SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு

2018-06-14@ 15:30:31

(கால வரிசைப்படி  ஹிஜ்ரத் முதல் புலம்பெயர்தல் வரை)

நபியின் பிறப்பு: மக்காவில். யானை ஆண்டு, ரபீயுல் அவ்வல் 9, ( ஏப்ரல் 22, கி.பி. 571)  அவருடைய தந்தை அப்துல்லாஹ் நபிகளார் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார்.
வயது 24: பாலூட்டுவதற்காக செவிலித் தாயார் ஹலீமா அல்சாதியா குழந்தை முஹம்மதைக் கொண்டு சென்றார்.
வயது 6: அவருடைய தாய் ஆமினா குழந்தை முஹம்மதை யத்ரிபுக்கு(இன்று மதீனா) அழைத்துச் சென்றார். மக்காவுக்குத் திரும்பி வரும் வழியில் அப்வா எனுமிடத்தில் தாய் காலமானார். சிறுவரைப் பாதுகாக்கும் பொறுப்பைப்  பாட்டனார் அப்துல்
முத்தலிப் ஏற்றுக்கொண்டார்.
வயது 8: பாட்டனார் அப்துல் முத்தலிப் மறைந்தார். முஹம்மதின் பெரிய தந்தை அபூதாலிப் அவரைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தப் பாதுகாப்பும் பராமரிப்பும் அடுத்து வரக்கூடிய
42 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
வயது 10: ஆடுகள் மேய்த்தார்.
வயது 12: பெரிய தந்தையுடன் இணைந்து பசராவுக்குப் பயணம் சென்றார். அங்கு பஹிரா எனும் கிறிஸ்தவத் துறவி சிறுவர் முஹம்மதிடம் நபித்துவத்துக்கான அடையாளங்கள் இருப்பதைக் கண்டுகொண்டார். உடனே பெரிய தந்தையிடம் சிறுவரை சிரியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம், அங்கு யூதர்களால் அவருக்கு ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தினார். ஆகையால் அவர் மக்காவுக்குத் திரும்பிவிட்டார். முஹம்மத் ஃபிஜார் போரில் கலந்துகொண்டார். ஹில்புல் ஃபுளுல் எனும் அமைதிக் குழுவில் இணைந்து பணியாற்றினார்.
வயது 25: மக்காவிலுள்ள வணிகச் சீமாட்டி கதீஜாவின் வணிகச் சரக்குகளுடன் அவர் சிரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். பயணத்திலிருந்து திரும்பியதும் அவர் கதீஜாவை மணந்துகொண்டார். கதீஜாவுக்கு அப்போது வயது 40.
வயது 35: குறைஷிகள் கஅபா ஆலயத்தை மறுகட்டமைப்புச் செய்தனர். கறுப்புக் கல்லைப் பொருத்தும் விஷயத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் சிக்கலை மிகவும் புத்திக் கூர்மையுடன் தீர்த்து வைத்தார்.
வயது 39 1/2:  அவர் உண்மையான கனவுகளைக் கண்டார். அவர் காணும் கனவுகள் எல்லாம் மிகத் தெளிவானவையாக இருந்தன.
வயது 40: நபித்துவத்தின் முதல் ஆண்டு ரமலான்(கி.பி. 610, ஆகஸ்ட்) வானவர் ஜிப்ரீல் முதல் திருச்செய்தியை (வஹி) ஏந்திவந்தார். மக்காவிலிருந்து சற்று தொலைவில் இருந்த ஹிரா எனும் குகையில் குர்ஆனின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டன.
உடல்தூய்மை (உளு) எப்படிச் செய்வது என்பதையும் தொழும் முறையையும் ஜிப்ரீல் கற்றுத் தந்தார். தொழுதும் காட்டினார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் இரண்டாவது திருச்செய்தி வந்தது. அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தின் முதல் ஏழு வசனங்கள் அருளப்பட்டன. அத்துடன் நபித்துவப் பணியும் தொடங்கிவிட்டது.
முதலில் நம்பிக்கை கொண்டவர்கள் அபூபக்கர், கதீஜா, ஜைது பின் ஹாரிஸ், அலீ பின் அபூதாலிப்(பெரிய தந்தையின் மகன்) நபித்துவத்தின் முதல் மூன்று ஆண்டுகள்: நபிகளார் இரகசியமாக மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார். மக்காவாசிகளில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். நான்காம் ஆண்டு: வெளிப்படையாகப் பரப்புரை செய்யும்படி இறைவனிடமிருந்து கட்டளை வந்தது. சபா மலைக் குன்றில் ஏறி நபிகளார் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அதைக்கேட்டு அவருடைய உறவினரான அபூஜஹல் எரிச்சல் அடைந்தான். பிலால், யாசிர், சுமைய்யா, அம்மார், கத்தாப் போன்ற ஆதரவற்ற முஸ்லிம்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டன. யாசிரும் சுமைய்யாவும் கொல்லப்பட்டனர். வீர மரணம் அடைந்தனர்.
