SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியத்தகு வாழ்வருளும் வியாக்ரபுரீஸ்வரர்

2018-06-18@ 07:12:07

திருப்பெரும்புலியூர்

திருப்பெரும்புலியூர் ஒரு அற்புதமான பாடல் பெற்ற தலம். மனித உருவில் இருந்த நடராஜரின் பக்தர் வினோத வரம் கேட்டார். அவரருளால் புலியாக மாறினார். அதிவேகமாக தம் பிறவிச் சுழலை களைவதற்காக தலம் தலமாகப் பாய்ந்து சென்று ஈசனை பூஜித்து தில்லைக் கூத்தனோடு ஏகமாகக் கலந்தார். அவர் பூஜித்து பெரும்பேறு பெற்ற தலத்தில் முதன்மையானது திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர். வியாக்ரபாதரின் புனித சரிதத்தை கேட்போரின் உள்ளங்களில் ஈசன் ஆனந்தக்கூத்தாடுவான் எனில் அது மிகையில்லை. சிதம்பரத்தில் தில்லைக் கூத்தனான நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்தான். சகலமும் அவன் நடனத்தில் அசைந்தது. அவனின் சிலம்புச் செம்பாதங்களை சதாகாலமும் பூஜிக்க வேண்டுமென்ற பேரவா மத்யாயனர் எனும் பக்தரின் உள்ளத்தில் எழுந்தது. ஆடுவது ஆதிசிவனாராயிற்றே பூஜிப்பதற்கு பனிமலர் பூத்த பூக்களல்லவா வேண்டும். வாடிய பூக்களால் பூஜிப்பது மகாபாவமாயிற்றே என்றெண்ணினார். கூடைகளில் நிரம்பியிருந்த மலர்களைப் பார்த்தார்.

மலர்கள் சருகாக உலர்ந்திருந்தன. அவர் மனமும் வாடிப்போனது. தேன்சிந்தும் மலர்களால் அலங்கரித்து அழகு பார்ப்பவனை, வெற்றுப் பூக்களால் அர்ச்சிப்பதற்கு பதிலாக இவ்வுடலையே விட்டுவிடலாம் என்று வினோதமாகத் தோன்றியது. ஈசனை அடையும் பக்தியில் சுனங்கி அமர்தல் கூடாது என்று நினைத்தார். பாய்ந்தோடும் நதிபோல அதிவிரைவாக எம்பெருமானை அடையத் துடித்தார். அந்த வெற்றுப்பூக்களும், தன் தளர்ந்த உடலும் ஈசனை அடைவதில் எவ்வளவு தடையாக உள்ளது என்று வெறுப்புற்றார். புத்தியில் சட்டென்று பிரகாசமாக ஒளி உதித்தது. மலரும்போதே பூக்களைப் பறித்து பெருமானுக்கு மாலையாக்கிப் போடலாமே என்று புதுமையான சிந்தனை சித்தத்தில் மலர்ந்தது. இரவில் மலரும் பூக்களைப் பார்க்கும் கண்கள் வேண்டுமே என்று தொடர்ச்சியாக சிந்தித்தார். வேகமும், கூர்மையும், நதியாகத் தாவிச் செல்லும் கால்களும் கரங்களுமாக ஓர் பிறவி வேண்டுமே என்று தாபம் அதிகமாகியது.  மனம் குமைந்தார். கண்ணீரால் தில்லை நாயகனின் சந்நதியை நனைத்தார். மெல்ல அவன் திருவடியில் சரிந்தார். ஈசன் சிலிர்த்தான்.

திருப்பாதத்தில் சரிந்தவரைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார். மெல்ல அவரை அணைந்தார். ஆச்சரியமாக அவரின் உருவம் வேறொரு சாயலை நோக்கி நகர்ந்தது. இருகரங்களிலும், கால்களிலும் வலுவேறியது. முகம் குறுகி புலியுரு கொண்டது. கண்கள் அதிகூர்மையாகியது. சக்தியின் திரட்சி உள்ளுக்குள் வேகமாகப் பொங்கியது. நான்கு கால்களும் எப்போதும் தயாரான பாய்ச்சலுக்குத் தயாராக இருந்தன. முகவாயை தூக்கி தலையசைத்தார். இதுவரை ஜகத்தில் இப்படியொரு உருவை யாரேனும் பெற்றிருப்பரோ. என் மனதைப் புரிந்து இவ்வுரு அளித்திருக்கிறாயே எம்பெருமானே... என்று முன்கால்களை நீட்டி, பிடரியையும் முதுகையும் நேர்க் கோட்டில் கிடத்தி, பின்கால்களை வளைத்து நமஸ்கரித்தார். பக்தி பெருந்தீயாக மூண்டெழுந்தது. இப்போது புலியின் முகத்தில் ஒரு கனத்த அமைதி குடிகொண்டது. நாவைப் புரட்டி புரட்டி ஓசையிலாது வேதங்களை எதிரொலிக்கச் செய்ததால் கன்னக்கதுப்புகள் கதும்பிக் கனிந்தன.

