SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் சாமி மட்டும் கும்பிட்டுவிட்டு வரலாமா?

2018-05-03@ 15:34:06

இறைவனுக்கு தேவை உண்மையான பக்தி மட்டுமே. நீங்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறீர்களா, இல்லையா என்பது முக்கியமில்லை. உங்களுடைய பக்தியும், இறைவனின் பால் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மட்டுமே இறைவனின் அருளைப் பெற்றுத் தரும். கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் கடவுளை வணங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரத்தில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதன் மூலம் தங்கள் பாரம் குறைந்ததாக நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்களும் உண்டு. வசதி படைத்தவர்கள் ஆலயத் திருப்பணிக்காக உண்டியலில் காணிக்கையை செலுத்துவது  நல்லது. ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லோரும் உண்டியலில் கட்டாயம் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

பஞ்சபாத்திரம் - உத்தரணி என்ற பெயர் எப்படி வந்தது?  - கிருஷ்ணமூர்த்தி, கத்தார்.

உத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்!

அதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும்போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள்.

உதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது ‘விநாயகாய நமஹ:  த்யாயாமி’ (விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள். விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள்,  வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வோம் அல்லவா, அதே போல இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்கு பாதபூஜை செய்யும் விதமாக ‘பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தீர்த்தம் விட்டு அலம்புகிறேன்), ‘ஹஸ்தயோ: அர்க்யம் சமர்ப்பயாமி’ (கைகளை அலம்பிக்கொள்ள தீர்த்தம் விடுகிறேன்), ‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (முகம் வாய் அலம்ப தீர்த்தம் தருகிறேன்), ‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’ (நீராட சுத்தமான தண்ணீரை விடுகிறேன்), ‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (இறுதியாக மீண்டும் ஜலம் விடுகிறேன்) என்று ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள். இந்த ஐந்து விதமான பஞ்ச உபசாரத்தினைச் செய்வதற்கு துணையாக இந்த பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைப்பதாகவும் கொள்ளலாம்.

அமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா? - ப.த.தங்கவேலு,  பண்ருட்டி.

இது முற்றிலும் தவறான கருத்து. தை அமாவாசை நாளில் உங்கள் நண்பரின் இல்லத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனால் குடும்பமே வருத்தத்தில் இருப்பதாகவும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அமாவாசை நாளில் குழந்தை பிறப்பதால் குடும்பத்திற்கு ஆகாது என்ற கருத்தில் உண்மை இல்லை. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. இறைவனின் எண்ணப்படியே இந்த உலகம் இயங்குகிறது. நமக்கு எது நன்மையோ, அதைத்தான் இறைவன் தந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆஞ்சநேயர் அவதரித்தது அமாவாசையில், கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமியில், ராமர் பிறந்தது நவமியில் என்று உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அமாவாசை நாளில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பர். லக்ன பாவத்திலிருந்து சூரியனும், சந்திரனும் இணைந்திருக்கின்ற பாவகத்தின் தன்மையைப் பொறுத்து பலன் மாறுபடும். அது நற்பலனைத் தருவதாகவும் இருக்கலாம். பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது தவறு.

மேலும் ஒரு குழந்தை பிறந்த நேரத்தினால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. அவரவர் ஜாதக பலனே அவரவருக்கு உரிய பலனைத் தரும். அமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே.

உரிய பாகத்தைப் பிரித்து தராமல் தானே முழுசொத்தையும் அனுபவிக்கும் சகோதரனுக்கு பங்காளி துரோகம் என்ற பாவம் வந்து சேருமா? அதற்குரிய தண்டனை என்ன? - யோகேஷ்வரன் பிரபு, அரியலூர்.

சொத்து சம்பாதித்தவர் முறையாக உயில் எழுதி வைத்து, அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளவாறு சொத்தினை அனுபவித்து வந்தால் அதில் எந்த குற்றமும் வந்து சேராது. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தினை சம்பாதித்த தந்தையானவர் மூன்று பிள்ளைகளின் குணங்கள், அவரவரின் தனித்திறமை, சம்பாதிக்கும் யோக்யதை ஆகிய விஷயங்களை கருத்தில் கொண்டு உயில் எழுதி வைத்திருப்பார்.

