SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லோருமே யோகிகளாக முடியுமா?

2018-05-18@ 12:41:57

அர்த்தமுள்ள இந்துமதம் - 56

போகத்தில் புரண்டு, ரோகத்தில் அவதிப்படும் சாதாரண மனிதன், இனி யோகத்தை தரிசிக்கும்படி செய்வோம். அண்மையில் ஒரு நண்பரை நான்  சந்தித்தேன்.  அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் இறந்து போனார்கள். குடும்பத்திலும் சிறிது கசப்பு. அவர் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்.  சோகமாக உட்கார்ந்திருந்த  அவர், ‘‘இனி என்ன இருக்கிறது பிரதர்? வனமோ வனாந்தரமோ எங்காவது போய்ச் சிவனே என்று விழ வேண்டியதுதான்!’’  என்றார். அப்படி விழுவதுதான்  யோகமா? இல்லை, அது வெறும் விரக்தி. செயல்படக் கூடியவன் செயலை மறப்பதும், அல்லது துறப்பதும் கரும  யோகத்தின் ஒரு பகுதி. பலமுள்ளவன்  எதிரியை அடிக்காமலிருப்பது அடக்கத்துக்கு இலக்கணம்.

வசதியுள்ளவன், பிறரை ஏமாற்றாமல் இருப்பது பெருமையின் ஒரு கூறு. நன்கு வாழும்போதே ஒருவன் யோகியாவது, உயர்ந்த நிலை. விரக்தியற்ற  நிலையில்  யோகியாவது, தாழ்ந்த நிலை. ‘தமோ’வாக இருப்பது ‘ரஜோ’வாக மாறி, ‘சத்வ’ குணத்துக்குத் தள்ளப்படும் யோகத்தில் பெருமை இல்லை.  ரஜோ  குணத்தையும், தமோ குணத்தையும் பார்த்துச் சிரித்தபடி யோக நிலையை எட்டுவதே தெய்வீகம். இமய மலையிலும், அதன் அடிவாரங்களிலும்  ஏராளமான  சாதுக்கள் திரிகிறார்கள். பலர் ஏற்படுத்திய மிஷன் அமைப்புகளில், பலவகையான சந்நியாசிகள் இருக்கிறார்கள். இவர்களில் மூன்று  வகையினர் உண்டு. ஒரு  வகையினர், சிறு வயதிலேயே ஞானம் கைவரப்பெற்று அப்படியானவர்கள். இன்னொரு வகையினர், குடும்பத்தில் சிக்கிச்  சீரழிந்து வந்தவர்கள்.

மூன்றாவது வகையினர், பிறப்பிலேயே ஆண் தன்மை இல்லாதவர்கள். இவர்களிலே ஞானிகள் உண்டு; துறவிகள் உண்டு; சந்நியாசிகள் உண்டு;  ஆனால்  யோகிகள் இல்லை. ‘யோகி’ என்பவன் சித்தத்தை மட்டும் அடக்கிப் பழகியவனல்ல; ஜகத்தையும் அடக்கி வெற்றி பெற்றவன். அவர்களுடைய  திருஷ்டியில்  மூன்று காலங்களும் தோன்றும். அவர்கள் தங்கள் கண்களால் எதைப் பார்த்தாலும் வசியமாகும். யோகிகளின் பார்வையில் புலி  அடங்கும். மயில் ஆடும். மேகம்  மழை பொழியும். அவனை நெருப்புச் சுடாது. குளிர் அவனை அடக்காது. மார்கழி மாதத்தில் சமவெளியில்  நம்மால்  உலவ முடியவில்லை.  அவர்கள் வெள்ளிப்  பனிமலையில்  உலாவுகிறார்கள்! பனிக்கட்டிகள் மிதந்து வரும் நீரில் நீராடுகிறார்கள்! கிடைக்கும்  உணவை உண்கிறார்கள்.

