SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்தோஷ அலை வீசும்!

2018-06-12@ 16:55:15

திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. குழந்தை இல்லை. ஜோதிடம் பார்க்கும் இடத்தில் நாகதோஷம் உள்ளதாக சொல்கிறார்கள். கிளி ஜோதிடத்தில் பாம்பின் படம் வருகிறது. குடும்பத்தில் பிரச்சினையாக உள்ளது, உரிய பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். புவனேஸ்வரி, சென்னை.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து வருகின்ற நேரம் குழந்தை பிறப்பதற்கு சாதகமான நேரமே. உங்கள் கணவரின் ஜாதகத்திலும், உங்கள் ஜாதகத்திலும் சர்ப்ப தோஷத்தின் தாக்கம் உள்ளது. சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் மூட நம்பிக்கைகளாக உள்ளதால் உங்கள் கணவரும், அவரது குடும்பத்தாரும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

நீங்கள் தம்பதியராக திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்திற்கு தொடர்ச்சியாக ஐந்து புதன்கிழமை நாட்களில் சென்று தரிசனம் செய்யுங்கள். குழந்தை பிறந்ததும் அம்மனின் சந்நதிக்கு குழந்தையை அழைத்து வந்து எடைக்கு எடை வெல்லம் காணிக்கை தருவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். தாம்பத்திய உறவின் போது நாகத்தின் முகம் கண்களில் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த நேரத்தில் கருமாரியம்மனின் முகத்தினை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துங்கள். அம்பிகையின் அருளால் உங்கள் குடும்பப் பிரச்சினைகள் விரைவில் முடிவிற்கு வரும்.

எனக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றது. என் கணவர் என்னை விட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார். நான் என் நாத்தனார், மாமியாருடன் வசிக்கிறேன். என் இரண்டு பிள்ளைகளும் என்னை அம்மா என்று கூப்பிட மாட்டார்கள். என் கணவர் அந்த பெண்ணை விட்டு விலகி வரவும், என் பிள்ளைகள் என்னை அம்மா என்று அழைக்கவும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். பிரேமா, கடலூர்.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்த உங்கள் ஜாதகத்தின் படியும், மூலம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தின் படியும் தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம் என்பது நன்றாகவே உள்ளது. உங்கள் பிள்ளைகளின் பிறந்த ராசியை மட்டும் குறிப்பிட்டு நட்சத்திரம் என்னவென்று தெரியாது என்று எழுதியுள்ளீர்கள். பிறந்த நேரத்தையும் குறிப்பிடவில்லை. ஜாதகம் கணிப்பதற்கு பிறந்த நேரம் என்பது தேவை. உங்கள் வீட்டினில் ஒரு தொட்டியில் கருந்துளசிச் செடியை வைத்து வளர்த்து வாருங்கள். தினமும் காலையில் குளித்து துளசிச் செடிக்கு நீரூற்றி அருகில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்து 11 முறை சுற்றி வந்து வணங்குங்கள்.

ஆறு மாத காலத்திற்கு இந்தத் துளசி வழிபாட்டினை தொடர்ச்சியாகச் செய்து வாருங்கள். விரைவில் உங்கள் கணவர் உங்களோடு வந்து சேருவார். உங்கள் பிள்ளைகள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காலை வேளையில் கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று பிரஹந்நாயகி அம்மன் சந்நதியில் அமர வைத்து அபிராமி அந்தாதி பாடல்களை படிக்கச் செய்யுங்கள். காலையில் நடைபெறும் அம்பிகையின் அபிஷேகத்திற்கு உங்களால் இயன்ற அளவிற்கு பசும்பால் வாங்கிச் செல்லுங்கள். பால் அபிஷேகம் செய்யப்படுகின்ற வேளையில் நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். அம்பிகையின் அருளால் உங்கள் பிள்ளைகளுக்கு ஞானம் பிறக்கும். அவர்கள் இருவரும் உங்களை வாய்நிறைய அம்மாவென்று அழைப்பதை செவிகுளிரக் கேட்பீர்கள்.

எனது இளைய மகளுக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2015ல் சம்பந்தி அம்மாள் இறந்ததில் இருந்து மருமகன் என் மகளிடம் அடிக்கடி கோப்படுகிறார். தனது உடன்பிறந்தோருக்கு ஆதரவாகவும், மனைவிக்கு எதிராகவும் பேசுகிறார். மிகவும் நல்லவர் ஆன அவர் தன்னையும் வருத்தி, மனைவியையும் வருத்தப்பட வைக்கிறார். தம்பதியருக்கு இடையே உள்ள பிரச்னை தீர வழிகாட்டுங்கள். திருநெல்வேலி வாசகர்.

