SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவ்வாயின் செயல் தான் என்ன?

2018-07-03@ 16:24:39

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். இதற்கு அங்காரகன், மங்களன், குஜன், சேய் என வேறு பல பெயர்களும் உண்டு. செவ்வாய்க்கு சகோதரகாரகம், உத்யோககாரகம், பூமிகாரகம், கர்மகாரகம், வாக்குகாரகம், மூளைகாரகம் ஆகிய தன்மைகள் உண்டு. ஆளுமைத்திறன், ஆற்றல் வீரம், பராக்கிரமம், அதிகாரம் செய்தல், நம்பகத்திறன், வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நீதி, நேர்மை, நியாயம் போன்ற அம்சங்கள் கொண்ட கிரகம். போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம், பாதுகாப்புத்துறை, உச்ச பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், ேதாட்டம், தோப்பு, எஸ்டேட் எல்லாவற்றிலும் இவருடைய தாக்கம் உண்டு. போட்டி, பந்தயங்கள், உடல்திறன், சாகசங்கள், தடகள விளையாட்டுகள், மல்யுத்தம், குத்துச்சண்டை, ரியல் எஸ்டேட், சிவில் இன்ஜினீயரிங் காண்ட்ராக்ட், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், உருக்கு ஆலைகள், செங்கல் சூளை, நெருப்பு போன்ற விஷயங்களும் செவ்வாய் ஆட்சிக்கு உட்பட்டவை.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற அரசுத் துறைகளில் உச்ச பதவிகளில் அமர்வதற்கு செவ்வாய் ஒரு முக்கிய காரணம். தோற்றத்தில் கம்பீரம், நடை, உடை, பாவனையில் ஓர் மிடுக்கு, குரலில் அதிகாரத்தொனி இவை செவ்வாயின் அம்சங்கள். திருமண பொருத்தத்தில் செவ்வாயின் பங்கு முக்கியமானது. ஆண் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்திருந்தால் ஊக்கம், தன்னம்பிக்கை, ஆண்மை போன்றவை உறுதியாகும், இல்லற சுகத்தில் வீரியத்துடன் செயல்பட முடியும். பெண் ஜாதகத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், பாலுணர்வு, உள்ளக்கிளர்ச்சி, சமசம்போகம் போன்றவற்றைத் தூண்டக்கூடியவர். ஆகையால்தான் மறைமுகமாக தோஷம் என்ற பெயரில் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் இருவரின் உடல் சேர்க்கையே வம்சம் விருத்தியடைய முக்கியமானது. இருவருக்கும் அந்த இச்சையை தருவதில் செவ்வாய் உதவுகிறார். இந்த விஷயத்தை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்து நம் முன்னோர்கள் தோஷம் என்று பிரித்து அந்த வகையான ஜாதகங்களை ஒன்று சேர்த்து இல்லற வாழ்வில் இருவரும் சரிசமமாக இன்பம் துய்க்க வழிவகை செய்தார்கள்.

செவ்வாயும் திருமணமும்

பெண்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் செவ்வாய் தோஷம் என்றவுடன் பயம், பீதி அடைகிறார்கள். அனுபவம், பக்குவம் இல்லாதவர்களிடம் பலன்கள், கருத்துகள் கேட்க, அவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்ல, இன்னும் குழப்பம் அதிகமாகிறது. உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது அந்த அளவிற்கு கொடிய சமாசாரம் இல்லை. செவ்வாய் அமைப்பு என்பது உடல் உஷ்ணம், உக்ர குணம் சம்பந்தப்பட்ட விஷயமே தவிர, பயப்பட எதுவும் இல்லை. செவ்வாய் தோஷத்தை லக்னத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும், சுக்கிரனிலிருந்தும் பார்க்க வேண்டும் என பல ஜோதிட நூல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வக்னத்திலிருந்து பார்க்கும் தோஷ அமைப்புதான் வலுவானது என்றும் கூறப்பட்டுள்ளது. லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம் என்று பெயர். இந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. தோஷம் என்றுதான் சொல்வார்களே தவிர பெரும்பாலான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு இருக்கும். இதற்குக் காரணம், தோஷ நிவர்த்திக்கு நிறைய காரணங்கள் இருப்பதுதான். அதேசமயம், தோஷ நிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்காக செவ்வாய் தோஷமே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக் கூடாது.

