SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண் நோய் போக்கும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி

2018-06-19@ 09:35:11

சிவகங்கையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது நாட்டரசன்கோட்டை. பழமையான இந்த ஊர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த பெருமையுடையது. இந்த ஊரில் அவரது சமாதியும் உள்ளது. இங்கு தொன்மையான கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. மூலவராக கண்ணுடைய நாயகி அம்மன் உள்ளார். விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. கோயிலில் கொடி மரம் உள்ளது.

தல வரலாறு

500 வருடங்களுக்கு முன்பு நாட்டரசன்கோட்டை அருகே பிரண்டகுளம், அல்லூர், பனங்காடி கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள் பால், மோர், தயிர் விற்று வந்தனர். ஒரு நாள் பனங்காடி வியாபாரிகள் பிரண்டகுளம் வழியாக நாட்டரசன்கோட்டைக்கு பால் விற்க சென்றனர். கிராம எல்லையை கடக்க முயன்றபோது வியாபாரிகள் தவறி கீழே விழுந்தனர். அவர்களிடம் இருந்த பால் பொருட்கள் தரையில் சிதறி வீணானது. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த சம்பவம் தொடர்ந்தது. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், சிவகங்கை மன்னரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகளை பிரண்டகுளத்திற்கு மன்னர் அழைத்து சென்றார். அங்கு குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டுமாறு, மன்னர் உத்தரவிட்டார்.

மன்னரின் உத்தரவின் பேரில் வீரர் ஒருவர் அங்கு பள்ளம் தோண்டினார். அப்போது  கடப்பாரையின் முனை, அந்த வீரரின் கண்ணில் பட்டதால் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தியது. இருப்பினும் தொடர்ந்து தோண்டிய அவர்,  நிலத்தில் புதைந்திருந்த அம்மன் சிலையை கண்டு, அதனை மேலே கொண்டு வந்தார். அம்மன் சிலை மேலே வந்த சில நிமிடங்களில், அந்த வீரரின் கண்ணில் ஏற்பட்ட காயம் முழுமையாக மறைந்து விட்டது. இதையடுத்து அந்த சிலை நாட்டரசன் கோட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அங்கு கோயில் கட்டப்பட்டது. பள்ளம் தோண்டிய வீரரின் கண்ணில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ததால், அம்மனுக்கு கண்ணுடைய நாயகி என பெயரிடப்பட்டது. கோயில், கண்ணுடைய நாயகி கோயில் என அழைக்கப்பட்டது.

இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘காளியாட்டம்’ மிகவும் பிரசித்தம். கும்பகோணம் மகாமக திருவிழா போன்று இந்த விழாவும் நடத்தப்படுகிறது. சித்திரை மாதத்தில் முதல் செவ்வாயன்று அம்மனுக்கு கண் திறக்கும் விழா நடக்கிறது. தொடர்ந்து 22 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் காலசாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வைகாசி பிரமோற்சவ விழா, ஐப்பசி கோலாட்ட விழா, தை மாத தைலக்காப்பு உற்சவ விழா, ஆடி மாத முளைகொட்டு விழா இந்த கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி நவராத்திரி விழா தலா 10 நாட்கள் நடக்கிறது.

வைகாசி சுவாதி விழாவில் கண்ணுடைய நாயகி 8 கரங்களுடன் வெள்ளி ரதத்தில் வீதியுலா வருவது கண்கொள்ளா காட்சியாகும்.  புரட்டாசி நவராத்திரி விழாவில் அம்மன் 9 நாட்கள் கொலுவில் வீற்றிருந்து 10ம் நாளான விஜயதசமியன்று குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறார். தைப்பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாயன்று நகரத்தார் சமூகத்தினர் சார்பில் கொண்டாடப்படும்  ‘செவ்வாய் பொங்கல்’ விழா மிகவும் பிரசித்தம். கண் நோய் பிரச்னைகள் மற்றும் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க அம்மனை வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலில், தினமும் காலை 7.30 மணிக்கு விளா பூஜை நடைபெறும். 2ம் கால சாந்தி பூஜை காலை 8.30க்கும், உச்சிகால பூஜை பகல் 12.30க்கும் நடைபெறுகிறது. மாலை  4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு  அர்த்தசாம பூஜை நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்