SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினம் தினம் திருமணம்!

2018-07-03@ 09:38:13

கிரேதாயுகத்தில், மேகநாதன் என்பவனின் மகனான பலி, பேராற்றல் வாய்ந்தவனாக கோலோச்சி வந்தான். அவனிடம் மாலி, மால்யவான், சுமாலி என்ற அரக்கர்கள் வந்து உதவி கோரினார்கள். தாங்கள் தேவர்களை எதிர்த்துப் போரிடப்போவதாகவும், தங்களுக்கு பலி, துணையாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவ மறுத்த பலி, அவர்கள் தேவர்களுடன் போரிட்டு, தோற்று, பிறகு தன்னிடமே தஞ்சம் என்று வந்தடைந்தபோது, வேறு வழியில்லாமல் உதவினான். தானே பல தேவர்களைக் கொல்ல வேண்டிய பாவம் சூழ்வதானாலும், தஞ்சமடைந்தோருக்கு உதவுவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே பிரதானம் என்று அவன் முடிவெடுத்திருந்தான். வெற்றி பெற்றாலும் அது கறைபடிந்தது என்பதை அவன் மனசாட்சி அவனுக்குக் குத்திக் காட்டியது. அதனை பாவமாக உருவகித்து அவன் மேல் போர்த்தி அவனை திக்கு முக்காடச் செய்தது. பலி, பூமியில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். அங்கே அமர்ந்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டான்.

அவன் தவத்தில் மகிழ்ந்த திருமால் அவனுக்கு வராஹ மூர்த்தியாகக் காட்சி கொடுத்து அவனை ஆட்கொண்டார். பலிக்கு வருத்தம்தான். தனக்குத் திருமால் தரிசனம் கிடைக்காமல் இப்படி வராஹராக தரிசனம் கிடைத்திருக்கிறதே என்று ஆதங்கப்பட்டான். நீதிவானாகத் தான் அரசு நடத்தியும், அரக்கர்களுக்கு வாக்கு கொடுத்ததால் உயர்ந்தோரான தேவர்களைப் போரிட்டு அழித்த தனக்கு, சற்றே மனக்குறை ஏற்படுமாறு அவர் இப்படி தரிசனம் கொடுத்தது நியாயம்தான் என்று சமாதானமும் செய்து கொண்டான். அந்த வராஹர் அந்தத் தலத்திலேயே காத்திருந்தார். பலிக்கு மட்டுமல்லாமல் காலவ முனிவருக்கும் அவர் அருள் செய்ய வேண்டியிருந்தது. காலவ முனிவர் கையைப் பிசைந்து கொண்டு நின்றார். திருமணமாகாத ஒரு பெண் யாகம் இயற்றலாகாது என்ற கோட்பாட்டை முன்னிருத்தி, நாரதர், மஹாலக்ஷ்மி அம்சமாக தவமியற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் தனக்கு மணமுடித்து வைத்தது சரி, ஆனால் அந்தப் பெண் தந்துவிட்டுப் போன 360 பெண் குழந்தைகளுக்குத் தான் திருமணம் முடித்து வைக்க வேண்டுமே, அது எப்படி சாத்தியம்?

மஹாலக்ஷ்மியின் அம்சம் மீண்டும் தேவருலகத்துக்கே போய்விட, தன்னிடம் விடப்பட்ட இந்த மிகப் பெரிய பொறுப்பால் மலைத்துதான் போனார் முனிவர். சரஸ்வதி நதிக்கரையில் அவர் மனங்கலங்கி, மயங்கி நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த சில யாத்ரீகர்கள் அவருடைய கவலையை தெரிந்து கொண்டார்கள். அவரிடம், தென்பகுதியில் வாமகவிபுரிக்கு வந்து வராஹ மூர்த்தியை வணங்கி வழிபட்டால் குறை தீரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். பற்றுகோல் கிடைத்த சந்தோஷத்தில் முனிவர் தற்போதைய தமிழ்நாட்டிலுள்ள அந்தத் தலத்துக்கு விரைந்தோடி வந்தார். வராஹ மூர்த்தியை எண்ணி கடுந்தவம் மேற்கொண்டார். திருவுளங்கனிந்த வராஹர் அவர் முன் ஒரு பிரம்மச்சாரியாகக் காட்சியளித்தார். வராஹ ரூபத்தில் வந்தால் முனிவர் தன் தோற்றத்தைப் பார்த்து தன் பெண்களை மணமுடித்துத் தரமாட்டாரோ என்று சந்தேகம் வந்துவிட்டது திருமாலுக்கே! ஆனாலும் அந்த பக்தனின் துயர் தீர்க்கவேண்டுமே. அதற்காக அழகே வடிவாக, தகுதிவாய்ந்த பிரம்மச்சாரியாகத் தன்னைக் காட்டிக் கொண்டார்.