போகத்திற்கு அலைவதில்லை. ரோகம் அவர்களைத் தீண்டுவதில்லை. மருந்து மாத்திரைகளுக்கு அங்கே வேலை இல்லை. நாம் எல்லாருமே அப்படி   யோகிகளாக முடியுமா? முடியாது. அப்படி ஆகத்தான் வேண்டுமா? தேவை இல்லை. யோகியாக இல்லாமலேயே, யோகம் கைவரப் பெற்றவனாக  லௌகீக  வாழ்க்கையை ஒருவன் நடத்த முடியும். ஒருவன், மனைவியோடு வாழலாம்; ஆனாலும், அவளைத் தீண்டாமலிருக்கவும் கற்றுக்கொள்ள  வேண்டும். ஒருவனுக்கு  நிறைய உணவு வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தாலும் அந்த உணவை உண்ணாமலிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.  இதுதான் இயக்கத்தின் இயங்காமை.  இதுவே லௌகீக மனிதனுக்குத்  தேவையான யோகம். பதவி என்றால் எல்லோருக்கும்  ஆசைதான்.

ஆனால் நேரம் வரும்போது, அந்தப் பதவியைத் தூக்கியெறியும்  திராணி எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. ‘நம்மை அது அடக்குவதா, அதை நாம்   அடக்குவதா?’ என்று வரும்போது, ‘எதையும் நான் அடக்க முடியும்’ என்ற நிலைக்கு வருவதே யோகம். அழகான பெண்ணொருத்தி தனிமையிலே   காத்திருக்கிறாள், நமக்காக. நமக்கோ ரத்தம் உடம்பில் துறுதுறுவென்று ஓடுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண்ணை வெறுக்கக் கற்றுக்கொள்வது  யோகம். எது  கிடைத்தாலும், ‘எனக்கு, எனக்கு’ என்று ஓடுகிறவன் போகி. பின்பு ஒருநாள் அவன் ரோகி. ‘எதையும்விட, தான் உயர்ந்தவன்’ என்று  கருதக்கூடியவன் யோகி.  வாரியார் சுவாமிகள் சொன்ன கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு குறுகலான பாலம்; நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் விபூதிப் பூச்சோடு அந்தப் பாலத்தில் வந்துகொண்டிருக்கிறது ஒரு யானை;  எதிரிலே  அசிங்கமாக  வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி.  பன்றி, வாலை ஆட்டிக்கொண்டு கம்பீரமாக வருகின்ற வேகத்தில், சக்தி வாய்ந்த யானைக்கு கோபம்  வரவில்லை. அது  ஒதுங்கி நின்று வழிவிடுகிறது. பன்றிக்கோ தான் வெற்றி பெற்றுவிட்டதாக நினைவு. யானையே தனக்கு பயந்து விட்டதாக ஒரு  கனவு. ஆனால்,  யானையினுடைய நினைவோ, ‘பாவம் பன்றி! விட்டு விடுவோம்’ என்பதாகும். தன்னை உயரத்தில் வைத்துப் பார்க்கும் ஆணவம்  இல்லாமல் யானை  ஒதுங்கிற்று. இன்னொரு யானைக் கதை. ஒரு யானையின் மீது சவாரி செய்ய ஒரு அணில் விரும்பிற்று.

‘சரி, முதுகில் ஏறிக்கொள்!’ என்றது யானை. அணில் ஏறிக்கொண்டது. யானை அதைச்சுமந்து செல்லும்போது யானையின் தலையில் ஒரு தென்னை  மட்டை  விழுந்தது. யானை ஒரு பிளிறு பிளிறிற்று. உடனே அணில் கேட்டது, ‘‘நான் முதுகில் இருக்கிறது வலிக்கிறதா?’’ என்று. யானைக்கு அணில்  ஒரு சுமையா?  ஆனாலும், அணிலுக்கு அப்படி ஒரு நினைவு. தாழ்ந்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதும்போது, உயர்ந்தவர்கள் சிரித்துக்கொண்டே  ஒதுங்கிவிட வேண்டும்.  அதுவும் யோகம்தான். ‘என்னைவிட நீ உயர்வா?’ என்று  சண்டைக்குப் போகக் கூடாது. ‘உலகத்தில் கடவுள் தனக்கு அடுத்த  படியாக நம்மை  வைத்திருக்கிறான்’ என்று கருதி, அந்தத் தெய்வீக நிலையை எட்டி விடுகிறவனே யோகி.

