SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைச் செல்வமருளும் சாந்தநாயகி

2018-06-08@ 09:42:45

இஞ்சிக்குடி ஒரு சிறிய கிராமம். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ஊர் திருவாரூருக்கும்  மயிலாடுதுறைக்கும் இடையே உள்ளது. இங்கு உள்ளது பார்வதீஸ்வரர் ஆலயம்.  இறைவன் பெயர் பார்வதீஸ்வரர்.  இறைவி பெயர் சாந்த நாயகி. இங்கு இறைவிக்கு சாந்த நாயகி என்ற பெயர் வரக்காரணம் என்ன?  இஞ்சிக்குடி என்ற இந்த ஊர் அந்தக் காலத்தில் சந்தனக்காடாக இருந்ததாம். இங்கு கிழங்கு வகையைச் சேர்ந்த இஞ்சியை ஊர் மக்கள் நிறையப் பயிரிட்டனர். அதை விற்று வரும் வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். இஞ்சிப் பயிரை நம்பி மக்கள் வாழ்ந்ததால், இந்த ஊருக்கு இஞ்சிக்குடி என்ற பெயர் வந்தது. இங்கு இருந்த சந்தனக் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அவரது தவத்தை மதலோலை என்ற அரக்கி கலைக்க முயன்றாள். அவளது தவறான செய்கைகளால் முனிவரின் தவம் கலைந்தது. எதிரே காமவிகாரத்தோடு நின்று கொண்டிருந்தாள் மதலோலை.

தவம் கலைந்த முனிவருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அவளை நோக்கிச் சபித்தார் முனிவர். அவரது சாபத்தால் மதலோலை கருவுற்றாள். பின் அம்பரசன், அம்பன் என்ற இரு புதல்வர்களைப் பெற்றாள். இருவருமே அசுரர்கள். அவர்கள் அசுரத்தன்மையோடு வளர்க்கப்பட்டனர். வளர்ந்ததும் அவர்கள் தேவர்களுக்கும் மானிடர்களுக்கும் துறவிகளுக்கும் பெரும் துன்பம் விளைவித்தனர். அவர்கள் தந்த துன்பத்திலிருந்து தங்களை காக்க வேண்டி இந்திரன் முதலான தேவர்கள் கந்தவனத்தில் எழுந்தருளியிருந்த சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.  தேவர்களின் வேண்டுதலுக்கிரங்கினார் சிவபெருமான். அவர்களை அந்த அசுரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்தார். பின்னர், தனது இடது பாகத்தில் அமர்ந்துள்ள உமாதேவியை புன்னகையுடன் நோக்கினார். அவரது பார்வையின் பொருளறிந்த பார்வதிதேவி ஒர் அழகிய இளம் பெண்ணாக உருவெடுத்தாள். கண்டவர் வியக்கும் பேரழகு கொண்டவளாய் அந்த அசுரர்கள் காணும்படி போய் நின்றாள்.

அந்த இரண்டு அசுரர்களும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவள் அழகில் மோகம் கொண்ட இருவரும் மணந்தால் இந்தப் பெண்ணைத்தான் மணப்பது என்று முடிவு செய்தனர். அப்போது திருமால் ஒரு வயோதிகர் உருவில் அங்கே தோன்றினார். அசுரர்கள் இருவரும் அந்த அழகிய பெண்ணை நாங்கள் அடைய வேண்டும் என்று அவரிடம் கூறினர். அவர்கள் கூறியதைக்கேட்டு அந்த வயோதிகர் சிரித்தார். ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’  என்று கேட்டனர் அசுரர்கள்.‘‘ஒரு பெண்ணை இருவர் எப்படி அடைய முடியும்? உங்கள் இருவரில் வல்லமையில் யார் உயர்ந்தவரோ அவரே இந்த அழகிய பெண்ணை அடைய தகுதி உடையவராவர்’’   என்றார், அந்த முதியவர்.‘‘அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டனர் இருவரும்.‘‘இருவரில் யார் பலசாலி என்பதை நிரூபித்து காட்டுங்கள்’’ என்றார் முதியவர். பெண்ணாசையில் மயங்கி நின்ற அம்பனும் அம்பரனும் முதியவர் சொன்னபடி யார் பலசாலி என்பதை நிரூபிக்க முடிவு செய்தனர். இருவரும் பகை கொண்டு  போர் செய்தனர். முடிவில் அம்பரன் தன் தம்பி அம்பனைக் கொன்றான்.

