SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கை வாழ்வதற்கே!

2018-05-15@ 17:34:52

இருபத்தொன்பது வயதாகும் நான் கூலி வேலை செய்து வருகிறேன். முதலில் ஒரு பெண் குழந்தையும், அடுத்து இரட்டைப் பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. கடன் தொல்லை வாட்டி வதைக்கிறது. மன உளைச்சல் ஏற்பட்டு மரணபயம் உண்டாகிறது. நிம்மதியே இல்லை. கடன் பிரச்னை தீரவும், வாழ்க்கையில் முன்னேறவும் நல்ல வழியைக் காட்டுங்கள். சதீஸ்வரன், முசிறி.

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி (மீன ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அடுத்தவர்களிடம் சென்று கூலி வேலை பார்க்க நேரிடுகிறது. கைத்தொழிலை மூலதனமாகக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் மனைவியை முதலாளியாக வைத்துக் கொண்டு சொந்தமாக சுயதொழிலில் ஈடுபடலாம். பூரம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மூத்த பெண்ணின் ஜாதகமும், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்திருக்கும் இரட்டைப் பெண் குழந்தைகளின் ஜாதகமும் பலம் பொருந்தியதாக உள்ளது.

அவர்களை நல்ல வசதியான முறையில் வளர்க்கும் அம்சமும் நிறைந்துள்ளது. தற்போது நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து வடகிழக்கு திசையில் உள்ள நகரத்திற்கு இடம் பெயர முயற்சியுங்கள். உள்ளூரில் உங்களால் பிழைப்பு நடத்தஇயலாது. வெளியூருக்குச் சென்றால் வளமானஎதிர்காலம் உண்டு.புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று அவலும், வெல்லமும் கலந்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். உங்கள் பிரச்னைகள் காற்றில் கலந்த நூல் போல் காணாமல் போகும்.

நான் இரண்டு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி சாமியாராக திரிகிறேன். எனக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. நான் சித்தராக முடியுமா? அதற்கான வழியைக் கூறுங்கள். தனகோடி, புதுவை.

இல்வாழ்வு சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டு அறுபத்து ஐந்தாவது வயதில் சித்தராக முடியுமா என்று கேட்டிருக்கிறீர்கள். சித்த புருஷராக மாறும் சக்தியை உடையவர்கள் இதுபோல் கடிதம் எழுதி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆன்மிக ஈடுபாடு என்பது வேறு, சித்தராக மாறுவது என்பது வேறு. இரண்டையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசையில் புதன் புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியனுடன் கேது இணைந்து 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியேறி சாமியாராக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறீர்கள். 12ம் இடத்து கேது மனதில் தத்துவார்த்தமான சிந்தனைகளை அதிகம் தருவார்.

கடந்த ஏழு வருடங்களாகவே உங்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் கேள்விக்கு வெகுவிரைவில் தீர்வு காண்பீர்கள். 08.08.2018 முதல் சுக்கிர தசை துவங்க உள்ளது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் ஜீவனஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் சந்திரனின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் குடும்பத்துடன் இணைந்து விடுவீர்கள். சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சியுங்கள். பொதுச் சேவை என்பது உங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியைத் தரும். உங்கள் வாழ்வையும் அர்த்தமுள்ளதாக மாற்றும். பௌர்ணமி நாட்களில் திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலுக்குச் சென்று சந்திரமௌலீஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதோடு, ஆலய வளாகத்தில் சந்திரஒளி படும்படியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.மனக்குழப்பம் தீர்ந்து தெளிவு காண்பீர்கள்.

வயதில் குறைந்த ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்.பெயரை வைத்துப் பார்த்த ஜோதிடர் ஒருவர் நாங்கள் திருமணம் செய்து கொண்டால் குடும்பமே சிதைந்துவிடும் என்று சொல்வதாக என் காதலர் கூறுகிறார். இதனால் நாங்கள் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்கள். ஆரணி வாசகி.

ஜாதகம் ஏதுமின்றி வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ஜோதிடர் சொன்னதாக உங்கள் காதலர் சொல்வது முழுப்பொய். உங்களை விட்டு பிரிவதற்கான வழியை அவர் தேடிக் கொண்டிருக்கிறார். ஜோதிடர் சொன்னதாக அவர் கூறும் விஷயங்கள் அனைத்தும் கட்டுக்கதையே. விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி உங்களை விட இளையவரை திருமணம் செய்து கொள்ளும் அமைப்பு இல்லை. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்துள்ள உங்கள் காதலர் ஜாதகத்தை ஆராய்ந்ததில் உங்களைவிட வசதி வாய்ப்புடன் கூடிய ஒரு பெண்ணையே அவர் திருமணம் செய்வார் என்பது புலனாகிறது. விலகத் தயாராய் இருக்கும் உங்கள் காதலரை நீங்கள் பிடிவாதமாக இழுத்துப் பிடிக்காதீர்கள்.

