SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறச்சிந்தனை வளர பிட்சை எடுப்பதும் ஒரு வழி!

2018-05-18@ 12:43:41

திருமூலம் மந்திர ரகசியம்

ஒத்திப் போடுவது, அதாவது தள்ளிப் போடுவது என்பது, பலருக்கும் கைவந்த கலை. இதிலும் ஒரு சூட்சுமம்! நல்லது செய்வதைத் தள்ளிப்  போடும்போது  இருக்கும் நிதானம், கெட்டது செய்வதில் இருக்க மாட்டேன் என்கிறது. அதாவது, கெட்டதை உடனே செய்கிறோம், நல்லதை கடைசி  காலத்தில் பார்த்துக்  கொள்ளலாம் என்று ஒதுக்கி விடுகிறோம், ஒதுங்கி விடுகிறோம். ‘‘அட! போங்கய்யா! எல்லாம் அப்புறமாக பாத்துக்கலாம்.

சமயம் வரும்போது, அப்ப செஞ்சிக்கிட்டா போச்சு. கடைசி காலத்துல பாத்துக்கலாம்’’ என்று எண்ணலாம். இதை மறுத்து வழிகாட்டுகிறார் வள்ளுவர்:   அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை ‘பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று இல்லாமல், இப்போதே தர்மம்   செய்யுங்கள்! அழியாத் துணை அதுதான்’ என்பதே அக்குறளின் கருத்து. இத்திருக்குறளுக்கு விரிவுரை போல திருமூலர் சொல்லும் பாடலைப்  பார்க்கலாம்:

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்திருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
இழிக்க அன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே
(திருமந்திரம் - 254)

கருத்து: உள்ளத்தில் உள்ள அழுக்கைப் போக்கி, அறிவால் மனதை நிறைத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்களே! புகழ், செல்வம், இளமை, வசதி ஆகியவை   உங்களைத் தழுவி நின்ற நாளில், தர்மம் செய்யாமல் இருந்து விட்டீர்கள். கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு பார்க்கத்தானே பார்க்கிறீர்கள்!  வினைக்  கொடுமை மிகுந்து, உங்களைக் கீழே தள்ளுமே! அப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? பாழும் மனமே! இப்போதே நல்லது செய்ய நாட்டம்  கொள்! இப்பாடலின்  மிகவும் சூட்சுமமான சொற்கள் ‘ஏழை நெஞ்சீரே’. பாடலின் நிறைவில் உள்ள அவற்றை விளக்கத்திலும் நிறைவாகப் பார்க்கலாம்.
பேருந்திலோ, இரு சக்கர வாகனத்திலோ போய்க்கொண்டிருக்கிறோம்.

விரும்பியோ, விரும்பாமலோ ஏராளமான தூசுகள் காற்றில் பறந்து வந்து உடைகளையும் உடம்பையும் அழுக்காக்கி விடுகின்றன. உடனே தூய்மை  செய்து  கொள்கிறோம் அல்லவா? அதுபோல, வாழ்க்கைப் பயணத்தில் நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏராளமான அழுக்குகள் உள்ளத்திலே பதிந்து  விட்டன. வேறு  வழியே இல்லை. அந்த அழுக்குகளைப் போக்கத்தான் வேண்டும். அதைச் செய்கிறோமோ இல்லையோ, மேலும் மேலும் அழுக்கை  எடுத்து அப்பிக் கொள்ளாமல்  இருக்கலாம் அல்லவா? அழுக்கை நீக்கிக் ெகாள்ளும் அறிவை, பெருக்கிக் கொள்ளச் சொல்கிறார். தூய்மையான  அறிவைக் கொண்டு உள்ளத்தை நிறைவு செய்து  கொள்ளச் சொல்கிறார்.

