SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனப்பிரச்னை தீர மாதவன் நாமம்!

2018-04-28@ 10:23:11

மயக்கும் தமிழ்! - 45

எல்லாம் அவன் செயல் என்று வைணவர்கள் எம்பெருமானை நினைத்து நெகிழ்ந்து போவதுண்டு. எதுவும் நம்மால் நடைபெறுவதில்லை. ஆக்கல், அழித்தல், நல்லது கெட்டது என்று இப்படி எது நடந்தாலும் எம்பெருமானின் விருப்பப்படியே அவனுடைய திருவுள்ளத்திற்கு ஏற்றார்போல் நடக்கிறது. நடக்கும் என்ற அதீத நம்பிக்கையே இதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. ஆழ்வார்களின் பார்வையில் நாம் பார்த்தோமானால் இறைவன்மீது அதாவது, அந்த உயர்ந்த தத்துவத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த உச்சபட்ச சரணாகதியை நமக்கு நினைவுபடுத்துகிறது. நீ சுமக்கிற சுமையை அவன் திருவடியின் கீழ் இறக்கி விட்ட பிறகும் நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய், அது உனக்குத் தேவையில்லையே என்று நம் மனப் புண்ணுக்கு மருந்து போடுகிறார்கள் ஆழ்வார் பெருமக்கள்.
திருவாய்மொழியில் ஓர் பாசுரம்...

‘‘நண்ணினம் நாராயணனை
நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளமிக்க
வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய்
விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறு ஆக இக்
கருமங்கள் என் நெஞ்சே!’’

கன்னியாகுமரிக்குப் பக்கத்தில் இருக்கிற திருவட்டாறு கோயிலைப் பற்றி நம்மாழ்வார் சிலாகித்துப் பேசுகிறார். வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு. தென்னிந்தியாவின் பூலோக வைகுண்டம் என்று இதை பக்தர்கள் அழைத்து மகிழ்கிறார்கள்! ஆதிகேசவப் பெருமாள் புஜங்க சயனம். மேற்கு நோக்கிய திருக்கோலம். பெருமாளின் இடது கை தொங்கவிட்ட நிலையிலும், வலது கை யோக முத்திரை காட்டிய நிலையில் ஆதிகேசவப் பெருமாள் காணப்
படுகிறார். இந்த நிலையில் எம்பெருமானை தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். எவ்வளவு எழுதினாலும் இதை விவரிக்க முடியாது. சென்று நேரில் தரிசித்தால்தான் இந்த அனுபவங்களை நம்மால் உணர முடியும். பரசுராமனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்தார் எம்பெருமான் என்று பிரமாண்ட புராணமும், கருட புராணமும் திருவட்டாறு கோயிலின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறது! திருவட்டாறு பாசுரத்தில் நாராயணனுடைய நாமங்களை நாம் தொடர்ந்து சொன்னால் என்ன நடக்கும் என்பதை பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு பால பாடம் நடத்துவதைப் போல் நடத்துகிறார் நம்மாழ்வார்.

‘‘நண்ணினம் நாராயணனை
நாமங்கள் பல சொல்லி’’

என்று சொன்னவர் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, அவன் பெயரை சொன்னவுடன் எம்பெருமான் உள்ளம் குளிரும், அவன் உடனே விரைந்து வந்து நம் ஆசைகளை நிறைவேற்றுவான் என்கிறார். எப்படி நிறைவேற்றுவான் தெரியுமா? விண்ணுலகம் அமைத்துத் தருவான் கூடவே ‘‘விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறு’’நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற தணியாத ஆவல் கொண்டவன் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் என்கிறார். நீ என்ன எண்ணுகிறாயோ, அதை அப்படியே நிறைவேற்றித் தருவான் என்பது நம்மாழ்வாரின் திடமான நம்பிக்கை! இது பெருமானுடைய அருள் இயல்பு என்கிறார். இதையெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்க முடியும்? நமக்கு என்ன தேவை என்பது அந்த பரிசுத்தமான பரம்பொருளுக்குத் தெரியாதா என்ன? என்று தானே கேள்வி கேட்டு அதற்கு உரிய பதிலையும் அளிக்கிறார் நம்மாழ்வார். பசுமையான சூழல், எங்கும் நீரோடைகள், இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலை, மனதிற்கு ரம்மியமான இதம் அளிக்கிற தெய்வீக உணர்வு. இதுதான் திருவட்டாறு கோயில் அமைந்துள்ள பகுதியாகும்! தமிழ்க் கடல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் இத்தலத்து எம்பெருமானைப் பற்றி மிக அழகாக உருக்கமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

