SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குர்ஆன் தெரிந்து கொள்வோம்!

2018-06-14@ 15:35:34

முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் மாதமான ரமலான் மாதத்தின் 30 தினங்களில் கடைசி 10நாட்களின் ஓர் ஓற்றைப்படை இரவில்தான் ‘திருக்குர்ஆன்’ இறக்கியருளப்பட்டது. இவ்வேதம் இறைவனால் வானவர் தலைவர் ஜிப்ரீல் வாயிலாக முகம்மது நபிகளாருக்கு அருளப்பட்டது. குர்ஆன் எனும் சொல்லுக்கு ‘ஓதப்படுவது’ அல்லது ‘தொகுக்கப் பெற்றது’ என்று பொருளாகும். எழுத, வாசிக்க அறிந்திராத முகம்மது நபிகளாரிடம், வானவர் தலைவர் ஜிப்ரீல் இறைவனிடமிருந்து வசனங்களைக் கொண்டு வந்து ஓதிக்காட்டுவார். அதை அப்படியே நபிகளார் மனனமிட்டு, தம் தோழர்களுக்கு ஓதிக்காட்ட, தோழர்கள் அவற்றை பதிவு செய்து பாதுகாத்து வந்தார்கள். பிறகு இது தொகுக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. நபிகளார் தமது 41வது வயதில் மக்கா அருகில் ஹிரா குகையில் தங்கியிருந்தபோது, ஆரம்பமாக குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பட்டன. இதன்பிறகே முகம்மது அவர்கள் நபியாக, இறைத்தூதரானார்.

அப்போதிருந்து அன்னார் மறையும் வரை 23ஆண்டு காலம் சிறிது சிறிதாக குர்ஆன் அருளப்பட்டு நிறைவடைந்தது. இந்த 6ஆயிரத்து666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன், எந்த வேதமும் ஆராயப்படாத அளவிற்கு ஆராயப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஸபர்(மேற்கோடு), ஸேர்(கீழ்கோடு), பேஷ் (மேல்வளைவுக்கோடு), ஷத்து(அழுத்தல்குறி), மத்து (நீட்டல்குறி) என்று மூல நூலிலிருந்து ஒரு துளியும் மாறுபடாது இன்றளவும் தொடர்வதை பல்வேறு ஆய்வறிஞர்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆரம்ப காலமே மிகத்துல்லியமாக குர்ஆன் கணக்கிடப்பட்டதால் எவரும், எக்காலத்திலும் யாதொரு வசனத்தை, சொல்லை, எழுத்தை, புள்ளியை, அடையாளக்குறியை, எதையும் கூட்டிக் குறைக்க, எந்த மாறுதலும் செய்யச் சாத்தியப்படாதவாறு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியத் தரத்தில் உயர்வுடன், அதேநேரம் அடிநிலை மனிதரும் அறிந்திடும் எளிமையில் திருக்குர்ஆன் மிளிர்கிறது. சமய அறிஞர்கள் கூறுகையில், ‘‘ஆணவத்தால், அறியாமையால் அழிந்து போன ‘ஆது’, ‘ஸமூது’ போன்ற சரித்திரத்திற்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம், கடந்த காலத்தை திருக்குர்ஆன் காட்டுகிறது. புனித வாழ்வின் தினசரி நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு பிரச்சினைகளுக்கும் வழிகாட்டுவதால் நிகழ்காலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. மறு உலக வாழ்வையும் எதிர்கால முன்னறிவிப்பையும் கூறுவதால் எதிர்காலத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது. முக்காலத்திற்கும் பொருந்தியதாக இந்த திருக்குர்ஆன் இருக்கிறது’’ என்கின்றனர். கடந்த 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூலப்பிரதி பாதுகாக்கப்பட்டு வரும் வேதமாக திருக்குர்ஆன் இருக்கிறது.

உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட மூலப் பிரதிகளில் சில ஈராக்கின் பாக்தாத் மியூசியம், ரஷ்யாவின் தாஷ்கண்ட் மற்றும் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள டாப்காப்பி அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆன் உலக மொழிகள் அத்தனையிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. மவுனம் காட்டுகிறது திருக்குர்ஆன் திருக்குர்ஆனை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டு மருத்துவ அறிஞர் டாக்டர் மாரிஸ் புகைல், ‘தி பைபிள் தி குர்ஆன் அண்டு ஸைன்ஸ்’ நூலில், ‘விஞ்ஞானத்தோடு எங்கேயும் திருக்குர்ஆன் மோதவில்லை. அப்படி மோதல் இருப்பதாக யாரும் குறிப்பிட்டால் இதற்கென 2 காரணங்களே இருக்கும். நிரூபிக்கப்படாத உண்மைகளை பொருத்திப் பார்த்தால் திருக்குர்ஆனுக்கும், விஞ்ஞானத்திற்கும் இடையில் மோதலாக தோன்றலாம். அது உண்மையல்ல.

