SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வில் வெற்றி நிச்சயம்!

2018-06-28@ 16:02:53

நான் பி.இ.,மெக்கானிக்கல் முடித்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. இதுவரை எந்தவிதமான வேலையும் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்படுகிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? சீனிவாசன், திருச்சி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனிராகுவின் இணைவு நல்ல நிலையே. உத்யோக ஸ்தான அதிபதி குருபகவான் சுக்கிரனுடன் இணைந்து ஆறில் உள்ளதால் சிறிய போராட்டத்திற்குப் பின்னர்தான் உத்யோகம் என்பது அமையும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி எந்தவொரு விஷயத்திலும் முதலில் கஷ்டப்பட வேண்டும். அதன் பின்னரே வெற்றி என்பது கிடைக்கும்.

தற்போதைய சூழ்நிலையின்படி மிகக் குறைந்த சம்பளமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல முயற்சியுங்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பெயரளவிற்கு சம்பளம் வந்தால்கூட போதுமானது. 16.06.2019க்குப் பின்னர் மேலும் சற்று சிரமத்திற்கு உள்ளானாலும், அந்த அனுபவம் உங்களை பக்குவப்படுத்தும்.16.08.2020க்கு மேல் நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்து விடுவீர்கள்.அதுவரை பிரதிபலன் எதிர்பாராது உழைக்க வேண்டியது அவசியம். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லியவாறு ஒன்பது முறை வலம் வந்து வணங்குங்கள். பலம் கூடும்.

“அஸாத்ய ஸாதகஸ்வாமின் அஸாத்யம் தவகிம்வத
ராமதூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ.”


முகம் பார்க்காமல் ஏப்ரல் 2015ல் முகநூல் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி காதலித்து வருகிறோம். தற்போது என்னைப் பிடிக்கவில்லை என்று மறுக்கிறார். மத வேறுபாட்டின் காரணமாக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்க ஆசைப்படுகிறேன். உரியவழி சொல்லுங்கள். ரோஷினி, சென்னை.
    
சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகரலக்னத்தில் பிறந்துள்ள உங்கள் முகநூல் நண்பரின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. வாலிப வயதில் எல்லோருக்கும் வருவது போன்ற இனக்கவர்ச்சியினால் அவதிப்பட்டு வருகிறீர்கள். முகம் பார்க்காமல் முகநூல்  மூலம்தான் பழக்கமானோம் என்று சினிமாத்தனமாகப் பேசினாலும் உங்கள் இருவருக்குள்ளும் ஆழ்மனதில் ஒற்றுமை என்பது இல்லை. அதனை உணர்ந்ததால் உங்கள் நண்பர் உங்களை விட்டு விலக முயற்சிக்கிறார். விலகலுக்கான காரணிகளாக அவர் மதத்தையும், பெற்றோரையும் முன் நிறுத்துகிறார்.

இதெல்லாம் ஒத்து வந்தாலும் அவர் உங்களோடு திருமணத்திற்கு உடன்பட மாட்டார். அவருடைய ஜாதக பலத்தின்படி சொந்தத்திலேயே அவருக்கான மணமகள் காத்திருக்கிறார். சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள் அவரை நம்பியிருக்காமல் உங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சியுங்கள். இளம் வயதில் இருக்கும் நீங்கள் தற்போது திருமணம் பற்றிய எண்ணத்தைக் கைவிட்டு நிரந்தர உத்யோகத்திற்கு முயற்சி செய்யுங்கள். சுயகௌரவத்திற்கு முக்கியத்துவம் தரும் நீங்கள் எந்தக் காலத்திலும் சொந்தக் காலில் நிற்பதே நல்லது. விலகிச் செல்லும் காதலனை உதறித் தள்ளுங்கள். 25வது வயதில் திருமணம் நல்லபடியாக நடக்கும். அதுவரை இதுபோன்ற மாய உலகத்திற்குள் செல்லாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

நான் பிறந்து 27 வருடங்கள் ஆகிறது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பலபேர் பெண் பார்க்க வருகிறார்கள். கடைசியில் அமைவதில்லை. எனக்கு என்னகாரணத்திற்காக திருமணம் தடைபடுகிறது?அதை நிவர்த்தி செய்ய நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள். உமாமகேஸ்வரி, ஏற்காடு.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவுடன் கேது இணைந்திருப்பது உங்கள் திருமணத்தை தடை செய்து வருகிறது. எனினும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ஐந்தில் உச்சம் பெற்றிருப்பதால் மனதிற்குப் பிடித்த வரன் அமைவார். பொதுவாகவே உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சனி 12ம் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனோடு இணைந்திருப்பது பலவீனமான நிலை ஆகும். எல்லா விஷயங்களிலும் அலைச்சல் என்பது அதிகமாக இருக்கும். எந்தவொரு செயலும் எளிதில் நடக்காது.