கைநிறைய சம்பாதிக்கும் மூத்த பிள்ளைக்கு குறைவான பாகத்தை உயில் எழுதி வைக்கலாம். இரண்டாவது பிள்ளை நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தாலும், அவனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை, ஆனால் சொத்தை முறையாகப் பராமரிப்பான் என்ற நம்பிக்கை உள்ள பட்சத்தில் கூடுதல் பாகத்தினை அந்தப் பிள்ளையின் பெயரில் எழுதி வைக்கலாம். ஊதாரித்தனமாக மூன்றாவது பிள்ளை செலவு செய்வதைக் கண்கூடாகக் காணுகின்ற தகப்பன், இந்த பிள்ளைக்கு சொத்து எழுதி வைப்பதால் எந்த நன்மையும் இல்லை, சொத்தை வீணாக அழிப்பதோடு இவனும் அழிந்துவிடுவான் என்று எண்ணி அவன் பெயரில் எந்த பாகமும் எழுதிவைக்காமலும் இருக்கலாம்.

அதில் எந்தத் தவறும் இல்லை. தர்மசாஸ்திரத்தின் படியும், அரசாங்க சட்டப்படியும் சொத்தினை சம்பாதித்தவருக்கு உயில் எழுதி வைக்கும் உரிமை உண்டு. அந்த உயிலில் கண்டவாறே அவரவர் சொத்தினை அனுபவிக்க வேண்டும். உயில் எழுதாமல் தகப்பன் இறந்துவிடும் பட்சத்தில், அந்தச் சொத்தினை வாரிசுகள் யாவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதே நியாயமானது. இதில் விட்டுக்கொடுத்துச் செல்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஒருவருக்கு உரிய பாகத்தை மற்றவர் ஏமாற்றி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அது துரோகமே.

அந்த துரோகத்திற்கு உரிய தண்டனையை யாராக இருந்தாலும் தனது அந்திம காலத்திற்குள் அனுபவிப்பார்கள். கை நிறைய காசு  இருந்தும், வேளைக்கு சாப்பிட இயலாமல், நினைத்ததை அடைய இயலாமல் மன வருத்தத்திற்கு ஆளாவார்கள். இது பங்காளிகளுக்குள் மட்டுமல்ல, பிறர் சொத்தினை அபகரித்து வாழும் அனைவருக்குமே பொருந்தும்.

சிவாலயத்தில் நந்தியின் பின்புறம் கொடிமரம், பலிபீடம் அமைப்பதற்கான தாத்பரியம் என்ன? - சோலைமலை, சேலம்.

நந்தியம்பெருமானுக்கும், எம்பெருமானுக்கும் இடையில் எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது. வாயில்காப்போனாக பணியாற்றினாலும், சதா சர்வ காலமும் எம்பெருமானை தனது சிந்தனையில் கொண்டு தியானித்துக் கொண்டிருப்பவர் நந்தி. அதனால்தான் அவர் எப்போதும் இறைவனை தரிசித்துக் கொண்டிருக்கும் வரத்தினைப் பெற்றிருக்கிறார். சிவாலயத்திற்குள் நாம் செல்லும்போது கூட நந்தியின் பக்கவாட்டில் நின்று தியானித்து உள்ளே செல்ல அவரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும்.

இறைவனின் சந்நதியில் நின்று வழிபடும்போதும் இருபுறங்களிலும் பக்கவாட்டில் நின்றுதான் வழிபட வேண்டுமே தவிர, நந்திக்கு மறைக்கும் விதமாக குறுக்கில் நின்று தரிசனம் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் நந்திக்கும், ஈஸ்வரனுக்கும் இடையில் குறுக்கீடு எதுவும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் சிவாலயங்களில் நந்தியின் பின்புறத்தில் கொடிமரத்தினையும், பலி  பீடத்தினையும் அமைத்திருக்கிறார்கள்.

கர்மா என்பதை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று அனுபவம் முதிர்ந்த ஜோதிடர்கள் கூறுவது ஏற்புடையதுதானா? - எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

ஏற்புடையதே. கர்மாவை அவரவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால்தான் ஜாதகம் எழுதும் போது “ஜனனீ ஜென்ம சௌக்யானாம், வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்று எழுதியிருப்பார்கள். பூர்வ ஜென்ம பாவ - புண்ணியத்தின் அடிப்படையில்தான் இந்த ஜென்மாவிற்கான பலன் அமையும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பதே ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையான சிலப்பதிகாரம் வலியுறுத்தும் கருத்து. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை நம் முன்னோர்கள் பலரும் தங்கள் அனுபவத்தின் வாயிலாக வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவரவர் செய்த கர்மாவிற்கு உரிய பலனை அவரவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற கருத்து முற்றிலும் சரியானதே.

