SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணேசன் அருளால் கவலைகள் தீரும்!

2018-05-22@ 14:19:14

எனது மகள் மன வளர்ச்சி குன்றியவள். ஐந்து மாதமாக ஸ்பெஷல் ஸ்கூல் போகிறாள். முன்னேற்றம் தெரிகிறது. வீட்டில் நன்றாக  நடந்துகொள்கிறாள்.  வெளியில் பயப்படுகிறாள். அம்மா என்று ஓரிரு வார்த்தைகள் பேசுகிறாள். அவளுடைய எதிர்காலம் எப்படி உள்ளது? அவள்  வேலையை அவளே செய்து  கொள்வாளா?- ஜெயந்தி, திருச்சி.

மனித அறிவிற்கும் அப்பாற்பட்ட சக்திகள் இந்த உலகத்தில் உண்டு என்பதற்கு உங்கள் மகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவரது ஜாதகத்தைக்  கணக்கிட்டுப்  பார்க்கும்போது கிரஹங்களின் சஞ்சார நிலையில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன  லக்னத்தில் பிறந்திருக்கும்  அவரது ஜாதகத்தில் பத்தாம் வீடாகிய ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு, ராகு என நான்கு கிரஹங்கள்  இணைந்திருப்பது நல்ல நிலையே. ஒன்பதாம்  வீட்டில் சுக்கிரன், நான்கில் புதன் என அமைந்திருக்கும் இவ்விருவரும் இத்தனை பெரிய பாதிப்பினைத்  தரமாட்டார்கள். மகளுடைய ஜாதகக் கணக்கின்படி  தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது.

ஆறாம் பாவத்தில் வக்கிரம் பெற்ற நிலையில் சனி சஞ்சரித்து வருகிறார். தற்போது அவரது நடவடிக்கையில் முன்னேற்றம் தெரிவதாகக்  குறிப்பிட்டுள்ளீர்கள்.  ஆறாம் பாவம் என்பது சற்று சிரமத்தைத் தரக்கூடியது என்பதால் பாதுகாப்பு கருதி அவரை வீட்டிற்குள்ளேயே வைத்துக்  கொண்டிருக்காமல் ஸ்பெஷல் ஸ்கூல்,  ஆஸ்ரமம் முதலான இடங்களுக்கு அனுப்பி வைப்பது நல்ல விஷயமே. இதனால், வெளி உலகத்தைக் கண்டு  பயப்படும் அவர் கொஞ்சம், கொஞ்சமாக  பயத்திலிருந்து விடுபட ஏதுவாக அமையும். முன்பின் தெரியாத மனிதர்களிடமும் மெதுவாக பழக வேண்டும்.  அவர் சற்று சிரமமாக உணர்ந்தாலும் அவரது  எதிர்கால நன்மை கருதி உறவினர்கள் யாரும் இல்லாத இடத்தில் வசிக்கப் பழக்குங்கள்.

31 வயது வரை நீங்கள் அவருக்கு சேவை செய்தது போதும். மருந்து, மாத்திரைகளை குறைத்து, பழக்கவழக்கத்தின் மூலம் மாற்றத்தினைக்  கொண்டுவர முயற்சி  செய்யுங்கள். இடையில் குடும்பப் பெரியவர்களின் துணைகொண்டு பரம்பரையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து  அதற்கான தீர்வினைக் காணப்  பாருங்கள். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நரசிம்மர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வாருங்கள். இவரைப்  போலவே ஸ்பெஷல் ஸ்கூலில்  படிக்கும் ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்து வருவதும் நல்லது. மகளின்  நடவடிக்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்.

என் மகனுக்கு நல்ல, நிரந்தரமான வேலை எப்போது கிடைக்கும்? அவனுக்கு திருமண யோகம் எப்போது வருகிறது? மந்தமான நிலையிலேயே இருக்கிறான்.  நாம் எது என்னாலும், தான் சொன்னதுதான் சரி என்று வாதிடுகிறான். வீடு உண்டு வேலை உண்டு என்று இருக்கிறான்.  அவன் வாழ்வு நன்றாக அமைய  வழிகாட்டுங்கள். - சரஸ்வதி, பெங்களூரு.

