SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்த திருக்காமேஸ்வரர்

2018-06-29@ 11:53:04

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூரில் ஐஸ்வர்ய மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்த சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:

தட்சன், ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான்.  தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், பாசம் விரட்டியதால் தந்தை நடத்தும் யாகத்தில் அழைப்பு இல்லாமலே சென்ற தாட்சாயினி அவமானப்பட்டுத் திரும்பினாள். இதனால் தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், தாட்சாயினியை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள். பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற பெயர் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள்.

இறைவன், இறைவியை சேர்த்து வைக்க  பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு சக்தியின் நினைவு வர வைக்க, அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான். தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.

நடந்ததையும், நடக்கப் போவதையும் அறிந்த ஈசன் வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். இதன் விளைவு, பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், அம்பாள் சிவகாம சுந்தரியாகவும் காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்பு  சிற்பம் இக்கோயிலில் உள்ளது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிலையும் உள்ளது.

மகாலட்சுமியே சிவனை பிரதிஷ்டை செய்த தலம்:


இத்தல சிவனை மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் மகாலட்சுமி வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்தார்.

இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காணாத தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்கலாம்.சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப் பெயர் பெற்றது.  

நாளடைவில் வெள்ளூராக திரிந்தது. இங்குள்ள மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரம் உள்ளது. ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பாகும்.தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலாளர்கள்  இங்கு வந்தால் தோஷம் அகலும். சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலட்சுமியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.  இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • georgiyaropecar

  ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

 • chinaindustryexpo

  சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

 • thirupathiseventh

  திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

 • 20-09-2018

  20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்