இவ்வாறு சொன்னவர், அடுத்து நடப்பதையும், நடக்க வேண்டியதையும்  சொல்கிறார். அறம் செய்யும் எண்ணம், அறவே இல்லாமல் போய்விட்டதாம்.  ஆழ்ந்து  யோசிக்க வேண்டிய பகுதி இது.  கஷ்டப்படுகிறவர்களுக்கு ஏதாவது கொடுத்து உதவ வேண்டும். புத்தர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்று -  சீடர்களுக்கு உபதேசம்  செய்து கொண்டு இருந்த புத்தர், ‘‘நாட்டில் எல்லா செல்வங்களும் பெருகி நிறைந்து இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்.  நம் ஆசிரமத்திலும் வளமை  நிறைந்து இருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில், நாம் போய் பிட்சை கேட்கலாமா, வேண்டாமா?’’ எனக்  கேட்டார். ‘‘நம்  ஆசிரமத்தில் தான் வளமை நிறைந்து  இருக்கிறதே! நாம் ஏன், தெருத் தெருவாகப் போய் பிட்சை கேட்க வேண்டும்?’’ என்பதே பெரும்பான்மையான  பதிலாக இருந்தது.

புத்தர் பதிலே பேசவில்லை. பரபரப்பாகச் சீடர்கள் அனைவரும் இவ்வாறு, ஒரே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு சீடன் மட்டும்  பொறுமையாக  எழுந்து நின்றான். புத்தர் அவனைப் பார்த்தார். ‘‘குருநாதா! நம் ஆசிரமத்தில் வளமை நிறைந்து இருந்தாலும் கூட, நாம் பிட்சைக்குச்  செல்லத்தான் வேண்டும்.  அப்போது தான், ஜனங்களுக்குக் கொடுக்க  வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இல்லாவிட்டால், மக்களுக்கு அறச்சிந்தனை  என்பதே அற்றுப் போய்விடும்.  மக்களிடையே அறச்சிந்தனை வளர்வதற்காகவாவது, நாம்  பிட்சைக்குப் போய்த்தான் ஆக வேண்டும்’’ என்றான்.  இவ்வாறான அறங்கள் நிலைபெற வேண்டும்  என்பதற்காகவே, அறச்சாலைகளைக் கட்டி வைத்தார்கள் முன்னோர்கள்.

மேலும் இப்பாடலில் திருமூலர் சொல்லும் அறம் என்பது காசு, பணம் கொடுப்பது மட்டும் அல்ல. பல்வேறு நிலைகளிலும் பல்வேறு வகையான  அறங்களைச்  சொல்கிறார். புகழ் பெற்றவனாக இருக்கிறாயா, அதன் மூலம் அடுத்தவர்க்கு உதவி செய். செல்வம் படைத்தவனாக இருக்கிறாயா, அதன்  மூலம் அடுத்தவர்க்கு  உதவி செய். இளமை படைத்தவனாக இருக்கிறாயா, அதன் மூலம் அடுத்தவர்க்கு உதவி செய். அதாவது, மனம் இருந்தால்  மார்க்கம் உண்டு. எப்படியாவது  அடுத்தவர்க்கு உதவி செய், என்கிறார் திருமூலர். காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகள், ‘‘அறம், தர்மம் செய்யலாம் என்று  பார்த்தால், நிறைய காசு, பணம் செலவாகி  விடுமோ என்ற பயம் வந்து விடுகிறது. காசு, பணம் இல்லாமல் கூட நாம் தர்மம், அறம் செய்யலாம்.  மனம்தான் வேண்டும்.