உங்கள் மகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும் அம்சம் அவரது ஜாதகத்தில் உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில்  பிறந்துள்ள  அவரது ஜாதகத்தில் தற்போது கேது தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனும்,  ஞானகாரகன் கேதுவும்  ஒன்றாக இணைந்திருப்பதால் அவ்வப்போது தனிமையில் சென்று அமர்ந்துவிடுகிறார். அதனால் மந்தமாக இருக்கிறார் என்று  எண்ண முடியாது. சிந்தனையில்  குழப்பம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். முடிந்தவரை அவரைத் தனிமையில் இருக்கவிடாதீர்கள்.

சதா ஏதோ ஒரு வேலையைச் சொல்லிக்கொண்டே இருங்கள். அல்லது தொடர்ந்து அவரோடு பேசியபடி, அவரது சிந்தனையை மாற்ற முயற்சி  செய்யுங்கள்.  நீங்கள் சொல்வதைத்தான் அவர் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர் சொல்கிற கருத்துகளும் சரியானவையே என்று  பாராட்டி அவரை  ஊக்கப்படுத்துங்கள். அவரது ஜாதக அமைப்பின்படி 18.11.2018ற்கு மேல் நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்துவிடுவார். 11ம் வீட்டில் ஆட்சி  பலத்துடன் அமர்ந்திருக்கும்  குரு பகவான் அவரது வாழ்விற்கு பக்கபலமாகத் துணையிருப்பார். திருமணத்தைப் பொறுத்தவரை அவசரப்படாமல்  நிதானித்துச் செயல்படுவது நல்லது.

களத்ர ஸ்தானாதிபதி சூரியன் உச்ச பலத்துடன் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இணைந்திருப்பது அத்தனை சிலாக்கியமில்லை.  எனினும் களத்ர  ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். 27 வயது முடிந்த பிறகு திருமணத்திற்கு  முயற்சிப்பது நல்லது.  அதேசமயம் உறவினர் வழியில் பெண் அமைவது நல்லதல்ல. உங்கள் மகனிடம் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு  தினமும் சென்றுவரச் சொல்லுங்கள்.  சங்கடஹர சதுர்த்தி நாட்களில், தவறாமல் பூஜையில் கலந்துகொள்ள வையுங்கள். சந்திரன்-கேதுவின்  இணைவினைப் பெற்றுள்ள இவர் விநாயகப்பெருமானின்  அருள் இருந்தால் நல்லபடியாக வாழ்வினில் முன்னேற்றம் காண இயலும். கணேசனின்  அருளால் உங்கள் கவலைகள் தீர்ந்துவிடும்.

என் அண்ணனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? திருமணத் தடையால் மனம் நொந்துபோய் பலமுறை வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.  அடிக்கடி பசி,  தாகமின்றி யாருடனும் பேசாமல் உள்ளார். எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. பரிகாரம் சொல்லுங்கள்.
- வி.என்.நாதன், பண்ருட்டி.


பயம் எதுவும் தேவையில்லை. உங்கள் அண்ணனை அவரது போக்கிலேயே செல்லவிடுங்கள். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில்  பிறந்துள்ள  அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதன் 10ம் வீட்டில் நீசம் பெற்றுள்ளார். திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு  அதிபதியான குரு  பகவான், மூன்றில் அமர்ந்திருப்பது களத்ர தோஷத்தினைத் தருகிறது. மேலும் குரு பகவானோடு செவ்வாய், சனி, ராகு ஆகிய அசுப  கிரஹங்கள்  இணைந்துள்ளன. போதாக் குறைக்கு மாந்தி என்ற துணைக்கோளும் சேர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த அம்சங்கள் நிச்சயமாக இவருடைய மணவாழ்வை நல்லபடியாக அமைத்துத் தராது. ஆறு, ஏழு, எட்டு ஆகிய பாவகங்களுக்கு அதிபதிகளாகிய  செவ்வாய்,  குரு, சனி ஆகியோர் ஒன்றாக இணைந்து மூன்றில் அமர்வது சந்யாச யோகத்தினைத் தருகிறது. உலக ஆசைகளில் இருந்து கொஞ்சம்,  கொஞ்சமாக விடுபட  அவர் முயற்சிப்பார். தற்போது நடந்துவரும் புதன் தசை முடிவடைந்து 47வது வயதில் துவங்கும் கேது தசை காலத்தில் அவர்  சந்யாச வாழ்க்கைக்குள்  நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது அதற்கு பெரிதும் துணைபுரிவார்.