‘பட்டதெல்லாம் போதுமடா பகவானே’ என்ற பட்டினத்தாரின் யோகம், அனுபவ யோகம். ஒன்றைப் பார்த்த உடனேயே, ‘இது விஷம்’ என்று   கண்டுகொள்பவனே  அறிவார்ந்த யோகி. ‘இது மோசம்’ என்று கண்டுகொள்கிறவன் அறிவார்ந்த யோகி. அதை அனுபவித்துப் பார்த்து  விலகுபவன்,  அனுபவ  யோகி. அறிவார்ந்த யோகியின் செயலைத்தான், ‘ஞான திருஷ்டி’ என்கிறார்கள். ஒரு பஸ்ஸில் ஏறி வெளியூருக்குச் செல்ல விரும்பினார் ஒரு  நண்பர்.  திடீரென்று, ‘இன்றைக்கு போக வேண்டாம்’ என்று முடிவு கட்டினார். அன்று அந்த பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது. இது இறையருள் யோகம்.  இறைவன்  எல்லோருக்கும் இந்தச்  சக்தியைக் கொடுப்பதில்லை. பூர்வ ஜென்ம விதிவசத்தால் சிலருக்கு இது கைகூடுகிறது.

நூறாண்டுகளுக்கு ஒருமுறை, இப்படி இறையருள் யோகம் கைவரப் பெற்றவர்கள் பிறக்கிறார்கள். இந்த விதிவிலக்குகளை நம்முடைய வாழ்க்கையில்   எடைபோடக் கூடாது. உண்மையான யோகம் என்பது, நான் முன்னே சொன்னபடி வாழ்ந்துகொண்டே வாழாமல் இருப்பது; அல்லது வாழாமலே  வாழ்வது. பகவான்  கீதையில் கூறும் முக்கியமான யோகங்கள் சில கரும யோகம் அவற்றிலே ஒன்று. ‘கருமத்தைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’  என்பதே பகவான் வாக்கு.  இதை ஆயிரக்கணக்கான தடவைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? ‘அலுவலகத்தில் வேலை பார்;  சம்பளம் வாங்காதே’ என்பதா? சாதாரண  மனிதனுக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. உனக்கென்று சில சுயதர்மங்களை  வகுத்துக்கொள்.

‘பத்துப் பேருக்கு உதவுகிறது’ என்று வைத்துக்கொண்டால், எந்தப் பத்துப் பேரிடமிருந்து எதையும் நீ எதிர்பார்க்க முடியாதோ, அவர்களுக்கு உதவு.  ‘கருமம்’  என்பது கடமை. ‘‘மகனைப் படிக்க வைத்துப் பட்டம் பெற வைத்து, உத்தியோகமும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்’’ என்று மட்டும் நினை.  ‘அப்படிக்  கொடுத்துவிட்டால், அவன் சம்பளத்தில் சாப்பிடலாமே’ என்று நினைக்காதே. எங்கே நீ பலனை எதிர்பார்க்கலாமோ, அங்கே எதிர்பார்க்கலாம்.  மனைவிக்கு நகை  வாங்கிக்கொடுப்பதும், கருமம்தான்; அப்படி வாங்கிக்கொடுத்தால், ‘அவள் நம்மிடம் பிரியமாக இருப்பாள் என்ற பலனும் அதில்  அடங்கி இருக்கிறது. அரசியல்  ரீதியாகச் சொன்னால், ஒரு கருமத்தின் பலன் இருந்தும், இல்லாமலும் இருக்கிற இரண்டு நிலைகள் உண்டு.

