SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தனின் அருளால் கவலைகள் தீரும்!

2018-05-03@ 15:48:01

பன்னிரண்டு வயது ஆகும் என் மகனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு சர்க்கரைவியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான்.சில நாட்கள் முன்பு உடல்நிலை மோசமாகிஅவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளான். அவன் உடல் நலம் பெற உரிய பரிகாரம் சொல்லுங்கள். புதுச்சேரி வாசகி.
    
மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை மட்டுமல்ல, வருங்கால சந்ததியைக் குறித்த கவலையையும் உண்டாக்குகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமர்ந்திருப்பதால் ஆயுள் தீர்க்கமாய் உள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆறாம் வீட்டு ராகு சற்று சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறார்.

கிரஹ சஞ்சாரநிலை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவரது இந்த நிலைக்குக் காரணம் நமது உணவுப் பழக்கம்தான் என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நாம் வாங்கித் தரும் தின்பண்டங்கள்தான் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி உணவுப்பழக்கத்தின் மூலம்அவரது உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ள இயலும். 04.05.2018 முதல் கொஞ்சம், கொஞ்சமாக குணமடைவார். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. பிரதி மாதந்தோறும் வருகின்ற மகம் நட்சத்திரநாளில் அபிஷேகப்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு உங்கள் மகனையும் அழைத்துச் சென்று வழிபட்டு வாருங்கள். உடல் நலம் பெறுவார்.

பொறியியல் முடித்து 5 ஆண்டுகள் ஆகிறது. பல கம்பெனிகளில் இன்டர்வியூக்குச் சென்றும் வேலை கிடைக்கவில்லை. வங்கி, ரயில்வே மற்றும் அரசுத் தேர்வுகளில் அரை மார்க், 1 மார்க்கில் ஃபெயில் ஆகிவிடுகிறேன். எனக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
விஜயலெட்சுமி, மதுரை.


கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சூரியன்புதனின் இணைவு நல்ல நிலையே. ஜென்ம லக்னாதிபதியே 10ல் இணைவதால் வாழ்நாள் முழுவதும் உத்யோகம் பார்க்கும் அம்சம் உண்டு. லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவானும் உங்கள் முயற்சிக்குத் துணையிருப்பார். தொடர்ந்து அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுகளை எழுதி வாருங்கள்.

விடாமுயற்சியும், உங்களுடைய உழைப்பும் நிச்சயம் வீண் போகாது. 28.10.2018க்குப் பின் உத்யோகம் கிடைத்து விடும். அரசுத்துறையில் உயர்ந்த பணியில் அமர்வீர்கள். பிரதி புதன்கிழமை தோறும் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதிசொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிரந்தர உத்யோகம் கிடைத்தவுடன் எம்பெருமானுக்கு பச்சைநிற பட்டு வஸ்திரம் சாத்தி வணங்குவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். அரசுப் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

“ஹாலாஸ்யநாதாயமஹேச்வராயஹாலாஹலா அலங்க்ருத கந்தராய
மீனேக்ஷணாயா: பதயேசிவாயநமோ நம: ஸூந்தர தாண்டவாய.”


திருமணமாகி நான்கு வருடங்களில் எனது கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. அன்போடு நடந்து கொள்வதும் இல்லை. நானும் பொறுத்து பொறுத்து பார்த்து விட்டேன். ஒன்றும் சரி செய்ய இயலவில்லை. பையனுக்கு மூன்று வயதும் ஆகிவிட்டது. இன்னமும் அப்படித்தான் உள்ளார். என்ன பிரச்னை என்று தெரியவில்லை. உரிய வழி காட்டுங்கள். சிவரஞ்சனி, சிவகங்கை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. நீங்கள் உங்கள் கணவரின் ஜாதக விபரம் குறிப்பிடவில்லை. எனினும் உங்களுடைய ஜாதக அமைப்பின்படி வாழ்க்கைத் துணைவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனிராகு இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு மூன்றில் அமர்ந்திருப்பதும் களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. உங்கள் கணவரின் நடவடிக்கை உங்களை பொறுமை இழக்கச் செய்திருப்பது உங்கள் கடிதத்தில் தெரிகிறது.

இந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இதுதான் என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். உங்கள் மகனை நல்லபடியாக வளர்ப்பதில் உங்கள் முழு கவனமும் இருக்கட்டும். பிள்ளையை பள்ளிக்கு அனுப்பியபின்னர் வீட்டில் அமர்ந்திருக்காமல் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல முயற்சியுங்கள். வெளிஉலகத் தொடர்பு உங்கள் கவலையை மறக்கச் செய்யும். வியாழன் தோறும் குரு பகவானின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். ஞானம் பிறப்பதோடு மனத் தெளிவும் காண்பீர்கள்.

“தேவானாஞ்ச ருஷீநாஞ்ச குரும் காஞ்சனசந்நிபம்
பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.”


முப்பத்து மூன்று வயதாகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. ஜோதிடர்கள் ஆறு மாதத்தில் நடக்கும், ஒரு வருடத்தில் நடக்கும் என்று சொன்னார்கள்.இப்படிச் சொல்லி சொல்லியே இத்தனைகாலம் கடந்துவிட்டது.ஒரே வருத்தமாக உள்ளது. என் மகனுக்கு திருமணம் எப்போதுதான் நடக்கும்?கிருஷ்ணா, கொல்லம்.

