் காலத்தில் நடந்த நிகழ்வுகளை கேட்டு அறிந்து அதற்குரிய பிராயச்சித்தம் தேட முயற்சியுங்கள். வருகின்ற ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நாளில் மூன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து புடவையுடன் கூடிய தாம்பூலம் அளித்து அவர்களுக்கு போஜனமிட்டு உங்கள் பிள்ளையை நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். பரம்பரையில் உண்டான தோஷம் விலகி 04.08.2018க்குப் பின் அவருடைய திருமணம் முடிவாகிவிடும்.

என் தங்கை மகன் தற்சமயம் தனது தந்தையின் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் பிசினஸ் செய்து வருகிறான். அவன் தந்தை இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.இந்த தொழிலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இளம் வயதில் மிகவும் கஷ்டப்படுகிறான். அவனுடைய எதிர்காலத்திற்கு வழிகாட்டுங்கள். ஒரு வாசகி, தானே, மஹாராஷ்ட்ரா.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி (மீனராசி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள், விசாக நட்சத்திரம் மீன ராசியில் வராது), கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கைமகனின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள் இணைந்து எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சுயதொழிலை தடை செய்யும். இவருடைய ஜாதகப்படி இவருக்கு சுயதொழில் செய்யும் அம்சம் இல்லை. தொழிலைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் எட்டில் இருந்தாலும் லாபாதிபதி சுக்கிரன் உத்யோக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்திருக்கும் அவரை சுயதொழில் செய்வதை விடுத்து வேலைக்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள்.

ரயில்வே முதலான அரசுத்தரப்பு தேர்வுகளை எழுதி வருவதும் நல்லது. ஜீவன ஸ்தானத்தின் மீது குரு மற்றும் சனியின் தாக்கம் உள்ளதால் அரசுப்பணி என்பது கிடைத்துவிடும். பணியாட்களை வைத்து வேலைவாங்கும் திறன் இவருக்கு கிடையாது என்பதால் தந்தையின் தொழில் என்று சென்ட்டிமென்ட் பார்க்காமல் அதனை விடுத்து வெளியில் வேலை பார்ப்பதற்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள். பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமை நாட்களில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். 29.01.2019ற்குப் பின்னர் வேலை கிடைத்து விடும்.

“குரு கௌரஸ பூர்ணாய பலபூபப்ரியாய ச
நாநாமாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீஹநூமதே.”


திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. நாங்கள் சொந்தமாக பல சரக்கு கடை நடத்தி வருகிறோம். இப்போது அதில் நஷ்டம் உண்டாகி கடன் பிரச்னை அதிகரித்து விட்டது. மிகவும் மன உளைச்சலில் இருக்கிறோம். எங்கள் பிரச்னை தீர பரிகாரம் சொல்லுங்கள். புவனேஸ்வரி, பொன்னேரி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேதுவும், உங்கள் கணவரின் ஜாதகத்தில் ஜென்ம ராசியில் கேதுவும் அமர்ந்து நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்திருக்கிறது. எந்த ஒரு செயலிலும் முழு நம்பிக்கையின்றி ஈடுபட்டு வருகிறீர்கள். நம்பிக்கை இன்றி செயல்படுவதால் தொழில்முறையில் நஷ்டத்தினைச் சந்தித்து வருகிறீர்கள். நீங்கள் செய்து வரும் வியாபாரமே போதுமானது. முழு நம்பிக்கையுடன் வியாபாரத்தை நடத்துங்கள்.

கடன் பிரச்னை அடுத்த வருடம் மே மாதத்திற்குள்ளாக முடிவிற்கு வந்துவிடும். உங்கள் ஜாதகத்தில் குருவும், சனியும் வக்ரம் பெற்றுள்ளதோடு ஒன்பதாம் வீட்டில் சந்திரனுடன் இணைந்திருப்பதும், உங்கள் கணவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தான அதிபதி சனி எட்டில் நீசம் பெற்றிருப்பதும் குழந்தை பாக்கியத்தை தடை செய்துள்ளது. நீங்கள் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது நல்லது. குலதெய்வத்திற்கு அபிஷேகஆராதனைகள் செய்து உத்தரவு பெற்று குழந்தையை தத்தெடுக்கச் செல்லுங்கள். 29.01.2019க்குப் பின் குழந்தையை தத்து எடுப்பது நல்லது. மழலையின் குரல் வீட்டில் ஒலிக்கத் துவங்கியதும் மனம் புத்துணர்ச்சி பெறும். தொழில் முறையில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் காணாமல் போய் மகிழ்ச்சியாய் வாழ்வீர்கள். கவலை வேண்டாம்.