உதாரணம்: வங்காள தேச விடுதலை. அந்த விடுதலையின் மூலம் ஒரு அரக்கனிடமிருந்து வங்காள தேச மக்கள் விடுதலை பெற்றார்கள். நாம் அந்த  நாட்டைக்  கைப்பற்றவில்லை. ஆனால், ஒரு கோடி அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஒரு வகையில் நமக்குப் பலன் இருந்தது; ஒரு வகையில்  பயனில்லை. நாம்  எதிர்பார்த்த பலன். அகதிகளை அனுப்புவது. நாம் விரும்பாத பலன் நாட்டைக் கைப்பற்றுவது. தச்சன்,  அடிக்கின்ற ஆணிக்கு கூலி  வாங்காமல் இருக்க முடியாது.  கொல்லன், அடிக்கின்ற இரும்புக்குக் கூலி வாங்கித்தான் தீரவேண்டும். பகவான் இவர்களைத்தான், பலனற்ற கருமம்  செய்யச் சொல்லுகிறான் என்று பலர்  தப்பாகக் கணக்கிடுகிறார்கள். உண்மை அதுவல்ல.

‘கருமம்’ என்ற வார்த்தையைக் ‘கடமை’ என்றே அவன் கொள்கிறான். ‘தருமம்’ என்பது என்ன? பலன் கருதாத உதவி. ‘கருமம்’ என்பது பலன் கருதாத   கடமை. எந்தப் பலனும் கருதக் கூடாது. ‘மகாராஜன் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவார்கள், பெற்றுக்கொண்டவர்கள். அந்தப் பலனையும்  எதிர்பார்க்கக்  கூடாது. சிலர் பெற்றுக்கொண்டே திட்டுவார்கள்; அதைப்பற்றியும் கவலைப்படக் கூடாது. ‘அடப்பாவி! நான் எவ்வளவு உதவி  செய்திருக்கிறேன். என்னைப்  போய்த் திட்டுகிறானே’ என்று சொல்லக் கூடாது. உண்மையில் அதுவும் ஒரு வகை யோகம்தான்! ‘நன்றியை  எதிர்பாராதே.’ ‘நன்றி கெட்டவனை  மன்னித்துவிடு.’ ‘எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையைச் செய்துவிட்டோம்’ என்று திருப்தியடையுங்கள்! - இதுவே  யோகம்.

இந்த இலக்கணத்தின்படி, எத்தனை பேரை இன்று நாம் சந்திக்க முடியும்? தருமச் சொத்து என்று வைத்து, அதிலேயும் கொள்ளையடிப்பவர்கள்தான்  அதிகம்.  ஆனால், கண்ணை மூடிக்கொண்டு  கடமையைச் செய்வதுதான் யோகம். இன்றைய யோகிகளில் சிலர் காரியத்தைச் செய்துகொடுத்துவிட்டு -  தாங்கள்  எதிர்பார்க்காவிட்டாலும் வருகின்ற  பலனைப் பெற்றுக்கொள்கிறார்கள்! அதுவே, நேரான யோகத்துக்குப் புறம்பானது. லௌகீக வாழ்வில் ஒரு  மனிதன்  கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் இது. நல்ல அடை மழை, ‘தனது வீடு ஒழுகுகிறது’ என்று நாலு பேர்  கதவைத் தட்டினால், அவர்கள்  படுப்பதற்குக்கூடச் சில  பேர் இடங்கொடுப்பதில்லை.

