SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்று வா ரமலானே..!

2018-06-20@ 15:22:30

தூய ரமலானே..! புடம் போட்ட தங்கமாய் எங்களை மாற்றிவிட்டு நீ விடைபெற்றுச் சென்று விட்டாய்...! இந்த முப்பது நாட்களில் நீ செய்த ரசவாதம் எத்துணை அற்புதமானது..! அலமாரியின் மேல் தட்டில் பட்டுத் துணியால் போர்த்தப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த திருவேதம் உன் வருகையால்தான் மனிதக் கைகளில் தவழத் தொடங்கியது..! “ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்” என்னும் தமிழ் மூதாட்டியின் மூதுரையை நடைமுறைப்படுத்தியது நீதானே..!
தூய ரமலானே..! பள்ளிவாசல் பக்கமே எட்டிப் பார்க்காத பலரையும் பள்ளிவாசலிலேயே குடியிருக்க வைத்துவிட்ட உன் அற்புதத்தை என்னவென்று சொல்வேன்? ஆண்டு முழுக்க நியமம் தவறாமல் ஐந்து வேளைத் தொழுகையை நிறைவேற்றும் அடியார்களுக்குக்கூட பள்ளிவாசலில் இடம் கிடைக்காத அளவுக்குக் கூட்டம்... இது ஒன்று போதாதா உன் மகிமையைச் சொல்ல?தூய ரமலானே..!

நீ அளித்த பயிற்சிகளிலே மிகச் சிறந்த பயிற்சி இறையச்சப் பயிற்சி. அடுத்து, பொறுமையின் பயிற்சி. இதர மாதங்களில் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவர்கள்கூட நீ வந்துவிட்டால் எவ்வளவு பொறுமையாகப் பேசுகிறார்கள். “ஒவ்வொரு செயலையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்கிற உணர்வை எவ்வளவு அற்புதமாக மனிதர்களின் மனங்களில் பதித்துவிட்டாய்.தூய ரமலானே..! கஞ்சர்களின் கருவூலங்களைத் திறக்க வைத்து, குவித்து வைத்துள்ள சொத்துகளுக்கெல்லாம் இரண்டரை விழுக்காடு கணக்கு போட வைத்து, ஏழை எளியோரின் உரிமைத் தொகையான ஜகாத்தை வழங்கவைத்த உன் சிறப்பை என்னவென்று சொல்வேன்? இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் வர்க்கப் புரட்சி என்பார்கள்.

ஆனால் நீயோ, ‘வறுமை ஒழிய வர்க்கப் புரட்சி எல்லாம் தேவை இல்லை, இஸ்லாமிய வாழ்வியல் கூறும் ஆன்மிகப் புரட்சியே போதும்’ என்பதை எவ்வளவு அழகாக நிரூபித்துவிட்டாய்.தூய ரமலானே..!‘நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டுமல்ல; கண், காது, செவி, இதயம்,கை, கால் என அனைத்து உறுப்புகளும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று கற்பித்து, எல்லா வகைத் தீய எண்ணங்கள், தீய பார்வைகள், தீய பேச்சுகள், தீய நடத்தைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி, எங்களைக் குணக்குன்றாய் மாற்றிய நீ, இன்று விடை பெற்றுச் செல்கிறாய் என்பதை எண்ணும் போது இதயம் கனக்கிறது... கண்களில் நீர் மல்குகிறது..!
தூய ரமலானே...சென்றுவா..!இடைப்பட்ட இந்தப் பதினோரு மாதங்களிலும் நீ அளித்த உன்னத பயிற்சிகளிலிருந்து பயன்பெற்று, அதற்கேற்ப வாழ்ந்து, அடுத்த ஆண்டு இன்னும் அதிக உற்சாகத்தோடு, அதிக ஆன்ம பலத்தோடு உன்னை வரவேற்கக் காத்திருப்போம்.தூய ரமலானே சென்றுவா...!

இந்த வார சிந்தனை

“யார் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ  அவர்களைக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைய வைப்போம். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.” (குர்ஆன் 4:122)
 
 சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்