SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் யாவையும் நீருளவாக்கலும்..!

2018-05-16@ 15:56:36

குறளின் குரல் - 82

ஐம்பூதங்களில் ஒன்றான நீர் மிகப்பெரும் பெருமையுடையது. பூமியின் கால்பங்கே நிலம் என்றும் முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டுள்ளதாகவும்  அறிவியல் சொல்கிறது. தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஒப்பரிய செல்வங்கள் நிலத்தின் மூலம் நமக்குக் கிடைத்தாலும் முத்து, பவழம் முதலிய  விலைமதிப்பற்ற பொருட்கள் நீர் மூலமே கிட்டுகின்றன. `நீர்’ என்ற சொல்லைத் திருக்குறள் பல்வேறு இடங்களில் ஆள்கிறது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. (குறள் எண் 20)

உலகில் மழை இல்லையென்றால் ஒழுக்கம் கெடக்கூடும். எனவே நீரின் அத்தியா வசியத்தை உணர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடைய தரண். (குறள் எண் 742)

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு இவையே நாட்டிற்கு இயற்கையாக அமைந்த அரண்களாகும்.

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.  (குறள் எண் 881)

நிழலும் நீரும் கூட துன்பம் செய்யக் கூடியவையாய் இருந்தால் கெடுதல் தருபவை தான். அதுபோலவே சுற்றத்தாரின் தன்மைகளும் கூடத் துன்பம்  தருவதாய் இருந்தால் தீமையே பயக்கும்.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (குறள் எண் 929)

கள்ளுண்டு மயங்கியவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போன்றதாகும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (குறள் எண் 1038)

உழுவதை விடவும் நல்லது உரமிடுதல். களைநீக்கிய பின் நீர் பாய்ச்சுதலை விடவும் நல்லது காவல் காத்தல்.

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். (குறள் எண் 1066)

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையே ஆதலால், நம் நாவிற்கு அதைவிட இழிவானது  வேறில்லை.

`ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் எண் 215)

உலகிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய பேரறிவாளனிடம் இருக்கும் செல்வமானது, ஊரார் நீருண்ணும் கிணற்று நீர் அனைவர்க்கும்  உதவுவதுபோல் உதவக் கூடியது.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். (குறள் எண் 1161)

`என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக் கூடாது என்று மறைக்கவே செய்தேன். ஆனால் இறைக்க இறைக்க ஊறும் நீர்போல மறைக்க மறைக்க  என் காதல் துன்பமும் வளர்கிறது,’ என்கிறாள் வள்ளுவம் சொல்லும் தலைவி.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய். (குறள் எண் 1147)

ஊராரின் அலர் தூற்றுதலே எருவாக அமைய அன்னையின் தடைச்சொற்களே நீராக அமைய காதல் பயிர் செழித்து வளர்கிறது என்பது காமத்துப்  பாலில் தலைவியின் கூற்று.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். (குறள் எண் 1093)

‘என்னைப் பார்த்தாள் அவள். பின் நாணித் தலைகுனிந்தாள். அச்செயல் அவள் வளர்க்கும் அன்புக்கு வார்க்கின்ற நீர் போன்றதாகும்,’ என்கிறான்  வள்ளுவம் காட்டும் தலைவன்.

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (குறள் எண் 718)

தானே உணர்கின்ற தன்மை உடையவர் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீர் வார்ப்பதைப் போன்றது.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர்நிறைந் தற்று. (குறள் எண் 523)

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, கரையில்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பதைப் போன்றது.  

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும். (குறள் எண் 298)

உடலின் புறத்தூய்மை என்பது நீரால் ஏற்படும். அகத் தூய்மையோ வாய்மையால்தான் உண்டாகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். (குறள் எண் 149)

தண்ணீர் சூழ்ந்த இவ்வுலகில் எல்லா நன்மைகளும் பெறுவதற்கு உரியவர் யாரென்றால் அடுத்தவருக்கு உரியவளின் தோளைச் சேராதவரே. எல்லா  நற்குணங்களும் இருந்தும் பிறன்மனை மேல் ஆசைப்படலாகாது என்ற ஒரு நீதிநெறி தெரியாததால் முற்றிலும் அழிந்தது ராவணன் வாழ்வு என்பதை  ராமாயணம் சொல்கிறது.

