SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலசர்ப்ப தோஷம் போக்கும் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்

2018-06-14@ 09:48:48

சேலம் மாவட்டம் இடைப்பாடியில் சரபங்கா நதிக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் சேலம், மலைகளால் சூழ்ந்தது. இதில் சந்திரகிரி, சூரியகிரி என்னும் மலைகள், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலைகளுக்கு இடையே பெருக்கெடுத்து ஓடியது வசிஷ்டநதி. இந்த வசிஷ்ட நதிக்கரையோரத்தில் இருந்த ஊரின் பெயர் திருக்கோபாலபுரம். இருமலைகளுக்கு இடையில் உள்ள ஊர் என்பதால் அதனை இடைப்பாடி என்று அழைக்க தொடங்கினர் மக்கள். இங்கு 70 அடி உயரத்தில் கம்பீரமான ராஜகோபுரத்துடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் திகழும் அற்புத கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர். மைசூர் மன்னர் காலத்தில் இந்த பகுதியை ஆட்சி செய்த பாளை வம்சத்தினர், மைசூரில் உள்ள நஞ்சன்கூடு என்ற இடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டனர்.

பிரசித்தி பெற்ற அந்த கோயிலின் சாயலில் கட்டப்பட்டதுதான் இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கோயிலை சுற்றியுள்ள சரபங்கா நதிக்கரை ஓரத்தில் 11 கோயில்கள் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு இறைவன், பாணலிங்கமாய் அருள்பாலிக்கிறார் என்கின்றனர் சிவனடியார்கள். பாணாசூரன் என்னும் அரக்கன், ஈசனால் முக்தி பெற்று, அவரை பல்வேறு இடங்களில் லிங்கமாக வைத்து வழிபட்டான். அந்த வகையில் பூஜிக்கப்பட்ட லிங்கம் தான், இடைப்பாடியில் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரராக அருள்பாலிக்கிறது.  பாற்கடலை கடைந்தபோது, வெளிப்பட்ட கொடிய நஞ்சை தானே உண்டு தேவர்களை காத்தார் சிவபெருமான். அவரை நஞ்சுண்டஈஸ்வரன் என்று வணங்கினர் தேவர்கள். அப்படிப்பட்ட நஞ்சுண்டேஸ்வரரை வணங்கிணால் காலசர்ப்ப தோஷம் நீங்கும். ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணத்தடை விலகும்.

வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து பாலாபிஷேகம் செய்தால் அனைத்து வித தோஷங்களும் நீங்கும். தேவகிரி அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் நிலைத்து, மங்களம் பெருகும் என்பது ஐதீகம். இதேபோல் சனிபெருமானுக்கு, இங்கு தனிக்கோயில் உள்ளது.  சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை. தினமும் 3 கால பூஜை நடக்கும் கோயிலில் பிரதோஷ வழிபாடு, சித்ரா பவுர்ணமி உற்சவம், திருத்தேர்விழா, சித்திரை வருடப்பிறப்பு, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் என்று அனைத்து விழாக்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு சிறப்பு யாக பூஜையும், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும் நடக்கிறது.

63 நாயன்மார்களுக்கும், திருநட்சத்திர சிறப்பு பூஜையுடன், அபிஷேகம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்துவதும் இதர கோயில்களில் இல்லாத சிறப்பு. இங்கு வருடந்தோறும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் நடக்கும் பிரமோற்சவ தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த நாட்களில் உற்சவர், முக்கிய வீதிகளில் உலாவந்து அருள் பாலிக்கிறார். இதேபோல் இங்கு நடக்கும் அன்னாபிஷேக விழாவில் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்குவதும் வேறு எங்கும் இல்லாத ஒன்று. இந்த விழாக்களில் சேலம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, நஞ்சுண்டேஸ்வரரை வழிபடுகின்றனர். இப்படி தொன்மையும், பெருமையும் கொண்ட பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில், புதுப்பொலிவுடன் கும்பாபிஷேக விழா காண ஆயத்தமாகி வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்