செவ்வாய் தோஷ அமைப்பும், குண இயல்புகளும்

லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள் லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் இருந்தால், முன்கோபம் உண்டு. அதே நேரத்தில் நியாய தர்மத்தை எடுத்துச்சொல்லும் குணமும் உண்டு. வீண்பேச்சுகள், விவாதங்கள், பிடிவாதம் காட்டுவது, இடத்திற்கு தகுந்த மாதிரி அல்லாமல், எல்லாவற்றையும் பேசிவிடுவது, அதிகார தோரணை, சொந்த பேச்சே எதிராவது. லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால், சொத்து சேரும், தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும், உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும், வயிற்றுக் கோளாறுகள் வரும், காலில் சக்கரம் கட்டிக்கொண்டதுபோல அடிக்கடி பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும், அடிக்கடி இடமாற்றம், உத்யோக மாற்றம் காரணமாக ஊர் மாற வேண்டிவரும், அரசுப்பணியில் அமரும் பாக்கியம் உண்டு. லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள், துணிச்சல் இருக்கும், எதையும் சவாலாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள், உயர்பதவி கிடைக்கும், குண இயல்புகளை அடிக்கடி மாற்றிக்கொள்வீர்கள், நண்பர்கள், கூட்டுத்தொழில் சரிப்பட்டு வராது, உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறவர்களை உடன் வைத்துக்கொள்வீர்கள், உடல் உஷ்ணம் மிகுந்து இருக்கும், காம சுக போகங்களை அதிகம் விரும்புவீர்கள்.

லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால், ‘யதார்த்தவாதி வெகுஜன விரோதி’ என்பதற்கேற்ப எதையாவது பேசி வம்பில் சிக்கிக்கொள்வீர்கள். படபடப்பு, சிடுசிடுப்பு, எரிச்சல் இருக்கும். வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பின் வருந்துவீர்கள், பிடிவாதம், அதிகார தோரணை இருக்கும், மர்ம ஸ்தானங்களில் நோய்கள் வரக்கூடும், தீக்காயங்கள், ரத்தக் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். லக்னத்திற்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால், சதா அலைச்சல் இருக்கும், சரியான தூக்கம் இருக்காது, சுகம் குறைவு, சகோதர உறவுகளால் அனுகூலம் இருக்காது, ஏதாவது வழக்கு பிரச்னை என்று வந்துகொண்டே இருக்கும், இல்லறத்தில் நாட்டம் இருக்கும், சொத்து சம்பந்தமாக ஏதாவது குறைகள், குழப்பங்கள் இருந்துகொண்டே இருக்கும். கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பதால் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். செவ்வாயின் இந்த அமைப்பின்படி உண்டாகும் பலன்கள் எல்லாம் பொதுவான கருத்துகளாகும். அவரவர் ஜாதகப்படி லக்னம், ராசி, நவாம்சம் போன்ற அம்சங்களை ஒட்டி சிலபல மாற்றங்கள் வரும். இந்த அடிப்படையில் இந்த பலன்கள் சரியாக இருக்கும். செவ்வாய் தோஷத்தை மட்டும் கொடுக்காமல், பிரபல ராஜ யோகத்தையும் தரும். செவ்வாயால் இல்லறம் கசக்காது. சமதோஷமுள்ள, யோக அமைப்புள்ள சரியான ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் சிற்றின்பத்தை அனுபவிக்கலாம். பேரின்பத்தை அடையலாம்.

ரத்த கிரகம்

நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரணமாகவும், காரகமாகவும் இருப்பவர் செவ்வாய். ஜாதக கட்டத்தில் செவ்வாயின் நிலையைக் கொண்டு இதை தீர்மானிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராக இருக்கவும், ரத்த அணுக்கள் வேறு சில தன்மைகள் குறையாமலும், கூடாமலும் இருக்க செவ்வாய்தான் காரணம். மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம். பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கக்கூடியவர். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் உண்டாவதற்கு காரணமாக இருப்பவர். நீசம், பலம் குறைந்த இவரின் தசையோ, இவர் சம்பந்தப்படும் வேறு கிரக தசையோ நடக்கும்போது ரத்த சோகை, தோல் நோய், கட்டிகள், கொப்பளம், தீக்காயம், வெட்டுக்காயம், விபத்தினால் ரத்த சேதம், மயக்கம், சோர்வு, அசதி என்று பலவிதமான உடல் உபாதைகளை உண்டாக்குபவர்.