ஓர் இந்து, ‘தங்கள் வீடு, அகதிகளும், அதிதிகளும்  ஆபத்தில் தங்குவதற்காக’ என்று கருத வேண்டும். ‘தன் உணவு பங்கிட்டுச் சாப்பிடவே!’ என்று  எண்ண  வேண்டும். ‘மனைவியைத் தவிர, மற்ற உடமைகள் தன்னுடையனவல்ல!’ என்று எண்ண வேண்டும். செல்வம் செல்லக்கூடியது. தங்கம்   தங்காதது.  தங்கக்கூடியது, நல்வினைப் பயன் ஒன்று மட்டுமே. உலகத்தில் அளவுக்கு மீறி வாழ்க்கையை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.  அனைத்தையும்  வெளிப்படையாகச் சொல்லி  விடுவதில் தவறில்லை என்று எழுதுகிறேன். ஸ்ரீஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொன்னபடி,  வயதாகும்போது சிந்தனையில்தான்  திருப்தியடைய வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ரத்தத்தில் ஒரு அதீதமான உணர்ச்சி இருந்தது.

எந்த ஹோட்டலைப் பார்த்தாலும் பசி எடுத்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வந்தது. பெரும்பாலான நேரங்கள் பெண்ணைப் பற்றியும்,  சாப்பாட்டைப்  பற்றியுமே பேசுவேன். கருங்குரங்கை எப்படிச் சமைப்பது என்பதில் இருந்து, பச்சைப் பாம்பு சூப் வைப்பது வரை நாக்கில் ஜலம் சொட்டச்  சொட்டப் பேசுவேன்.  சிறுவயதில் நான் சாப்பிடும்போது, நான் சாப்பிடச் சாப்பிட முன்னால் போடப்படும் எலும்புகளை அள்ளி அள்ளி என் தாயார்  வெளியே கொண்டுபோய்ப்  போடுவார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்புவரையில், என் மனைவியும் அப்படித்தான் செய்தாள். காரணம் எலும்புகள்  மலைபோல், குவிந்து கிடந்தால்  திருஷ்டிபடும் என்பார்கள். மலேஷியாவில் சீன ஹோட்டல்களுக்குள் நுழைந்துவிட்டால்,  நான் சாப்பிடும் சாப்பாட்டை  யாரும் சாப்பிட முடியாது.

ஓரிடத்தில் நான் சாப்பிட்டு முடித்தபோது ஒருவர், ‘‘இதென்ன மனிதன்  சாப்பிடுகிற சாப்பாடா’’ என்றே கேட்டு விட்டார். சுமார் இருபது வருஷங்களாக   எனது  இரவுச் சாப்பாடு, இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான். இடையிடையே நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பத்து மணிக்குச் சாப்பிட்டிருக்கிறேன்.  அதுவும்  சுமார் இரண்டு மாத காலம்தான். சாதாரணமாகவே பன்னிரண்டு மணிக்குச் சாப்பிடுவதுதான் வழக்கம். ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு  மணி வரை  குடித்துக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும் இருப்பேன். சிந்தனை, வெள்ளம்போல் கரை புரண்டு ஓடும். பெண்களைப் பற்றிய பாடலே  தோன்றும். உலகத்தை  அனுபவித்து முடித்துவிட வேண்டும்போலிருக்கும்.

அடிக்கடி எழுந்து கண்ணாடி பார்ப்பேன். ரத்தமெங்கும் ஆனந்தம் கொப்புளித்துக் கொண்டிருக்கும்.  அப்போதும் உடம்புக்கு நோய் வரும். எத்தனை  மாத்திரைகள்  உண்டோ, அத்தனையும் சாப்பிடுவேன். அந்த நாட்களில், யார் யாரைச் சந்தித்தோம் என்பதுகூடப் பாதி மறந்துபோய் விட்டது. அவ்வளவு  நிதானமின்றி ஆடி  இருக்கிறேன்! எவ்வளவு ஆடினாலும், எழுத்து மட்டும் ஒழுங்காக இருக்கும். அப்போதும் ரத்தக் கொதிப்பு இருந்தது. ஆனாலும் அதன்  தோற்றமே இல்லை. ஒரு  ‘அல்டோமட்’ மாத்திரையைப் போட்டபடி போய்க்கொண்டே இருப்பேன். ஒரு டாக்டருக்குத் தெரியாத அளவு மாத்திரைகள்  எனக்குத் தெரியும். உடம்பு பொத  பொதவென்றிருக்கும்; முகம் வீங்கி இருக்கும்; ஆனால், எதை நினைத்தாலும் எழுத முடியும்.