உங்கள் இருவருக்குள்ளும் இருந்தது வெறும் இனக்கவர்ச்சிதானே தவிர உண்மையான காதல் அல்ல. அவராக உங்களை விட்டு விலகிச் செல்ல முற்படுகிறார் எனும்போது கெட்ட நேரம் தொலைந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள். சனிக்கிழமைநாளில் நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு உங்கள் ஊரில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். 24.06.2018 முதல் கல்யாண யோகம் துவங்குவதால் உங்கள்மனதைப் புரிந்துகொண்டு நடந்து கொள்ளும் கணவர் உங்களுக்கு அமைவார். நடந்த விஷயங்களை மறந்து புதுவாழ்விற்குத் தயாராகுங்கள். வாழ்த்துக்கள்.

12ம் வகுப்பு படித்துவரும் எனக்கு சிறுவயதில் இருந்து சரியாக பேச்சு வராது. எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். சண்டைக்கு இழுக்கிறார்கள். பெண்களின் முன்னால் அவமானப்படுத்துகிறார்கள். எல்லோரும் என்னை கேவலமாகப் பார்க்கிறார்கள். நான் என் வாழ்க்கையை மிகவும் வெறுத்துவிட்டேன். என் வாழ்வினில் சாதிக்க வழிகூறுங்கள். ராஜதுரை, உத்திரமேரூர்.

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் சந்திர புக்தி நடக்கிறது. ஜென்ம லக்னத்தில் இணைந்திருக்கும் கேதுவும், ஜென்ம லக்னாதிபதி குரு ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்றிருப்பதும் கடுமையான தாழ்வு மனப்பான்மையை உங்களுக்குத் தந்திருக்கிறது. ‘குறை சொல்லும் உலகம் உதவப் போவதில்லை, கூனிக் குறுகினால் இந்த உலகம் போற்றப் போவதுமில்லை’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய முழுநீள நான்கு பக்க கடிதத்தைப் படித்துப் பார்த்ததில் உங்களுக்குள் இருக்கும் தமிழ்மொழிப் புலமை நன்கு வெளிப்படுகிறது. ஆங்காங்கே வெளிப்படும் கவித்துவமும், உங்கள் குறைகளை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கும் வசன நடையும் உங்கள் திறமையை பறை சாற்றுகிறது. வெறும் பள்ளிப் படிப்பு மாத்திரம் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தராது.

ஏசுவோரையும், தாழ்த்திப் பேசுவோரையும் பற்றிக் கவலைப்படாது உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை ஆங்காங்கே தைரியமாக வெளிப்படுத்துங்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தே சொந்தமாக நாடகங்களை எழுதி அதனை மேடையேற்றுங்கள். 05.09.2019 முதல் உங்கள் வாழ்வினில் மிகச்சிறந்த ஆசான் ஒருவரை சந்திப்பீர்கள். அவரது துணை கொண்டு உங்கள் விருப்பப்படி கலைத்துறையில் உங்களால் மிகப்பெரிய சாதனையைச் செய்ய இயலும். ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் கலைத்துறையில் உங்களை சாதிக்க வைப்பார். உங்களுடைய முயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே உங்களுக்குத் துணைபுரியும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை மனதில் நிலைநிறுத்தி செயல்படுங்கள். நரசிம்மரை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வணங்கி வாருங்கள். வெற்றி பெறுவீர்கள்.