மற்றொன்று திருக்குர்ஆனின் வசனங்களுக்கு எடுத்துக் கொண்ட பொருள் அல்லது மொழிபெயர்ப்பில் தவறிருக்கலாம்’ என்கிறார். பூமி சூரியனை, சந்திரன் பூமியை சுற்றுவது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள். இதனை திருக்குர்ஆன் ஊர்ஜிதப்படுத்தும், இல்லையெனில் மவுனமாக இருந்துவிடும். முரணான கருத்துக்களைக் கூறாது. ‘சூரிய குடும்பம் எப்போது தோன்றியதோ அப்போதுதான் உலகம் தோன்றியிருக்க வேண்டும்’ என்கிறது அறிவியல். இன்றிலிருந்து நான்கரை பில்லியன், அதாவது 50 கோடி ஆண்டுகளுக்கும் முன்னே இந்த சூரியக் குடும்பம் தோன்றியதை அறிவியல் சொல்கிறது. திருக்குர்ஆன் உலகம் தோன்றிய நாள் குறித்து எந்தக் குறிப்பும் தரவில்லை. அறிவியலுக்கு மாறான தவறான குறிப்பு தராமல், மவுனமாகவே இருக்கிறது.

இலக்கியத் திறனில் வெளுத்துக்கட்டும் வேதம் திருக்குர்ஆன் ஒப்பிலா இலக்கியத் திறனிலும் வெளுத்துக் கட்டுகிறது. ஆய்வோடு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகுவோரை வியப்பில் வீழ்த்துகிறது.‘ஸப்அ ஸமாவத்’ என்ற வார்த்தை 7 வானங்களை குறிப்பதாகும். இவ்வார்த்தை திருக்குர்ஆனில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது. ‘மாதம்’ என்பதைக் குறிக்கும் வார்த்தை ‘ஷஹ்ரு’ என்பதாகும் இது 12 தடவைகளும், ‘நாள்’ என்பதைக் குறிக்கும் ‘யவ்மு’ என்ற வார்த்தை 365 தடவைகளும், இரு நாட்கள், பல நாட்கள் பொருள் தருகிற ‘யவ்மய்னி அய்யாமு’ எனும் வார்த்தை 30இடங்களிலும் இடம் பெற்று ஒரு நாள், வார, மாத, ஆண்டுக் கணக்கீட்டை கண்களுக்குக் காட்டுகின்றன.

மேலும் ‘ஈமான்’ என்றால் மனஉறுதியைக் குறிக்கும். இச்சொல்லை 25இடங்களில் உபயோகிக்கும் திருக்குர்ஆன், அதற்கு எதிர்ப் பதமாகிய ‘குஃப்ரு’ என்ற வார்த்தையை அதே 25இடங்களில் மட்டுமே சமமாக உபயோகித்து சிந்திக்க வைக்கிறது. ‘மலாஇகத்’ என்ற வார்த்தையை திருக்குர்ஆன் 68 இடங்களிலும், ‘ஷைத்தான்’ என்ற வார்த்தையை 68 இடங்களிலும் திருக்குர்ஆன் சமமாக கையாள்கிறது. இது மனிதனை தன் வழிப்படுத்திட இவ்விரண்டு சக்திகளும் சம பலத்துடன் போராடுகி்ன்றன என்பதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவ்வுலகத்தைக் குறிக்கும் ‘துன்யா’ என்ற வார்த்தை 115 இடங்களிலும், மேலுலகத்தைக் குறிக்கும் ‘ஆகிரத்’ என்ற வார்த்தை 115 இடங்களிலும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. இது இவ்வுலகம் இருப்பது எந்த அளவு உண்மையோ, அந்தளவு மறு உலகமிருப்பதும் உண்மையே, எனவே மறு உலக வாழ்விற்கென தீமைகள் தவிர்த்து, நன்மைகள் புரிவது அவசியம் என்பதைக் காட்டி நிற்கிறது.

