SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தையின் பரிசு

2018-06-14@ 15:39:08

அம்மா… அம்மா பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கதீஜாவின் மழலைக்குரல் கேட்டு ஓடிவந்து கட்டித்தழுவி உச்சிமுகர்ந்தாள் மும்தாஜ். அரசு பள்ளியில் 3ம் வகுப்பு மாணவி கதீஜா. படிப்பில் படுசுட்டி. பையை வேகமாக திறந்து,  நோட்டை எடுத்து  காட்டி, ‘அம்மா டீச்சர் எனக்கு நூற்றுக்கு நூறு மார்க் போட்டிருக்காங்கம்மா’ என்றாள். ‘உனக்கென்னடா செல்லம் நீதான் நல்லா படிப்பியேம்மா’ என்று கூறி நெட்டி முறித்து செல்ல மகளுக்கு திருஷ்டி கழித்தாள் மும்தாஜ். அப்பா எப்ப வருவாங்கம்மா? வேலை முடிஞ்சதும் நேரா டைலர் கடைக்கு போய் நம்ம துணிகளை வாங்கிட்டுதான் வீட்டுக்கு வருவார். அப்பா வந்ததும் எல்லாரும் ஒண்ணா நோன்பு தொறக்கலாம். அம்மா நான் விடாமல் அத்தனை நோம்பையும் பிடிக்கிறதால பள்ளியில் மற்ற பசங்கள்ளாம் ரொம்ப ஆச்சரியமா பார்க்கிறாங்கம்மா. எப்படி உன்னால சாப்பிடாம, தண்ணி குடிக்காம இருக்க முடியுதுன்னு கேட்கிறாங்கம்மா...

அதுதான் நமக்கு அல்லாஹ் தந்த அருள். வெயிலோ, மழையோ, குளிரோ எதுவானாலும் அதுக்குத் தகுந்தபடி நமக்கு நோன்பு இருக்க போதுமான சக்தியை அல்லாஹ் தருகிறான். அதனாலதான் நம்மளால ஈசியா அதை கடைப்பிடிக்க முடியுது. சரி நீ போய் கை, கால் கழுவிட்டு கொஞ்ச நேரம் ஓதிக்கிட்டு இரும்மா... நான் நோன்பு திறக்க கஞ்சி, வடை எல்லாம் ரெடி பண்ணுறேன். மாலை 4.30 ஆகிவிட்டதால் அடுக்களைக்குள் நுழைந்து இப்தார்க்கு தேவையான உணவு தயாரிப்பில்  மும்தாஜ் மும்முரமானாள். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இக்பால், வேலை முடிந்து 6 மணியளவில் வீடு திரும்பினான். அவனது ஸ்கூட்டர் வீட்டு வாசலில் நிற்கும் சத்தம் கேட்டதும் ஓடி வந்தாள் கதீஜா. ‘வாப்பா வந்துட்டாங்கம்மா’ என்று குரல் கொடுத்தபடி வெளியே வந்தவளை கட்டிப்பிடித்துக்கொண்டான் இக்பால்.

‘என்னம்மா கண்ணு இன்னைக்கு டெஸ்ட் பேப்பர் குடுத்துட்டாங்களா?  நீதானே பர்ஸ்ட்’ என்று ஆசையாக ஃகேட்டபடி  டைலர் கடையில் வாங்கிய பார்சலை மகளிடம் நீட்டினான். ஆமாம்பா நான்தான் எல்லாத்திலேயும் நல்ல மார்க் வாங்கியிருக்கேன். மகளின் செல்லக்குரலில் கரைந்து போனான் இக்பால்.  
‘‘ அடி சமத்துக்குட்டி. உன்னோட பெருநாள் டிரஸ் எப்படி இருக்கு? உனக்கு  பிடிச்சிருக்கா”.‘ஆமாம்பா ரொம்ப நல்லாருக்குப்பா’ என்றவள் திடீரென அமைதியானாள். காரணம் புரியாமல் மகளை பார்த்தான் இக்பால். நாம கொஞ்சம் வசதியா இருக்கோம். நல்ல டிரஸ், சாப்பாடு எல்லாம் கிடைக்குது. ஆனா என் கூட படிக்கிற சல்மா வீட்டில பாவம்பா. ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்களும் இந்த பெருநாளை சிறப்பா கொண்டாட நாம ஏதாவது உதவி செய்யணும்பா. கண்டிப்பா செஞ்சிடலாம். அதுக்குத்தான் ஜகாத்துன்னு நமக்கு கடமையே இருக்கும்மா. ஏழை பாழைகளுக்கு உதவி செய்ய நம்ம வருமானத்திலே குறிப்பிட்ட அளவு ஒதுக்கிடுறோமே.

அது எல்லாம் நீங்க நிறைய பேருக்கு செய்றீங்கப்பா. இந்த தடவை உண்டியல்ல சேர்த்து வச்ச பணத்துக்கு என் ஃப்ரண்ட் சல்மாவுக்கு புது துணி எடுத்துக் கொடுக்கலாம்னு ஆசையா இருக்குப்பா. செய்யலாமா? தன்னை ஆச்சர்யமாக பார்த்த தந்தையிடம் கதீஜா, ‘இந்த நோம்பு தொடங்கியதில இருந்து நீங்க எனக்கு தினமும் 10ரூபாய் தந்தீங்களே அதை எல்லாம் உண்டியல்ல போட்டு சேர்த்து வச்சிருக்கேன். அதோடு நம்ம சொந்தக்காரங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் கொடுக்கிற பணத்தையும் சேர்த்து வச்சிருக்கேம்பா’ என்றாள். இவ்வளவு சின்ன வயதிலே மகளுக்கு இவ்வளவு தர்ம சிந்தனையா என்று அப்படியே திகைத்து நின்றான் இக்பால். மகள் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்த மும்தாஜ், ‘நீ ஆசையா சேர்த்துவச்ச காசை எல்லாம் தோழிக்கு கொடுக்கிறேன்னு சொல்றியேம்மா... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு செல்லம். இப்படித்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவணும்’ என்று சொன்னாள்.

‘‘நாம மட்டும் இல்லை, அண்டை அயலாரும் மகிழ்ச்சியா பெருநாளை சிறப்பா கொண்டாடணும்கிறது தானே நம்ம குர்ஆனும் சொல்லுது, நபிகள் நாயகமும் சொல்லி இருக்கிறாங்க. அதை அப்படியே பின்பற்றுவோம். உன் தோழிக்கும் நல்ல டிரஸ் எடுத்து கொடுப்போம்” என்று சிரித்தபடி கூறினான் இக்பால்.
உடனே மகளை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றான் இக்பால். உண்டியல் பணத்தோடு கூடுதலாக ஒரு தொகையையும் போட்டு, அழகான கவுன் வாங்கி தந்தான். வீடு திரும்பியதும்  புத்தாடையை பெருநாள் பரிசாக தர தனது தோழி சல்மா வீட்டை நோக்கி ஓடினாள் கதீஜா.

ஏ.ஜீனத்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்