SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலமெல்லாம் காத்தருள்வார் காலபைரவர்!

2018-05-30@ 07:18:27

தெலங்கானா - இஸ்ஸனப்பள்ளி

சிவபெருமானின் உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர் போன்றவை பிரபலமானவைகளாகும்.  சிவனின்  ஆணைப்படி பிரம்மாவின் தலையைக் கொய்ததால் கால பைரவரின் கரத்தில் பிரம்ம கபாலம் ஒட்டிக் கொண்டதோடு, அவருக்கு பிரம்மஹத்தி தோஷமும்  ஏற்பட்டதால் அவரை காசிக்குச் செல்லுமாறு சிவபெருமான் அறிவுறுத்தியதாகப் புராணச் செய்திகள் கூறுகின்றன. சிவபெருமானின் கட்டளையை ஏற்று  காலபைரவர் காசித் தலத்தை அடைந்தவுடன் அவரது கரத்தில் இருந்த கபாலம் அகன்று, பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இன்றும் காசியில் காசி  விஸ்வநாதர் ஆலயத்தை அடுத்து மிகப்பிரபலமானதாக காலபைரவர் ஆலயம் திகழ்கிறது. இந்த காலபைரவர் காசித் தலத்தின் பாதுகாவலராக (கோத்வால்)  கருதப்படுகிறார். இவரைத் தரிசிப்போரின் அனைத்துப் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

காசி மற்றும் உஜ்ஜயினி போன்றே மிகப் பிரபலமான இன்னொரு கால பைரவ க்ஷேத்திரம் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், இஸ்ஸனப்பள்ளி  கிராமத்தில் அமைந்துள்ளது. தட்சிண காசி என்று போற்றப்படும் இத்திருத் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காலபைரவரை தரிசித்தால் காசி காலபைரவரைத்  தரிசித்த பலன் கிட்டும் என்ற ஐதீகம் உள்ளது. ஆலயத்திற்கு முன்பாக வரவேற்பு வளைவை அடுத்து, விசாலமான மஹா மண்டபம். அடுத்து கருவறையில்  சுமார் ஒன்பது அடி உயரத்தில் ஸ்ரீகாலபைரவ ஸ்வாமி நின்ற கோலத்தில் முறுக்கிய மீசை, மற்றும் இரு கரங்களுடன் அருட்பாலிக்கிறார். (பொதுவாக  காலபைரவரை நான்கு கரங்களுடன் மட்டுமே நாம் தரிசித்திருப்போம்). இங்கு வலக்கையில் திரிசூலம், இடக்கையில் கபால பாத்திரம் ஏந்தியுள்ள இவரது சிரசின்  மேலே ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. இடது தோளின் மேற்புறத்தில் சர்ப்பம் ஒன்று காணப்படுகிறது.

இந்த சர்ப்பத்தின் வால் அவருடைய இடக்கால்வரை நீண்டுள்ளது. மஹா மண்டபத்தின் மேற்புறம் சுற்றிலும் அஷ்ட பைரவர் திருக்கோலங்கள் அழகுற அமைக்கப்
பட்டுள்ளன. கருவறையின் மீது ஐந்து நிலை விமானம் உள்ளது. பொதுவாக காலபைரவரின் பின்புறம் நாய் வாகனம் காணப்படும் ஆனால் இங்கு நாய்  வாகனமின்றி இவர் பக்தர்களுக்குக் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். இருப்பினும் மண்டபத்திற்கு வெளியே கருங்கல்லில் தத்ரூபமாக வடிக்கப்பட்ட நாய் வாகனம்  சந்நதியை நோக்கியவாறு இருப்பதைக் காணலாம். திகம்பரராகக் காட்சி தரும் காலபைரவரின் திருமேனி முழுவதும் தினந்தோறும் அனுமனைப் போன்றே சிந்தூரப்  பூச்சு பூசுவது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும். இஸ்ஸனப்பள்ளி காலபைரவர் ஆலய வளாகத்தில் சிவபெருமானுக்கு தனிச் சந்நதியும், பிராகாரத்தில்  அரசுவேம்பு மரங்களின் கீழ் மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இரட்டை நாகரம் (ஜண்ட நாகம்) சந்நதியும் உள்ளன. ஆலயத்திற்கு வெளியே பெரிய  புஷ்கரணி உள்ளது.

காசி காலபைரவருக்கு நிகராகப் போற்றப்படும் இவரை தரிசித்தால் பக்தர்களைப் பீடித்திருக்கும் பூத, பிரேத, பிசாச உபாதைகள், மன நோய்கள், பயம் போன்றவை  விலகும் என்று பக்தர்கள் மனதாற நம்புகின்றனர். இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் வெளியே உள்ள புஷ்கரணியில் புனித நீராடி, காலபைரவரின்  கருவறையை எட்டு முறை வலம் வருகின்றனர். பொதுவாக கருவறையில் மூலவருக்கு அனைத்துத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால்  இங்கு காலபைரவருக்கு சுத்த நீரால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வேறு அபிஷேகத் திரவியங்கள் பயன்படுத்துவதில்லை. மிக அரிதாக பால்  அபிஷேகத்தை தரிசிக்கலாம். விசேஷ நாட்களில் பைரவரின் முகத்திற்கு மட்டும் வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம்   செய்கிறார்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் அன்னபூஜை வழிபாட்டில் பைரவரின் திருப்பாதங்களில் வெள்ளி கவசம் அணிவித்து, அதன்மீது  அன்னம் குவியலாக வைக்கப்படுகிறது. அர்ச்சனை, ஆரத்திக்குப் பின்னர் இந்த அன்னத்தை பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

மாதந்தோறும் கிருஷ்ண பட்ச அஷ்டமி நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும், உற்சவர் பல்லக்கு சேவையிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து  கொள்கின்றனர். கார்த்திகை மாதம் பைரவ ஜயந்தியான பைரவாஷ்டமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். ஆண்டு தோறும்  ஜாத்ரா, ரத உற்சவம், அக்னி குண்டம் போன்றவையும் நடைபெறுகின்றன. இந்தக் கிராமத்தின் எட்டு மூலைகளிலும் அஷ்ட பைரவர்கள் சூட்சுமமாக  எழுந்தருளியிருப்பதாகவும், ஈசான திக்கில் உள்ள இந்த காலபைரவரே பிரதானமாக வழிபடப்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த காலபைரவர் ஆலயத்திலிருந்து  ஒரு கி.மீ. தொலைவில், இத்தலத்தின் சிவாலயம் உள்ளது. இங்கு சிவபெருமான் காசி போன்றே அன்னபூர்ணா சமேத காசிவிஸ்நாதராக எழுந்தருளி  அருட்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அனுமன், பண்டரிநாதர் ஆகியோருக்கும் சந்நதிகள் உள்ளன. மாநிலத் தலைநகர் ஐதராபாத்திலிருந்து 130 கி.மீ.  தொலைவிலும், மாவட்டத் தலைநகரான நிஜாமாபாத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. காலை 5 மணி முதல் இரவு 8 மணி  வரை கோயில் திறந்திருக்கும்.
 
விஜயலட்சுமி சுப்பிரமணியம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்