அவரது நடவடிக்கைகளுக்கு தடை சொல்லாமல் அவரை அவரது போக்கிலேயே செல்ல அனுமதியுங்கள். 11ம் வீட்டுச் சூரியன் அவரது புகழை  உலகறியச்  செய்வார். இவரைப் போன்ற அற்புதமான ஞானியை உங்கள் பரம்பரை பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுகின்ற காலம்  வெகுவிரைவில் வந்து  சேரும். அவருடைய திருமணத்திற்கு முயற்சிக்காமல் ஞான மார்க்கத்தில் செல்ல அவரை அனுமதியுங்கள். இதுவே உங்கள்  வம்சத்திற்கு நல்லது.  ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பயப்பட  வேண்டிய அவசியமில்லை.

என் மகளுக்கு 28 வயது. உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஆங்காங்கே உள்ளன. மருத்துவர்கள் இதனை தோல் சம்பந்தமான குறைபாடு என்று  சொல்கிறார்கள்.  ஆனால் வருகின்ற வரன்கள் இதனை ஒரு நோய் என்று எண்ணி மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் திருமணத் தடை உண்டாகிறது.  ஒரு நல்ல வழி  காட்டுமாறு வேண்டுகிறோம். - கோவிந்தராஜ், பொள்ளாச்சி.

உங்கள் மகளுடைய ஜாதகத்தின்படி அவருக்கு திருமண யோகம் வந்தாகிவிட்டது. கிழக்கு திசையில் இருந்து நல்ல உத்யோகத்தில் உள்ள மாப்பிள்ளை   அமைவார். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும்  ஏழாம்  வீடு சுத்தமாக உள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் நீசபலம் பெற்று ஆறில் அமர்ந்திருப்பதால் இத்தனை காலம் திருமணத்தடை   உண்டாகியிருக்கிறது.

‘காரகோ பாவ நாசாய’ என்று சொல்லப்பட்டாலும், களத்ர ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை அந்த தோஷத்தைப் போக்குகிறது.  மேலும் புத்ர  ஸ்தானத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் புதன், செவ்வாய், கேது இணைந்திருப்பதால் குழந்தைப் பேறும் நன்றாக உள்ளது.  06.12.2020வரை திருமண யோகம்  நீடிக்கிறது. அதுவரை காத்திருக்காமல் தற்போது குருபலனும் சேர்ந்திருக்கும் இந்த வருடத்திலேயே அவரது  திருமணத்தை நடத்திவிடுவீர்கள். ஏழாம் வீட்டிற்கு  அதிபதியான சுக்கிரன் நீசம் பெற்றிருப்பதால் அந்தஸ்து வித்தியாசம் பார்க்காமல் மாப்பிள்ளையின்  குணத்தை மட்டும் கருத்தில் கொண்டு திருமணத்தை  நடத்துங்கள்.

இவருடைய உடம்பில் உள்ள வெண்புள்ளிகள் மறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் இதனை ஒரு குறையாக எண்ணாமல், அவரைக்  கரம் பற்றும்  கணவன் அமைவார். திருவோண நட்சத்திர நாளில் கோயமுத்தூர், காரமடை ரங்கநாதர் கோவிலுக்கு உங்கள் மகளை அழைத்துச் சென்று  ஆறு நெய் விளக்குகள்  ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்துவிடும்.

என்னிடமிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். பரணி நட்சத்திரத்தைச் சேர்ந்த   அவரிடமிருந்து பணம் திரும்ப வருமா, அல்லது கைகழுவி விடலாமா? - சுப்பு, கோயமுத்தூர்.

