வினாவிடையில் குர்ஆன் அருளப்படுதல்!
2018-06-14@ 15:27:29

வினா : தொடக்கத்தில் இறைத்தூதர் எங்கே சென்றார்?
விடை: தனிமையை நாடி ஹிரா குகைக்குச் செல்வது அவருடைய வழக்கமாக இருந்தது.
வினா : அது எங்கு அமைந்துள்ளது?
விடை: அது ஹிரா எனும் மலையில் அமைந்துள்ளது. அது ஒளி மலை என்றும் அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
வினா : அதனுடைய பரப்பளவு என்ன?
விடை: 4 கெஜம் நீளமும் 1.75 கெஜம் அகலமும் கொண்டது.
வினா : அவர் ஏன் அங்கு சென்றார்?
விடை: படைப்புகள் பற்றி சிந்திக்கவும் தியானத்தில் ஈடுபடவும் அவர் அங்கு சென்றார்.
வினா : எத்தனை நாள் அங்கு தங்கியிருந்தார்?
விடை: பல இரவுகள் அங்கே கழித்தார்.
வினா : வேத வெளிப்பாட்டின் முதல் நிலை என்ன?
விடை: உண்மையான கனவுகள். அவர்
கனவில் என்ன பார்த்தாரோ அவையெல்லாம் பகலில் அப்படியே நடந்தன.
வினா : இந்த நிலை எத்தனை நாள் நீடித்தது?
விடை: இந்த நிலை கிட்டத்தட்ட ஆறு
மாதங்கள் நீடித்தது.
வினா : முதல் வேதவெளிப்பாடு எப்போது அருளப்பட்டது?
விடை : திங்கட் கிழமை, ரமலான் 21ஆம் நாள் இரவு. (கி.பி. 610, ஆகஸ்ட் 10ஆம் நாள்)
அப்போது அவருக்கு வயது 40.
வினா : வேதவெளிப்பாட்டை ஏந்தி வந்தவர் யார்?
விடை : ஜிப்ரீல்.
வினா : ஜிப்ரீல் என்பவர் யார்?
விடை : அவர் வானவர்களின் தலைவர். தெய்வீகச் செய்திகளை இறைத்தூதர்களுக்குக் கொண்டு வருபவர் அவர்தான். ரூஹுல் குத்ஸ் (தூய ஆன்மா) என்றும் ரூஹுல் அமீன் (உண்மையான ஆன்மா) என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
வினா : அவர் முஹம்மதிடம் என்ன
சொன்னார்? அதற்கு முஹம்மத் அளித்த பதில் என்ன?
விடை : அவர் முஹம்மதை நோக்கி,
“ஓதுவீராக” என்றார். அதற்கு இறைத்தூதர், “எனக்கு ஓதத் தெரியாதே” என்றார்.
வினா : வானவர் என்ன செய்தார்?
விடை: அவர் இறைத்தூதரை மார்போடு இறுகத் தழுவினார். ‘எங்கே இறந்துவிடுவோமோ’ என்று இறைத்தூதர் நினைக்கும் அளவுக்கு இறுக்கமாகத் தழுவினார். பிறகு அவரை விட்டுவிட்டார். இவ்வாறு மூன்று முறை செய்தார்.
வினா : அதற்குப் பிறகு இறைத்தூதர்
ஓதினாரா?
விடை : ஆம். அதற்குப் பிறகு ஓதினார்.
“ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு. (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் அருட்கொடையாளன்.”(குர்ஆன் 96: 13)
வினா : அப்போது அவருடைய நிலை
எப்படி இருந்தது?
விடை: அவர் அச்சத்தால் நடுங்கிக்
கொண்டிருந்தார்.
வினா : வீட்டிற்குத் திரும்பியதும் அவர்
கதீஜாவிடம் சொன்னது என்ன?
விடை: “என்னைப் போர்த்துங்கள்...என்னைப் போர்த்துங்கள்..” என்று சொன்னார்.
வினா : கதீஜா என்ன செய்தார்?
விடை: இறைத்தூதரின் நடுக்கம் தீரும் வரை ஒரு போர்வையால் அவரைப் போர்த்திவிட்டார்.
வினா : என்ன நடந்தது என்பதை அவர் கதீஜாவிடம் சொன்னாரா?
விடை: ஆம். நடந்ததை முழுமையாகச் சொன்னார். “எங்கே என் உயிர் போய்விடுமோ என்று அஞ்சினேன்” என்றும் கூறினார்.
வினா : கதீஜா அவருக்கு என்ன ஆறுதல் கூறினார்?
“இறைவன் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டான். நீங்கள் மிகச் சிறந்த மனிதர். நீங்கள் உறவுகளைப் பேணுகிறீர்கள். இயலாதோருக்கும் பலவீனமான மக்களுக்கும் ஆதரவு அளிக்கிறீர்கள். ஏழைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் உதவுகிறீர்கள். விருந்தினர்களை அன்புடன் உபசரிக்கிறீர்கள்” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார். நபிகளாரின் அழைப்பை முதன் முதலில் ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா அவர்கள்தாம்.
இர்ஃபான் அதீப்
மேலும் செய்திகள்
ரமலான் கொண்டாட்டம்
மகத்தான ரமலான் மாதம்!
அழைப்பு மேடை
எல்லோரும் கொண்டாடுவோம்
பொறுமையின் இருப்பிடம்
குழந்தையின் பரிசு
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்