SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லோரும் கொண்டாடுவோம்

2018-06-14@ 15:40:29

முஸ்லிம்களின் ஈமான் எனும் கோட்டையின் பலமிக்க ஐந்து தூண்கள், இறைவன் ஒருவன், அவனது தூதர் அண்ணல் முகமது (ஸல்) என ஒப்புக்கொள்ளும் கலிமா, தினமும் ஐவேளை தொழுகை, ரமலான் மாதம் முழுவதும் நோன்பு, ஏழைகளுக்கு செலுத்தும் வரி எனும் ஜகாத், வசதிபடைத்தோர் வாழ்நாளில் ஒருநாளேனும் மேற்கொள்ள வேண்டிய புனித ஹஜ் இவைதான் அந்த ஐந்து கடமைகள் எனும் தூண்கள். இதில் 3வதுதான் நோன்பு. ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் நன்மை எது, தீமை எது என்று பிரித்து அறிந்து நேர்வழி காட்டும் அருள்மறையாம் திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் புனிதமிக்க இரவு வருகிறது. ரமலான் மாதத்தின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் இந்த இரவை அடையலாம்.

ரமலான் மாதத்தில்தான் பிற நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டது. நபி மூஸா அவர்களுக்கு தவ்ராத் எனும் வேதமும், தாவூது நபி அவர்களுக்கு ஜபூர் வேதமும், நபி ஈசா அவர்களுக்கு இன்ஜீல் வேதமும், நபி முகமது ரசூலே கரீம் ஸல் அவர்களுக்கு புர்க்கான் எனும் வேதமும் இந்த ரமலான் மாதத்தில்தான் அருளப்பட்டது. எனவே பாவங்களை கரைத்து புண்ணியம் சேர்க்கும் புனித மாதம் ரமலான். நோன்பு என்பது வெறுமனே உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டுமல்ல. மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியாள்வதாகும். தீயதை பார்க்காமலும், கெட்டதை கேட்காமலும், ஆபாச எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்காமலும் இருப்பதுதான் நோன்பின் மாண்பாகும்.

நோன்பு எதற்காக? பசியை உணர்வதற்காகவோ, ஏழையின் நிலையை உணர்வதற்காகவோ இல்லை. அப்படியிருந்தால் ஏழைகளுக்கு நோன்பு கடமை இல்லை என்றாகி இருக்கும். ஆனால், ஏழை, பணக்காரன் மட்டுமல்ல, அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான நோக்கம் உண்மையான தக்வா எனப்படும் இறையச்சத்தை ஒரு அடியான் அடைய வேண்டும் என்பதுதான். ரமலான் மாதத்தை அடைந்த ஒரு முஸ்லிம், அதை பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாக கழித்து விட்டால் அவன் நாசமடைந்துவிட்டான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு ரமலானுக்கும் அடுத்த ரமலானுக்கும் இடையில் எத்தனையோ பாவங்களை நாம் செய்கிறோம். அதிலிருந்து விடுபடுவதற்கு ரமலான் மாதத்தை விட்டால் வேறு வழியே இல்லை. ஏனென்றால் பாவங்களை போக்குகின்ற புண்ணிய மாதம் இது. இந்த மாதம் முழுவதும் தன்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்களை இறைவன் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்கிறான்.

நபி மூஸா அவர்களிடம் இறைவன் நேரடியாக பேசுவது வழக்கம். அப்போது ஒருமுறை நபியே நான் உங்களிடம் 70 திரைகளுக்கு அப்பாலிருந்து பேசுகிறேன், ஒரு காலம் வரும், எனது இறுதித்தூதர் முகமதுவின் உம்மத்துக்கள் எனப்படுபவர்கள் ரமலான் மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன் தொடங்கி சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், மனோ இச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் நோன்பு இருந்து அதை திறக்கும் வேளையில் என்னிடம் பேசுவார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த திரையும் இருக்காது. நேரடியாக அவர்களிடம் நான் பேசுவேன் என்று கூறியிருக்கிறான். இதிலிருந்தே ரமலான் நோன்பின் மாண்பை உணரலாம். எனவே இந்த மாதத்தை அடைந்தவர்கள் அடுத்து வரும் ரமலானை நாம் அடைவோமா இல்லையா என நமக்குத் தெரியாது எனவே இப்போதே பாவ மன்னிப்பை வேண்டிப் பெறுவதுடன் வணக்க வழிபாடுகளை அதிகரிப்பதன் மூலம் சொர்க்கத்தையும் பெறலாம்.

ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் இறைவன் நற்கூலி அருளுகிறான். அதேசமயம் நோன்புக்கு நானே கூலிதருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதால் அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணரலாம். எனது அடியான் உண்மையான இறை அச்சத்துடன், அருமையான உணவுப் பொருட்கள், பானங்கள் எல்லாம் இருந்தும் அதை உண்ணாமல், பருகாமல், பகல் பொழுதுகளில் உடலுறவு கொள்ளாமல், இரவில் அதிக நேரம் விழித்திருந்து தொழுகை, திக்ரு போன்ற வணக்கங்களில் அதிகம் ஈடுபடுவதால் அவனுக்கு நானே கூலிவழங்குகிறேன் என்று அல்லாஹ் அகமகிழ்ந்து கூறுகிறான்.சொர்க்கத்தில் ‘அர்ரய்யான்’ என்றொரு வாசல் உண்டு. அந்த வாசல் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைய முடியும். நோன்பாளிகளே வாருங்கள் என்று அந்த வாசல் அன்போடு அழைக்கும். அவர்கள் அனைவரும் நுழைந்தவுடன் அந்த வாசல் மூடப்படும். வேறு எவருக்கும் அது திறக்கப்படாது.

ரமலான் மாதத்தில் செய்கின்ற ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பல மடங்கு பலன்கள் உண்டு  இந்த மாதத்தில் சொர்க்கத்தின் கதவு திறக்கப்படுகிறது, நரகத்தின் கதவு பூட்டப்படுகிறது. இந்த ஒரு மாதத்தில் புலனடக்கத்தை மேற்கொள்வதற்கு பெற்ற பயிற்சியை மற்ற 11 மாதத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒரு மாதம் முழுவதும் பகல் பொழுதெல்லாமல் உண்ணாமல், பருகாமல், தாம்பத்ய உறவு கொள்ளாமல் விரதம் இருக்கும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் பரிசுதான் நோன்பு பெருநாள் எனும் ஈகைத் திருநாளாகும். இந்த பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னதாகவே அல்லாஹ்வின் கட்டளைப்படி குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைப்படி தலா 3,200 கிராம் அரிசி (ஷாபி) என்று கணக்கிட்டு ஏழைகளுக்கு (நாம் சாப்பிடும் அதே அரிசியை) வழங்குவோம். அவர்களும் நோன்பு பெருநாளை நல்ல முறையில் கொண்டாட உதவுவோம்.

உடன்குடி அப்துல்லாஹ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்