ஆன்மிகத்திலும் நீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கலசத்தில் நீர்நிரப்பி மாவிலை வைத்து மந்திர உச்சாடனம் செய்து, நீரை மந்திர சக்தி  நிறைந்ததாக மாற்றுகிறோம். அந்தப் புனித நீரைத் தலையில் தெளித்து உள்ளத்தையும், வீட்டில் தெளித்து இல்லத்தையும் தூய்மைப்படுத்துகிறோம். கோயிலில் தீர்த்தமாக வழங்கப்படும் நீர் மந்திர சக்தி நிறைந்தது. அதை அருந்தி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொள்கிறோம்.  மந்திரங்களை உச்சரித்து நீரில் புனித சக்தியை ஏற்றுகிறோமே! நாம் மந்திரங்களை மனத்தில் ஜபம் செய்யும்போது என்ன நடக்கிறது தெரியுமா? அதே  விதத்தில் உடலும் உள்ளமும் தூய்மையடைகின்றன. எப்படி? நீரில் மந்திர சக்தி ஏறும். அதுபோல் நாம் மந்திர ஜபம் செய்யும்போது நம் ரத்தத்தில்  உள்ள நீரில் மந்திர சக்தி ஏறுகிறது.

ரத்த ஓட்டம் இல்லாத இடம் உடலில் ஏது? எனவே உடல் முழுவதும் மந்திர சக்தி ஏறுவதால் உடலும் அதில் உறையும் மனமும் புனித சக்தி  நிறைந்ததாகின்றன. மந்திர ஜபம் செய்பவர்கள் எளிதில் வாழ்வில் வெற்றி அடைவார்கள் என்று சொல்வதன் பின்னணி இதுதான். மந்திர சக்தி உடைய  தண்ணீர் உடல் பிணிகளைத் தீர்க்கும் சக்தியுடையது என்பதைத் தம் இளவயதில் கண்டறிந்து வியந்திருக்கிறார் ஸ்ரீஅரவிந்தர். அவரது தம்பிக்கு மிகத்  தீவிரமான காய்ச்சல் இருந்த தருணம். எப்படி குணப்படுத்துவதெனத் தெரியவில்லை. அப்போது தற்செயலாக அங்கு வந்தார் ஒரு யோகி. விஷயத்தைக்  கேள்விப்பட்டார். ஒரு கோப்பை தண்ணீரைக் கொண்டுவரச் சொன்னார்.

சிறிதுநேரம் சில மந்திரங்களை உச்சரித்து அந்தத் தண்ணீரில் தன் மோதிர விரலால் குறுக்கே ஒரு கோடிழுத்தார். அந்தத் தண்ணீரைத் தம்பிக்குக்  குடிக்கக் கொடுக்குமாறு கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டார். அரவிந்தர் வியப்போடு அந்தக் கோப்பைத் தண்ணீரைத் தன் தம்பி பரீனை அருந்தச்  செய்தார். அடுத்த நொடியே காய்ச்சல் பளிச்சென்று குணமாகிவிட்டது. அரவிந்தரால் நம்ப முடியவில்லை. ஆனால் கண்ணெதிரே நடந்த உண்மைச்  சம்பவம் என்பதால் நம்பாமல் இருக்க வும்முடியவில்லை. ஸ்ரீஅரவிந்தருக்கு மந்திரங்கள் மேல் மகத்தான நம்பிக்கை வருவதற்கு அவரது வாழ்வில்  நடந்த இந்தச் சம்பவம்தான் காரணமாக அமைந்தது. மந்திர சக்தி தண்ணீரில் இறங்கும் என்பதை அவர் புரிந்துகொண்டதும் அப்போதுதான்.

