SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நரசிம்மர் தரிசனம் நாளெல்லாம் நன்மை தரும்!

2018-05-20@ 07:04:58

அஹோபிலம்

மச்ச, கூர்ம, வராஹ, வாமன அவதாரங்களைத் தொடர்ந்து, ஒரே ஒரு அரக்கனை வதைக்க மஹாவிஷ்ணு மீண்டும் ஒரு அவதாரம் எடுக்க  வேண்டியிருந்தது - நரசிம்ம அவதாரம். பிரபலமான ராம, கிருஷ்ண அவதாரங்கள், பல அசுரர்களை வதம் செய்தன என்பதிலிருந்து அடுத்தடுத்த  யுகங்களில் அரக்கத்தனம் அதிகரித்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அதை  ஏற்காதவர்களை, இரக்கமின்றி கொன்றழித்தவன் ஹிரண்யன். ஆனால், எந்த அக்கிரமத்துக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல  அவனுடைய மகனே அவனுக்கு எதிரானான்.

நாராயணன் என்ற ஒரு தெய்வம் இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு தரம் ஹிரண்யன் சிந்தித்ததாலும், பேசியதாலும், செயல்பட்டதாலுமே  அவனுடைய மூச்சிழையாக ‘நாராயண’ நாமம் அவனுக்குள்ளேயே ஓடிக்கொண்டுதான் இருந்தது. நாராயணனை வழிபடுபவர்கள் தன்னுடைய எதிரிகள்,  அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட ஹிரண்யனால், தன் மகனை, தன் தளபதிகளை வைத்துதான் பலவாறாகத்  துன்புறுத்தினான் என்பதும், தன் வீட்டிற்குள்ளேயே வளையவரும் தன் எதிரி பிரஹலாதனை தானே நேரடியாக தண்டிக்கமுடியாத நிலை ஏற்பட்டதும்  ஏன்?

மகனையே கொல்லத் துணியாத தந்தைப் பாசமா? அல்லது எத்தனையோ வகை தண்டனைகளுக்கு உட்படுத்தியும், அவன் சிறிதும் பாதிக்கப்படாதது  கண்ட அதிர்ச்சியா? அல்லது அம்பை நோகாமல், நேரடியாக எய்தவனையே தாக்கி, மூலகாரணமே இல்லாது செய்துவிடவேண்டும்; அதன்பிறகு  பிரஹலாதன் வேறு வழியில்லாமல் தன்னைத்தான் துதிப்பான் என்ற எதிர்பார்ப்பா? ஆனால், பிரஹலாதனின் பக்தி காரணமாகவோ, அதை உலகுக்கே  தெரிவிக்க வேண்டும் என்ற பகவானின் ஆவல் காரணமாகவோ மட்டும் நரசிம்ம அவதாரம் நிகழவில்லை; அக்கிரமம் செய்பவன் எத்தனை  சலுகைகளை வரங்களாகப் பெற்றிருந்தாலும் அவனால் தப்பிக்கவே முடியாது என்பதை உணர்த்தவே நிகழ்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சியைக் கதையாகக் கேட்டு, மனம் விம்மினாலும், அந்த வதை சம்பவம் நிகழ்ந்த இடத்தை, பகவான் நரசிம்மமாக வெளிப்பட்ட இடத்தை,  தரிசிக்கவும் முடியும் என்ற உண்மை நம்மை சிலிர்க்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆமாம், அஹோபிலம் என்ற திவ்ய தேசம், நரசிம்மம்  பிளந்துகொண்டு வந்த தூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் எல்லாம் இன்றளவும் நாம் கண்டு இன்புற காட்சிப் பொருட்களாகத் திகழ்கின்றன.  இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோது உண்டான பூகம்ப  அதிர்ச்சியின் அடையாளங்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.  

கருடன் வேண்டிக்கொண்டபடி மஹாவிஷ்ணு  நரசிம்ம அவதாரத்தை அவருக்காக மறுபடியும் நிகழ்த்திக் காட்டினார் என்கிறது அஹோபில  தலபுராணம். கருடனுக்கு அந்த அவதாரத்தைக் காண்பித்த பரந்தாமன், கலியுகத்தில் நாமெல்லாம் வணங்கி, போற்றிக் கொண்டாடும் வகையில்  நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில் ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார் பத்துப்  பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார்.  அவற்றில் ஒன்று:

மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்
கோளறியாய் அவுணன்
பொன்ற ஆகம் வள்ளுகிரால்
போழ்ந்த புனிதனிடம்
நின்ற பசுந்தீ மொன்டு சூறை
நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற் கரிய கோயில்
சிங்கவேள் குன்றமே