இடையறாத மயிர்க்கூச்செறிவினால் வியாக்ரபாதரின் பிடரி மயிர்கள் சிலிர்த்துக் கொண்டே இருந்தன. அகத்திலும், புறத்திலும் பிரானின் நாட்டியம் தொடர்ந்தது. உன்மத்தப் பித்து அதிகரித்தது. புலி வாயுவின் வேகம் கொண்டது. அந்தி சாயும் நேரம் புலிக்கால் முனிவர் வனங்களில் திரிந்து, மொக்குகளாக இருந்த மலர்களை அருகே நின்று கவனித்தது. நிலவின் ஒளியில் மலர்ந்த வெண்பூக்களை தண்டிலிருந்து தடவிப் பிரித்தது. பூக்குள் இருக்கும் சிறுகுடங்களில் தேன் தளும்பி இருப்பதைப் பார்த்து கண்களில் நீர் வழிந்தது. பறித்ததை மொத்தமாக்கி ஈசனின் பாதத்தில் வைத்தது. கண்கள் மூடி ஆனந்த நடனமாடும் நடராஜரை தியானிக்க ஈசன் வெண்மையாக, தன்மையாக வெளிப்பட்டார். வியாக்ரபாதா...என்று ஈசன் திருவாய் மலர்ந்தருள சொக்கிப்போனார். ஈசன் உறையுமிடங்களிலெல்லாம் பூஜிக்க வேண்டுமென பேரவா அதிகரித்தது. நடராஜ நடனத்தின் அலையலில் சிக்குண்டார்.

வார் சடை விரித்தெழும் திக்குகளிலெல்லாம் திரும்பினார். தாம் கண்ட சபாபதியை உலகெலாம் உணரச் செய்தார். பூஜித்த தலங்களெல்லாம் சிதம்பரமாக மாறியது. சிதம்பரமாகவே இருந்த ஓர் தலம் வியாக்ரபாதரை நோக்கி விழி விரியப் பார்த்தது. காவிரியின் நீர்ச்சுழலும், கொள்ளிடத்தில் பொங்கும் அலைக்கும் மத்தியில் ஈசனின் அருள் கரைபுரண்டோடும் அத்தலம் நோக்கி வியாக்ரபாதர் தம் புலிநகப் பாதங்களை திருப்பினார். புலி பாய்ந்தது. வன்னி மரங்களால் சூழப்பட்ட அவ்விடம் தன்னென ஒளிர்ந்தது. வன்னியின் இலைகளில் வெண்ணீற்றின் மணம் பரவிக் கிடந்தது. வியாக்ரபாதர் அத்தலத்தை நெருங்கியபோது பரவசமிக்கவராக லிங்க ரூபத்தில் எழுந்தருளியிருந்த ஈசனின் பாதத்தில் வீழ்ந்து துதித்தார். அந்தி நெருங்க மலர்களின் வாசம் வியாக்ரபாதரை அழைத்தது. கூடைகூடையாக பூக்களை பறித்து அதிகாலையிலேயே அர்ச்சிக்கத் தொடங்கியபோது சிதம்பரநாயகன் அந்த வன்னிமரக்காட்டினில் தாண்டவமாடினான். வியாக்ரபாதர் சுழலில் அகப்பட்ட சருகாக ஈசன் தன் இணையற்ற அருளால் அவரை சுழற்றினார். தேவர்களும், கந்தவர்களும் இதென்ன காட்சி என்று வியந்தனர்.

