SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகனைப்பற்றிய கவலை தீரும்!

2018-06-20@ 16:05:37

எனது மகனால் பல லட்சங்கள் கடன் ஏற்பட்டு அதை சமாளித்து கட்டி விட்டோம். மீண்டும் பல லட்சங்கள் கடன் ஏற்படுத்தி உள்ளான். எங்களால் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். வாழ்நாள் முழுவதும் ஊதாரியாக இருப்பானா திருந்தி நல்ல வாழ்வு கிடைக்குமா? நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
மைக்கேல், பட்டுக்கோட்டை.


கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியன் கடனைப்பற்றிச் சொல்லும் ஆறாம் வீட்டில் நீசம் பெற்ற குருவுடனும், புதனுடனும் இணைந்திருப்பது கடன் பிரச்னையைத் தந்திருக்கிறது. மேலும், தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் வக்ரம் பெற்ற சனிஅமர்ந்திருப்பதும், 11ல் கேதுவும் அவருடைய சுய சம்பாத்தியத்தைக் குறைத்துக் காட்டுகிறது. மகனுக்கு 45 வயது ஆகும் வரை பெற்றோராகிய நீங்கள் போராடியது போதும்.

இனிமேலாவது அவர் தனது வாழ்வியல் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். அவருடைய ஜாதக பலத்தின்படி மற்றவர்கள் தரும் செல்வம் என்பது அவருக்குத் தங்காது. அரைக்காசு சம்பாதித்தாலும், அது அவரது சுய சம்பாத்தியமாக இருந்தால் மட்டுமே அவருக்கு நிலைக்கும். அவரது கடன் பிரச்னையை அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள். நீங்கள் கொடுப்பது என்பது மேலும், மேலும் அவரது கடனை அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். பெட்டிக்கடையோடு சிறிய அளவிலான மெஸ் முதலான ஹோட்டல் தொழில் அவருக்கு கைகொடுக்கும். ஞாயிறு தோறும் அருகிலுள்ள தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க நீர்மோர் கொடுத்து வாருங்கள். மகனைப் பற்றிய உங்கள் கவலை தீரும்.

இலங்கைப் பெண்ணான எனக்கு கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த எட்டு நாட்களில் கணவர் வெளிநாடு சென்று விட்டார். விளையாட்டாகச் சொல்லும் விஷயத்தை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார். கோபம் கொண்டால் நாட்கணக்கில் பேசமாட்டார். என்னால் கணவருடன் சேர்ந்து வாழ இயலுமா?அவரது இயல்பு மாறுமா? சர்மிலி, இலங்கை.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் புதன் புக்தி தொடங்கி உள்ளது. கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ராகுவின் சாரம் பெற்றதோடு, அதே ராகுவுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இரண்டாம் வீடு என்பது வாக்கு ஸ்தானமும் கூட. நீங்கள் பேசும் வார்த்தைகளை உங்கள் கணவர் தவறாகப் புரிந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகம், உங்கள் ஜாதகத்தை விடபலம் குறைந்தது. இயற்கையாகவே உங்களைவிட அவருக்கு புரிந்து கொள்ளும் திறன் என்பது குறைவு என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

அரசு உத்யோகத்தில் இருந்த நீங்கள் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக வேலையை துறந்திருக்கிறீர்கள். தற்போதைய நேரம் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும். கணவருடன் வெளிநாடு சென்றாலும், அங்கும் உங்களுக்கான வேலைவாய்ப்பினைத் தேடிக் கொள்ளுங்கள். உத்யோகம் பார்ப்பது என்பது உங்கள் உயிர்மூச்சாக இருக்கட்டும். உத்யோகம் ஒன்றே உங்களது சுயகௌரவத்தை கட்டிக் காக்கும். கணவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் திறன் உங்களிடம் நிறைந்திருக்கிறது. அவரை கோபம் நிறைந்தவர் என்று சொல்ல இயலாது. அடிப்படையில் மிகவும் நல்ல குணம் கொண்டவர். புரிந்து கொள்ளத் தெரியாதவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதிகம் பேசாமல் அளந்து பேசுங்கள். சனிக்கிழமையில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்து வாருங்கள். உங்கள் வாழ்வு சிறப்பாக அமையும்.