பூசம் நட்சத்திரம், கடக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தையும், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் நேரத்தையும் வைத்துக் கணக்கிடும்போது அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்னை என்பது தற்காலிகமானதே என்பது தெளிவாகிறது. அவர்கள் இருவருக்கும் வசியப் பொருத்தம் என்பது நன்றாக உள்ளது. இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களே. உங்கள் மருமகன் உங்களிடம் தொலைபேசியில் குறை கூறினாலும் இது உங்கள் இருவருக்குமிடையே உள்ள சொந்தப் பிரச்னை, இதில் நான் தலையிடுவது முறையல்ல என்று சொல்லி ஒதுங்கி விடுங்கள்.

உங்கள் மகளின் ஜாதகப்படி அவர் தனது கணவரை உயிராகப் பார்த்துக் கொள்வார். மருமகனுக்கு தற்போது ஏழரைச் சனியின் காலம் நடந்து கொண்டிருப்பதால் மனக்குழப்பத்தில் உள்ளார். அவரது மனநிலையை யோகா ஆசிரியையாகப் பணிபுரியும் உங்கள் மகள் புரிந்துகொள்வார். வருகின்ற 27.12.2018க்குள் நடக்கும் ஒரு சம்பவம் அவர்களது வாழ்வினில் திருப்பு முனையை உண்டாக்கும். அதுவரை உங்கள் மகளை சனிக்கிழமை தோறும் விரதமிருந்து காக்கைக்கு உணவிட்டு வரச் சொல்லுங்கள். இந்த வருட இறுதிக்குள் தம்பதியருக்குள் இருக்கும் பிணக்கு நீங்கி குடும்பத்தில் சந்தோஷ அலை வீசத் தொடங்கும். கவலை வேண்டாம்.

என் மனைவி ஒரு சிறு மனஸ்தாபத்தால் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இடையில் பெண் பருவமடைந்ததற்கு தகவல் கூறினார்கள். அதற்குபோய் முறைப்படி சீர் செய்துவிட்டு வந்தேன். அதன்பிறகு எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இல்லை. போன் செய்தாலும் எடுப்பதே இல்லை. குழந்தைகளும் அப்படியே உள்ளனர். எட்டு வருடமாக வேதனையில் உள்ளேன். குடும்பம் ஒன்றுசேர வழி காட்டுங்கள். சுப்பிரமணியன், நாமக்கல்.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. ராகு தசை தொடங்கிய நாள் முதலாகவே பிரச்னையை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் மூன்றாம் வீட்டில் சந்திரனுடன் இணைந்து மனதில் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறார். மனக்குழப்பத்துடன் நீங்கள் பேசிய வார்த்தைகள் உங்கள் மனைவியின் மனதை கடுமையாக பாதித்து இருக்கிறது. ராகுதசைக்குரிய 18 வருட காலமும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை.

உங்களுடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் மற்றும் மனைவியைக் குறிக்கும் ஏழாம் வீடு ஆகியவற்றிற்கு அதிபதியான செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், புத்ர ஸ்தான அதிபதி சனி எட்டில் அமர்ந்திருப்பதும் சற்று பலவீனமான நிலையே. குடும்பத்துடன் சேர்ந்து வாழ இயலாது போனாலும், பிள்ளைகளுடன் தொடர்பில் இருக்க முடியும். சனிக்கிழமை தோறும் உங்கள் ஊரிலுள்ள நரசிம்மர் சந்நதிக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். 04.08.2018ற்கு மேல் பிள்ளைகளுடன் பேச்சுவார்த்தை என்பது தொடங்கிவிடும். பணி நிமித்தம் உங்களுக்கு பதிலாக தாயார் பரிகாரம் செய்யலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். உடல்நிலை சரியில்லாதவர்தான் மருந்து சாப்பிட வேண்டும், யாருக்கு பிரச்னை உள்ளதோ, அவர்தான் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

32 வயதாகும் என் தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜாதகம் பார்க்கும் மாப்பிள்ளை வீட்டார் என் தங்கையின் ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளதாகக் கூறுகின்றனர். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். என் தங்கையின் ஜாதக தோஷத்திற்கு ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்.மோகனப்ரியா, சென்னை.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் சகோதரியின் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் மணவாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் திருமணம் தாமதமாகி உள்ளது. புத்ர காரகன் குரு வக்ரம் பெற்றிருப்பதால் புத்ர தோஷம் உள்ளது என்று சொல்வது தவறு. அவருடைய ஜாதக பலத்தின்படி புத்ர பாக்யம் என்பது நன்றாக உள்ளது. ஏதோ ஒரு மாப்பிள்ளை வீட்டார் சொன்ன கதையை நம்பி நீங்கள் உங்கள் தங்கையின் திருமணத்தை நடத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பது தவறு. மற்றவர்கள் சொல்லும் வீண் கதையை நம்பாமல் உங்கள் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குங்கள்.