எவ்வளவோ பேர்கள், ரிடையர் (ஓய்வு) ஆன பிறகுகூட வீண் பொழுது போக்குகிறோம். அதற்குப் பதிலாக நாம் படித்த படிப்பை, பத்து ஏழை  குழந்தைகளுக்காவது  இலவசமாகச் சொல்லிக் கொடுக்கலாம். பெரிய அறம், தர்மம் இது’’ என்பார். செலவு இல்லாத பெரும் அறம் அல்லவா இது!  ஆகவே அறம் செய்யப் பல  வழிகள் உள்ளன. ‘‘இருக்கும்போதே அறம் செய்ய மாட்டேன் என்கிறீர்களே!’’ எனக் கேட்ட திருமூலர், பாடலின்  பிற்பகுதியில், ‘‘பார்த்துக் கொண்டுதானே  இருக்கிறீர்கள்? வினை படர்ந்து, அடர்ந்து, கீழ்நிலைக்குத் தள்ளும்போது, என்ன செய்வீர்கள்?’’ எனக்  கேட்கிறார். ஆம், எந்த நற்செயலும் செய்யாமல், எந்த  நல்லெண்ணத்திற்கும் மனதில் இடம் கொடுக்காமல், ‘நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட,  இன்று கிடைக்கும் களாக்காயே மேல்’ என்று விருப்பம்போல்  செயல்படுகிறோம்.

சிறு துளி பெரு வெள்ளமாக மாறுவதைப்போல, சிறு சிறு செயல் (வினை)கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. விழி பிதுங்கி  வீதியில்  நிற்கிறோம்; செய்வது அறியாமல் திகைக்கிறோம். இந்நிலையைச் சுட்டிக்காட்டிய திருமூலர், பாடலின் நிறைவுப் பகுதியில், ‘ஏழை நெஞ்சீரே’  என்று,  நல்லவற்றில் வறுமையாகவும், வெறுமையாகவும் ஆன மனம் கொண்டவர்களைக் கேட்பதுபோல் கேட்டு பாடலை முடிக்கிறார். அடுத்தது,  மகான்கள் இவ்வாறு  உபதேசம் செய்யும்போது, ‘பளிச்’ சென்று கூப்பிட்டுச் செய்ய மாட்டார்கள்.

உதாரணமாக ‘நெஞ்சே! உனக்கு உபதேசம் இதே’, ‘மனமே! உனக்கு உபதேசம் இதே’ எனப் பல பாடல்களில் பாடியிருக்கிறார். அதாவது, தங்கள்  மனதுக்கு   உபதேசம் செய்து கொள்வதைப் போல, நமக்கு உபதேசம் செய்து இருப்பார்கள். அந்த வழியில் முன்னோரான திருமூலர் தன் நெஞ்சைக்  குறித்துப் பாடியதாகவும்,  நமக்கு உபதேசம் செய்து பாடியதாகவும் கொள்ளலாம். அப்பாடலை நெஞ்சில் பதித்து அறம் செய்ய முயல்வோம்! அல்லல்   அனைத்தையும் வேரோடு  களைவோம்! அறத்தைப் பற்றி இவ்வாறு சொன்ன திருமூலர் முப்பத்து இரண்டு அறங்களை வளர்த்த அம்பாளை, அடுத்த  பாடலில் நம் மனக்கண் முன்  நிறுத்துகிறார்.

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்
பார்த்திடும் அங்குசம் பாசம் பசுங்கரும்பு
பார்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே
(திருமந்திரம்-1068)

கருத்து: தோத்திரங்கள் பாடித் துதி செய்து வணங்குங்கள்! அன்னை காமாட்சியின் திருவடிகள் இரண்டையும் வாழ்த்தி வழிபட்டு இருங்கள்! அங்குசம்,  பாசம்,  பசுங்கரும்பு, மலரம்பு ஆகியவற்றைக் கரங்களில் கொண்டு காட்சி தரும் அன்னை காமாட்சியைத் தியானியுங்கள்! ‘இரு நாழி நெல் கொண்டு,  காஞ்சியில்  அன்னை காமாட்சி, முப்பத்து இரண்டு அறங்களையும் வளர்த்தார்’ எனப் பழந்தமிழ் நூல்கள் பலவும் விவரிக்கின்றன.

அன்னை வளர்த்த அந்த முப்பத்து இரண்டு அறங்கள் என்னென்ன என்பதைப் பார்த்து விட்டு, அறம் வளர்த்த அந்த அன்னையைத் திருமூலர்  சொற்படித்  துதித்துத் தியானிக்கலாம், வாருங்கள்!