சகோதரகாரகன்  பூமிகாரகன்

செவ்வாயின் ஆளுமைக்குட்பட்ட விஷயங்களில் சகோதர அம்சமும் ஒன்றாகும். ஒருவருக்கு சகோதர, சகோதரிகள் உண்டா, அவர்களால் ஒருவருக்கொருவர் ஆதாயம், அனுகூலம் பெறுவார்களா, பூர்வீகச் சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா, வழக்கு, பாகப்பிரிவினை, பஞ்சாயத்துகள் ஏற்படுமா என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கக் கூடியவர் செவ்வாய். செவ்வாய் பூமிகாரகன். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம், வர்கோத்தமம், கேந்திரம், த்ரிகோணம், யோக கிரக சேர்க்கை பெற்று அமர்ந்திருந்தால் பரம்பரை பரம்பரையாகச் சொத்து  யோகம் இருக்கும். அவரவர் பிராரப்தப்படி வீடு, மனை, தோட்டம் அமையும். மிட்டா, மிராசுதார்கள், ஜமீன் பரம்பரை, நிலச்சுவான்தார்கள், காபி, தேயிலை எஸ்டேட் அதிபர்கள், சுரங்க அதிபர்கள், மார்பிள், கிரானைட் கற்களைத் தோண்டி எடுக்கும் கல்குவாரி உரிமையாளர்கள், நிலங்களை பிரித்து லேஅவுட் அமைப்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில், அடுக்குமாடி கட்டிட வியாபாரம், சிவில் இன்ஜினீயரிங் கட்டிடக்கலை, வரைபடக்கலை என பூமி சார்ந்த பல விஷயங்களில் கொடி கட்டிப் பறக்க அங்காரகன் என்ற செவ்வாயின் அருள் மிகவும் முக்கியமானதாகும்.

உத்யோககாரகன்

ஒருவர் எந்த உத்யோகத்தில் இருந்தாலும் அவரை உயர்நிலைக்கு கொண்டுவரும் ஆற்றல் செவ்வாய்க்குரியதாகும். லக்னத்திற்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால் அதாவது, பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பது, பத்தாம் அதிபதியுடன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை பெற்று இருப்பது உத்யோகத்திற்கு பலம் தரும் அமைப்பாகும். காலாகாலத்தில், முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும். அவரவர் கல்வித்தகுதி, அனுபவத்திற்கேற்ப அரசு அதிகாரியாக வரும் யோகம் உண்டு. தலைமைப் பொறுப்பு, கெஜட்டட் ஆபீஸர் அளவிற்கு உயர்வு உண்டாகும். ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, செக்யூரிட்டி, துப்பறியும் இலாகா வீரதீர விளையாட்டுகள், உடற்பயிற்சி ஆசிரியர், உருக்காலை, ரசாயனத் தொழிற்சாலை, வெடிமருந்து தொழிற்சாலை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள், ஹோட்டல், பேக்கரி, செங்கல் சூளை, சமையல் எரிவாயு போன்ற விஷயங்களில் ஜாதகருக்கு உத்யோகமோ, சொந்தமாக தொழில் செய்யும் யோகமோ ஏற்படும்.

செவ்வாய் பலம்  பலம் குறைவு

செவ்வாய் பலமாக இருந்து நல்ல ஆதிபத்யம் பெற்று அவரது தசை நடக்குமானால் சகோதர சகோதரிகள் மூலம் பெரும் அனுகூலம் ஏற்படும். பெரிய பதவிகளில் உள்ளவர்கள், தொழில் அதிபர்களின் தொடர்பு கிடைத்து அதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உடல்பலம், மனோபலம் அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்திகள், உதவிகளை அனுப்பி நற்பலன் ஏற்படுத்துவார். அரசுத்துறையில் பணிபுரிவோருக்கு உத்யோக உயர்வு ஏற்படும். காவல்துறையில் ராணுவத்தில் பணிபுரிவோருக்கு உயரிய விருதுகளும், பதவி உயர்வும், வீரதீர சாகசங்களைச் செய்யும் அமைப்பும் ஏற்படும். புதுமனை புகும் அமைப்பும் புதிய வீடுகள் கட்டும் பாக்யமும் ஏற்படும். ரியல் எஸ்டேட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலம். விவசாயம், பயிர்த்தொழில், தேயிலை, காபி எஸ்டேட், தென்னந்தோப்பு, துறவு போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செவ்வாய் தசை காலம், ஒரு பொற்காலமாகும். பூமி, நிலம் சம்பந்தமாக பூமிக்கு அடியிலோ அல்லது மேலேயோ அதை வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்.