மலர்தோட்டங்களின் மலர்கள் மணம் பரப்பியது. காவிரியும், கொள்ளிடமும் சாரலாக ஈசனின் ஆடலை தரிசித்தது. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் பெற்ற பெரும்பேரால் இத்தலம் இன்றளவும் பெரும்புலியூர் என்று திருவோடு இணைந்து திருப்பெரும்புலியூர் என்றழைக்கப்படுகிறது. புலியின் வீரத்தைப் புகழ்ந்து பாடிய தமிழர் நாகரிகத்தில் புலியின் பெயரால் பல ஊர்களை வழங்கியுள்ளனர். திருப்பாதிரிப்புலியூர், ஓமாம்புலியூர், எருக்கத்தம்புலியூர் போன்றவை ஆகும். அதேசமயம் வியாக்ரபாதரும் பூஜித்து, தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் திருப்பெரும்புலியூர் என்றாயிற்று. தில்லைக்கூத்தனை பூஜித்த வியாக்ரபாதர் இத்தலத்து ஈசனை பூஜித்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். காவிரி வடகரைத் தலங்கள் 63ல் இது 53வது தலமாகும். ஒவ்வொரு கோயிலினுள் உறையும் சகல சிவகலைகளும் அர்த்தஜாமம் எனும் இரவு பூஜை முடிந்தபின் சிதம்பரத்தில் சென்று ஒடுங்கும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.

ஆனால், திருப்பெரும்புலியூரும், திருவையாறும் சிதம்பரத்திற்கு இணையான தலங்களாக இருப்பதால் அர்த்தஜாம பூஜை ஆனபின்பும் கூட சிவகலைகள் அத்தலத்திலேயே உறையும். ஏனெனில், சிவசக்தியின் ஆதார ரகசியங்கள் நிறைந்த புண்ணிய தலம் திருப்பெரும்புலியூர். சிதம்பரத்திற்கே பெரும்பற்றப்புலியூர் என்றொரு பெயர் உண்டு. அதற்கு இணையான தலமாக திருப்பெரும்புலியூர் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மீது பதிகங்கள் பாடியுள்ளார். அவை ஒவ்வொன்றையும் தம்மீது ஆணை என்பது போன்ற பாவனையில் பாடியிருப்பதுதான் சிறப்பு. இப்பேற்பட்ட பெருமையுள்ள கோயிலை வலம் வருவோமா. பச்சைப் பட்டாடை கட்டிய இயற்கையின் வனப்பில் எழிலோடு அமைந்திருக்கிறது, வியாக்ரபுரீஸ்வரர் கோயில். சிறிய அழகான கிராமம். பெரியதும், சிறியதுமல்லாத நடுவாந்திரமான கோயில். ஆனால், புராணம் புகழும் தொன்மை மிகுந்தது. கீர்த்தியில் விண்ணைவிட உயர்ந்தது. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம்.

கோபுரத்தின் மீதுள்ள சிற்பங்கள் பழமையானவை. கீழ்ப்பகுதி கருங்கற்கலாலும், மேற்புறம் சுதையாலும் ஆனது. கோபுர வாயிலிலிருந்து நேரே பார்க்க மூலவர் தன்னிலவாக பிரகாசிக்கிறார். கோயிலுக்குள் நுழையும்போதே சிவசாந்நித்யத்தில் மனதின் எண்ணங்கள் சட்டென்று அடங்கும் ரசவாதம் நிகழ்கிறது. தறிகெட்டு ஓடும் மனக் குதிரையை கடிவாளம் இருக்குவதுபோல் ஒரு உணர்வு தம் முயற்சியிலாது நடைபெறுகிறது. பாய்ந்த புலியாக வியாக்ரபாதர் இருந்தாலும், சிவபக்தியை பெருக்கித் தரும் யோகியான அவரின் நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது. வியாக்ரபாதர் பூஜித்த லிங்கமல்லவா, இது. காலங்கள் கரைந்தாலும் அருட்கொடையில் அள்ள அள்ள அட்சய பாத்திரமாக இப்படி விளங்குகிறாரே என்றெண்ணும்போது நெஞ்சில் ஒரு விம்மிதம் பரவுகிறது. அதனால்தான் என்னவோ தேவாரப்பதிகங்களில் ‘‘பெரும்புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’’ என்றார்களோ.