தமிழ் மொழி, நாக்கில் புரண்டு விளையாடும். ஒன்றா? இரண்டா? பன்னிரண்டு வயதிலேயே போகத்தை தொடங்கியவன். ‘பெத்தடின்’ பழக்கம் எனக்கு   ரோகமாயிற்று. கடந்த மூன்றாண்டு காலமாக, இறைவன் என்னை யோகத்திற்கு தள்ளுகிறான். உப்பு அளவோடு; உறைப்பு கூடவே கூடாது; புளி,  எலுமிச்சம்பழம்  ஆகவே ஆகாது. காய்கறிகளில் வெண்டைக்காய், புடலங்காய்களைத் தவிர வேறு காய்கறிகளைச் சாப்பிட முடியாது. இறைச்சி  இல்லை; மீன் மட்டுமே.  இட்லியும், தோசை மாவும் கூடப் புளிக்கக் கூடாது. இருநூற்று இரண்டு பவுண்டு எடை இருந்தவன், நூற்று அறுபத்து எட்டுக்கு  வந்துவிட்டேன். ஆனாலும்  இதுவும் ஒரு வசதியாகவே இருக்கிறது.

அத்தனை ஆஸ்பத்திரிகளிலும் சோதித்தேன்; உடம்பில் ஒரு நோயும் இல்லை என்று கூறிவிட்டார்கள். ரத்தத்தில் சர்க்கரை நூறுதான் இருக்கிறது;  கொழுப்பு  நூற்று நாற்பதுதான் இருக்கிறது. ஆனால், திமிர் பிடித்த ஆசைகள் போய்விட்டன. தினமும் பெண்களைப் பற்றிச் சிந்திப்பதும், அறவே  நின்றுபோய் விட்டது.  படிக்கலாம் என்று நினைத்தால் ‘ஸௌந்தர்ய லஹரி படிக்கலாமா, லலிதா ஸஹஸ்ரநாமம் படிக்கலாமா, விஷ்ணு  ஸஹஸ்ரநாமம் படிக்கலாமா’ என்று  தோன்றுகிறது. ஒன்றும் எழுதாமல் இருந்தால், ‘ராமானுஜர் நாடகம் பார்க்கலாமா, பார்த்தசாரதி கோயிலுக்குப்  போகலாமா’ என்று தோன்றுகிறது. ‘நோயே  இல்லை’ என்று டாக்டர்கள் கூறிய பிறகும்கூட, ஏதோ சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு விட்ட பிரமை  உண்டாகிறது. நான் விரும்பியோ, விரும்பாமலோ,  ஒரு யோகியின் நிலை என்மீது திணிக்கப் பட்டிருக்கிறது.

கடந்த எட்டு மாதங்களாக அந்த நிலை வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் மது அருந்தினால், அதில் ஒரு அற்புதமான சுகம் இருந்தது. இப்போது  வெறுப்புத்  தோன்றுகிறது. முன்பு அனுபவிக்கக் குடித்தேன். இப்போதுதான் உண்மையிலேயே சூழ்நிலைகளை மறக்கக் குடிக்க வேண்டியதிருக்கிறது.  ஆனால், கொஞ்ச  நாட்களாக குடியின் மீதும் வெறுப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. மது, மாமிசம், மங்கை இம்மூன்றிலிருந்தும், பகவான் என்னை   விடுவித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன். அளவுக்கு மீறிய போக காலம்,  ஐம்பதிலேயே  முடிந்து விடுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் அளவுக்குப் பட்டினத்தாரும், அருணகிரிநாதரும்கூட அனுபவித்திருக்க  மாட்டார்கள்.