பிரதி மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பிரதோஷ நாளில், பிரதோஷ காலமான மாலை நேரத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். நாகாபரணத்துடன் கூடிய அண்ணாமலையாரை நினைவில் நிறுத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணம் நல்லபடியாக முடிந்தவுடன் தம்பதியராக கிரிவலம் வந்து வணங்குவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லிக் கொண்டே கிரிவலம் வருவது நல்லது. 05.07.2019க்குப் பின் மிகச் சிறந்த பண்புகளை உடையநல்லமனிதர் கணவராக அமைவார். வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்.

“ஹாலாஸ்யநாதாயமஹேச்வராயஹாலாஹலா அலங்க்ருத கந்தராய
மீனேக்ஷணாயா: பதயேசிவாயநமோ நம: ஸூந்தர தாண்டவாய.”


வாழ்க்கையில் பிரச்னை இருக்கும். எனக்கு வாழ்க்கையே பிரச்னைதான். எனக்கு 13வது வயதில் இருந்து பிரச்னை ஆரம்பித்தது. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். யாரோ செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவித்தேன். என் தந்தையால் எனக்கு மிகுந்த அவமானம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. என் ஜாதகக் குறிப்பினைக் கொண்டு என் பிரச்னையை அறிந்து எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள். ஒரு வாசகி, திருநெல்வேலி மாவட்டம்.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. டீன் ஏஜ் பருவத்தில் எல்லோருக்கும் வருகின்ற பிரச்னைதான் உங்களுக்கும் வந்திருக்கிறது. பெரும்பாலானோரின் பிரச்னைகள் வெளியில் தெரிவதில்லை. உங்கள் பிரச்னை சுற்றியுள்ளோரால் பரப்பப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். நடந்ததை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வினில் வெற்றிகாண இயலாது. நீங்கள் ஒன்பதாம் வகுப்போடு உங்கள் படிப்பை நிறுத்தியது பெரும் தவறு. இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை. டுடோரியல் மூலம் பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத முயற்சியுங்கள். தொடர்ந்து தபால் மூலம் பட்டப்படிப்பு என்பது ஒரு புறம் தொடரட்டும். தையல், எம்பிராய்டரி முதலான கைத்தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஜாதகபலத்தின்படி தொழிலைப்பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் சூரியனும், புதனும் இணைந்திருக்க, பத்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பது பலமான நிலை ஆகும். உச்சம் பெற்ற சுக்கிரனின் துணை இருப்பதால் அதிர்ஷ்டம் என்பதும் கைகொடுக்கும். சுய முயற்சியால் சொந்தத்தொழில் செய்து மிகப்பெரிய தொழில் அதிபராக உருவெடுப்பீர்கள். 27.09.2018க்குப் பின் திருப்பு முனையைக் காணும் நீங்கள் 21வது வயதிலேயே சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். உங்களை ஏளனம் செய்தவர்கள் மத்தியில் ஒரு முதலாளியாக உருவெடுப்பதோடு ஆதரவற்ற பலருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி அவர்களது வாழ்விலும் விளக்கேற்றி வைப்பீர்கள். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. சோதனைகளை அளிப்பதன் மூலம் கடவுள் நம்மை சாதனைகள் படைக்கத் தூண்டுகிறார் என்பதை மனதில் கொள்ளுங்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம்.

