SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளுக்கு மழலை கிட்டும்!

2018-05-22@ 14:30:44

என் தங்கை அமாவாசை மற்றும் பௌர்ணமியில் கை கால் இழுத்தவாறு வலிப்பு வருவது போல் அடித்துக் கொள்கிறாள். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இதுபோல் வருகிறது. இதனால் என் தங்கை மிகவும் கஷ்டப்படுகிறாள். இதற்கு தீர்வு காணபரிகாரம் சொல்லுங்கள். வேலு, மதுராந்தகம்.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி (தனுசு ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தங்கையின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின் படி பிரச்னைக்கு உரிய நேரம் என்பது கடந்த 19.03.2018 உடன் முடிந்துவிட்டது. தற்போது துவங்கியிருப்பது நல்ல நேரமே. கடந்தசில நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காணத் துவங்கியிருப்பீர்கள். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் உடல்நிலையிலும், ஜென்ம ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் புதனின் இணைவினைப் பெற்றிருப்பதால் மன நிலையிலும் பிரச்னையைச் சந்தித்துள்ளார்.

உடல்நிலையை விட மனநிலையில் தான் பிரச்னை அதிகமாக உள்ளது. அவரது ஆழ்மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகாலையில் ஸ்நானம் செய்து அருகிலுள்ள அம்மன் கோயிலில் அரிசி மாவும், வெல்லமும் கலந்து அதற்கு நடுவில் நெய்ஊற்றி மாவிளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கு மலையேறும் வரைஅம்மனின் சந்நதியிலேயே அமர்ந்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். அதன் பின்பு அந்த மாவினை பிரசாதமாக உட்கொள்ள உடல் ஆரோக்கியம் பெறும்.

என் மகளுக்கு கடந்த 2000ம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் நன்றாக இருந்த வாழ்க்கை கடந்த நான்கைந்து வருடங்களாக சரியில்லை. மாப்பிள்ளை அரைலூசுபோல் நடந்து கொள்கிறார். கடுமையாகப் பேசி அடிக்கவும் செய்கிறார். விவாகரத்து செய்து விடலாமா? வழிகாட்டுங்கள். முரளிபிரபு, பெங்களூரு.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது செவ்வாய்தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. இருவரின் நட்சத்திரமும், ராசியும் மிகவும் வலிமை வாய்ந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை இருவரிடமும் இல்லை. ஜாதகபலத்தின்படி உங்கள் மருமகன் மீது மட்டும் முழுமையாக குற்றம் சொல்ல இயலாது. 2013ம் ஆண்டின் முற்பாதியில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்த அனுபவம் அவரை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது. அவர் மனதில் உள்ள கேள்விக்கு விடை கிடைத்தால் சரியாகி விடுவார்.

இயன்றவரை தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னையில் மற்றவர்கள் யாரும் தலையிடாமல் இருப்பது நல்லது. 12ம் வகுப்பு படிக்கும் மகளின் எதிர்காலம் கருதியாவது அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மகளின் ஜாதகபலத்தின் படி தற்போது நேரம் சரியாக இல்லாததால், விவாரத்து செய்வதால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. அவருடைய மனநிம்மதியும் குலைந்து விடும். அவசரப்படாமல் நிதானித்துச் செயல்படுங்கள். உங்கள் மகளிடம் பிரதி சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தை 16 முறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். 07.11.2018ற்குள் அவருடைய பிரச்னை முடிவிற்கு வரும்.

“மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி,”


என் மகளுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. நிறைய பரிகாரம் செய்து விட்டோம். மருத்துவம் பார்த்து விட்டோம். எந்தப் பலனும் இல்லை. குழந்தைச் செல்வம் கிட்ட உரிய பரிகாரம் சொல்லுங்கள். பாலசுப்ரமணியம், கொட்டாரம்.

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின் படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தின் படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாயின் இணைவு குழந்தை பாக்கியத்தைத் தருகிறது. உங்கள் மருமகனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும், புத்திரகாரகனுமான குரு பகவான் நீசம் பெற்று மூன்றில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலையாகும். மேலும், அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும் நீசம் பெற்று ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் தோஷத்தைத் தந்திருக்கிறது.

உங்கள் மருமகனுக்கு தங்கள் குலதெய்வத்தின் பெயரை அவரது பெற்றோர் சூட்டியிருப்பதை உணர முடிகிறது. குலதெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து மனமுருகிப் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். முறையான மருத்துவ ஆலோசனையையும் தவறாது பின்பற்றிவரச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு வியாழக்கிழமைநாளில் திருச்செந்தூர் சென்று நாழிக்கிணறு மற்றும் சமுத்திர ஸ்நானம் செய்தபின் செந்தில் ஆண்டவரை தரிசித்து வழிபடச் சொல்லுங்கள். குமரக் கடவுளின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். 28.03.2019ற்குப் பிறகு உங்கள் மகளுக்கு மழலைச் செல்வம் வந்து சேரும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்படுகிறேன். காலையில் தெளிவாக இருக்கும் நான் இரவு எட்டு மணிக்கு மேல் மது அருந்திவிட்டு மனக்குழப்பத்திற்கு ஆளாகிறேன். மதுபோதையில் இருந்து மீண்டும் குடியை மறந்து வாழ தகுந்த பரிகாரம் சொல்லுங்கள். பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை மாவட்டம்.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன்தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. ஜென்ம லக்னத்திற்கு 12ல் இணைந்திருக்கும் சனி  ராகுவும், ஜென்ம லக்னாதிபதி புதன் ஆறாம் வீட்டில் சுக்கிரன்  கேதுவுடன் இணைந்திருப்பதும் உங்கள் மனநிலையில் மாற்றத்தைத் தந்திருக்கிறது. உங்கள் பிரச்னை என்னவென்று உங்களுக்கே தெரிந்திருப்பதால் அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழலில் நடந்து வரும் தசை மற்றும் புக்தியின் அதிபதிகள் ராகுவின் சாரம் பெற்று ஆறாம் வீட்டில் இருப்பதும், ராகு 12ல் இருப்பதும் சாதகமான அம்சம் அல்ல. மதுப்பழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகிவிடும்.