ஏழ்மை நிலையிலும், புகுந்த வீட்டில் உங்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, பிறந்த வீட்டில் பிரச்னையாக இருக்கும் தங்கையின் திருமணத்தையும் எப்பாடுபட்டாவது நடத்திவிட வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பாராட்டுக்குரியது. பிரதி வியாழன் தோறும் அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் நவகிரஹ சந்நதியில் வடக்கு நோக்கி அருள் பாலிக்கும் குரு பகவானின் சந்நதியில் நெய் விளக்கு ஏற்றிவைத்து உங்கள் தங்கையை வழிபட்டு வரச் சொல்லுங்கள். வியாழக்கிழமை நாளில் குரு பகவானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுவதும் நல்லது. 06.07.2018க்குப் பின் உங்கள் தங்கையின் திருமணம் முடிவாகிவிடும். கவலை வேண்டாம்.

என் மகளுக்கு திருமணமாகி கோவையில் வசிக்கிறாள். மருமகன் தான் சம்பாதிப்பதை எல்லாம் தன் சகோதரன் குடும்பத்திற்கு செலவிடுகின்றார். வீட்டுச் செலவுக்கு சுத்தமாக பணம் தருவதில்லை. ‘நீ சம்பாதிக்கிறாயே, அதில் செலவு செய்’ என்று என் மகளை துன்புறுத்துகிறார். எங்களையும் மதிப்பதில்லை, எங்கள் பணம் மட்டும் வேண்டும், மரியாதை தருவதில்லை. இதற்கு தயவுசெய்து பரிகாரம் கூறவும். பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து உங்கள் உள்ளக் குமுறலைப் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மகளை கன்னிகாதானம் செய்து கொடுத்த பின் அவர்கள் வீட்டுப் பிரச்னையில் நீங்கள் தலையிடுவது தவறு. உங்கள் மருமகன் தன் மனைவி சம்பாதிக்கும் பணத்தை கேட்கிறார். இதில் குற்றம் காண என்ன இருக்கிறது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. முதுகலைப் பட்டம் பெற்று நல்ல வேலையிலும் இருக்கிறார். கைநிறைய சம்பாதிக்கிறார். தனது ஒரே மகனையும் வெளியூரில் படிக்க வைக்கிறார். இந்தச் சூழலில் அவரது கணவர் தனது சம்பாத்தியத்தை தன் சகோதரனின் குடும்பத்திற்கு செலவழித்து வருகிறார்.

உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையின் படி அலுவல் பணியில் அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வருவதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. மேலும் புதிதாக ஒரு சொத்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. அவர்களது குடும்ப பிரச்னையில் நீங்கள் தலையிடாமல் இருங்கள். சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகள் எந்த பிரச்னையையும் சமாளிக்கும் திறன் கொண்டவர் என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தனியாக பரிகாரம் ஏதும் தேவையில்லை.

31 வயதிற்கு மேல் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை என்று ஐயர் சொன்னதால் பெரியவர்கள் மணம் முடித்து வைத்தார்கள். திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பார்க்காத டாக்டர் இல்லை, போகாத கோயில் இல்லை. ஒரு குறையும் இல்லை என்று சொல்கிறார்கள். எங்கள் இரண்டு பேருக்கும் ஒரே ராசி என்பதால் குழந்தை பாக்கியம் தடைபடுகிறதா? உரிய பரிகாரம் சொல்லுங்கள். சாந்தி.

நீங்கள் ஸ்திரமான மனநிலையில் இல்லை என்பது உங்கள் கடிதத்தின் மூலம் தெளிவாகிறது. ஒரே கடிதத்தை ஐந்து ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து அனுப்பி உள்ளீர்கள். திருமணம் ஆன தேதி 22.02.2017 என்று எழுதியுள்ளீர்கள். திருமணமாகி பத்து மாதங்கள் ஆகிறது என்பதை பத்து வருடங்கள் ஆகிறது என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்துள்ளீர்கள். உங்கள் கணவர் சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்துள்ளார். இரண்டு பேருக்கும் ஒரே ராசி என்பதால் குழந்தை பிறக்கவில்லை என்று எண்ணுகிறீர்கள். இருவரும் வெவ்வேறு ராசியில் பிறந்துள்ளீர்கள் என்பது கூட புரியாத மனநிலையில் நீங்கள் இருப்பது போல்தெரிகிறது.

உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதக ரீதியாக குழந்தை பாக்கியம் என்பது நன்றாக உள்ளது. ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன், கேது ஆகிய கிரஹங்கள் ஒன்றாக இணைந்துள்ளது நற்பலனைத் தராது. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் உங்கள் மனநிலையை சோதித்துக் கொண்டிருக்கிறார். முதலில் நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்த்து அவரது ஆலோசனையைப் பின்பற்றுங்கள். மனம் தெளிவாக இருந்தால்தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும். செவ்வாய்தோறும் சுப்ரமணியரின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். இந்த வருட இறுதிக்குள் உங்கள் வம்சம் விருத்தியடையும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்