SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது எவ்வாறு?

2018-05-21@ 14:59:32

மனித உடல், மிருகத்தின் (சிங்கத்தின்) தலை, நரசிம்ம அவதாரத்தின் இந்த உருவ அமைப்பு சாத்தியம்தானா? - ஜி.டி.சுப்ரமணியம், கொளத்தூர்.

‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ என்ற டார்வினின் கருத்தை உயிரியல் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் கருத்தினை மெய்ப்பிப்பது போல, தசாவதார  தத்துவம்  உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. முதலாவதான மச்சாவதாரம் நீரில் மட்டும் உயிர்வாழுகின்ற மீனைக் குறிக்கிறது.  இரண்டாவது  கூர்மாவதாரம். அதாவது நீரிலும், நிலத்திலும் உயிர்வாழுகின்ற ஆமை. அதனைத் தொடர்ந்து நிலத்தில் மட்டுமே உயிர் வாழுகின்ற  பன்றியாக, பூமியை  தோண்டும் வல்லமை படைத்த வராக அவதாரமாக பெருமாள் காட்சியளிக்கிறார். நான்காவதாக வருவதே நரசிம்ம அவதாரம்.   மிருக சக்தியோடு மனித  சக்தியையும் ஒருங்கிணைத்ததாக நரசிம்மரின் தத்துவம் அமைகிறது.

அதனைத் தொடர்ந்து மிருக சக்தி ஏதுமின்றி வெறும் மனிதனாக, சிறு பிள்ளையாக வாமன அவதாரம், காட்டிலும், மேட்டிலும் அலைந்து திரிகின்ற   காட்டுவாசியாக, அதிக கோபத்தினைக் கொண்டிருக்கும் மனிதனாக கோடாலியுடன் காட்சியளிக்கும் பரசுராம அவதாரம், ஒருவனுக்கு ஒரு தாரம்,  தந்தை சொல்  மிக்க மந்திரமில்லை, இடுக்கண் களைவதாம் நட்பு என்று சாதாரண மனிதனுக்கு உரிய அத்தனை சாத்வீக குணங்களுடன், எந்தவிதமான  தெய்வீக சக்தியுமின்றி  சாமானிய மனிதனுக்கு உரிய அத்தனை ஆசாபாசங்களுடன் வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமன், மனிதர்களை மாத்திரமல்ல,  பசுக்களையும் ரக்ஷிப்பது நம் கடமை என்ற  எண்ணத்தை வலியுறுத்தும் பலராமன், அஷ்டமாசித்திகளுடன் ஞானசக்தியினை முழுமையாகக் கொண்டு  பகவத்கீதையை உபதேசித்த கண்ணன், இறுதியில் கலி  முற்றும்போது துர்சக்திகளை அறவே அழிக்க அவதாரம் எடுக்க உள்ள கல்கி என்று ஒவ்வொரு  அவதாரத்தின் போதும் ஒவ்வொரு விதமான பரிணாம  வளர்ச்சியைக் காண இயலும்.

அந்த வரிசையில் நான்காவதாக வருகின்ற நரசிம்ம அவதாரத்தினுடைய உருவ அமைப்பு சாத்தியம்தானா என்று கேட்டிருக்கிறீர்கள். நரன் + சிம்மம் -  நரசிம்மம்.   மார்பு, வயிறு, தொடை என மனிதனின் உடல், முகம், தலை, நகங்கள் மட்டும் சிங்கத்தின் அமைப்பு. ஆண் சிங்கத்திற்கு அழகு அதன்  பிடரி மயிர். நரசிம்மரின்  தலை முடியோ பரட்டைத் தலை. முடிகள் அனைத்தும் சிலிர்த்த நிலையில் ஆக்ரோஷத்தின் உச்சத்தினை வெளிப்படுத்தும்  விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  சாதாரணமாக ஒரு மனிதனுக்குக் கோபம் வரும்போது கோபத்தில் கண்கள் சிவப்பதோடு, மூர்க்கத்தனத்துடன்  ஒரு மிருகமாகவே மாறுவதை நாம் கண்கூடாகக்  கண்டிருப்போம். ஏன், நாம் கூட நம் வாழ்நாளின் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடந்து  கொண்டிருப்போம்.