நான் பி.டெக் முடித்து வீட்டில் இருந்து வருகிறேன். என் அப்பாவின் உறவினர்கள் செய்வினை வைத்ததால் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறேன். ஆதரவாக இருந்த அம்மா வழி தாத்தா திடீரென இறந்துவிட்டதால் மன உளைச்சலில் உள்ளேன். என் வயிற்றுவலி தீரவும், நல்ல மாப்பிள்ளை அமையவும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். சிவரஞ்சனி, மயிலாடுதுறை.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. யாரும் உங்களுக்கு எந்தவிதமான செய்வினையும் செய்யவில்லை. உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்திருப்பதால் நீங்களாக எதை எதையோ நினைத்து பயந்து வருகிறீர்கள். இயற்கையிலேயே பித்த உடம்பினைக் கொண்டிருக்கும் உங்களுக்கு வயிற்றுவலி வருவது சகஜம்தான். மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுங்கள். வேப்பம் பூ, சுண்டைக்காய், மணத்தக்காளி போன்றவற்றை உணவினில் சேர்த்துக் கொள்வது நல்லது. பித்தம் குறைந்தால் சித்தம் தெளிவாகும். உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் இணைந்து ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது உத்யோக பலத்தினைத் தருகிறது. பி.டெக்., படித்திருக்கும் நீங்கள் வீட்டினில் உட்கார்ந்திருக்காமல் வேலைக்குச் செல்ல முயற்சியுங்கள்.

வேலைக்குச் செல்வதால் உடல் ஆரோக்கியம் சீரடையும். திருமணம் என்பது தந்தை வழி உறவுமுறையில்தான் அமையும் என்பதால் அவ்வழி உறவினர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். மேலும், அவர் வழிச் சொத்துக்களை வேண்டாம் என்று மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். யாரோ உங்களை தவறாக வழி நடத்துகிறார்கள். அடுத்தவர் பேச்சை நம்பாமல் சுயபுத்திக்கு வேலை கொடுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். உடலும் உள்ளமும் தெளிவு பெறும்.

என் இளைய மகளுக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது.அவளது அப்பா எங்களுடன் இல்லை என்பதாலும், மூத்தமகள் வேறுஇனத்தில் திருமணம் செய்திருப்பதாலும் இவளது திருமணம் தடைபடுகிறது.கல்யாணமே வேண்டாம் என்றுமனம் வெறுத்து பேசுகிறாள். அவளது நல்வாழ்விற்கு பரிகாரம் சொல்லுங்கள்.
சசிகலா, சென்னை.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் இளைய மகளின் ஜாதகத்தின்படி தற்போது சந்திரதசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. தற்போது திருமணத்திற்கான நேரமே நடந்து வருகிறது. நடந்த சம்பவங்களை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் நம்பிக்கையோடு வரன் தேடுங்கள். எதையும் மறைக்காமல் உண்மையை பேசும் உங்கள் குணத்தினை மதித்து நல்ல சம்பந்தம் தேடி வரும். உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமணவாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் புதன், குரு ஆகிய சுபகிரகங்கள் இணைந்திருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் எட்டாம் வீட்டில் இணைந்திருக்கும் சூரியன், செவ்வாய், ராகு சற்று சிரமத்தைத் தருவார்கள்.