35வயதாகும் என் மகன் கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் உதவி இயக்குநராக  பணி புரிகிறான். இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்கிறான். கடைசி நேரத்தில் தடைபடுகிறது. அவன் இயக்குனர் ஆவதற்கும், அவனது திருமணம் நல்லபடியாக நடப்பதற்கும் உரிய பரிகாரம் கூறுங்கள். சுப்புலட்சுமி, சென்னை.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோக ஸ்தானத்தில் குருவும் கேதுவும் இணைந்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய இயக்குநர் ஆவதற்கான வாய்ப்பு இல்லை. கடந்த 15 வருடங்களாக சுக்கிரதசை நடந்து வருவதால் கலையுலகத் தொடர்பு என்பது நன்றாக உள்ளது. 40வது வயதில் சுக்கிர தசை முடிவுறும் தருவாயில் தற்போது செய்து வரும் பணியும் தடைபட்டுவிடும். தற்போது உள்ள தொடர்பினைப் பயன்படுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் புரொடக்ஷன் மேனேஜர், பி.ஆர்.ஓ., போன்ற நிர்வாக ரீதியான பணிகளுக்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடனான தொடர்பு, நட்பு, அன்பான பேச்சு ஆகியவை இவருக்குத் துணை நிற்பதால் அவற்றின் துணை கொண்டு தனது உத்யோகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதியின் பாதைக்கு எதிர்திசையில் பயணிப்பது மதியாகாது. தனக்கான பாதை இதுவே என்பதைப் புரிந்து நடந்து கொள்ளச் சொல்லுங்கள். ஏழாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், புதனின் இணைவும், ஏழாம் வீட்டின் அதிபதி சூரியனின் எட்டாம் இடத்து அமர்வும் திருமணத்தைத் தடை செய்து வருகிறது. கலைத்துறையைச் சார்ந்த பெண்ணாகவே பாருங்கள். வருகின்ற அக்டோபர் மாதத்திற்குப்பின் இவரது திருமணம் முடிவாகிவிடும். வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்பிகையின் ஆலயத்திற்குச் சென்று ‘தனந்தரும் கல்வி தரும்’ என்ற அபிராமி அந்தாதி பாடலைச் சொல்லி வணங்கிவர வாழ்வில் ஒளி வீசும்.

முப்பத்தேழு வயதாகும் என் தம்பி ஆண்மை குறைவு உள்ளதாகக் கூறி திருமணம் வேண்டாம் என்கிறான். சிகிச்சைக்கும் வர மறுக்கிறான். இது உண்மைதானா அல்லது எந்தப் பெண்ணையாவது விரும்புகிறானா? சிகிச்சை அளித்தால் ஆண்மை குறைவு நீங்குமா? திருமணம் பற்றிநீங்கள் கூறும் பதிலையே இறுதி முடிவாகக் கருதுகிறோம். புகழேந்தி, சென்னை.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தம்பியின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தின்படி சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்கள் மூன்றில் அமர்ந்து இதுபோன்ற பயத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. அவருடைய பயம் நியாயமானதே. ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் இரண்டில் அமர்ந்திருப்பதும், லக்னாதிபதி செவ்வாயின் நான்காம் இடத்து அமர்வும், குருபகவான் 11ல் அமர்ந்திருப்பதும் பலத்தைக் கூட்டுகிறது. சிகிச்சை அளித்தால் நிச்சயம் குணமடைவார். மனோகாரகன் சந்திரன் 12ல் அமர்ந்திருப்பதால் மனதளவில் தளர்ந்து
போய் உள்ளார்.

மனோதத்துவ ரீதியிலான கவுன்சிலிங் அளித்து அதன் பின்னர் உடல் ரீதியான சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சுயதொழில் இவருக்கு சரியாக வராது. முதலில் இவரது உடல்நிலையை சரிசெய்து, மனநிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். தற்போது நடந்து வருகின்ற நேரம் உங்கள் முயற்சிக்குத் துணைபுரியும். பிரதி செவ்வாய் தோறும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றிவைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி உங்கள் தம்பியை வழிபட்டு வரச் சொல்லுங்கள். அவரது பிரச்னை முடிவிற்கு வரும்.

“நம: கேகினேசக்தயேசாபி துப்யம் நமச்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம் புனஸ்ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே.”


என் மகன் பி.இ, மூன்றாம் ஆண்டு படிக்கும்போது சரிவரகல்லூரிக்கு செல்லாததால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அவன் மீண்டும் படிப்பைத் தொடரமாட்டேன் என்கிறான் இசைத்துறையில் ஆர்வம் உள்ளதால் இசைக்கல்லூரியில் சேர்ந்து பயில விரும்புவதாக சொல்கிறான்.என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளோம். நல்லவழி கூறுங்கள். ஜெயலட்சுமி, சென்னை.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று 11ல் அமர்ந்திருப்பதால் கலைத்துறையில் பிரகாசிக்க முடியும். குருசந்திர யோகமும் இசைத்துறையில் ஆர்வத்தினைத் தூண்டுகிறது. என்றாலும் புதன் 12ல் மறைவதால் வாய்ப்பாட்டில் சாதிக்க இயலாது. இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக் கொள்ளலாம். லாப ஸ்தானத்தில் சுக்கிரனோடு இணையும் சூரியன், சனி, கேது ஆகிய கிரகங்கள் இவருக்கு ஏதேனும் ஒருவழியில் சம்பாத்யத்தைத் தருவார்கள். கவலைப்படாமல் அவரது விருப்பத்திற்கேற்ப இசைக்கல்லூரியில் சேர்த்துவிடுங்கள். கலைமகளின் அருளால் கலைத்துறையில் சாதிப்பார். எதிர்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்