சமீபத்தில் வந்த திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். “ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு, பாக்குறியா பாக்குறியா” என்று அந்த நடிகர்  சிங்கமாகவே  மாறி கர்ஜித்து அருகில் உள்ள மனிதனை ஒரே கையால் அடித்து வீழ்த்துவதாக அந்த திரைப்படத்தின் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார்.  அவ்வாறு  காட்சிப்படுத்தப்படும்போதுதான் நமக்கு அந்த கதாபாத்திரத்தின் தன்மை முழுமையாகப் புரிகிறது. சாதாரண மனிதனின் கோபத்தை நாம்  புரிந்துகொள்வதற்கே  இவ்வாறு காட்சிப்படுத்தப்படும் போது, சர்வ வல்லமையும் கொண்ட சாட்சாத் மஹாவிஷ்ணுவின் கோபத்தினை நாம்  புரிந்துகொள்வதற்காக உண்டாக்கப்பட்ட  உருவ அமைப்புதான் நரசிம்மம். முழுக்க, முழுக்க ஆக்ரோஷத்துடன் சம்ஹார மூர்த்தியாகக்  காட்சிப்படுத்தப்பட்ட உருவம்.

ஸ்ரீஹரி தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என பிரஹலாதன் தன் தந்தையிடம் வாதிடும்போது, அப்படியென்றால் இதோ இந்த தூணில்   இருக்கிறானா என்று ஹிரண்யகசிபு  எதிரில் உள்ள தூணை தன் கதையால் அடிக்க, தூணைப் பிளந்து கொண்டு உச்சபட்ச உக்கிரத்துடன் வெளியே  வந்த  பகவானின் முகம் ஹிரண்யகசிபுவின் கண்களுக்கு மிருகமாகத் தோன்றுகிறது. காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்ய குணங்களை  மொத்தமாகக் கொண்டவன்  ஹிரண்யகசிபு. அசுர குணம் கொண்டவனின் கண்களுக்கு பகவானின் முகம் சிங்கமாகத் தோன்றுகிறது. அவனுக்கு  மாத்திரமல்ல, அங்கு அவையில் கூடியிருந்த  அத்தனை பேருக்கும் பகவானின் முகம் சிங்க முகமாகவே தோன்றுகிறது.

அத்தனை பேர் கண்களிலும் மிரட்சியே உண்டாகிறது. காரணம் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் தீய குணம் என்பது இருக்கத்தான்  செய்கிறது. ஆனால்  பிரஹலாதனின் கண்களுக்கோ இறைவன் சாந்த ஸ்வரூபனாகவே காட்சியளிக்கிறார். ஹிரண்யகசிபுவை வதம் செய்தபின்,  எல்லோரும் பயந்து ஒதுங்க,  உண்மையான இறை பக்தியினைக் கொண்டிருக்கும் பிரஹலாதன் ஒருவனால்தான் இறைவனை சாந்தப்படுத்த முடிகிறது.  இதிலிருந்து ஒரு உண்மை நமக்கு  நன்றாக புலப்படும். நாம் சத்வ குணத்தினைக் கொண்டிருந்தால் இறைவனின் திருவுருவம் நமக்கு சாத்வீகமாகத்  தோன்றும். நம்முடைய மனதில் தீய குணங்கள்  குடி கொண்டிருந்தால் அதற்கு ஏற்றவாறு இறைவனின் உருவமும் நமக்கு பயத்தைத் தோற்றுவிக்கிறது.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களில் மெய் எனும் உடம்பைத் தவிர மற்ற நான்கு உறுப்புகளும் மனிதனின் முகத்தினில்தான்  இருக்கின்றன.  வாய், கண், மூக்கு, செவி என்ற இந்த நான்கு புலன்களையும் சிங்க முகத்தினில் கொண்டு இறைவன் காட்சியளித்தாலும், நமக்குள்  இருக்கும் அத்தனை  துர்குணங்களையும் துறந்து உண்மையான பக்தியுடன் நோக்கினால் நம் கண்களுக்கு சாக்ஷாத் மஹாவிஷ்ணுவின் உருவமே  புலப்படும். நீ எவ்வாறு என்னைக்  காண்கிறாயோ அவ்வாறே நான் உனக்குத் தென்படுவேன் என்ற உண்மையைத்தான் மனித உடலும் மிருகத்தின்  தலையும் கொண்ட நரசிம்மரின் திருவுருவத்  தத்துவம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது  எவ்வாறு? உக்கிரம், ஆக்ரோஷம், ரௌத்திரம் என்று முழுமையாக வன்முறை அம்சத்தினைக் கொண்ட  நரசிம்ம  தத்துவம் நம் வழிபாட்டுக்கு ஏற்றதா? - சுந்தரவடிவேல், தஞ்சாவூர்.