ஆறாம் பாவம் என்பது கல்லீரல் பகுதியின் மேல் தனது ஆதிக்கத்தினை செலுத்தும். இந்த தசாபுக்தியில் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் செவ்வாய், புதன், வெள்ளி, சனிஆகிய நான்கு நாட்களும் கண்டிப்பாக மது அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டினை வகுத்துக் கொள்ளுங்கள். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக முழுவதுமாக நிறுத்தப் பாருங்கள். மது அருந்த ஆசைப்படும்போதெல்லாம் உங்கள் தந்தையின் முகத்தினை மனதில் கொண்டு வாருங்கள். பிரதி சனிக்கிழமை தோறும் உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று திருவாசகப் பாடல்களை பொருளுணர்ந்து படித்து வாருங்கள். திருவாசகத்தின் மகிமையால் உங்கள் மனக்குழப்பம் தீரும்.

முப்பத்து நான்கு வயதாகும் எனக்கு பிரச்னைகளும் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேலைப்பளு அதிகமாக உள்ளது. சம்பளம் மற்றவர்களை விட குறைவாக உள்ளது. என் வருமானத்தில்தான் என் மகளை வளர்க்க வேண்டும். வாழ்வில் வளர்ச்சி காண பரிகாரம் சொல்லுங்கள். லோகநாயகி, பொள்ளாச்சி.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் குருபுக்தி நடக்கிறது. உங்களுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருவரும் வக்ரகதியில் அமர்ந்துள்ளனர். மேலும், சுப கிரகமான குருவும் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கையின்றி செயல்படுகிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கையில்லாமல் அடுத்தவர்களின் சொல்பேச்சைக் கேட்கிறீர்கள். அதுவும் உங்கள் நலனுக்கு எதிரானவர்களின் பேச்சினைக் கேட்டு வருகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் நலம்விரும்பி யார் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம். உங்கள் சம்பாத்தியத்தின் சிறு பகுதியை மட்டுமாவது சேமித்து வைக்க வேண்டும். உங்கள் மகளோடு இணைந்து வங்கிக் கணக்கினைத் துவக்கி அந்தக் கணக்கில் சிறுகச்சிறுக சேமித்து வாருங்கள். உங்கள் மகளின் ஜாதகம் நன்றாக உள்ளதால் அவரை நல்ல நிலைக்கு நீங்கள் கொண்டு வர முடியும். தங்கம், வெள்ளி முதலான பொருட்கள் உங்களிடம் தங்காது. உங்கள் ஜாதகத்தின் பலத்தினைப் புரிந்துகொண்டு அதிக எதிர்பார்ப்பின்றி செயல்படுங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள மாசானிஅம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். உங்கள் மகளை உயர்ந்த நிலையில் அமர வைத்து அழகு பார்ப்பீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் படிப்பில் அக்கறை செலுத்தவில்லை. யார் சொல்வதையும் கேட்பதில்லை. கடனால் எல்லாம் இழந்து நிற்கும் எனக்கு மனக்கவலையாக உள்ளது. அவன் நல்லபிள்ளை என்று எல்லோரும் சொல்ல நான் என்ன செய்ய வேண்டும்? குடும்பத்திற்கு தூணாக இருக்க வேண்டிய அவன் முன்னேற்றம் காண வழி கூறுங்கள். சக்தி, கன்னியாகுமரி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குருதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். பிடிவாத குணத்தினைக் கொண்டவர் உங்கள் பிள்ளை என்பதால் அவரிடம் எந்த ஒரு விஷயத்தையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. அவருக்கு பிடித்த செயலை மட்டுமே செய்வார். மிகவும் தைரியசாலியான உங்கள் மகனின் நட்புறவு சரியில்லை. தீய சகவாசத்தில் இருந்து அவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

பாசத்திற்காக உங்கள் பிள்ளை எதையும் செய்வார். வருகின்ற 22.07.2018ற்கு மேல் பள்ளிப்படிப்பின் மீதான நாட்டம் முற்றிலுமாகக் குறைந்துவிடும். என்றாலும் கைத்தொழிலின் மீது அவருடைய எண்ணம் திரும்பும். அவருக்கு பிடித்த தொழிலைக் கற்றுக்கொள்ள அவரை அனுமதியுங்கள். எங்கு சென்றாலும் இரவிற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்துங்கள். வருடந்தோறும் சபரிமலைக்கு மாலை அணிவித்து முறையாக விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வரச் சொல்லுங்கள். சாஸ்தாவின் அருளால் அவனது மனதில் ஞானம் பிறக்கும். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்