வெற்றி பெற்ற மமதையில் அம்பரன் அந்தப் பெண்ணை நெருங்கினான். அம்பிகை காளியாக உருவெடுத்தாள். கண்களில் கோபம் கொப்பளிக்க அம்பரனைப் பார்த்தாள்.  அவளது ஆக்ரோஷமான காளி வடிவைப் பார்த்த அம்பரன் அச்சமுற்றான்.  அவளிடமிருந்து தப்பிக்க வடக்கு திசை நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவனை துரத்திச் சென்ற காளிதேவி ஏவிய சக்தி வாய்ந்த ஆயுதங்களை எல்லாம் அம்பரன் தன் கைகளில் பற்றிக்கொண்டு ஓடினான். அவனை ஐந்துகாத தூரம் துரத்திச் சென்ற காளிதேவி தனது சூலாயுதத்தை ஏவினாள். அது அம்பரனைக் கூறுபோட்டு கொன்றது. அசுரவதம் முடிந்தது.  தேவர்களின் குறைகளும் தீர்ந்தன.
அம்பரனைக் கொன்றும் ஆத்திரம் அடங்கவில்லை காளிக்கு. இதைக் கண்ட திருமால் காளியிடம் சாந்தி அடைந்து முன்போல் சிவபெருமானின் இடது பாகத்தில் இருந்தருள வேண்டினார்.

திருமாலின் விருப்பப்படி அம்பிகை காளி வடிவை நீக்கி மீண்டும் கந்தவனத்திற்கு எழுந்தருளி சந்தனமரம் ஒன்றின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபடலானாள்.  தினந்தோறும் சிவபெருமானுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய விரும்பிய அம்பிகை அருகிலேயே சிறு ஊற்றாக கங்கை சுரக்குமாறு அருள கங்கையும் அங்கு தோன்றி தீர்த்தம் வழங்கினாள்.  அம்பிகையின் ஆலயத்திற்கு முன் இன்று கிணறாக உள்ள தீர்த்தமே கங்கா தீர்த்தமாகும். அம்பிகை இறைவனை நோக்கி தொடர்ந்து ஆராதனை செய்து வந்தாள்.  அம்பிகையின் விருப்பப்படியே இறைவன் தனது இடது பாகத்தை அன்னைக்கு அருளினார். தவக்கோலத்தில் இருந்த அம்பிகை அருள் நிறைந்த பொலிவுடன் இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்தாள். எனவே, அம்பிகை தவக்கோல நாயகி என அழைக்கப்பட்டாள். அசுரனைக்கொன்று பின் சாந்தமடைந்ததால் சாந்தநாயகி என்ற பெயரும் பெற்றாள்.

அதேபெயரில் இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கிறாள். அன்னை பார்வதியின் தவத்திற்கு இரங்கி தனது இடது பாகத்தை அன்னைக்கு இறைவன் வழங்கியதால் இறைவன் இங்கு பார்வதீசுவரர் எனும் திருநாமத்தைப் பெற்றார். அம்பிகை சிவலிங்கம் அமைத்து வழிபட்ட இடத்திற்கு நிழல் தந்து நின்ற சந்தனமாம் இந்த ஆலயத்தின் தலமரமாக விளங்குகிறது. அன்னைக்கு ஆதரவு செய்த திருமால் ஆதி கேசவ பெருமாள் என்ற  திருநாமத்துடன் இந்த ஆலயத்திற்கு மேற்கே கோவில் கொண்டுள்ளார். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  நுழைவாயிலின் வெளிப்புறம் இரண்டு வினாயகர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. உள்ளே நுழைந்ததும் பீடமும் நந்தியும் இருக்க அடுத்து ராஜகோபுரம் உள்ளது. ஆலயம் மூன்று திருவாயில்களைக் கொண்டதாக உள்ளது. அவை தோரண வாயில் கோபுர வாயில், அணுக்கன் திருவாயில் என்பனவாகும். சுவாமி அம்மன் கோவில்களுக்கு உரிய கருவறைகளை சூழ்ந்துள்ள முதல் திருச்சுற்றும், நந்தவனத்தோடு அமைந்துள்ள இரண்டாவது திருச்சுற்றும்  மதில்களோடு கூடியதாகும்.