நிச்சயமாக. உக்ரம், ஆக்ரோஷம், ரௌத்திரம் என்று வீரத்தினை வெளிப்படுத்தும் நரசிம்ம தத்துவம் வழிபாட்டிற்கு ஏற்றதே. குழந்தைகளுக்காக தான்  இயற்றிய  புதிய ஆத்திச்சூடியில் ‘ரௌத்திரம் பழகு’ என்கிறார் பாரதியார். நரசிம்மன் என்ற பெயரைக் கேட்டாலே நம் மனதிற்குள் ஒருவித பயமும்,  உடலில் சிலிர்ப்பும்  உண்டாகும். காரணம், சிங்கத்தின் முகம். காட்டிற்கு அரசனாகிய சிங்கத்தை நம்மில் பெரும்பாலானோர் நேரில்  பார்த்திருக்கமாட்டோம். பார்த்தவர்கள் கூட  சர்க்கஸ் கூண்டிற்குள்ளும், மிருகக்காட்சி சாலையில் தொலைதூரத்திலும் நின்றுகொண்டும்தான்  பார்த்திருப்போம். இருந்தாலும் சிங்கத்தின் பெயரைக் கேட்டதும்  பயம் வந்து தொற்றிக் கொள்கிறது.

பல்லவ வம்சத்தில் நரசிம்மவர்மனின் பெயரே இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவனது தந்தை மகேந்திரவர்ம பல்லவன் பல வெற்றிகளைப்  பெற்றிருந்தாலும்,  சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியிடம் தோல்வி அடைந்தான் என்றும், அதே இரண்டாம் புலிகேசியை நரசிம்மவர்ம பல்லவன்  தோற்கடித்து  வாதாபிகொண்டான் என்று பெயர் பெற்றதையும் வரலாறு நமக்கு பறை சாற்றுகிறது. புலி(கேசி)யை வெல்லும் சக்தி (நர)சிம்மத்திற்கு  உண்டு என்பதை  நிரூபிப்பதாக இந்த வரலாற்று நிகழ்வு அமைந்திருக்கிறது! நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் மூவேந்தர்களின்  ஆட்சிக்காலத்தில் நரசிம்மர்  குறித்த வழிபாடுகளும், பூஜை முறைகளும் தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

பின்னர் வந்த நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில்தான் நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் பிரபலமடைந்திருக்கிறது. பல பாகவத மேளாக்களின் மூலம்  பிரஹலாத  சரித்திரம் நாட்டிய நாடகமாக தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு நரசிம்மர் வழிபாடு கொஞ்சம், கொஞ்சமாக பரவியது. நரசிம்மரின் தத்துவம்  வன்முறையைக்  குறிப்பிடுவதாகச் சொல்லப்படும் கருத்து ஏற்புடையது அல்ல. வன்முறையில் இருந்து தன் பக்தனைக் காப்பாற்றுவதற்காக பகவான்  எடுத்த அவதாரம் என்பதே  நரசிம்மரின் தத்துவம். தான் எத்தனை இம்சிக்கப்பட்டாலும், இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்தான்  பிரஹலாதன். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’  என்பதே பிரஹலாதனின் கொள்கை.

எந்தச் சூழலிலும் வன்முறை என்கிற ஆயுதத்தை பிரஹலாதன் கையில் எடுக்கவே இல்லை. தான் கொல்லப்படப் போகிறோம் என்பதை  அறிந்திருந்தும்  இறைவனின் பால் முழு நம்பிக்கையை வைத்தான் பிரஹலாதன். பெற்ற தாயாரின் கையால் விஷம் கொடுக்கப்பட்ட போதிலும், மலை  உச்சியில் இருந்து தூக்கி  எறியப்பட்ட போதிலும் தன்னைக் காக்க இறைவன் ஓடி வருவான் என்று நம்பினான். இறைவன் தூணிலும் இருப்பார்,  துரும்பிலும் இருப்பார் என்று வாதிட்டான்  பிரஹலாதன். அவனது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாகத் தோன்றியதே நரசிம்ம அவதாரம்.  அஹிம்சாவாதியான பிரஹலாதனைக் காப்பாற்றவே  இறைவன் நரசிம்மனாக அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. ‘துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட  பரிபாலனம்’ என்று சொல்வார்கள்.