நண்பரின் நிலை பற்றித் தெரிந்துதான் உதவி செய்திருக்கிறீர்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்  ஜாதகத்தில்  தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசியைச் சேர்ந்த உங்கள் நண்பருக்கு உங்களை  ஏமாற்ற வேண்டும்  என்ற எண்ணம் கிடையாது. அவருடைய இயலாமையும், சூழ்நிலையும் உங்களுடைய கடனைத் திருப்பித்தர முடியாத வண்ணம்  தடை செய்து வருகிறது.  உங்களுடைய ஜாதகக் கணக்கின்படி குரு தசையில் சூரிய புக்தி நடந்த காலத்தில் அவருக்கு பண உதவி செய்திருக்கிறீர்கள்.

ஆறாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் அந்தக் கடன் தொகையை நீங்கள் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நம்மால் இயன்ற  உதவியை  நண்பனுக்குச் செய்திருக்கிறோம் என்று திருப்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பரை நீங்கள் தவறாக எண்ண வேண்டியதில்லை. ஏதோ ஒரு  வகையில் அவருக்கு  நீங்கள் பட்ட கடன் தீர்ந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். கொடுத்த கடனை நினைத்து உடல்நலத்தைக் கெடுத்துக்  கொள்ளாதீர்கள். உங்கள் முழு  கவனத்தையும் இறைவன் மேல் வைத்து நலமுடன் வாழுங்கள்.

திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. பல மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்துவிட்டோம்.  இருப்பினும் எந்த  பயனும் இல்லை. எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா?  நான் சொந்தமாக எலக்ட்ரிகல் கடை தொடங்கலாமா?
- ராம்குமார், செங்கல்பட்டு.


உங்களுடைய ஜாதகத்தையும், உங்கள் மனைவியின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் குழந்தை பாக்கியம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும் என்று  தெளிவாகத்  தெரிகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் (நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் கடக லக்னம் என்று தவறாகக்  கணக்கிடப்பட்டுள்ளது)  பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் பிள்ளைப் பேற்றினைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். ஐந்தாம்  வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன், ஆறாம்  வீட்டில் சனியுடன் அமர்ந்துள்ளதால் குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறது.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் நீசம்  பெற்றிருந்தாலும்  ஒன்பதில் அமர்ந்துள்ளார். அம்பிகையின் அம்சத்தில் அழகான பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் இருவரின்  ஜாதகங்களிலும் சுக்கிர  கிரஹத்தின் வலிமை குன்றியுள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று பால்  அபிஷேகம் செய்து உங்கள் மனைவியை  வழிபட்டு வரச் சொல்லுங்கள்.

தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம், உங்கள் இருவருக்கும் சாதகமாகவே உள்ளது. இருவரின் ஜாதகக் கணக்கின்படி 26.10.2018 முதல் 23.06.2021  வரை  நேரம் மிகவும் நன்றாக உள்ளது. இடைப்பட்ட காலத்திற்குள் உங்களுடைய வம்சம் தழைத்துவிடும். தற்போது நிலவி வரும் கிரஹ சூழலின்படி  நீங்கள்  சொந்தமாக எலக்ட்ரிகல்ஸ் கடை துவங்கலாம். நேரம் நன்றாக உள்ளது. உங்களுடைய உழைப்பை நம்பி செயலில் இறங்குங்கள். உண்மையான  உழைப்பு  உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

வெள்ளி உலோகத்தினால் ஆன காப்பு ஒன்றை நிரந்தரமாக உங்கள் வலது கரத்தில் அணிந்து கொள்ளுங்கள். வெள்ளியினால் ஆன வளையல் ஒன்றை  உங்கள்  மனைவி அணிவதும் நல்லது. ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் தம்பதியராக சென்னையை அடுத்துள்ள மாங்காடு திருத்தலத்திற்குச்  சென்று ஆதிபராசக்தி  அன்னையை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அருகிலுள்ள வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று பால்  அபிஷேகம் செய்து  வழிபடுங்கள். மழலைச்சத்தம் விரைவில் கேட்கும்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்