SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர்!

2018-05-31@ 14:16:51

எனக்கு புரிந்துகொள்ளும் திறன் இல்லை. கவனிக்கும் திறனும் இல்லை. அகம்பாவம், அறியாமை இரண்டும் இருக்கிறது. இதனால் பைத்தியமாகி கஷ்டப்பட்டுக் கொண்டு வருகிறேன். இதற்கு பரிகாரம் சொல்லுங்கள். அலமேலு, பட்டீஸ்வரம்.

இந்தக் கடிதத்தை எழுதியது நீங்கள்தானா அல்லது உங்கள் சார்பாக வேறு யாரேனும் எழுதியுள்ளார்களா? மற்றவர்கள் உங்கள் மீது சுமத்தும் குறைகளை எண்ணி வருத்தப்பட்டு எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தாலும், ஜென்ம ராசிக்கு அதிபதியான சனி லக்னத்தில் வந்து அமர்ந்து பிடிவாத குணத்தினைத் தந்திருக்கிறார். அவ்வளவுதான். அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

அடுத்தவர்களுக்காக வாழாமல் தனக்குத் தோன்றுவதை மட்டும் செய்யும் உங்களின் குணத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்காதீர்கள். உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை நீங்கள் செய்கிறீர்கள். அதனை அகம்பாவம் என்றோ அறியாமை என்றோ சொல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். இதுபோன்ற குணங்கள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும். உங்களிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. இதில் பைத்தியம் ஆவதற்கோ, கஷ்டப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. துர்க்கையம்மனின் தலைசிறந்த திருத்தலங்களில் ஒன்றான பட்டீஸ்வரத்தில் வசிக்கிறீர்கள். வெள்ளிதோறும் தவறாமல் அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். மனத்தெளிவு பெறுவீர்கள்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் என் மகன் அங்குள்ள பெண்ணை விரும்பி இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. 7 வயதில் ஒரு பிள்ளை இருக்கிறான். மருமகள் விவாகரத்து வழக்கு தொடர்ந்து ஒரு வருடம் ஆகிறது. தான் தோன்றித்தனமாக முடிவு எடுத்துள்ள என் மகனின் எதிர்காலத்திற்கு வழி சொல்லுங்கள். தியாகராஜன், பெங்களூரு.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகத்திலும் தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. இருவரின் தசாபுக்தியும் ஒன்றாக உள்ளது. இருவர் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தவறு என்பது உங்கள் மகன் மீது உள்ளதாகவே தோன்றுகிறது. உங்கள் மருமகளின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குருபகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். மகனின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளார். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

பிரிந்து வாழ்ந்தாலும் உள்ளத்தால் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். எவர் விட்டுக்கொடுத்துச் செல்வது என்ற ஈகோவும், உங்கள் மகன் தெரிந்தே செய்த தவறும்தான் இந்த பிரிவினைக்குக் காரணம். தனக்காக இல்லை என்றாலும் பெற்ற மகனின் நலன் கருதியாவது இருவரும் இணைந்து விடுவார்கள். அவர்களது ஜாதகத்தின்படி 07.04.2019க்கு மேல் திருப்புமுனை காண்பார்கள். உங்கள் மருமகள் நல்ல குணத்தினைக் கொண்டவர். பெரியவர்கள் ஆகிய நீங்கள் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்று அவர்களோடு குறைந்த பட்சம் ஒரு மூன்றுமாத காலம் ஒன்றாக வசிக்க முயற்சியுங்கள். உங்கள் வார்த்தைக்கு மருமகள் மதிப்பளிப்பார். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி பரமேஸ்வரனை வணங்கிவர பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர்.

“ப்ரதீப்த ரத்னோஜ்ஜ்வல குண்டலாயை ஸ்புரன்மஹாபந்நக பூஷணாய
சிவான்விதாயை ச சிவான்விதாய நம: சிவாயை ச நம: சிவாய,”


17 வயது நடக்கும் என் மகன் அனைவரிடமும் சிடுசிடுவென்று நடந்து கொள்கிறான். 12ம் வகுப்பு பரிட்சை எழுதி உள்ளான். அனைத்து கெட்ட பழக்கங்களும் உள்ளன. வெறி வந்தவன் போல் கத்துகிறான். ஊரில் குடி இருக்கவே வெட்கமாக உள்ளது. அவனை நல்வழிப்படுத்த பரிகாரம் கூறுங்கள். தங்கராஜ், திருப்பூர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற கவிஞரின் வரிகளுக்கு உதாரணமாய் இருக்கிறார் உங்கள் மகன். இங்கே அன்னை என்று அவரது தாயாரை மட்டுமல்ல, தகப்பன் ஆகிய உங்களையும் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். பெற்றோர் ஆகிய நீங்கள் இருவரும் கொடுக்கும் செல்லம் அவரை அவ்வாறு நடந்துகொள்ளச் செய்கிறது. தற்போது நல்ல நேரம் என்பது அவருக்கு நடந்துகொண்டிருப்பதால் அவர் இஷ்டத்திற்கு அவரால் செயல்பட முடிகிறது.