‘‘சிம்ம உருவினனாக, வாள் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனாக, தன் கூரிய நகங்களால் ஹிரண்யன் உடலைக் கிழித்து, பிளந்து தன்  கோபத்தை வெளிப்படுத்திய தலம் இந்த சிங்கவேள் குன்றம். இங்கு மூட்டப்படும் தீயானது வானையே தொடும் அளவுக்கு நீண்டு செல்லும். மிக  உயரமான மலைகளைக் கொண்ட, அவ்வளவு எளிதாகச் சென்றடைந்துவிட முடியாத இந்த சிங்க வேள் குன்றத்தில் எம்பெருமான் திவ்ய தரிசனம்  நல்குகிறார்,’’ என்கிறார் ஆழ்வார். இந்த திவ்ய தேசம் இரண்டு பகுதிகளாகப் போற்றி வணங்கப்படுகிறது. கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் என்று  மலைக்குக் கீழே உள்ள கோயில்களையும், மேலே உள்ள கோயில்களையும் சேர்த்து ஒரே திவ்ய தேசமாக வழிபடுகிறோம்.

தன் விருப்பத்தை நிறைவேற்ற எம்பெருமான் தனக்கு நரசிம்மராகக் காட்சி அளித்ததோடு, தன் லீலைகளையும் காட்சிகளாக்கிக் கொடுத்துத் தன்னை  உய்வித்தப் பேரருளை எண்ணி வியந்த கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்று போற்றிப் பணிந்தார். உயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு  காட்சி தந்ததாலேயே (பிலம் என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர்  பெற்றது. மகா பெரிய அசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள்,  ‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும்  சொல்வார்கள்.

முதலில் கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தை தரிசிப்போம். இவர் நவநரசிம்மர்களில் ஒருவர் அல்ல என்றாலும், மிகவும்  பிரபலமானவர். நவநரசிம்மர் தரிசனம் காண இவரது அருளையும், ஆசியையும் முதலில் பெறுவது பொதுவான சம்பிரதாயம். இந்தக் கோயில்  அமைந்திருக்கும் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான ஒரு சந்நதி அமைந்திருக்கிறது. இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார்.  இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம் கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார். ஆமாம், அஹோபில மடத்தின் ஆதரவில்  கோயில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுமுன் கோயில் சாவிகளை இந்த ஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து, பிறகு அவரது ஆசியுடன் எடுத்துச் சென்று  கோயிலைத் திறப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

இந்த சந்நதிக்கு அருகில் தேரடி அமைந்திருக்கிறது. தொடர்ந்து போகும்போது, இவ்வழியாக வீதிவுலா வரும் பெருமாள் எழுந்தருளும் திருவேந்திக்காப்பு  மண்டபத்தைக் காணலாம். அதையும் கடந்து சென்றால் நரசிம்ம தீர்த்தம் என்னும் புஷ்கரிணி எதிர்ப்படுகிறது. சற்றே தலை நிமிர்ந்தால் ஐந்து நிலை  ராஜகோபுரம் நம்மை ஆசீர்வதிக்கிறது. லக்ஷ்மி நரசிம்மர், சேஷசயனர் முதலானோரின் சிற்பங்களுடன் கோபுரம் அழகுற மிளிர்கிறது. நம்மை இன்னும்  அண்ணாந்து பார்க்க வைக்கிறது, கோபுர வாசலருகே நிலை கொண்டிருக்கும் ஒரு ஸ்தம்பம். வெற்றித்தூண் அதாவது, விஜயஸ்தம்பம் என்ற பெயர்  கொண்டிருக்கும் இத்தூண், 80 அடி உயரத்திற்கு ஒரே கல்லால் உருவாகி, நெடிதுயர்ந்து நிற்கிறது.

பூமிக்குக் கீழே முப்பது அடி ஆழத்திற்கு இத்தூண் வேரூன்றியிருக்கிறது என்று கேள்விப்படும்போது வியப்பாக இருக்கிறது. மாமன்னர் கிருஷ்ண  தேவராயர் தாம் அடைந்த வெற்றியைக் குறிக்கும் சின்னமாக இதனை நிறுத்தியிருக்கிறார். இதனருகே நின்று நம் பிரார்த்தனைகளை  சமர்ப்பித்தோமானால் அவை எல்லாமே நிறைவேறுகின்றன என்பது காலங்கால மாக இங்கே நிலவி வரும் நம்பிக்கை. இந்தத் தூணுக்குக் கீழே  ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மலர் சமர்ப்பித்து அனைவருமே வழிபடலாம். சந்நதி மண்டப முகப்பில் லக்ஷ்மி  நரசிம்மரை சிற்பரூபமாக தரிசிக்கலாம். சற்றருகே கருடாழ்வார் சந்நதி. இவருக்குப் பக்கத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வசந்த மண்டபம்.