தெய்வீக ஒளி சிந்தும் அந்தப் பேரழகனைப் பார்த்து மனம் மலர்ந்தார் முனிவர். அவரிடம் தன் பெண்களை திருமணம் செய்து கொண்டு தன் குறையையும் போக்கி, அவரது பிரம்மச்சரிய விரதத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு  வேண்டினார். திருமாலும், தான் தினம் ஒரு பெண் வீதம், 360 பெண்களையும் தன் மனைவியராக்கிக் கொள்வதாக வாக்களித்தார். (இந்த எண்ணிக்கையை ஒட்டியே தெலுங்கு வருடம் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள். அதாவது அமாவாசை நாளை ஆரம்ப நாளாகக் கொண்டு மாதமும், இதன்படி ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்களும், ஆக வருடத்துக்கு 360 நாட்கள் என்ற கணக்கில் தெலுங்கு வருடம் அனுசரிக்கப்படுகிறது என்பார்கள்). காலவ முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். முதல் பெண், கோமளவல்லி என்று ஆரம்பித்தார். இந்தத் தாயாரின் பெயரை வைத்துதான், இத்தலத்திற்குப் பக்கத்து ஊர், கோமளம் என்றழைக்கப்பட்டது. இப்போது அது கோவளம் என்றாகிவிட்டது. 359 பெண்களை ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் திருமால் பிரம்மச்சாரி உருவிலேயே கைத்தலம் பற்றினார். கடைசிப் பெண்.

இவளையும் கடைத்தேற்றிவிட்டால் தன் பொறுப்பு முற்றிலுமாக நிறைவடையும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார் காலவர். ஆனால் இந்தக் கடைசி கல்யாணத்துக்குத் தடையாக வந்தான் இரண்யாட்சன். அந்தக் கடைசிப் பெண்ணான பூமிதேவியைக் கடத்திச் சென்றான். தெய்வம் கடமை ஆற்றவிடாமல் இடையூறு செய்வதுதான் அரக்க குணம்! தனக்குத் தேவையோ, தேவையில்லையோ, சும்மா விளையாட்டுக்காகவேனும் தெய்வத்தை சீண்டிப் பார்ப்பதுதானே அரக்க வாடிக்கை! பிரம்மச்சாரியாக வந்த பரமன் தன் வாக்கை எப்படி முழுமையாக நிறைவேற்றுகிறான் என்பதைப் பார்த்துவிடலாம் என்று சவால் விடும் தோரணையாக பூமிதேவியைக் கடத்திச் சென்று ஆழ்கடலுக்குள் சிறைவைத்தான். பிரம்மச்சாரிக்கு தன் வராஹத் தோற்றத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கோரைப் பற்களுடன் கோபாவேசமாகப் புறப்பட்டார் வராஹர்.

திகைத்து நின்ற காலவர் மீது மட்டும் கனிவான பார்வையை உதிர்த்துவிட்டு, கடலுக்குள் பாய்ந்தார். பிரம்மச்சாரி வராஹராக மாறியதைக் கண்டு சற்றே அதிர்ச்சியுற்றாலும், திருமாலின் திருவிளையாடலை அப்போதே புரிந்து கொண்ட முனிவருக்கு, நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உறுதிபட்டது. வராஹரின் தாக்குதலை எதிர்பார்க்காத இரண்யாட்சன் நிலைகுலைந்தான். அவரால் எளிதாக வதம் செய்யப்பட்டு வீழ்ந்தான். தன் இரு கொம்புகளுக்கிடையே பூமிதேவியைத் தாங்கியபடி கடலுக்கு மேலே வந்தார் வராஹர். நிம்மதிப் பெருமூச்சு விட்டார் காலவர். 360வது திருமணமும் இனிதே நடந்தேறியது. கண்களில் நீர் தளும்ப, தன் பொறுப்பு நிறைவேற உதவிய பரந்தாமனை  தண்டனிட்டுத் தொழுதார் காலவர். தன் பெண்களை ஒவ்வொருவராக தினம் தினம் திருமணம் செய்து கொண்டதோடு, தனக்கும் தினம் தினம் தரிசனம் தந்த அந்தப் பெருங்கருணைக்கு என்ன கைம்மாறு செய்வது என்று எண்ணி மாய்ந்து போனார் அவர்.