மூன்றாவது திருச்சுற்று திருமதிற் சுவற்றுக்கு வெளிப்புறம் உள்ள சாலை திருச்சுற்றாகும். கோபுர வாயிலைக் கடந்ததும் மகாமண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வடமேற்கில் உள்ள நீண்ட மேடையில் சனி பகவான், பைரவர், துவார பாலகர், பாணுலிங்கம்,  நாகர்,  சூரியன்,  சந்திரன் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. இந்த மண்டப தூண்கள் சிலவற்றில் சோழர்கால  கல்வெட்டுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் தெற்கில் முதலாவதாக காட்சி தருபவர் இடப வாகனத்துடன் நின்றருளும் காட்சிக் கொடுத்த நாயகர். இத்தலத்துக்குரிய தெய்வீக நிகழ்ச்சிக்கு உரியவரும் இவரே.  இவருக்கு எதிரே மதிலோடு கட்டப்பட்டுள்ள மாடத்தில் வேட  வடிவத்தில் வில்லும் வாளும் ஏந்தி வேடராசன் திருமேனி உள்ளது. சிவராத்திரி அன்று இறைவன் வேடராசனுக்கு காட்சி தந்து முக்தி தந்த சம்பவத்தை விளக்கும் விதமாக சிவராத்திரியின் நான்காவது கால பூஜை காட்சி கொடுத்த  நாயகருக்கே நடைபெறுகிறது.

திருச்சுற்றின் மேற்கில் செல்வ கணபதி, ஐயப்பன், மகாலட்சுமி, சுப்ரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மேற்கில் 16 அடி உயரத்தில் மாடத்தில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணா மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரரின் சந்நதி உள்ளது. மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன. இங்கு இறைவன் பார்வதீசுவரர் லிங்கத்திருமேனியில்  கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் இடதுபுறம் தனி சந்நதியில் இறைவி சாந்தநாயகியின் ஆலயம் உள்ளது.  இறைவி இருகரங்களுடன் சாந்தம் தவழும் முகத்துடன் கீழ்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவியின் மகாமண்டப  நுழைவாயிலின் வலதுபுறம் வராகி அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் சந்நதியின் முன் உள்ள கங்கா தீர்த்தம் என்ற பெயருடைய கிணறும் கிழக்கு வீதியில் உள்ள திருக்குளமும் வடபாலுள்ள நூலாறு எனும் ஆறும் இத்தலத்தின்  தீர்த்தமாகும். சந்தன மரம் ஆலயத்தின் தலவிருட்சம்.

அருணகிரிநாதரும் இரட்டைப் புலவர்களும் இத்தலம் பற்றி பாடியுள்ளனர். விக்கிர சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக தெரிகிறது. சோழ மன்னன் குலோத்துங்கன் பிள்ளை வரம் வேண்டி அம்பிகையை வேண்ட அம்பிகை அருளால் மன்னனுக்கு குழந்தை செல்வம் கிடைத்ததாம். அதன் நன்றியாக இறைவிக்கு மன்னன் கொலுசு அணிவித்தானாம்.  எனவே அன்னை இன்றும் காலில் கொலுசுடன் காட்சி தருகிறாள். தவிர இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவது சிறப்பான அமைப்பு என்கின்றனர் பக்தர்கள். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்,   வெள்ளி,   ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 08.09.2005 ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்த ஆலயம் இந்து அறநிலையதுறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இஞ்சிக்குடி அமைந்துள்ளது.
 
ஜெயவண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்