1. வறியவர்க்குச் சாலை,
2. ஓதுவார்க்கு உணவு
3. எந்த சமயத்தைச் சேர்ந்தவராக
இருந்தாலும் உணவு
4. பசுவுக்குப் புல்
5. சிறையில் உள்ளவர்க்கு உணவு
6. தேடி வரும் வறியவர்க்கு உணவு
7. தின்பண்டங்கள் அளித்தல்
8. ஆதரவு அற்றவர்க்கு சோறு
9. மகப்பேறுக்கு உதவி
10. ஆதரவற்ற மகவை வளர்த்தல்
11. குழந்தைகளுக்குப் பால் அளித்தல்
12. அனாதைப் பிரேதங்களுக்கு
ஈமக்கடன் செய்வித்தல்
13. அனாதைகளுக்கு உதவி
14. மலர் அளித்தல் (சுண்ணாம்பு கொடுத்தல் என்பதும் உண்டு)
15. நோய்க்கு மருந்து அளித்தல்
16. சலவைத் தொழிலாளிக்கு தானம் அளித்தல்
17. நாவிதர்க்கு தானம் அளித்தல்
18. முகம் பார்க்கும் கண்ணாடி
அளித்தல்
19. காது ஆபரணம் தருதல்
20. கண் மருந்து அளித்தல்
21. தலைக்கு எண்ணெய் வழங்குதல்
22. பிரிந்திருக்கும் தம்பதியரைச் சேர்த்து வைத்தல்
23. பிறர் துயர் தீர்த்தல்
24. தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்
25. துறவியர்க்கு இருப்பிட வசதி செய்து தருதல்
26. சாலை அமைத்தல்
27. சோலைகளை உருவாக்குதல்
28. மேய்ச்சல் துறையில் மாடுகள் திணவு தீர்த்துக் (சொறிந்து) கொள்ள கல்
தூண்களை நட்டு வைத்தல்.
29. விலங்கிற்கு உணவு அளித்தல்
30. ஏறு விடுதல்
31. விலை கொடுத்து உயிர் காத்தல்
32. கன்னிகா தானம் செய்தல்.

அன்னை காமாட்சி வளர்த்த முப்பத்தி இரண்டு அறங்களைப் பார்த்த நாம், ஆலயங்களுக்குச் சென்று வருவதைப் பற்றிச் சற்று பார்க்கலாம் வாருங்கள்! வங்கிக்குப்  போய் பணம் எடுக்கிறோம். மருத்துவமனையில் நோய் தீர்த்துக் கொள்கிறோம். இது போல, அந்தந்த இடங்களில் போய் அங்கு இருப்பதைப்  பெறுகிறோம்  அல்லவா? அதுபோல முப்பத்தி இரண்டு அறங்களையும் வளர்த்த அன்னை காமாட்சி ஆலயத்திற்குச் சென்றால், ‘‘தாயே! அறங்கள்  முப்பத்தி இரண்டையும்  வளர்த்த நீ, அடியேனும் ஒரு சில அறங்களையாவது செய்யும்படி அருள் புரியம்மா!’’ என வேண்டிக்கொள்ள வேண்டும்.

நதிக்குச் சென்று நீராடி, தூய்மை பெற்றுத் திரும்புகிறோம் அல்லவா? அதுபோல, அன்னை காமாட்சியின் ஆலயத்திற்குச் சென்றால், மன அழுக்கு  நீங்கி,  கொஞ்சமாவது அற சிந்தனையுடன் திரும்ப வேண்டும். ஏதோ போனோம், வந்தோம் என்று இல்லாமல், அன்னையைத் துதிப்பதோடு நான்கு  திருக்கரங்களிலும்  அங்குசம், பாசம், கரும்பு, மலர் அம்பு ஆகியவற்றை ஏந்திய அன்னை காமாட்சியை விழி வழியாக மனதில் பதித்துக் கொள்ள  வேண்டும். திருமூலர் சொல்லும்  இம்முறைப்படித் தியானித்தால், அறச்சிந்தனை, தானே வளராதா?

பி.என்.பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்