SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொறுமையின் இருப்பிடம்

2018-06-14@ 15:39:50

மக்கா நகரில் இருந்து மூதாட்டி ஒருவர் தனது துணி மூட்டைகளை சுமந்துகொண்டு ஒருநாள் வேகம் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வெயிலோ மண்டையை பிளக்கும் அளவுக்கு கொதித்தது. துணி மூட்டையின் பாரம் தாங்க முடியாமல் அந்த மூதாட்டி சிறிது தொலைவிலேயே மிகவும் கஷ்டப்பட்டு நடை தளர்ந்து தள்ளாடி தள்ளாடி சென்றார். அவ்வழியாக வந்த நபிகள் நாயகம் மூதாட்டியை பார்த்தார். ஓடோடி சென்று, ‘அம்மா, நீங்கள் விரும்பினால் உங்கள் மூட்டைகளை நான் சுமந்து வருகிறேன்’ என்று அன்போடு கூறி அவற்றை வாங்கி தனது தலையில் சுமந்து சென்றார். வழியில் மெல்ல பேசத் தொடங்கினார் அந்த மூதாட்டி.

‘இந்த ஊரிலே முகம்மது என்றொரு நபர் இருக்கிறாராம், அவர் எல்லோரையும் மதம் மாற்றி விடுகிறாராம், மிகவும் பொல்லாதவராம். அதனால்தான் நான் இந்த ஊரையே காலி செய்துவிட்டு போகிறேன்’ என்று கூறிய மூதாட்டி வழியெங்கும் நபிகளாரை பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவதூறாக பேசியபடி சென்றுள்ளார். அவர் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டபடி எந்த பதிலும் கூறாமல் உடன் நடந்துள்ளார் நபிகள் நாயகம். அந்த மூதாட்டி செல்ல வேண்டிய இடம் வந்ததும், அம்மா இந்தாருங்கள் உங்கள் மூட்டை, நான் வருகிறேன் என்று நபிகள் கூறவும், ‘அப்பா… எனக்கு யாருமே உதவி செய்ய முன்வராதபோது நீயாக வந்து இவ்வளவு தூரம் மூட்டைகளை தூக்கி வந்திருக்கிறாய், மிகவும் நன்றி, நீ யாரப்பா?’ என்று அந்த மூதாட்டி கேட்டார்.

‘அம்மா இவ்வளவு நேரமும் நீங்கள் யாரைப்பற்றி பேசினீர்களோ அந்த முகம்மது நான்தான்’ என்று புன்னகை தவழ நபிகளார் பதில் அளித்தார். அந்த மாத்திரத்திலேயே மூதாட்டி மனம் நெகிழ்ந்து, ‘உன்னையா பொல்லாதவன் என்று கூறுகிறார்கள், நான் அவ்வளவு ஏசியும் பேசியும் கோபப்படாமல் எனது மூட்டைகளை சுமந்து வந்தாயே ‘என்று அழுதபடி கூறி அப்போதே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இதேபோல இன்னொரு சம்பவம். நபிகள் நாயகம் நடந்து செல்லும் பாதையில் தினந்தோறும் ஒரு பெண் காத்திருந்து அவரது மேனியில் குப்பையை கொட்டி வந்துள்ளார். அதை உதறிவிட்டு எதுவுமே பேசாமல் நாயகமும் சென்றுள்ளார். ஒருநாள் அந்த பெண் குப்பை கொட்ட வரவில்லை.

அவர் வசிக்கிற வீட்டை ஏறிட்டு பார்த்தார் நாயகம். யாருமில்லை. அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது அந்த பெண்மணிக்கு உடல் நலமில்லை என்று. உடனடியாக அவரது வீட்டுக்குள் சென்று படுக்கையில் இருந்த அந்த பெண்மணியிடம் உடல் நலம் விசாரித்துள்ளார்.அவர் குணம் அடைய பிரார்த்தனை செய்தார். உங்களை எவ்வளவு அவமானப்படுத்தினேன், உங்கள் திருமேனியில் குப்பைகளை கொட்டினேனே, அப்படியிருந்தும் என்னை நலம் விசாரிக்கிறீர்களே, உங்களது பொறுமைக்கு நான் கட்டுப்படுகிறேன், இப்போதே இஸ்லாத்தை ஏற்கிறேன்’ என்று கண்ணீர் விட்டார் அந்த பெண்.
 
இர்பானா ரியாஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்