இதனைக் கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச் சுற்றில், முதலில் ஸ்ரீநிவாசர் சேவை சாதிக்கிறார். இவருடன் அலர்மேல் மங்கைத் தாயார்,  விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீநிவாசனும், பத்மாவதி  தாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும், அந்த சம்பவத்தின் ஆதார சாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில்  இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. கிருதயுகத்தில் சிவபெருமானும் இந்த நரசிம்மரை ‘மந்திரராஜபத’ ஸ்தோத்திரம் சொல்லி  வழிபட்டிருக்கிறார்; அதேபோல திரேதாயுகத்தில் ராமபிரான், தம்பி லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுது ராவணன் மீதான தம்  வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறது புராணத் தகவல்.

பிராகாரத்தை மேலும் வலம் வரும்போது ஸ்ரீராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். அவருடன் வேதாந்த தேசிகரும், அஹோபில மடத்தை  உருவாக்கிய ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் எழுந்தருளியுள்ளார்கள். உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய  இந்த மகான், மைசூர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்தவர். கிடாம்பி கேசவாசார்யா என்பது இவரது பூர்வீகப் பெயர். இப்படி ஒரு சேவை செய்திருக்கும்  இவருக்கு இத்தலத்தில் உறையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மரே மரியாதை செய்திருப்பதிலிருந்து இந்த மகானின் பெருமையைப் புரிந்துகொள்ளலாம்.  ஆமாம், இவருக்கு ‘ஸ்ரீவண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும், காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் என்ற செய்தி மேனியை சிலிர்க்க  வைக்கிறது.

பரந்தாமனைத் தொடர்ந்து  ஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தை அளித்திருக்கிறார். பிரதாப ருத்திரன் என்ற காகதீய வம்சத்து அரசன்,  தங்கத்தாலான மாலோல நரசிம்மரை அளித்தான். (இந்த மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.) கி.பி. 1300ம்  ஆண்டுவாக்கில் நடைபெற்ற இச்சம்பவங்கள் மடத்திலுள்ள சாசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சடகோப ஜீயரை மீண்டும் ஒருமுறை தரிசித்து நம்  சந்தோஷத்தையும், நன்றியையும், தெரிவித்துக்கொள்வோம். பட்டாபிராமன் தனிச் சந்நதியில் அழகுக் கோலம் காட்டுகிறார். இவருக்கு இடப்புறம் சீதை.  வலப்புறத்தில் உள்ள லக்ஷ்மணன், வித்தியாசமாக இரு வில்களைத் தாங்கி நிற்கிறார்.

அண்ணன் பட்டாபிஷேகம் காணும்போது, அதுவரை அவருக்கு உறுதுணையாக இருந்த வில், இப்போது பட்டாபிஷேக  சம்பிரதாயங்களுக்குக் கொஞ்சம்  இடைஞ்சலாக இருக்குமென்று தம்பி கருதினாற் போலிருக்கிறது; அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்!  இவர்களை மண்டியிட்டுத்  தொழுதபடி ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம்.  அதற்கடுத்த கல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது. மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடமைந்த 64 தூண்கள் இந்த மண்டபத்தைத் தாங்கி  நிற்கின்றன. இது வேமாரெட்டி என்ற மன்னரால் 14ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

நவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாக இந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர், தூணைப்  பிளந்துகொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப் பற்றும் நரசிம்மர், அவனை வதம் செய்து அவன் குடலை மாலையாகப்  போட்டுக்கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன் மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர், ராம-  லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், வேறு எங்குமே காணவியலாத லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர்,  செஞ்சுலக்ஷ்மித் தாயாரை வணங்கும் நரசிம்மர், காளிங்க நர்த்தன  கிருஷ்ணன், வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி  மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப் பெருமாள், யோகானந்த நரசிம்மர், மேற்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ்க் கரங்களில் மலர்களையும்  ஏந்திய மஹாவிஷ்ணு, மன்னன் பிரதாப ருத்ரன், ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும் காட்சி என்று பல வடிவங்களைக் கண்டு  மகிழலாம்; பிரமிக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்