ஒரு யோகியின் பரிபூரண நிலையை எய்த எல்லோராலும் முடியாது. இறைவனே மனது வைத்து, வில்லங்கங்களில் இருந்து விடுதலை  செய்யும்போது,  அதையே பெரிய வரமாகக் கருத வேண்டும். மரணம் தவிர்க்க முடியாதது. எல்லோருடைய வாழ்விலும் என்றோ ஒருநாள் அது நிகழப்  போகிறது. பழைய  உடல்நிலை இருந்தால், இன்று நான் ஒரு இருதய வியாதிக்காரனாக  இருப்பேன். ஒருவேளை மரணம்கூடச் சம்பவித்திருக்கலாம்.  அப்போதெல்லாம் நான்கு படி  ஏறினால் மூச்சு வாங்கும்; கால்கள் சுரந்து, வீங்கிப் போய்க் கிடக்கும். அது ஒரு நல்ல சகுனமல்ல. இன்றைய நிலையில்  ஓரளவாவது உணவு உண்ண இறைவன்  என்னை அனுமதித்தால் போதும்; வேறு எந்த அபிலாஷைகளும் எனக்கில்லை.

உற்சாகமாக நடமாடும் சக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும். கையில் இருக்கிற பேனா நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். குழந்தை குட்டிகள்,  பாசம் என்ற  வில்லங்கங்கள் இல்லாதிருக்குமானால், இப்போது நான் நேசிக்கக் கூடியது, ரிஷிகேச யாத்திரையே! இடுப்பளவு கங்கை நீரில்  உட்கார்ந்துகொண்டு யோகம்  புரிவதுபோல் சுகம் வேறு என்ன இருக்கிறது? இறைவனைப் பற்றிய சிந்தனையைவிட, வேறு சிந்தனைக்கு அங்கு  வேலை என்ன? பரலோக வாழ்க்கைக்கும்,  இகலோக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள தாரதம்மியங்களைக் குறிப்பிட்டு,  உலகத்திற்குச்  சொல்லிவிட்டால், என் கடைசிக்காலம் பெருமைக்குரியதாக  ஆகிவிடாதா?

ஆன்மாவைப் பற்றிய ஆராய்ச்சியில் நான் முழுமை பெற்றுவிட்டால், பகவானை அகக்கண்களால் தரிசித்துவிட மாட்டேனா? வைராக்கிய ஞானிகள்  இன்றுவரை  நின்று நிலைத்திருப்பதுபோல், நானும் நிலைத்திருக்க மாட்டேனா? ஒருவேளை அந்த ஞானிகளின் அளவுக்கு நானும் வாழ மாட்டேனா?  பரபரப்பான நகர  நாகரிகத்திலிருந்து கட்டுப்பாடுகளற்ற தனிமையை எட்டும்போது, குறுக்கீடுகள் இல்லாத அந்தத் தனிமையில் எவ்வளவு சிந்தனைகள்  வரும்? அந்த யோகத்தில்  நோய்கள் இல்லை; நோய்களுக்கு மருந்துகளும் இல்லை. அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசை இல்லை;  ஆரவாரமில்லை... நிம்மதி; அதுதான் தேவனின்  சந்நதி. இரண்டு கைகளையும் நீட்டிப் பிச்சை வாங்கி, உண்டு குளிர்ந்த மரநிழலில் துண்டை விரித்துத்  தூங்குவதில் உள்ள சுகம், நகரத்து ஏர்-கண்டிஷன்  அறையில் கிடைக்காது.

