SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணவாழ்வை உறுதி செய்யும் வாழைமர பிரார்த்தனை!

2018-06-09@ 09:42:40

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையை குறிக்கும். பசுமையான ஞீலி வாழையைத் தலவிருட்சமாக பெற்றதால்  இத்தலம் திருப்பைஞ்ஞீலி என்று பெயர் பெற்றது. ஆலயம் முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின்  வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நான்கு கால் மண்டபமும் அதன் பின்புறமும் மூன்று நிலைகளை உடைய ராவணன் வாயில் என்று  கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இந்த இரண்டாம் கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நதி காணப்படுகிறது.

திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்த திருப்பிரம்மனை தலம்வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்துவிட்ட இடம்  இதுவென்றும், பின்னர் திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க  உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நதியில் அருட்பாலிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அவிட்ட நட்சத்திர நாளில் இச்சந்நதி  திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது. இரண்டாம் கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளிச்சுற்று பிராகாரத்தில்  வலம் வந்தால் எமன் சந்நதியைக் காணலாம்.

இச்சந்நதி ஒரு குடைவரைக் கோயிலாக உள்ளது. பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோயிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில்  சிவன், அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நதி  முன்பு, திருக்கடவூரில் செய்வது போல் சஷ்டியப்தபூர்த்தி, வாழ்நாள்விருத்தி ஹோமம் ஆகியவற்றை நடத்துகிறார்கள். திருக்கடவூர் தலத்தில்  மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான்.

இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற  தேவர்களும்கூட சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு கேட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இந்த மலையில் அவரது பாதத்தின்  அடியில் குழந்தை உருவமாக செய்து தர்மம் தவறாக நடந்துகொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும், தனது பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.  சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில்  நவகிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை.

ராவணன் வாயில் என்று அழைக்கப்படும் இரண்டாம் கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நதிக்குச் செல்லலாம். அதற்கு ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி  செல்ல வேண்டும். இந்தப் படிகள் இராவணின் சபையில், அவன் சிம்மாசனத்தின் படிகளாக இந்த நவகிரகங்கள் அடிமைகளாக இருந்தன என்று  குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். சுவாமி சந்நதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகில் ஒன்பது குழிகள் உள்ளன. அவற்றில் தீபம் ஏற்றி அவற்றையே  நவகிரகங்களாக  எண்ணி வணங்குகிறார்கள். இங்குள்ள  லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கம். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச்  செய்வதற்கு அதிகாரத்தை கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என அழைக்கப்படுகிறார்.

மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்னி பகவான், ராமர், அர்ஜுனன், வசிஷ்ட முனிவர் என பலரும் இத்தலத்து  கடவுளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நதியில் ரத்னசபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து  சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய ரத்னசபை தலம் இதுவே. இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு. இந்த ஆலயத்தில்  இரண்டு அம்மன் சந்நதிகள் உள்ளன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சிதான். பார்வதிதேவி ஒருமுறை சிவயோகத்தில் இருக்க விரும்பி  இத்தலத்திற்கு வந்து தவம் செய்தாள்.

அப்போது சப்த கன்னியரை வாழை மர வடிவில் அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழை மரங்களுக்கு பரிகாரம்  செய்தால் விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழை மரங்களுக்கு பரிகாரம் செய்வது இத்தலத்தில் மிகவும்  சிறப்பாக நடைபெறுகிறது. வாழைமர பரிகார பூஜை, காலை 8-30 முதல் பகல் 12-30 மணி வரை மற்றும் மாலையில் 4-30 முதல் 5-30 மணி வரை  நடைபெறும். திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலமாகவும் திருப்பைஞ்ஞீலி உள்ளது. சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு  திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி நோக்கி வந்தார்.  

வரும் வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்ஞீலி நோக்கி அவர் வந்தார். அவரது  களைப்பைப்  போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும், தங்கி இளைப்பாற மண்டபமும் உருவாக்கி, கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு  வயோதிக அந்தணர் உருவத்தில் ஈசன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு, தாகம்தீர  குளத்து நீரைப் பருகி மேலே செல்லும்படி வற்புறுத்தினார். அப்பரும் அதை மறுக்காமல் சோற்றை  உண்டு நீரைப் பருகி களைப்பாறினார்.

அந்தணரை, ‘நீர் எங்கு செல்கிறீர்?’ என்று  அப்பர் கேட்டதற்கு, தானும் திருப்பைஞ்ஞீலி செல்வதாக அந்தண வடிவில் இருந்த  இறைவன் கூற  இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்ஞீலி ஆலயத்தின் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாக மறைந்துவிட்டார். அப்போதுதான் ஈசனே  அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார். இவ்வாலயம் காலை 6 முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4  முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இத்தலம் திருச்சிக்கு சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து  நிலையத்திலிருந்து மணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகர பேருந்து வசதி உண்டு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்