இன்னும் மூன்றரை ஆண்டுகள் கழித்து நேரம் மாறும்போது மிகவும் சிரமப்படுவார். இதே சூழல் தொடர்ந்தால் குரு தசை முடிந்து சனி தசை ஆரம்பித்ததும் அவரது நிலை கேள்விக்குறி ஆகிவிடும். எதிர்காலத்தை மனதில்கொண்டு மிகவும் கண்டிப்புடன் வளர்க்க முயற்சியுங்கள். கையில் காசு பணத்தைக் கொடுக்காதீர்கள். அடியாத மாடு பணியாது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் கண்டிக்கவில்லை என்றால் ஊராரின் கண்டிப்பிற்கு உங்கள் மகன் ஆளாக நேரிடும். அமாவாசை நாட்களில் அருகிலுள்ள ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் முதியவர்களுக்கு உங்கள் மகனின் கைகளால் உங்களால் இயன்ற அன்னதானம் செய்யுங்கள். முன்னோர்களின் ஆசியால் உங்கள் மகனின் வாழ்வு சிறக்கும்.

என் மகனுக்கு உறவில் பெண் பார்த்து நிச்சயம் செய்து ஜாதகம் பார்த்த போது ஜோதிடர் தோஷம் உள்ளதாகக் கூறி பரிகாரமாக தாலி கட்டாமல் மாலை மாற்றி திருமணம் செய்யுங்கள் என்று சொன்னதன்படி செய்துவிட்டோம். தற்போது பேரக்குழந்தை பிறந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. இனிமேல் தாலி கட்டலாமா? ஏதாவது பிரச்னை வருமா? அருணன், நீலகிரி.

தாலிகட்டினால்தான் திருமணம் என்று சட்டமும் சொல்லவில்லை, சாஸ்திரமும் சொல்லவில்லை. தாலி கட்டும் சடங்கு என்பது சம்பிரதாயத்தில் அதாவது நடைமுறை பழக்கத்தில் வந்தது. ஒரு பெண்ணிற்கு ஜாதக ரீதியாக தாலிபாக்கியம் குறைவு என்று ஜோதிடர் சொன்னால் தாலி கட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைப்பது அறியாமையே. அந்தப் பெண்ணிற்கு வைதவ்ய யோகம் உள்ளது அதாவது விதவைக் கோலம் பூணுவதற்கான வாய்ப்பு உண்டு என்று ஜோதிடத்தால் சொல்ல இயலும். அதற்கு பெண்ணின் கணவனுக்கு ஆயுள் பலம் குறைவு என்று பொருள். ஒரு ஆணும், பெண்ணும் மாலை மாற்றிக்கொண்டு, அந்தப் பெண்ணின் கரத்தினை அந்த ஆண்மகன் பிடித்தாலே அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருமனம் ஒன்றி திருமணம் செய்ய முடிவெடுத்த பிறகு இறைவனின் அருளைத்தான் நாடவேண்டும். ஜோதிடர் உட்பட எந்த மனிதசக்தியாலும் ஒரு மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்க இயலாது. ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மகனின் ஜாதகப்படியும், சதயத்தில் பிறந்திருக்கும் மருமகளின் ஜாதகப்படியும் எந்தவிதமான தோஷமும் இல்லை. தம்பதியரை ஒரு நல்ல நாள் பார்த்து அருகில் உள்ள முருகன் கோவிலில் தாலியை வைத்து அர்ச்சனை செய்து வழிபடச் சொல்லுங்கள். இறைவனின் சந்நதியிலேயே வைத்து திருமாங்கல்யத்தை மகனின் கரங்களால் அவரது மனைவிக்கு அணிவிக்கச் சொல்லுங்கள். நலமுடன் வாழ்வார்கள்.

என் மகனுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பெண்வீட்டார் வலுக்கட்டாயமாக கோயிலில் வைத்து காதல் திருமணத்தை நடத்திவிட்டார்கள். அதே தருணத்தில் என் மகனின் சித்தப்பா அகால மரணம் அடைந்து 8ம்நாள் துக்கம் நடந்து கொண்டிருந்தது. பெரியம்மா ஹார்ட் அட்டாக்கில் மருத்துவமனையில் இருந்தார். தந்தையாகிய நான் முடக்குவாதம் தாக்கி பேசமுடியாமல் சிகிச்சை பெற்று வந்தேன். இதற்கு தாங்கள் ஒரு வழி சொல்லவும். ஜெயராஜ், மதுரை.


ராகுகால வேளை, மாலை நேரம் என்றும் பாராமல் பெண்வீட்டார் வலுக்கட்டாயமாக தாலி கட்ட வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு உங்கள் மகனின் எல்லை மீறிய நடத்தை ஒன்றே காரணமாக இருக்கும். அது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களையும், இவரது திருமணத்தையும் எந்தவிதத்திலும் பொருத்திப் பார்க்க இயலாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சித்தப்பா விபத்தில் அகால மரணம் அடைந்து 8ம் நாள் துக்கம் நடந்து கொண்டிருந்தது, பெரியம்மாவின் ஹார்ட் அட்டாக், தந்தைக்கு முடக்கு வாதம் என்பதெல்லாம் இவரது திருமணத்திற்கு பின்னால் நடந்தவை அல்ல.

மேலும் இந்த நோய் தாக்குதல்கள் எல்லாம் திடீரென்று ஒரே நாளில் வந்துவிடாது. ஏற்கெனவே உடம்பில் இருந்து வந்த கோளாறுகள் அந்த நேரத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவங்களுக்கும் அந்த திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நம் மீது உள்ள குறைகளை மறைப்பதற்குக் காரணம் தேடுவது மனித இயல்பு. ராகு காலத்தில் நடந்திருந்தாலும் அதுவும் முறையான திருமணமே. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் மனைவி என்பவள் மகாலட்சுமியின் அம்சத்திலேயே அமைந்திருக்கிறார். கவலை வேண்டாம்.

நான்கரை வயதாகும் என் பேரனுக்கு இதுவரை பேச்சு வரவில்லை. உட்காரவும் இயலவில்லை. எப்போதும் படுத்த நிலையிலேயே இருக்கிறான். பார்க்காத வைத்தியம் இல்லை.  அவனது வருங்காலத்திற்கு வழி சொல்லுங்கள். கண்ணம்மாள், கோவில்பட்டி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ரோக ஸ்தானமாகிய ஆறாம் வீட்டில் சூரியன், புதன், வக்ர சனி, ராகு ஆகிய நான்கு கிரஹங்கள் இணைந்திருப்பது பிரச்னையைத் தரும். வாக்கு ஸ்தான அதிபதியும், நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துபவரும் ஆன புதன் ஆறில் அஸ்தமன பலத்துடன் அமர்ந்திருப்பதும், ராகுவுடன் இணைந்து ராகுவின் சாரத்திலேயே சனியும் அமர்ந்திருப்பதும் பலவீனமான நிலை ஆகும். எனினும் இந்தப் பிரச்னையை சரிசெய்ய இயலும். இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக நீங்கள் தற்போது பார்த்து வரும் அதே மருத்துவ முறையை விடாது பின்பற்றி வாருங்கள்.

அதே சிகிச்சை முறை நிச்சயமாக பலன் தரும். உங்கள் கடிதத்தில் நீங்கள் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பரிகாரங்களே போதுமானது. குறிப்பாக உங்கள் மகன் சித்தர் பீடத்திற்கு செய்து வரும் அபிஷேக ஆராதனைகளை விடாது தொடர்ந்து செய்து வரச் சொல்லுங்கள். முடிந்த வரை அவர் செல்லும் போதெல்லாம் குழந்தையையும் அழைத்துச் செல்ல அறிவுறுத்துங்கள். சித்தரின் சந்நதியில் கிடைக்கும் ஆன்மிக அதிர்வலைகள் உங்கள் பேரனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டும். 20.09.2018 முதல் துவங்க உள்ள செவ்வாய் தசையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினைக் காண்பீர்கள். செவ்வாய் கேதுவின் சாரம் பெற்றும், கேது 12லும் அமர்ந்திருப்பதால் ஞானசீலனாக உங்கள் பேரன் உருவெடுப்பான். கடவுளை நம்பி காத்திருங்கள். நல்லதே நடக்கும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்