துஷ்டனை வதம் செய்ய அவனுக்கு ஏற்றார்போல் ஒரு உருவ அமைப்பினை தனது தோற்றத்தில் கொண்டுவந்து அவனை சம்ஹரித்திருக்கிறார்.  நரசிம்மரை  உக்ர ரூபனாகவோ, ருத்ர மூர்த்தியாகவோ, ஆக்ரோஷத்தின் வடிவமாகவோ காண்பது தவறு. எந்தச் சூழலிலும் நீ அஹிம்சையை  கைவிடாதே... உன்னைக் காக்க  நான் இருக்கிறேன்... துஷ்டனை சம்ஹரித்து உன்னைக் காப்பது என் வேலை... கடமையைச் செய்து வருபவனைக்  காக்க எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்  நான் வருவேன் என்று தன் பக்தர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதே நரசிம்மரின் தத்துவம். நரசிம்மர் வழிபாடு  வன்முறையைத் தருவதில்லை. மாறாக  வன்முறையாளர்களிடமிருந்து நம்மைக் காக்கிறது என்பதே சத்தியமான உண்மை.

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா? - அயன்புரம் த. சத்தியநாராயணன்.

வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். லிங்கத்தின் திருவுருவம் நம் கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக   இருந்தால் நல்லது. அதாவது லிங்கத்தை உள்ளங்கைக்குள் வைத்து விரல்களை மூடினால் வெளியே தெரியக்கூடாது. தினந்தோறும் அபிஷேகம்  செய்ய  வேண்டும். நம்மால் இயன்ற நைவேத்தியத்தையும் தவறாமல் செய்ய வேண்டும். ஓரிரு நாட்கள் ஊரில் இல்லை எனும் பட்சத்தில் ஒரு  சொம்பில் சுத்தமான நீர்  நிரப்பி வைத்துவிட்டுச் செல்லலாம்.

நீண்ட நாட்கள் ஊருக்குச் செல்லும் பட்சத்தில் வேறு யாராவது ஒருவரை தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்கு நியமிக்க வேண்டியது  அவசியம்.  இயலாத பட்சத்தில் கையோடு எடுத்துச் சென்று நீங்கள் இருக்கும் இடத்திலேயே இறைவனுக்கு உரிய ஆராதனைகளைத் தவறாது செய்ய  வேண்டும். இந்த  நியமங்களைக் கடைப்பிடிக்க முடிந்தால் சிறிய அளவு சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். இயலாதவர்கள்  சிவபெருமானின் படத்தை வைத்து  பூஜிப்பதே நல்லது.

விசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு இளைய சகோதரன் இல்லாத மணமகனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே,  இது சரியா?  - ப.த. தங்கவேலு, பண்ருட்டி.

தவறு. விசாக நட்சத்திரம் உடைய பெண்ணைத் திருமணம் செய்தால் இளைய மைத்துனனுக்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் தவறு. இது  மட்டுமல்ல,  கேட்டையில் பிறந்திருந்தால் மூத்த மைத்துனனுக்கு ஆகாது, மூலத்தில் பிறந்திருந்தால் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யத்தில்  பிறந்திருந்தால் மாமியாருக்கு  ஆகாது, ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது, பூராடம் நூலாடாது என்றெல்லாமும் சொல்லப்படுகின்ற இந்த  சொற்றொடர் எதிலும் உண்மை  சிறிதளவும் இல்லை. இதுபோன்ற கருத்துக்களுக்கு ஜோதிட நூல்களில் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம்  எதுவுமின்றி பரப்பப்படுகின்ற மூடநம்பிக்கைகளே  இவை.

மாலை நேரத்தில், விளக்கேற்றும் வேளையில், தவிர்க்க முடியாத அவசரம் எனும்போது மட்டுமாவது கடன் தரலாமா? - டி.என். ரங்கநாதன், திருச்சி.

தவிர்க்க முடியாத அவசரம் எனும்போது பணம் தருவது என்பது கடன் என்ற கணக்கில் வராது. அதனை உதவி என்றே கருத வேண்டும். உதவி  செய்வதற்குக்  கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவசரம் என்று வருபவர்களுக்கு உதவி செய்வதுதான் தர்மம். அதேநேரத்தில் எந்த  விஷயத்திற்காக  அவசரமாக பணம் கேட்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு உதவி செய்ய வேண்டும். நாம் செய்கின்ற உதவி உயிரைக்  காப்பதற்காக என்றால் அதற்குக் கால  நேரம் பார்க்கக்கூடாது. மாலை நேரத்தில் விளக்கேற்றும் வேளையில் தவிர்க்க முடியாத அவசரம் எனும்போது  கடன் தருவதில் எந்தத் தவறும் இல்லை.