பலம் குறைந்த செவ்வாய்

பலமற்ற ஆதிபத்யம் பெற்று தசை நடத்தினால் கீழே விழுவதும், அடிபடவும் நேரிடும். வாகன விபத்துகளை சந்திக்க நேரிடும். ரத்தக்காயங்கள், வெட்டுக்காயங்கள், ரத்த சம்பந்தமான நோய், சித்தபிரமை, தலையில் அடிபடுதல் போன்றவற்றை ஏற்படுத்துவார். ராணுவத்தில் வேலை பார்ப்பவருக்கு பலமற்ற செவ்வாய் தசை அங்கஹீனத்தை ஏற்படுத்துவார் அல்லது மரணமடையவும் நேரலாம். நெருப்பு மற்றும் இயந்திரங்கள் சம்பந்தமான தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு பல பாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவார். வீண் வழக்குகள், சண்டை சச்சரவுகள், மறைமுக, நேர்முக எதிரிகள், பொருள் களவு போகுதல், செய்தொழில் வியாபாரத்தில் திடீரென்று பெருத்த நஷ்டம், அரசாங்க கெடுபிடி, பதவி இறக்கம், மறைந்து வாழும் சூழ்நிலை என்று பலவகை இன்னல்களை உருவாக்குவார்.

செவ்வாயுடன் பிற கிரக சேர்க்கை

செவ்வாயுடன் சூரியன் சேர்ந்திருந்தால் நிறைகுறைகள் இருக்கும். உடல் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். அடிக்கடி தொழில் மாற்றம் இருக்கும். அந்தந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்களைச் (Seasonal Buisness) செய்வார்கள்.  வேலையில் இடமாற்றம் அடிக்கடி ஏற்படும். விளையாட்டுத் துறையில் யோகம் உண்டு. உஷ்ணதேக அமைப்பு உடையவர்கள். செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் கைராசி மிக்கவர்களாக இருப்பார்கள். தாயார் வழியில் சொத்து சேரும். வாக்குபலிதம் உள்ளவர்கள். உணர்ச்சிவசப்பட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். நண்பர்களால் பிரச்னைகளை சந்திப்பார்கள்.
செவ்வாயுடன் புதன் சேர்ந்திருந்தால் விதண்டாவாதம், கூடாநட்பு உண்டாகும். ஸ்திரத்தன்மை அற்றவராக இருப்பார்.

உடலில் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஏற்படும். முன்யோசனை இல்லாமல் எதையும் செய்வார்கள். செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சாதக, பாதகங்கள் உண்டு. கலைத்துறையில் ஜீவனம் அமையும். சாகசச் செயல்களில் வெற்றி அடைவார்கள். முரட்டு பிடிவாதம் இருக்கும். காதல் களியாட்டங்கள் உண்டு. காம இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். தகாத சேர்க்கைகள், பழக்கவழக்கங்கள் இருக்கும். செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் எதிலும் நிபுணத்துவம் உண்டாகும். வாக்குபலிதம், சாஸ்திர ஆராய்ச்சி, ஜோதிடம், குறி சொல்லுதல், ஆசிரியர் பணி, வக்கீல், நிதி  நீதித்துறையில் ஜீவனம் அமையும். பிராமண நேசம், விவசாய நிலங்கள் சொத்து சேர்க்கை உண்டு.

செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் இரும்பு, இயந்திரங்கள் சம்பந்தமான வகையில் ஜீவனம் அமையும். ஏதாவது வழக்கு, பஞ்சாயத்து என்று அலைந்து கொண்டிருப்பார்கள். முரண்பாடான கருத்துகள் இருக்கும். உடல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். சங்கீத ரசனை இருக்கும். செவ்வாயுடன் ராகு சேர்ந்திருந்தால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் செய்வார்கள். சினிமா துறையில் ஜீவனம் அமையும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். தகாத சேர்க்கை, நீச்ச பழக்க
வழக்கங்கள் உண்டாகும். செவ்வாயுடன் கேது சேர்ந்திருந்தால் மருத்துவம், ரசாயனம் சம்பந்தமாக படிப்பு, ஜீவனம் அமையும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உண்டாகும். உற்சாகமாக செயல்பட்டாலும் மனச்சோர்வு அடைவார்கள். விவசாய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்