சம்பந்தர் ‘‘மண்ணுமோர் பாகமுடையார்’’ எனும் பதிகத்தில் ஈசனின் சகல உயர்நிலைகளையும் காட்டி, இந்தப் பெரும்புலியூரானைப் பிரியாதவர்கள் சிவத்திற்கு சமமாவார் என்கிறார். காலதேச வர்த்தமானங்களைத் தாண்டிய நாயகரல்லவா இவர் என்கிறார். அதுமட்டுமல்லாது இந்தப் பெரும்புலியூர் பெருமானை வழிபடுவோர் ‘‘தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினராய் நீடுலகத்திருப்பாரே’’ என்று நம்பிக்கையோடு ஆசி கூறுகிறார். சகல ஞானிகளும் வீழ்ந்து பரவித் துதித்த பெரும்புலியூர்நாதரை பணிய பெருவாழ்வு தந்தருள்வார் என்பது திண்ணம். வியாக்ரபுரீஸ்வரரின் சந்நதியில் மூழ்கியெழுந்து சௌந்தரநாயகி அம்பாளின் சந்நதிநோக்கிச் செல்வோம். நின்றகோலத்தில் அழகிய வடிவம். மெல்லிய புன்னகை பேரின்பம் பெருக்கும் தேவி இவள். வேண்டுவன கேள் தருகிறேன் என்பதுபோன்ற அபயஹஸ்தமும், இடக்கரத்தை சற்றெ மடித்து தயார் நிலையில் இருக்கும் கோலமும் ஆச்சரியமூட்டுகிறது.

அம்பாளின் திருமுகத்தை உற்றுப்பார்க்க அழகிய திருக்கண்கள் அமுதைப் பொழியும். கொடுத்துச் சிவந்த அந்த திருக்கரங்கள் மாயை எனும் கடலில் வீழ்வோரை நேசக்கரம் கொண்டு தூக்குவாள். ஞானத்தைத் தந்து பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவிப்பாள். வேறெங்கும் காணமுடியாத ஒரு அற்புதம் வெளிப்பிராகாரத்திலுள்ள கருவறை அமைந்த இடம் தாமரை பீடத்தின் மீது அமைந்திருப்பதே. சிற்பநுட்பங்கள் வாய்ந்த கமலபீடம் பார்ப்பதற்கு அரிதானது, அதேசமயம் அழகானது. தாமரையின் மீது அமைந்துளள் இக்கோயில் மகாலட்சுமியை நினைவுபடுத்துகிறது. அருவமாக லட்சுமி தேவியார் இங்கு அமர்ந்து பூஜிக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது மட்டுமல்லாது குண்டலினி எனும் யோகசக்தியானது ஸஹஸ்ராரம் எனும் ஆயிரம் தாமரை இதழ்களாக விரிவடைவதுபோல், இத்தலத்தை தரிசிப்போர் யோகசக்தியில் சிறந்து விளங்குவர் என்கிறார்கள். ஏனெனில், வியாக்ரபாதரோடு எப்போதும் உடனிருக்கும் பதஞ்சலி முனிவர் யோகத்திற்கே அதிபதி என்பதை பதஞ்சலி யோகசாஸ்திரமே சான்று.

அதுபோல வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இரட்டையர்கள்போல விளங்கினார்கள் என்பது வரலாறு. வியாக்ரபாதரோடு அவரும் இங்கமர்ந்து யோகத்தை போதித்திருக்கலாம் என்றும் அந்தச் சக்தியை பொதித்திருக்கலாம் என்றும் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக மலர்ந்திருக்கும்  இந்த தாமரைபீடத்தையும், அதன் மேல் எழுப்பப்பட்டிருக்கும் கருவறை விமானத்தையும் காட்டுகிறார்கள். பிராகாரத்தில் சூரியன், விநாயகர் சந்நதிகள் உள்ளன. சுப்ரமணியர் சந்நதி அழகுற அமைந்துள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பெருமை பெற்றது. மேலும் கோயிலை நாடறியச் செய்த மகான் சுந்தரசுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது. இக்கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவெனில் நவகிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்திருக்கிறது.

இதுவொரு அரிதான கோலம். கருவறை கோஷ்டமூர்த்தங்களாக தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அர்த்தநாரீஸ்வரரும், வடக்கே ஷண்டேசர் அமர்ந்திருக்கிறார்கள். கோயிலை முழுமைப்படுத்துகிறார்கள். இத்தனை பெருமைகள் பெற்ற இத்தலம் பெரும்பான்மையான மக்களால் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மீண்டும், ‘‘பெரும்புலியூரானைப் பேசாநாளெல்லாம் பிறவா நாளே’’ என்கிற பதிகவரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இத்தலத்திலேயே சுந்தரராசப் பெருமாள் கோயில் எனும் திவ்யதேசத்திற்கு இணையான கோயில் உள்ளது. இதுவும் பழம்பெருமைமிக்க கோயிலாகும். தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெரும்புலியூர்.
 
கிருஷ்ணா

படங்கள்: சி.எஸ். ஆறுமுகம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்