‘‘வாழி திருவட்டாறு
வாழி திருமாயவன்
வாழி அடியார்கள்
வளமையுடன் வாழி!
திருமாலடி சேர்ந்தார்
தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அனுப்பர் அணிந்து’’

என்று நெகிழ்ந்து போற்றியுள்ளார். அமெரிக்க பாஸ்டன் நகரிலிருந்து வந்த சந்நியாசி அனந்த சைதன்யன் என்னும் பெயர் உள்ளவர். இத்தலத்து எம்பெருமானான ஆதிகேசவப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டார். அவர் இத்தலத்து எம்பெருமானைப்பற்றி புகழ்ந்து பேசியது இன்றும் தேவஸம் போர்டின் குறிப்புகளில் உள்ளதாம்.
ஆற்காடு நவாப்பின் பிரச்னைகளையும் இத்தலத்து இறைவன் போக்கினான். அதற்கு நன்றிக்கடனாக திருவட்டாறு சந்நதியின் உட்புறத்தில் ஒரு மண்டபம் கட்டி கொடுத்திருக்கிறார். அதற்கு அல்லா மண்டபம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கூடவே எம்பெருமானுக்கு தங்கத் தொப்பியும், தங்கத் தகடும் காணிக்கையாக வழங்கியுள்ளான். சாதி மத எல்லைகளைக் கடந்து இந்தப் பெருமான் அனைவரது மனதிலும் குடி கொண்டுள்ளான்! நம்மாழ்வாரின் இத்தலத்தைப் பற்றிய மற்றொரு பாசுரம்

‘‘வாட்டாற்றாள் அடி வணங்கி
மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே
கேசவன் எம்பிரானை
பாட்டாய பலபாடி பழவினைகள்
பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வொழிந்து
நாராணனை நண்ணினமே!’’

திருவட்டாறில் அருள்பாலிக்கும் எம்பெருமானை வணங்கினால் நம் பிறப்பை அறுப்பான். பிறவாமை என்பது எவ்வளவு பெரிய வரம்! அப்படியே பிறவி கிடைத்தால்கூட உண்பதும் உறங்குவதும் வெட்டிப் பேச்சு போன்ற சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எம்பெருமானின் கீதங்களைப் பாடினால் நம் பழைய வினைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து விடுவான் என்கிறார் ஆழ்வார் என்னவொரு அருமையான வார்த்தைப் பிரயோகம்.

‘‘கேட்டாயே மடநெஞ்சே
கேசவன் எம்பிரானை’’

என்று தம் நெஞ்சுக்கு சொல்வதின் மூலம் நம் நெஞ்சுக்கு சொல்கிறார். மடநெஞ்சே என்றால் என்ன பொருள்? எதை எதையோ தேவையில்லாததை சிந்திக்காமல் எப்பொழுதும் நிழல் போல் நம்மை பின் தொடருபவனாக இருக்கின்ற எம்பெருமானுடைய நாமமான கேசவனைப் பாடு, கேசவனைப் பாடி துதி என்று தன் நெஞ்சுக்கு அன்பாக கட்டளையிடுகிறார்.

‘‘கெடும் இடர் ஆய எல்லாம்
கேசவா என்கிற நாமம்’’
‘‘மாய்ந்து அறும் வினைகள் தாமே
மாதவா என்ன நாளும்’’

என்பதும் ஆழ்வாரின் அற்புத திருவாக்கு. துன்பங்கள் தொலைந்து போக வேண்டுமா? கேசவனைப் பாடு வினைகள் என்ற தீராப் பகை முடிவுக்கு வர வேண்டுமா? மாதவன் என்கிற நாமத்தை இடைவிடாது சொல் என்கிறார். உடல் நோய்க்கு மருந்து தருவது போல் நம் மனப் பிரச்னைக்கு மாமருந்து மாதவனின் திருநாமங்கள் என்கிறார் நம்மாழ்வார். ஆதிகேசவப் பெருமாளும், மரகதவல்லி நாச்சியாறும் அருட்பாலிக்கும் திருவட்டாறு திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். வேண்டியதை எல்லாம் தர அவன் தயாராக இருக்கிறான். கேட்பது நமது உரிமை! கொடுப்பது அவனுடைய கடமை!

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

(மயக்கும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்