அட்சய திருதியை நாளில் நகை வாங்க வேண்டும், இயலாதவர்கள் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். ஒரு சிலர் அன்னதானம் செய்ய வேண்டும் என்கிறார்கள். பொருள் வீட்டிற்குள் வருவது நல்லதா? அல்லது செலவு செய்து அன்னதானம் செய்ய வேண்டுமா? எது சரி? - எஸ்.அன்னபூரணி, திருச்சி.

அன்னதானம் செய்வதை செலவு என்று சொல்ல முடியாது. தானத்தைப் பெறுபவன் போதும், போதும் என்று சொல்வது அன்னதானத்தில் மட்டுமே. மற்ற எந்த பொருளை தானமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் தந்திருக்கலாம் என்றே எண்ணுவான். அன்னதானத்தின் போது மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது, போதும் என்று திருப்தி அடைவான். இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைச் செய்வது என்பது செலவுக் கணக்கில் சேராது. மாறாக கிடைத்தற்கரிய புண்ணியம் என்ற வரவுக்கணக்கில் சேரும். அட்சய திருதியை நாளுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா? உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான். க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்றும், சூரியன் அளித்த அந்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது.

அந்த நாளில் எது செய்தாலும் அந்த செயலானது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும், தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்போம் என்பதற்காக அட்சய திருதியை நாளில் ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்றவகையில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தங்கம் வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது. அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொண்டுதான் அன்னதானம் செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது.

ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரஹங்களில் தந்தைக்குரிய கிரஹமான சூரியனும், தாய்க்குரிய கிரஹமான சந்திரனும் ஒரே நேரத்தில், உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாள். அதாவது தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள். இந்த உலகை ஆளும் தாய்-தந்தையராகிய பார்வதியும் பரமேஸ்வரனும் பூரணமான சந்தோஷத்துடன் விளங்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா? இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல. திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள்  சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.

அட்சய திருதியை நாளின் இந்த உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கிடைத்தற்கரிய இந்த நாளில் இவ்வுலகில் வாழ பொருட்செல்வத்தினைச் சேர்ப்போம், நம்மால் இயன்ற அன்னதானம் செய்து அவ்வுலகத்திற்கான அருட்செல்வத்தையும் சேர்ப்போம்.

பிரம்மச்சாரிகள் ஒரு முடி பூணூலும், கிரஹஸ்தர்கள் இரண்டும் அணிகிறார்கள். மனைவியை இழந்தவர் ஒரு பூணூலை நீக்க வேண்டுமே.. ஏன் அப்படி செய்வதில்லை? - கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

ஒரு பிரம்மச்சாரி க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழையும்போது இரண்டாவது பூணூலை அணிகிறான். ‘க்ருஹஸ்தாச்ரம யோக்யதா சித்யர்த்தம் த்வீதிய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே’ என்று சொல்லி அணிந்து கொள்வார்கள். விவாஹம் ஆனவுடன் அவன் குடும்பஸ்தன் ஆகிவிடுகிறான். அவன் மனைவியை இழந்துவிடும் பட்சத்தில் அவனை பிரம்மச்சாரி என்று எவ்வாறு சொல்ல முடியும்? திருமணம் ஆகாத பெண்ணை செல்வி என்று அழைப்பார்கள்.

திருமணம் ஆனவுடன்  திருமதி என்று சொல்வார்கள். திருமணம் ஆன ஒரு பெண் தன் கணவனை இழக்க நேரிட்டால் அவரை மீண்டும் செல்வி என்று அழைப்பதில்லை. இது ஒரு வழிப்பாதை. பிரம்மச்சரியத்தில் இருந்து க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழைந்த ஒருவன் மீண்டும் பிரம்மச்சரியத்திற்குள் செல்ல இயலாது. வானப்ரஸ்தம் என்ற நிலைக்குள்தான் நுழைய இயலும். அதாவது, குடும்பத்தில் இருந்துகொண்டே ஆசாபாசங்களைத் துறந்து வாழும் நிலை. மூன்றாவது பூணூல் என்பது திருதிய வஸ்திரத்திற்கு மாற்றாக அணிந்து கொள்வது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் சந்யாசிகள் அணிவது அல்ல. சந்யாசி, அனைத்தையும் துறந்தவர். சந்யாசிகள் பூணூல் அணிவதில்லை. க்ருஹஸ்தனாக மாறிய ஒருவனால் மீண்டும் பிரம்மச்சரியத்திற்குள் செல்ல இயலாது என்பதால் அவன் மனைவியை இழந்த போதிலும் இரண்டு அல்லது மூன்று முடி கொண்ட பூணூல்தான் அணிய வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்