உலகம் சுற்றிலும் செயற்கையாகத் தோன்றுகிறது. நவீன நாகரிகத்தின் போலித்தனம் விளங்குகிறது. ‘எல்லா ஆட்டங்களுமே முடியக் கூடியவையே’  என்ற  சிந்தனை, அடிக்கடி வருகிறது. பணம் சேர்ப்பதும், பங்களா வாங்குவதும் மறந்தே போய்விட்டது. அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே பணம்;  வெயில் மழைக்கு  ஒதுங்கவே வீடு. தேவைகள் குறைந்தபட்ச நிலையை எட்டுகின்றன. இருபது வயதில் அதிகபட்ச நிலைக்குப் போன மனது,  ஐம்பதிலேயே குறைந்தபட்ச நிலைக்கு  வந்துவிட்டது. பிறப்பின் நோக்கங்கள் முடிந்தனவோ இல்லையோ, ஒரு பிறப்பு முடிவை நோக்கிப் பயணம்  செய்கிறது. இளம் வாலிபர்களைக்  காணும்போதெல்லாம், இவர்கள் ஆடி ஆடி ஓய வேண்டியவர்கள் என்று தோன்றுகிறது.

‘மனிதனுடைய லட்சிய எல்லை ஈஸ்வர ஐக்கியமே’ என்று எண்ணும்போது, பகவத்கீதையின் ஸ்லோகங்கள் பளிச்சிடுகின்றன. ஒரு இளைஞன்  பகவத்கீதை  படித்தால், அது புரிவது கடினம். வாழ்ந்து பார்த்தவன் வாழ்க்கையைப் பார்ப்பதுபோல, அனுபவித்து அறிந்தவன் அதைப் படித்தால் புரியும்.  மனத்தின் சபலத்தைப்  பற்றி அர்ஜுனன் கேட்கிறான்; ‘அதை யோகத்தால் அடக்க முடியும்’ என்று பகவான் சொல்லுகிறான். இன்றைய கல்லூரி  மாணவனிடம் போய் யோகத்தைப்  பற்றிப் பேசினால், அவன் சிரிப்பான். காமக் களியாட்ட நடனங்களையும், திரைப்படங்களையும் விரும்பும் அவனுக்கு  அது புரியாது. ஆனால் எனக்குப் புரிகிறது.

மனம்- அதன் கோலங்கள்தான் எத்தனை?

தான் போடுகின்ற கோலங்கள் அனைத்துமே ஓவியங்கள் என்று எண்ணுவது மனம். குழந்தைப் பருவத்தில் அது குருத்துவிட்டபோது, உலகத்தின்  பசுமையே  அதன் கண்ணுக்குத் தெரிந்தது. சேலை அழகாக இருந்தால்கூடச் சேயிழையாள் அழகு என்று எண்ணிற்று. எதிலும் ரசனை, எதிலும்  சுகம்.யாராவது ஒருவர்  அன்பாகப் பேசிவிட்டால், அவரையே சுற்றி வட்டமிடும். எவளாவது ஒருத்தி காதலிப்பதுபோல் நடித்துவிட்டால், அவளுக்காகவே  ஏங்கும். அமெரிக்காவைப் பற்றிப்  படித்துவிட்டால், அங்கு போக மாட்டோமா என்று அலறும். ஆனால், வயது ஒரு குறிப்பிட்ட எல்லையைத்  தாண்டும்போதுதான், எதன் மீதும் ஒரு கேலிச்சிரிப்பு  எழும்.

‘எவ்வளவோ பார்த்தாகி விட்டது’ என்று சொல்லத் தோன்றும். எதைப்பற்றிப் பேசினாலும், ‘அந்த நாளிலே...’ என்று ஆரம்பிக்கும். வாசற்படி, தான்  மலையின்  ஒரு பகுதியாக இருந்ததை எண்ணிப் பார்த்தால் வருத்தப்படத்தான் செய்யும். ஆனால், வாசற்படியாகச் செய்யும் சேவையை மலையாக  இருந்தபோது, தான்  செய்யவில்லை என்று எண்ணிப் பார்த்தால், அது மகிழ்ச்சியடையும். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டிய காலத்தில்  செய்து முடித்தால், யோக  காலத்தில் அவை திரண்டு நிற்கும். நான் எழுதியதைவிட, எழுதாமல் விட்டது அதிகம். ஆனால், எழுதியதே அதிகம் என்று  பல பேருக்குத் தோன்றுகிறது.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை - 600 017.

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்