திருமால் தான் மணந்த அனைத்துப் பெண்களையும் ஒன்றாக இணைத்தார். அகிலவல்லித் தாயாராக உருவம் கொடுத்தார். தன் இடது பக்கத்தில் தாயாரை ஏந்திக் கொண்டார். திவ்ய தரிசனம் தந்தார். இப்படி, தான் உருவாக்கிய அகிலவல்லிக்கு உரிய அந்தஸ்தையும் தர விரும்பினார் எம்பெருமான். தன் கொம்புகளை உடைத்து அழகியதோர் தந்தப் பல்லக்கைத் தயாரித்தார். அதில் தன் நாயகியை அமர வைத்து, ஊர்வலம் வந்து பெருமை பாராட்டினார். (வராஹரின் அந்தப் பல்லக்கு நாளாவட்டத்தில் மறைந்துவிட, பல்லக்கு ஊர்வல சம்பிரதாயத்தை விட இயலாததால் யானைத் தந்தத்தாலான பல்லக்கை பின்னால் வந்தவர்கள் உருவாக்கினார்கள். இதுபோன்ற ஒரு பல்லக்கு கொச்சி மகாராஜா அரண்மனையிலும் இருந்திருக்கிறது. ஊர்வலத்தின்போது, பக்தர்கள் பல்லக்கைச் சுரண்டி பழுது படுத்திவிட்டதாலும், முறையாகப் பராமரிக்க இயலாததாலும் இப்போது பல்லக்கு ஊர்வலம் வருவதில்லை என்கிறார்கள்).

அகிலவல்லி என்ற லட்சுமி தாயாரை இடது பக்கம் கொண்டு எந்தைப் பெருமாள் இலங்குவதால், இத்தலம் திருவிடவந்தை என்றானது. இப்போது, திருவிடந்தை. கோயிலினுள் தனிச் சந்நதியில் கோமளவல்லித் தாயார். தழையத் தொங்கும் தங்கத் தாலி மிளிர, முகத்தில் புது மணப்பெண்ணின் பூரிப்பு. உற்சவர் விக்ரகத்திலும் அதே எழில். அதற்கு மேலும் அழகு சேர்ப்பதுபோல வலது கன்னத்தில் இயற்கையாகவே அமைந்த திருஷ்டிப் பொட்டு!  வராஹப் பெருமாளின் நின்ற கோலம் அற்புதமானது. அவரது இடது பாதத்தை ஆதிசேஷ தம்பதி தாங்கியிருக்கிறார்கள். அதாவது ராகுகேது, சர்ப்ப தோஷங்களை தான் விலக்கித் தன் பக்தர்களின் வாழ்வில் தான் மகிழ்ச்சிப் பொங்க வைப்பவர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் பெருமாள். நெடிதுயர்ந்த உருவம். உயர்த்திய இடது தொடையில் தாங்கியிருக்கும் அகிலவல்லித் தாயாருக்கு சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் அழகிய தோற்றம். கீழே, ஸ்ரீதேவிபூதேவி சமேதராக, நித்ய கல்யாண பெருமாளாக, உற்சவத் திருக்கோலம். இவர் கன்னத்திலும் அழகான கல்யாண திருஷ்டிப் பொட்டு!

திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆணோ, பெண்ணோ கோயிலுக்கு அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, தேங்காய்பழம்வெற்றிலை, மற்றும் பூமாலையை லட்சுமி வராஹருக்கு சமர்ப்பித்து, சேவிக்கிறார்கள். அர்ச்சனை முடித்து அர்ச்சகர் தரும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு ஒன்பது முறை கோயிலை வலம் வருகிறார்கள். வராஹரின் ஆசியுடன் திருமணம் முடிந்த பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து, வராஹரை சேவித்து அர்ச்சனை செய்து செல்கிறார்கள். பெரும்பாலானோருக்கு அந்த மலர் மாலை வாடுமுன்னாலேயே திருமணம் நிச்சயமாகிவிடுவது இங்கே சகஜமானது! முகூர்த்த நாள் என்றில்லாமல், தினமுமே இவ்வாறு திருமண வரம் கோரி வழிபட வரும் பலரைக் காணலாம்.

ஆண்டாள், ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள் பரப்புகிறார்கள். புராணச் சிறப்பு மிக்க, வராஹரின் 360வது திருமணம் எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்க்கும் ஆவலில் ரங்கநாதரும், தாயாரும் இங்கே வந்து கோயில் கொண்டார்களாம் சென்னையிலிருந்து திருவிடந்தை கோவிலுக்குப் போக நிறையப் பேருந்துகள் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம், திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் அழைத்துச் செல்கின்றன. தனி வாகனங்களில் செல்பவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக எளிதாகச் செல்லலாம். கோயில் காலை 7 முதல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் 8 மணிவரையிலும் திறந்திருக்கும். மேலும் தகவல்கள் அறிய, கோயில் தொடர்புக்குத் தொலைபேசி எண்கள்: 04427472235; 94432 73442

பிரபுசங்கர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்