SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருஞானசம்பந்தருக்கு முத்துபல்லக்கு அளித்த பட்டீஸ்வரர்

2018-06-30@ 09:43:32

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தேனுபுரீசுவரர் கோயில் உள்ளது. இங்கு இறைவன் பட்டீஸ்வரர், தேனுபுரீசுவரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாயார் ஞானாம்பிகை. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 23வது தலம்.

தல வரலாறு:    


பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவிசெய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்கு கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆன லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார்.பட்டி கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீஸ்வரம் என்றும் பெருமானுக்குப் பட்டீஸ்வரர் என்றும்பெயர்கள் ஏற்பட்டன.

மாமன்னன் ராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும்  வழிபாடுசெய்யப்பட்ட துர்காதேவி பட்டீசுவரத்தின் வடபுறம் அமைந்திருந்த சோழன் மாளிகையில் சோழ மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வமாக அருள் பாலித்து வந்தாள். சோழ மன்னர்கள் முக்கிய முடிவுகள்எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்குபெற்ற பின்னரே செயல்படுவர். சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக இருக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடும் காட்சிதருகிறாள்.

தலச்சிறப்பு :

விசுவாமித்திர முனிவர் காயத்திரி  மந்திரம் சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்றார் என்பது  சிறப்புடையது.  வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை ராமர் இங்கு  தன் வில்லின்  முனையால் கோடி தீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன்  நீரால் இறைவனை அபிஷேகம்  செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் ராமலிங்கம் என்று  வழங்கப்படுகிறது.  மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி  முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞானவாவி  தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.    

திருஞான சம்பந்தருக்கு முத்துப்பந்தல்:  

திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார். அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன.வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். திருஞான சம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றிமுத்துப்பந்தலின் நிழலில் வந்தார். திருஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும்,திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது. திருஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி இத்தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆனிமாதம் சிறப்பாக விழா நடைபெறுகிறது.

ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பூத கணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இதுவே இத்தலத்தின் சிறப்பு  விழா. முத்துப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர்  அடியார்களுடன் திருச்சத்தி முற்றம் கோயில் சன்னதியிலிருந்து முத்துப்பந்தல்  நிழலில்எழுந்தருளி, பட்டீஸ்வரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும்.  இந்தாண்டு முத்துபந்தல் விழா நேற்று துவங்கியது. இன்று(15ம் தேதி) காலை  தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப் பந்தலில்  திருஞான சம்பந்தமூர்த்தி  உலா நடைபெறுகிறது. இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  இத்தலத்து பட்டீசுவரரை வணங்கினால் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.  வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.                    

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்