மருத்துவராக உள்ள என் நண்பருக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற தன்னால் மணவாழ்வில் வெற்றி பெற முடியவில்லையே என்று தற்கொலை எண்ணம் கொண்டவராக உள்ளார். எனது நண்பரின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமைய பரிகாரம் கூறுங்கள். அனிதா, திருவாரூர்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நீங்கள் நண்பரின் நல்வாழ்விற்காக கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்கள் கருணை உள்ளத்திற்கு கர்த்தரின் ஆசிர்வாதம் என்றென்றும் நிலைத்திருக்கும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்நண்பரின் ஜாதகத்தில் தற்போது சூரியதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் அத்தனை சிறப்பாக இல்லை. எனினும் அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் இடம் சுத்தமாக இருப்பதாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் நான்கில் அமர்ந்திருப்பதும் நல்லநிலையே.

உங்கள் நண்பருக்கு மறுமண வாழ்வு என்பது சிறப்பானதாக அமையும். தற்போது நேரம் சரியாக இல்லை என்பதால் அவர் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மருத்துவ சேவையில் அவரை முழுமனதோடு ஈடுபட்டு வரச் சொல்லி அறிவுறுத்துங்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் சனியினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தரச் சொல்லுங்கள். 13.02.2019ற்குப் பின் அவரது மறுமணம் நடந்து நல்லபடியாக வாழ்வார்.

நான்கு வயதில் தாய் இறந்து தந்தையைப் பிரிந்த என்னையும், என் தங்கையையும் அம்மாச்சி வளர்த்தார்கள். அவர்களும் இறந்தபிறகு உறவுகள் எல்லாம் என்னை வெறுத்து விட்டனர். தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்று வருடங்கள் பைத்தியமாக அலைந்தேன். தற்போது நல்ல உள்ளம் படைத்த ஒருவர் சைக்கிள் ரிக்‌ஷா வாங்கிக் கொடுத்தார். அதை வைத்து என் பசியைப் போக்கிக் கொண்டு அதிலேயே தூங்குகிறேன். எல்லோரையும் போல் எனக்கும் கல்யாணம், குடும்பம் அமையுமா? பரிகாரம் உண்டா? பாலகணேசன், மதுரை.

உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் கிரகநிலை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல ஜோதிடரிடம் காண்பித்து சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி உச்சம் பெற்று ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்திருப்பது நல்லபலமான அம்சம் ஆகும். உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் உங்கள் ஜாதகம். தற்போதைய நேரம் நன்றாக இருப்பதால் வெகுவிரைவில் நீங்கள் குடியிருக்க வாடகைக்கு ஒரு வீடு கிடைத்துவிடும்.

திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி எட்டில் இருந்தாலும், குரு பகவானின் பார்வை இருப்பதால் நல்ல குணவதியான பெண் ஒருவர் உங்கள் மனைவியாக அமைவார். காய்கறி அல்லது பழம் முதலான தின்பண்டங்கள் வியாபாரம் செய்யும் பெண்ணாக இருப்பார். வெள்ளிக்கிழமை தோறும் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு அதிகாலை வேளையில் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். அங்கே ஆலயத்திற்கு வருகின்ற வயதான சுமங்கலிப் பெண்ணை வணங்கி ஆசிர்வாதம் பெறுங்கள். 05.07.2020க்குள் உங்கள் திருமணம் நடந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். மாரியம்மனின் அருளால் வாழ்வில் புதுவசந்தம் பிறக்கும்.

முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். முட்டாள்தனமாக வெளுத்தது எல்லாம் பால் என நினைத்து பணம் கேட்டவர்களுக்கு என் பணத்தையும், அடுத்தவர்களிடம் கடன் வாங்கியும் கொடுத்தேன். என்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றனர். பென்ஷன் பணத்தை வைத்து வட்டி கொடுத்து முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள். திருச்சி மாவட்ட வாசகர்.

கார்த்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. நூறு ரூபாய் முதல் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வரை நீங்கள் கடன் கொடுத்திருக்கும் அத்தனை பேரின் பெயர் பட்டியலை எழுதி அனுப்பியுள்ளீர்கள். ‘பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்’ என்பார்கள். நீங்கள் கடன் கொடுத்தவர்களில் பாதிப்பேர் உங்களிடம் கடன் பெற்றதையே மறந்துபோய் இருப்பார்கள். ஜென்ம லக்னாதிபதி சனி எட்டில் அமர்ந்திருப்பதும், ஜென்ம லக்னத்திலேயே நீசம் பெற்ற குருவின் அமர்வும் உங்கள் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தயக்க குணம் உடைய உங்களைப் போன்றவர்கள் கடன் கொடுத்தல் கூடாது.

ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உங்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்தலும், வாங்குவதும் தவறு என்று புரியாமல் போனது ஏன்? உங்களுடைய ஜாதக பலத்தின்படி நீங்கள் கொடுத்திருக்கும் கடன் தொகையில் முக்கால் பகுதி திரும்பி வராது என்பதே நிஜம். எந்த ஜென்மத்தில் பட்டகடனோ இந்த ஜென்மத்தில் அடைந்திருக்கிறது என்று எண்ணி திருப்தியடையுங்கள். வீண் எதிர்பார்ப்புகளால் உங்கள் உடல் நலம்தான் வீணாகும் என்பதை உணருங்கள். 07.07.2019ற்குள் ஒரு நண்பரின் துணையோடு நீங்கள் வாங்கியிருக்கும் கடனை அடைத்து விடுவீர்கள். இனிமேலாவது கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பது நினைவிருக்கட்டும்.

மிதுன ராசி வாசகர் ஒருவரின் முதுகுவலிக்கு தாங்கள் சொல்லியிருந்த பரிகாரத்தை நானும் செய்து பலன் அடைந்து இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் ஆறு பேரும் சிறு வயது முதல் கடுமையாக உழைத்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறோம். 21 வயது ஆகும் என் மகன் பி.ஏ. ஆங்கிலம் முடித்து தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவன் வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்? தனபால், நாமக்கல்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தின்படி பத்தாம் இடமாகிய தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் மூன்றில் அமர்ந்து, தனது வீட்டின் மீது பார்வையை செலுத்துகிறார். அவர் மேற்கொண்டு தனது எம்.ஏ.,படிப்பினைத் தொடர்வது நல்லது. உடன் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணிப் பயிற்சி போன்ற இதரதகுதிகளை வளர்த்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பலன் தரும். அவரது தகுதிக்கு ஏற்றவாறு உள்ள அனைத்து அரசுத் தேர்வுகளையும் தவறாமல் எழுதி வரச் சொல்லுங்கள்.

அரசுப் பணி கிடைப்பதற்கான வாய்ப்பு அவரது ஜாதகத்தின்படி பிரகாசமாக உள்ளது. சொற்ப சம்பளத்திற்காக தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை பார்ப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இன்னும் இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டாலும் எதிர்கால நலன் கருதி கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வது நல்லது. மேற்கொண்டு கல்லூரிப் படிப்பினைத் தொடர்வதுடன் அரசுத் தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது மிகவும் பயன் தரும். செவ்வாய்க்கிழமையில் சென்னிமலை முருகனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முருகனின் அருளால் பரம்பரையில் முன்னேற்றம் உண்டாகக் காண்பீர்கள்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகனுக்கு 2011ல் திருமணம் செய்து வைத்தோம். அந்தப் பெண் உடன் பணிபுரியும் வேறு ஒருவருடன் பழகி வந்ததால் விவாகரத்து பெற்றுக் கொண்டு மறுமணமும் செய்து கொண்டு விட்டாள். தற்போது என் மகனுக்கு மறுமணம் செய்ய விரும்புகிறோம். அவன் வாழ்வு நல்லபடியாக அமைய பரிகாரம் சொல்லுங்கள். தட்சிணாமூர்த்தி, பாண்டிச்சேரி.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குருதசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவானே என்பதாலும், அவரது ஜாதகத்தில் குரு பகவான் உச்சபலத்துடன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தற்போது மறுமணத்தை நடத்த முயற்சிக்கலாம். தாமதம் செய்யாமல் உடனடியாக மறுமணத்தை நடத்துவது வம்ச விருத்திக்கு துணை புரியும். நீங்கள் அனுப்பியிருக்கும் பெண்ணின் ஜாதகமும் இவரது ஜாதகத்துடன் நன்றாக பொருந்தியுள்ளது.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணையே பேசி முடிக்கலாம். நேரம் நன்றாக இருப்பதால் தற்போது திருமணம் கூடி வரும். திருமணத்திற்குப் பிறகு அவர் சொந்தமாக சுயதொழிலில் இறங்கலாம். தற்போது துவங்கியுள்ள குரு தசை அவரது வாழ்வினில் சிறப்பான முன்னேற்றத்தைத் தரும் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகனிடம் வியாழன் தோறும் வடக்கு முகமாக நெய் விளக்கு ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி குரு பகவானை தியானித்து வணங்கி வரச் சொல்லுங்கள். சாயிபாபாவை வணங்கி வருவதாலும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.

“தேவானாஞ்ச ரிஷீனாஞ்ச குரும் காஞ்சனசந்நிபம்
பக்திபூதம் த்ரிலோகேசம் நம் நமாமி ப்ருஹஸ்பதிம் ”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்