SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கும் அகத்தீஸ்வரர்

2018-06-13@ 09:30:33

கைலாசத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தைக் காண எல்லோரும் அங்கே கூடினர். அதனால் வடக்கு உயர்ந்தது. தென்நாடு தாழ்ந்தது. உடனே ஈசன் அகத்தியரை தெற்கே போகும்படி கட்டளையிட்டார். தான் அந்த திருமணத்தை எப்படி பார்ப்பது என்று அகத்தியர், ஈசனிடம் கேட்டார். அகத்தியர் இருக்கும் இடத்திலேயே அவருக்கு திருமண காட்சியை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஈசன் அருளாசி வழங்கினார். வேதாரண்யம் என்று அழைக்கப்படுகின்ற திருமறைக் காட்டில் ஈசனின் திருமணக் காட்சியை முதன்முதலில் அகத்தியர் கண்டுகளித்தார். அதன்பிறகு பலகோயில்களில் இந்தக் காட்சியை ஈசன் முனிவருக்குக் காட்டியருளினார்.

அந்தத் திருமணக் கோலத்திற்கு ‘உமா மகேஸ்வரர்’ என்று பெயர். அத்தகைய கோயில்களில் ஒன்றே ‘பெருங்காஞ்சி’ அகத்தீஸ்வரர் கோயில்.இவ்வளவு புகழுக்கு காரணமான பெருங்காஞ்சி வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வெளியே ‘அகஸ்த்திய தீர்த்தம்’ அமைந்துள்ளது. தலமரமாக வில்வமரம் விளங்குகிறது. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபத்தில் இடப்புறம் தட்சிணாமூர்த்தியும், வலப்புறம் நவக்கிரஹங்களும் கொலு வீற்றிருக்கின்றன. அம்மண்டபத்தை கடந்து சென்றால், இடப்புறம் காசி விசுவநாதர் அருள்பாலிக்கிறார். அகத்தீஸ்வரர் கொலுவிருக்கும் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது.

கருவறை வாயிலுக்கு இடப்புறம் வரிசையாக மூன்று கணபதி உட்கார்ந்த நிலையிலும், அடுத்து நின்றநிலையில் ஒரு விநாயகரும், வாயிலுக்கு வலப்புறம் முருகன் பிரம்ம சாத்தன் என்ற திருக்கோலத்திலும்  அருள்பாலிக்கின்றனர். அவரையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய அழகிய ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கிறார். கருவறைக்கு வெளியே துவார பாலகர்கள் காவல்புரிய, கருவறைக்குள் சுயம்பு மூர்த்தியாக அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவருக்கு இங்கு எண்ணெய் அபிஷேகம் கிடையாது. சிவலிங்க மூர்த்திக்கு பின்புறம் கற்சிலை வடிவில் ஈசனும் அம்பிகையும் வீற்றிருக்கின்றனர். அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுத்ததால் இக்கோலத்தை நாம் காணமுடிகிறது. தாயார் தெய்வநாயகி தெற்கு பார்த்த தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

அம்பாள் தெய்வ நாயகியின் அருட்காட்சி நம் குறைகளையெல்லாம் போக்கும் வகையில் கருணை பொங்கும் விழிகளோடு காட்சி தருகிறார். கோயிலின் வெளிச்சுற்றில் முதலில் கல்யாண மண்டபமும், அதையடுத்து வலம்புரி விநாயகரும், வீரபத்திரரையும் தரிசிக்கலாம். நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை கருவறைக்கு கிழக்கே உள்ள பிராகாரத்தில் அமைந்துள்ளது. திருமணமாகாத கன்னியர் இத்தகைய கோயில்களில் முறைப்படி வழிபட்டு இந்த ‘உமா மகேஸ்வர’ கோலத்தைத் தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  திருமணங்களில் ‘கவுரி கல்யாணம் வைபோகமே’ என்று பாட்டுப் பாடுவார்கள். சிவன் பார்வதிக்கு ‘ஆதிதம்பதியர்கள்’ என்று பெயர். ஆகையால்தான் திருமணங்களில் அந்த தம்பதியரை நினைவுபடுத்தும் வகையில் ‘கவுரி கல்யாணம்’ பாடப்படுகிறது. இக்கோயிலில் ‘பங்குனி உத்திரத்தன்று’ ஈசனுக்கும் அம்பிகைக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்