நீங்கள் நல்லவர் என்று நம்பியிருக்கும் ஒரு நபரே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். இடையில் உள்ளவர்களை நம்பாது சம்பந்தி வீட்டாரிடம் நீங்களே நேரடியாகப் பேசுங்கள். உங்கள் பெண்ணிடம் நல்ல வார்த்தைகளைப் பேசி நம்பிக்கையூட்டுங்கள். ஞாயிற்றுக் கிழமை நாளில் பெரியபாளையம் கோயிலுக்குச் சென்று அம்பிகையை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். திருமணம் முடிந்தவுடன் தம்பதியரை அழைத்துக் கொண்டு அம்மனின் சந்நதிக்கு வருவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். வருகின்ற தீபாவளிக்குள் உங்கள் பெண்ணின் திருமணம் முடிவாகிவிடும். அம்மனின் அருளால் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மார்ச் 2017ல் 12ம் வகுப்பு தேர்வு எழுதினேன். தேர்ச்சி பெற்றும் பணம் இல்லாததால் என்னால் மேற்கொண்டு படிக்கக் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. இந்த வருடமாவது நான் கல்லூரிக்குச் செல்லஉரியவழி காட்டுங்கள். நித்தியஸ்ரீ, திருவண்ணாமலை.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. படிப்பதற்கு பணம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும். பணம் கொடுத்து படிக்கும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். கட்டணம் இன்றி படிக்கும் அரசு கல்லூரிக்குச் செல்ல உங்களுக்கு மனம் இல்லை. கடந்த ஆண்டில் உங்களுக்கு தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறி உள்ளீர்கள். தற்போது 11.07.2018 முதல் நேரம் மாறுகிறது. புதன் தசையில் குருபுக்தி துவங்குவதால் உங்கள் கல்லூரி படிப்பு என்பது இந்த ஆண்டில் துவங்கி விடும். நீங்கள் எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கின்ற பிரிவில் இணைந்து படிக்க முயற்சியுங்கள்.

படிப்பு என்பது நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே அன்றி அது மட்டுமே நமது எதிர்காலத்தை தீர்மானித்து விடாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த ஆசிரியை ஒருவரின் ஆலோசனையைப் பெற்று செயல்படுங்கள். உங்கள் ஊரில் இருந்தபடியே கண்ணுக்குத் தெரியும் திருவண்ணாமலை மலையை சிவபெருமானின் திருவுருவமாக எண்ணி மனதாற வழிபட்டு வாருங்கள். கல்லூரிப் படிப்பில் இணைவது மட்டுமல்ல, உத்யோகபலமும், எதிர்கால வாழ்வும் சிறப்பாக அமையும். ஜாதகத்தில் எவ்வித தோஷமும் இல்லை. கவலை வேண்டாம்.

ஒன்பது வயதாகும் என் மகனுடன் கடந்த ஆறு வருடமாக போராடி வருகிறேன். பள்ளிப்படிப்பு, டிவி, மொபைல் என எல்லாவற்றிலும் கெட்டியாக இருக்கும் அவனுக்கு மலஜலம் கழிக்கத் தெரியவில்லை. மலம் வரும் உணர்வே இல்லாமல் இருக்கிறான். டயாபர் கட்டி அனுப்பவேண்டி உள்ளது. இதனால் அடிக்கடி பள்ளியை மாற்றும்படி நேருகிறது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் பலன் இல்லை. உரிய பரிகாரம் கூறுங்கள். மீனாட்சி, சென்னை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் 3ம் வீட்டில் குருவுடன் இணைந்து அமர்ந்திருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகள் அவருடைய ஜாதகரீதியாக வந்து சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அவரது ஜாதகம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் பிள்ளையின் தந்தையுடன் உண்டான மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று மறுமணம் செய்து அந்த திருமண பந்தமும் முறிந்துள்ளது. பிரச்னை என்பது எங்கிருந்து துவங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மகனின் நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டு, கௌரவம் பாராமல் அவரது தந்தையான முதல் கணவரைச் சந்தித்து சமாதானமாகச் செல்ல முயற்சியுங்கள். அதோடு உங்கள் பிள்ளையை அவரது தந்தையை சந்திக்க வையுங்கள். தந்தையின் ஸ்பரிசம் உங்கள்பிள்ளையின் உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்டச் செய்யும். தந்தையின் அரவணைப்பு அவரது உடல்நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு நடக்க முயற்சியுங்கள். உங்கள்மகனை கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலைக்கு அழைத்துச் சென்று  அவனது பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தகப்பன் சுவாமியின் அருளால் உங்கள் மகனின் உடல்நிலை சீரடையும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன்  ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்