அஸ்தியை நீரில் கரைப்பது என்ற சம்பிரதாயம் நம் தேசத்தில் பின்பற்றப்படுகிறது. ஒருவர் எங்கே இறந்தாலும் அவர் அஸ்தியைக் காசிக்கு எடுத்துச்  சென்று கங்கையில் கரைப்பது என்ற வழக்கத்தையும் சிலர் பின்பற்றுகிறார்கள். ஆண்டுதோறும் நிகழ்த்தும் நீத்தார் கடனிலும் நீர் முக்கியத்துவம்  பெறுகிறது. அமாவாசையன்று கொடுக்கும் நீத்தாருக்கான தர்ப்பணத்திலும் எள்ளும் தண்ணீரும் இறைக்கப்படுகிறது. நீரில்லாது வெறும் எள்ளை யாரும்  இறைப்பதில்லை. மகாகவி பாரதியாருக்குப் புதல்வர்கள் இல்லாததால் கவிஞர் திருலோக சீதாராம் தாம் உயிரோடிருந்தவரை ஒவ்வோர்  அமாவாசையன்றும் பாரதியாருக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து நீர்க்கடன் செலுத்தித் தர்ப்பணம் கொடுத்துவந்தார்.

நதிகளைப் பெண்கள் என்றும் மலைகளை ஆண்கள் என்றும் சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. கங்கா தேவி, காவிரித் தாய் என்றெல்லாம் பெண்ணாகக்  கண்டு ஆறுகளைப் போற்றுகிறோம். மலையையோ மலையரசன் என்கிறோம். எந்த மலையையும் பெண்ணாய் நாம் காண்பதில்லை. இதன்  பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. ஆண்கள் மலை மாதிரி நிலையானவர்கள். தாங்கள் பிறந்த இடத்திலேயே வாழ்கிறவர்கள். ஆனால்  பெண்களோ நதி மாதிரி ஓரிடத்தில் பிறந்து இன்னோர் இடத்திற்கு வாழச் செல்கிறவர்கள். எனவேதான் மலை ஆணாகவும் நதி பெண்ணாகவும்  சித்திரிக்கப்படுகின்றன. கண்ணன் கதையைச் சொல்லும் பாகவதத்தில் நீரால் விளைந்த நிகழ்வொன்று வருகிறது.

இந்திரனுக்கு பூஜை செய்வது ஏன்? கோவர்த்தன கிரி அல்லவா நமக்குச் செல்வங்களை அள்ளித் தருகிறது? மலைக்கல்லவா பூஜை செய்ய  வேண்டும்? என்று நந்தகோபரிடம் கேள்வி எழுப்பினான் சின்னக் கண்ணன். கண்ணன் பேச்சுக்கு மறுபேச்சுண்டா? இந்திர பூஜைக்கு பதிலாக கிரி பூஜை  நிகழ்த்தப்பட்டது. இந்திரனுக்குக் கோபம். வருணனை ஏவி கோகுலத்தில் கடும் மழை பொழியச் செய்தான். கண்ணன் ஒற்றை விரலால் கோவர்த்தன  கிரியைத் தூக்கி அதன்கீழ் கோபர்களையும் கோபிகைகளையும் ஆநிரைகளையும் வரச்செய்து, மழைநீரால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் காத்தான்.

பிரளய காலத்தில் கட்டை விரலைக் கடித்தவாறு ஆலிலைமேல் படுத்திருக்கும் குழந்தைக் கண்ணன் அவன்! பிரளய வெள்ளத்தையே  பொருட்படுத்தாதவன் சாதாரண மழை வெள்ளத்தையா பொருட்படுத்துவான்? காக்கும் கடவுளான திருமாலின் அவதாரமான அவன் தன்னை  நம்பியவர்களைக் காப்பாற்றாமல் விடுவானா? இந்திரன் முயற்சி தோல்வியடைய அவன், மூலப் பரம்பொருளே கண்ணனாக வடிவெடுத்துள்ளதை  உணர்ந்து கண்ணனின் செங்கமலப் பாதங்களில் பணிந்ததாகக் கூறுகிறது பாகவதம். கோவர்த்தன கிரியைக் கண்ணன் தூக்கிக் கொண்டிருந்தது ஏழுநாள்.  துவாபர யுகத்தில் தன்னை ஏழுநாள் சுமந்த கண்ணனைக் கலியுகத்தில் ஏழுமலையாகிச் சுமந்து கொண்டிருக்கிறதாம் அது. வேங்கடவனைச் சுமக்கும்  ஏழுமலையின் முற்பிறவிக் கதை இது!