வேலை கிடைத்துவிடும் என்று ஜோதிடர் சொன்னால், வேலைக்கு விண்ணப்பிக்காமலேயே வேலைகிடைத்து விடுமா? ஜாதக பலத்தோடு நமது முயற்சியும் வேண்டும். நீங்கள் எத்தனை பெண்களின் ஜாதகங்களை வேண்டாம் என்று ஒதுக்கியிருப்பீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி மூன்றில் அமர்ந்திருப்பது திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. எனினும் ஐந்தாம் இடத்தில் உண்டாகியிருக்கும் குரு சுக்கிரனின் இணைவு நிச்சயமாக கல்யாண யோகத்தினை இவருக்குத் தந்து விடும்.

ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி என்பதால் உங்கள் எதிர்பார்ப்பினை குறைத்துக் கொண்டு பெண் தேடுங்கள். 11.02.2019க்குப் பின் திருமணம் நிச்சயமாகிவிடும். திருமணம் நல்லபடியாக முடிந்தவுடன் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி ஆலயத்திற்கு தம்பதியரை அழைத்து வருவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். உங்கள் மகனிடம் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பத்மநாப ஸ்வாமியை மானசீகமாக தினமும் வழிபட்டு வரச் சொல்லுங்கள். கெட்டிமேளம் விரைவில் கொட்டும்.

“இந்தீவர ச்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சிதபாதபத்மம்
ஸந்தான கல்பத்ரும மாச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி.”


என் மகள் பிறந்து பதினோராவது மாதத்திலும், இரண்டரை வயதிலும் வலிப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வலிப்பு வந்துவிடுகிறது. பேச்சு சரியாக வராததால் சிறப்புப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். அவள் தெளிவாகப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். முத்துமாரி, சென்னை.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பது சற்று சிரமத்தைத் தந்திருக்கிறது. எனினும் உங்கள் மகளுக்கு உண்டாகியுள்ள பிரச்னையை முற்றிலுமாக சரி செய்ய இயலும். மருத்துவர்களின் ஆலோசனையை சரிவர பின்பற்றி வாருங்கள். வாரம் இரு முறை முளைகட்டிய பச்சைப்பயிறு தானியத்தை நூறு கிராம் அளவிற்கு சாப்பிடச் செய்யுங்கள். கருந்துளசி இலைகள் இரண்டினை 50மி.லி. தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றினில் அருந்தச் செய்யுங்கள்.

பிரதி மாதந்தோறும் வருகிற கிருத்திகை நாட்களில் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். சிறுவாபுரி தலத்திற்கு அவ்வப்போது குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் முதலான துதிகளை குழந்தை மாலை வேளையில் தினமும் கேட்கும் விதமாக வீட்டினில் ஒலிக்கச் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது பழனிமலைக்குச் சென்றுஅபிஷேக விபூதியைவாங்கி வந்து தினமும் குழந்தையின் உடம்பினில் பூசி விடுங்கள்.12வது வயதில் உங்கள் குழந்தை முற்றிலும் குணமடைந்து விடுவாள். கந்தனின் அருளால் உங்கள் கவலைகள் தீரும்.

நல்ல உத்யோகத்தில் உள்ள என் மகளுக்குத் திருமணமாகி மூன்று மாதத்தில் கணவர் துர்மரணம் அடைந்து விட்டார். இவருக்கு 2ம் திருமணம் நடைபெறுமா? ராகுகேது, செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமாக பார்க்க வேண்டுமா? அமைதியின்றி தவிக்கும் தந்தைக்கு வழிகாட்டுங்கள். சிங்காரவேலு, சேலம்.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகுவும், ஏழாம் வீட்டில் கேதுவும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய்எட்டாம் வீட்டிலும் அமர்ந்து சிரமத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அவருடைய முதல் திருமணத்தையே மிகவும் தாமதமாக 31வது வயதில்தான் நடத்தியிருக்கிறீர்கள். அதுவும் கேது தசையில் ராகு புக்தி நடந்த காலத்தில் திருமணத்தை நடத்தியுள்ளீர்கள். 43வது வயதில் தற்போது நடந்து வரும் தசாபுக்தியும் அவரது திருமண வாழ்விற்கு துணைபுரியவில்லை.

இனி வருகின்ற தசைகளும் திருமண வாழ்வினில் அவருக்கு முழுமையான ஈடுபாட்டினைத் தராது. ஜீவன ஸ்தானத்தில் சனியின் அமர்வினைப் பெற்றிருக்கும் உங்கள் மகளை பொதுச்சேவையை தன் வாழ்நாள் பணியாகக் கொண்டு செயல்படச் சொல்லுங்கள். ஆசிரியர் உத்யோகத்தில் இருக்கும் அவர் ஏழைக் குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற கல்வியை போதிக்க இயலும். ஆதரவற்ற குழந்தைகளின் மேற்படிப்பிற்கு உதவச் சொல்லுங்கள். ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு டிரஸ்ட் அமைத்து கல்விச் சேவையில் ஈடுபடச் சொல்லுங்கள். அவரது வாழ்க்கைக்கான அர்த்தம் ஆதரவற்ற குழந்தைகளின் நல்வாழ்வினில் ஒளிந்துள்ளது என்ற உண்மை அவருக்குப் புரிய வரும். மறுமண முயற்சியை கைவிட்டு அவரது சேவைக்கு துணையாக நில்லுங்கள். குழம்பிய மனம் தெளிவு பெறும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

 • sijaapanda

  சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 • inpendencedayrehearsal

  செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்