ஐம்பத்தைந்து வயதாகும் என்னை என் தம்பியின் மனைவியும், மகனும் கவனித்துக் கொள்கின்றனர். என் தம்பி இறந்துவிட்ட போதிலும் அவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். நல்ல உள்ளம் கொண்ட அந்தப் பிள்ளைக்கு இன்னமும் திருமணம் கூடி வரவில்லை. அவனது பெயர்தான் திருமணத் தடைக்கு காரணமா? நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள். கலைச்செல்வி, கோபி.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தம்பி மகனின் ஜாதகத்தில் தற்போது சந்திரதசையில் ராகுபுக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் இடத்திற்கு அதிபதி சனி ஆறாம் வீட்டில் லக்னாதிபதி சந்திரனுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் திருமணத் தடையை சந்தித்து வருகிறார். எனினும், 30வது வயதில் திருமண யோகம் வந்துவிடுவதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவரது ஜாதகக் கணக்கின்படி 09.07.2018 முதல் 09.11.2019 வரை திருமணம் யோகம் என்பது கூடி வர உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அவரது திருமணம் நடந்துவிடும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் அவரது பெயர் கூட திருமணத் தடையை உண்டாக்கக் கூடும். இரண்டு பகுதிகளாக உள்ள அவரது பெயரின் முற்பாதியை சுருக்கி அதனையும் சேர்த்து இரட்டை இனிஷியலாக வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். ஷி.வி. என்று அவர் தனது இனிஷியலை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லதே. பிரதி திங்கட் கிழமை நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று இரவு நேர அர்த்தஜாமபூஜையில் கலந்துகொண்டு அங்கு தரப்படும் பால் பிரசாதத்தை மறக்காமல் பெற்று சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். 11 வாரம் முடிவதற்குள் உங்கள் தம்பி மகனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விடும். கவலை வேண்டாம்.

நான் நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து வளமுடன் வாழ்ந்து சுயமாக பொருளாதார நிலையிலும் வசதியாக உள்ளேன். எதற்கும் ஒத்துவராத கணவனால் மன வேதனையுடன் வாழ்கிறேன். ஒரு மகன் இருக்கிறான். வசதியாக இருந்தும் மனம் விரும்பும் அன்பான கணவன் இல்லையே என்ற ஏக்கம் என் மனதை முள்ளாக தைக்கிறது. அவரைப் பிரிந்து வாழ்ந்தால் என்ன? என் குழப்பத்திற்கு வழி சொல்லுங்கள். சிதம்பரம் வாசகி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற செவ்வாயுடன் லக்னாதிபதி சனி இணைந்திருப்பதால் இத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கிறீர்கள். ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதில் அமர்ந்திருப்பதால் முன் ஜென்மஉறவின் தொடர்ச்சியையே இந்த ஜென்மத்திலும் அனுபவித்து வருகிறீர்கள் என்பது புலனாகிறது. அவரை விட்டுப் பிரிந்து வாழ்வதால் மட்டும் உங்கள் மனதிற்கு நிம்மதி என்பது கிடைத்து விடாது.

உங்களுடைய ஜாதக பலத்தின்படி சனிதசைக்கு உரிய 19 ஆண்டு காலமும் நீங்கள் அவரை விட்டுப் பிரிந்து வாழ இயலாது. இறைவன் நமக்கு அளித்த வாழ்க்கை இதுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காசு, பணம், வசதி வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தனித்து வாழ்ந்துவிட முடியாது. உங்கள் ஜாதகபலத்தின்படி தனித்து வாழ்வதற்கான அம்சம் இல்லை. உங்கள் பிள்ளையின் நல்வாழ்வே உங்களது எதிர்கால லட்சியம் என்பதை மட்டும் மனதில் கொண்டு மற்றவற்றை மறந்து விடுங்கள். செவ்வாய் தோறும் தில்லை காளியை தரிசிப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். மனம் தெளிவு பெறும்.

என் மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. மறுமணம் எப்போது நடைபெறும்? மறுவாழ்வு சிறப்பானதாக அமையவும், விரைவில் திருமணம் நடைபெறவும் பரிகாரம் கூறுங்கள். பாண்டியன், திருத்துறைப்பூண்டி.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தில் உச்சபலம் பெற்றிருப்பதால் உடனடியாக நீங்கள் அவரது திருமணத்தை நடத்த இயலும். அடுத்து வரும் தசாபுக்தி காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. 34 வயது நடந்து கொண்டிருக்கும் நிலையில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அவரது திருமணத்தை நடத்துவதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது.

அவர் பிறந்த இடத்திலிருந்து வடக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். தூரத்துச் சொந்தம் என்ற வகையில் உறவுமுறையில் இருந்து மணமகன் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உயர்ந்த பதவியில் உள்ள மனிதராக இருப்பார். உங்கள் மகளின் மனதைப் புரிந்து கொண்டு அரவணைத்துச் செல்லுபவராக அமைவார். வெள்ளிக்கிழமைதோறும் வீட்டினில் ஐந்து முக குத்து விளக்கினை ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினை 18 முறை சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். மறுவாழ்வு சிறப்பானதாகஅமையும்.

“புத்ர பௌத்ராதிஜனகம் விவாஹப்ரதமிஷ்டதம்
சோராரிஹாரிஜகதாம் அகிலேப்ஸிதகல்பகம்,”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்