தனிமனிதனுக்கு ஆலயங்களில் சங்கல்பம் செய்யக்கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்களே, இது சரியா? - நா. சுப்ரமணியன், ஊரப்பாக்கம்.

அந்நாட்களில் அரசன் ஒருவனைத் தவிர தனி மனித சங்கல்பம் என்பது ஆலயத்தில் கிடையாது. அரசன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக  ஆண்டவனால்  நியமிக்கப்பட்டவன் என்று மக்கள் நம்பிய காலம் அது. ஆண்டவனின் அவதாரமாகவே அரசனை மக்கள் கருதினார்கள். மக்களின்  சார்பாக அரசனின் பெயரில்  அந்நாளில் ஆலயங்களில் சங்கல்பம் செய்தார்கள். தனிமனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக, அதாவது தனக்கும்  தன்னுடைய குடும்பத்தாரின் நலனுக்காக  மட்டும் ஒரு பூஜையைச் செய்வானே ஆகில், அதனை அவனது இல்லத்தில் வைத்து செய்துகொள்ள  வேண்டும்.

ஆலயம் என்பது பொதுவான உலக நன்மையைக் கருதி அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டிய இடம் ஆகும்.  இங்கே  தனியொரு மனிதனுக்காக மட்டும் பூஜை செய்யப்படக் கூடாது என்பது ஒரு சாராரின் கருத்து. ஆனால் கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து  கைங்கர்யம்  செய்வோருக்குத் தனியாக சங்கல்பம் செய்வதில் தவறில்லை என்பது மற்றொரு சாராரின் கருத்தாக உள்ளது. அரசர்கள் ஆண்ட  காலத்தில் ஆலயத்திற்கு  அர்ச்சகர்களைப் போன்றே பூ தொடுப்போர், ஸ்ரீபாதம் தாங்குவோர், மடப்பள்ளி பணியாளர்கள், பரிசாரகர்கள் என்று  பரம்பரையாக வந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் தற்கால சூழல் அப்படியில்லை.

கோவிலுக்கான நந்தவனங்களும் இல்லை. புஷ்பங்களைக் கூட வெளியில் இருந்துதான் தருவிக்க வேண்டியுள்ளது. அந்தச் சூழலில் அது கைங்கரியம்  என்று  ஆகிவிடுகிறது. அதாவது, கோவில் சொத்திலேயே, செலவிலேயே பூஜைகள் நடக்கிறது என்றால் தனிமனித சங்கல்பம் தேவையில்லை. மாறாக  ஒரு  தனிமனிதன் கொண்டு வரும் திரவியங்களால் பூஜைகள் நடக்கும் இடங்களில் சங்கல்பம் செய்வதில் தவறில்லை.  முதலில் ஸங்கல்பம்  என்றால் என்ன  என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஸங்கல்பம் என்ற வார்த்தைக்கு நாம் செய்யப்போகும் செயலை த்ருடமாக எண்ணிக்  கொள்வது என்று  பொருள். அச்செயல் தன்னால் செய்யப்படுவதாகவும் இருக்கலாம். அல்லது பிறரால் செய்விக்கப்படுவதாகவும் இருக்கலாம்.

எந்தச் செயலைச் செய்தாலும் அதனை ஈஸ்வர அர்ப்பணமாக செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் ஸங்கல்பத்தின்போது ‘பரமேஸ்வர   ப்ரீத்யர்த்தம்’ என்று சொல்லி செயலைத் துவங்குகிறார்கள். செயல் முடிந்தவுடன் ‘நாராயணாயேதி சமர்ப்பயாமி’ என்று சொல்லி செய்த செயலை   நாராயணனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். ஆகவே ஆலயங்களில் ஸங்கல்பம் என்பது பரார்த்த வழிபாட்டிற்கு மட்டுமல்ல, ஆத்மார்த்த வழிபாட்டிற்கும்  உரியதுதான்  என்கிறார்கள் ஆகமவிதி உணர்ந்த பெரியோர்கள். ஆகவே, ஆலயங்களில் லோக க்ஷேமத்திற்காக செய்யப்படும் பொதுவான  சங்கல்பத்தோடு கால, தேச  வர்த்தமானத்தை அனுசரித்து தனி மனித ஸங்கல்பம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்ற கருத்தினை ஏற்றுக்  கொள்ளலாம்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்