ஐந்தாம் ஆண்டு: பன்னிரண்டு முஸ்லிம் ஆண்களையும் நான்கு முஸ்லிம் பெண்களையும் எத்தியோப்பியாவிற்குப் புலம்பெயர்ந்து செல்ல நபிகளார் அனுமதித்தார். அவர்களில் நபிகளாரின் மகள் ருக்கையாவும் அவருடைய கணவர் உஸ்மானும் இருந்தனர். அதைத் தொடர்ந்து இன்னும் 83 ஆண்களும் 19 பெண்களும் எத்தியோப்பியாவுகுப் புலம்பெயர்ந்து சென்றனர். குறைஷிகள் மன்னர் நஜாஷியிடம் ஒரு தூதுக்குழுவை அனுப்பி புலம்பெயர்ந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டினர். ஆனால் அது நடக்கவில்லை.
ஆறாம் ஆண்டு: நபிகளாரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்ஸா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பிறகு, உமரும் முஸ்லிமானார். நபிகளாருடன் இணைந்து கஅபாவில் வெளிப்படையாய் வழிபடத் தொடங்கினர்.
குறைஷிகள் அபூதாலிபிடம் வந்து உம்மாரா பின் வாலித் என்பவருக்குப் பகரமாக நபிகளாரைத் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் அவரைத் தாங்கள் கொல்லப் போவதாகவும் கூறினர். அபூதாலிப் மறுத்துவிட்டார்.
ஏழாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டு வரை: குறைஷிகள் நபிகளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். அபூதாலிப் பள்ளத்தாக்கில் மிகவும் மோசமான நிலையில் முஸ்லிம்கள் மூன்று ஆண்டுகளைக்
கழித்தனர்.
பத்தாம் ஆண்டு: சமூகப் புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது. இதற்கு ஆறுமாதங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து அபூதாலிபும் பிறகு கதீஜாவும் மரணமடைந்தனர். இந்த ஆண்டு “துயர ஆண்டு” என்று குறிப்பிடப்படுகிறது.
நபிகளாரும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர். நபிகளார் ஒரு சூனியக்காரர், மந்திரவாதி, குறி சொல்பவர், பைத்தியக்காரர், கவிஞர் என்றெல்லாம் சற்றும் பொருத்தமற்ற வகையில் அவர்மீது குறைஷிகள் வசைமாரி பொழிந்தனர். உகாஸ், மஜ்னானா, துல் மஜாஸ் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று நபிகளார் தம் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். நிலவைப் பிளக்கச் செய்து பேரற்புதத்தையும் செய்து காட்டினார். அவர் தாயிபுக்கும் சென்றார். ஆனால் அங்கும் அவருக்கு மோசமான வரவேற்புதான் கிடைத்தது. திரும்பும் வழியில் அவருக்கு ஓர் ஆறுதல் கிடைத்தது. குர்ஆன் ஓதுவதைச் செவியுற்ற ஜின்களின் ஒரு கூட்டம்  நபிகளாரின் மீது நம்பிக்கை கொண்டது. மக்காவின் உயர் வணிகரான முத்இம் பின் அதீ என்பவர் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததைத் தொடர்ந்து நபிகளார் மக்கா திரும்பினார். ரஜப் 27 அன்று இரவு நபிகளார்
ஜெரூசலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டார்(இஸ்ரா, மிஃராஜ்). இந்தப் பயணத் தின்போதுதான் ஐந்துவேளை தொழுகை இறைவனால் கடமையாக்கப்பட்டது.
கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஆறுபேர் முஸ்லிமானதைத் தொடர்ந்து மதீனாவில் இஸ்லாம் வளரத் தொடங்கியது.
பதினோராம் ஆண்டு: துல்ஹஜ்  முதல் அகபா உடன்படிக்கை: மதீனாவைச் சேர்ந்த  12 பேர் முஸ்லிமானார்கள். அவர்கள் இஸ்லாமிய அறிவுரைகளை ஏற்று நடப்பதாக உறுதி அளித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக நபிகளார் முஸ்அப் இப்னு உமைரை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
பன்னிரண்டாம் ஆண்டு: துல்ஹஜ் இரண்டாம் அகபா உடன்படிக்கை: எழுபது ஆண்களும் இரண்டு பெண்களும் கொண்ட ஒரு குழுவினர் இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டு, நபிகளாருடன் உறுதியான ஒப்பந்தமும் செய்துகொண்டனர். அவர் மதீனா வந்தால் எல்லாவகையிலும் அவரைப் பாதுகாப்பதாக உறுதி
அளித்தனர்.

பதிமூன்றாம் ஆண்டு: நபிகளாரின் அறிவுரைக்கேற்ப மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லத் தொடங்கினர். ஆரம்பத்தில் சென்றவர்களில் உமர், சுஹைப் ஆகியோரும் இருந்தனர்.
நபிகளார் புலம்பெயர்தல்: (27, ஸஃபர்) குறைஷிகள் நபிகளாரைக் கொல்லத் திட்டம் தீட்டினர். அவருடைய வீட்டை முற்றுகை இட்டனர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் எதிரிகளின் கண்களில் படாமல் நபிகளார் வெளியேறிவிட்டார். பிறகு தம் தோழர் அபூபக்கருடன் தவ்ர் எனும் குகையில் மூன்று இரவுகள் தங்கியிருந்தார். பிறகு மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர்.

தொகுப்பு: ரைஹான்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்