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில், தலைவி தன் தோழியிடம் சொல்வதாக அமைந்த காதல் பாட்டு ஒன்று உண்டு. இதில் நீர்  ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. தலைவி சொல்கிறாள்:

சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி மேல் ஓர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன்! என வந்தாற்கு அன்னை
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர்இழாய்
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், என யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தர தன்னையான்
உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்றென்னைக்
கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்!
(கலித்தொகை 51ஆம் பாடல், ஆசிரியர்: கபிலர்)

இந்த அழகிய நாடகபாணிப் பாடலின் சுருக்கமான பொருள்: `சிறுவயது விளையாட்டுத் தோழன். இப்போது வாலிபனாகி விட்டான். ஒருநாள் தண்ணீர்  வேண்டும் என்று என்னிடம் கேட்டான். அப்போது என் தாயும் வீட்டிலிருந்தாள். `தண்ணீர் கொடு’ என்றாள் தாய். நான்  தண்ணீர் கொண்டுவந்தேன்.  அவனோ என் வளைக்கரத்தைப் பற்றி விட்டான். `இவன் செய்வதைப் பார் அம்மா!’ எனக் கூச்சலிட்டேன். அன்னை அலறி ஓடிவந்து என்னவெனக்  கேட்டாள். இவன் விக்குகிறான் பார்!’ எனச் சொல்லி நான் சமாளித்தேன். அப்போது அன்னை அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

அந்த நேரத்தில் கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்துச் சிரித்தான் அக்கள்வன் மகன்!’ தலைவி தனக்கும் அவன் மேல் காதல்  இருப்பதை என்ன அழகாக, ஆனால் நாணத்தோடு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள்! அவன் தாகத்தையும் மோகத்தையும் சேர்த்தே புரிந்துகொண்டு  விட்டாள் அவள். இன்றும் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் அந்தத் திருட்டுப் பயல்’ என்ற சொற்களையே அந்தக் காலத்திலும் அந்தத் தலைவி அக்கள்வன் மகன்’ எனப் பயன்படுத்தியிருப்பது தான் ஆச்சரியம்!

நீர் என்ற வார்த்தையை சிலேடையாகப் பயன்படுத்தி நம்மை ரசிக்கவைக்கும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம், விநோத ரசமஞ்சரி என்ற நூலில்  பதிவாகியுள்ளது. ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் இடையே நட்புறவு இருந்ததில்லை என்கிறது ஒரு கர்ண பரம்பரைக் கதை. இந்தச் சண்டை  தொடர்பான சம்பவம் அது.  கம்பர் நதியில் முகம் கழுவிக் கொண்டிருந்தார். கம்பர் முகம் கழுவிய படித்துறைக்கு முன்பாக இருந்தது ஒட்டக் கூத்தர்  முகம் கழுவிய படித்துறை.

நதிநீர் ஒட்டக்கூத்தர் பக்கமிருந்து கம்பர் இருந்த பக்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. ஒட்டக்கூத்தர் எகத்தாளத்துடன் கம்பரிடம் சொன்னார்: நான்  முகம் கழுவிய நீர்தான் உங்கள் பக்கம் வருகிறது. அதில்தான் நீங்கள் கால் கழுவுகிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.!’ அதற்கு ஒட்டக்கூத்தரைப்  பார்த்துக் கம்பர், நீரே வந்து என் காலில் விழுந்தால் நான் என்ன செய்வது!’ என்றாராம் கம்பர்!

திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்