கணக்கீடுகளிலும் வியப்பில் வீழ்த்தும் வேதம் திருக்குர்ஆன் மகத்தான கட்டுமானம் கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு உட்பட்ட போதும் தீர்க்கமான முடிவினையே காட்டி, வியப்பில் வீழ்த்துகிறது. நான்கு வகை வேதங்களே நபிமார்களுக்கு வழங்கப்பட்டதாகும். இத்துடன் சிற்சில சட்டங்கள் அடங்கிய 110 ‘சுஹ்புகள்’ உள்ளன. இத்தனையும் திருக்குர்ஆனில் அடக்கம் என்பதைக் காட்டும் விதத்தில் திருக்குர்ஆன் 114 அத்தியாயங்கள் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஆராய்ந்தால், இந்த 114 அத்தியாயங்களின் கருத்துகளும் ‘சூரத்துல் பாத்திஹா’ என்ற ஒரு பகுதிக்குள் அடக்கம் என்பதை காட்டும் விதத்தில், இந்த சூரத்துல் பாத்திஹாவை 114 எழுத்துக்களில் அல்லாஹ் அமைத்திருப்பது அறியப்படுகிறது. இதுபோலவே, இந்த 114 அத்தியாயங்கள்தான் ‘உண்மைக் கல்வி’ என்பதை விளக்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் ‘எனது இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து என்று கூறுவீராக’ என்ற கருத்தை உள்ளடக்கிய
‘வ குர்ரப்பி ஸித்னி இல்மா’ என்ற திருவசனத்தை 114வது வசனமாக இறைவன் திருக்குர்ஆனில் இடம்பெறச் செய்திருப்பதும் வியப்பு நிறைக்கிறது.

இன்னும், ‘பிஸ்மில்லாஹ்’வின் எழுத்துகள் 19, திருக்குர்ஆனில் 114 இடங்களில் ‘பிஸ்மில்லாஹ்’ இடம்பிடித்திருக்கிறது. இந்த 114ஐ, 19ஆல் மீதமின்றி வகுத்திட முடியும். மேலும், ‘பிஸ்மில்லாஹ்’வில் இடம்பெறும் இறைவனின் 3பெயர்களும், திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை இடங்களில் வருகின்றதோ அவைகளை 19ஆல் மீதமின்றி வகுக்கலாம். ‘அல்லாஹ்’ 2698 இடங்களிலும், ‘ரஹீம்’ 114 இடங்களிலும், ‘ரஹ்மான்’ 57 இடங்களிலும் வருகின்றன. அத்தனையும் மீதமின்றி வகுபடுகின்றன. பொருளுணர்ந்து வாசிக்க வேண்டும் திருக்குர்ஆனை ஏதோ கடமைக்கென மனனமாக, பொருள் தெரியாமல் ஓதுதல் கூடாது. ‘‘மேலும் தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது, அவற்றை குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை’’ என்கிறது அல்குர்ஆன்(25:73). பல்வேறு அத்தாட்சிகளைச் சுட்டிக்காட்டும் திருக்குர்ஆன், அவற்றைச் சிந்திக்குமாறு மனிதர்களை வலியுறுத்துகிறது.

திருக்குர்ஆனின் திருவசனங்களுக்கான விளக்கம், திருக்குர்ஆனிலேயே இருக்கிறது. ஒரு வசனம் படிக்கும்போது அதற்குரிய விளக்கம் கிடைக்கா விட்டால், அதனைக் குறித்து வைத்து தொடர்ந்து படித்தால் விளக்கம் பெற்றுவிடலாம். ‘‘(நபியே) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக’’ என்கிறது அல்குர்ஆன்(38:29).
திருக்குர்ஆனின் அறைகூவல்! திருக்குர்ஆன்(17:86), ‘‘(நபியே) நீர் கூறும்! மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து, இதைப்போன்ற ஒரு குர்ஆனை கொண்டு வர முயற்சித்து, அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாக இருந்தபோதிலும் இதைப்போல கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது’’ என்று சவாலிடுகிறது.

இதுதவிர, ‘‘..(நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும், இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து (சூராக்களை) அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள்’’ என்றும் திருக்குர்ஆன்(11:13) மறு சவாலிடுகிறது. இத்தோடு இல்லாமல், திருக்குர்ஆன் (2:22), ‘‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களை அழைத்துக் கொண்டு இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தை(சூராவை) அமைத்துக் கொண்டு வாருங்கள்’’ என்றும் தொடர் சவாலிடுகிறது. ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் என்று சவாலிட்ட திருக்குர்ஆன், பின்னர் ஒரு வசனத்தையேனும் கொண்டு வாருங்கள் எனச் சவாலிட்டது. அரபுலக மொழி பண்டிதர்களாலும், இலக்கண இலக்கிய மேதைகளாலும் இன்று வரை திருக்குர்ஆனின் இந்த எந்தச் சவால்களையும் ஏற்க முடியவில்லை.
 
இபுராகிம் மைந்தன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்